மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....
##~## |
'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, கல்திட்டில் அமர்ந்து நாளிதழைப் படித்துக் கொண்டிருக்க... ஆடிப் பட்டத்தில் நடவு செய்ய வாங்கி வைத்திருந்த காய்கறி நாற்றுகளுக்கு பூவாளியில் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம்.
''எப்பப்பப்பா... என்னமா காத்தடிக்குது. கூடையைத் தூக்கிட்டு நடக்கவே முடியல. ஆளையே தள்ளுது... 'ஆடிக் காத்து அம்மியையும் தூக்கும்’னு சும்மாவா சொன்னாங்க...''
-அங்கலாய்த்துக் கொண்டே 'காய்கறி' கண்ணம்மா வந்து உட்கார, அதைப் பார்த்துவிட்டு வரப்பேறி வந்தார் ஏரோட்டி!
''ஆடிப் பதினெட்டுக்கு குலதெய்வம் கோவில்ல 'கிடா வெட்றோம்’னு நேந்துருக்கோம். அந்த சமயத்துல, 'ஆடு விலையெல்லாம் ஏறிடும். முன்னயே வாங்கி வெச்சுடலாம்’னு நானும், வீட்டுக்காரரும் சந்தைக்குப் போனா... இப்பவே, யானை விலை சொல்றாங்க. நாலாயிரம் ரூபாய்க்குக்கூட விலை போகாத ஆட்டை, ஆறாயிரம் ரூபாய்னு சொல்றாங்க. வேற வழியில்லாம கூடுதலா கொடுத்து ஒரு ஆட்டைப் பிடிச்சுட்டு வந்து, வீட்டுல கட்டி வெச்சுருக்கோம். சாமி காரியத்துல கணக்குப் பாக்கக் கூடாதுல்ல'' என்று சொந்தக் கதையிலிருந்து ஒரு தகவலை எடுத்துவிட்டு, அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், காய்கறி.
தலையாட்டி ஆமோதித்த ஏரோட்டி, ''ஆடு வெச்சுருக்குற விவசாயிகளுக்குக் கவலை இல்லை... ஆனா, பாவம் மாடுகளைத்தான் எங்கயும் விக்க முடியல. மூணு மாசத்துக்கு முன்ன கிடா கன்னு போட்ட செவல மாட்டைக் கொடுத்துட்டு... 'கன்னுகளாப் பிடிச்சுட்டு வரலாம்’னு சந்தைக்குக் கொண்டு போனேன். மதியம்வரைக்கும் இருந்தும் போணியாகல. போயிட்டு வந்த செலவுதான் தண்டம்'' என்று வருத்த பா பாடினார்!

''மழை இல்லாம காடு, கரையெல்லாம் காய்ஞ்சு கிடக்குது. மேய்ச்சலுக்கே வழியில்ல. கம்பெனித் தீவனமும் விலை ஏறிட்டே போறதால கட்டுபடியாகறதில்லையாம். அதனாலதான், யாரும் மாடு வாங்கறதில்லை. தமிழ்நாட்டுல எல்லா சந்தையிலுமே நிலைமை இப்படித்தான் இருக்கு. கிணறு வெச்சு பாசனம் செய்ற சம்சாரிகதான் துணிஞ்சு மாடு பிடிச்சுட்டுப் போறாங்க. மழை வந்தாத்தான் கொஞ்சம் நிலைமை மாறும்'' என்று சூழ்நிலையைப் பற்றி எடுத்துச் சொன்ன வாத்தியார், அப்படியே அடுத்தச் செய்திக்குத் தாவினார்.
''கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல செயல்படுற மண் மற்றும் பயிர் மேலாண்மை இயக்ககத்தின் கீழ வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் இருக்குது. இந்த மையமும், தமிழக வேளாண்மைத் துறையும் சேர்ந்து தமிழ்நாடு முழுக்க 385 வட்டாரத்துல தானியங்கி வானிலை நிலையங்களை அமைச்சுருக்காங்களாம். இதுக்காக தனியா ஒரு 'நெட்வொர்க்’ இருக்காம். இந்த நிலையங்கள்ல இருந்து, காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம், வேகம், திசை, மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை, மழையளவு, சூரியக் கதிர் வீச்சு, காற்று மண்டல அழுத்தம்னு பருவநிலை சம்பந்தமான அத்தனை விஷயங்களையும் சேகரிச்சு, பல்கலைக்கழகத்தோட இணையதளத்துல வெளியிடுவாங்களாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை தகவலைப் புதுப்பிப்பாங்களாம். பயிர் காப்பீடு பண்ணவங்களுக்கு, பயிர் பாதிப்பு வர்ற சமயத்துல கணக்கெடுக்கும்போது, இந்த மையங்கள்ல பதிவான தகவல்களையும் கணக்குல எடுத்துக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி நஷ்டஈடு தருவாங்களாம்'' என்று சொன்னார் வாத்தியார்.
''உன்னை மாதிரி படிச்ச ஆளுங்கள்லாம் கம்ப்யூட்டரைத் தட்டிவிட்டு, இதையெல்லாம் பாத்துக்குவாங்க. என்னைய மாதிரி ஆளுங்கள்லாம் எங்கய்யா போய் பாக்குறது?'' என்று அலுத்துக்கொண்ட ஏரோட்டி, ஒரு செய்தியை ஆரம்பித்தார்.
''மீன்வளத்துறை சார்பா ஏரிகள், அணைகள்ல எல்லாம் மீன்குஞ்சுகள விட்டு வளர்த்துட்டு இருக்காங்கள்ல்ல. மேட்டூர் அணையில மட்டும் வருஷத்துக்கு 25 லட்சம் மீன் குஞ்சுகள விடுவாங்களாம். ஆனா, அதுல பாதியைக்கூட தேத்த முடியாதாம். அணை பெருசா இருக்கறதால, தனியா கவனம் கொடுக்க முடியலையாம். அதனால, தமிழ்நாட்டுல முதல் தடவையா 'மிதவை கூண்டு முறை'யை அறிமுகப்படுத்தியிருக்காங்க. வராக நதி, பூண்டி ஏரி, மேட்டூர் அணைனு மூணு இடத்துலயும் இதை அறிமுகப்படுத்தியிருக்காங்க.
பெரிய பெரிய பிளாஸ்டிக் தொட்டிகளை தண்ணியில மிதக்கவிட்டு, அதுக்குள்ள மீன் குஞ்சுகளை விட்டுவாங்களாம். இதுதான் மிதவைக் கூண்டு முறையாம். ஒரு தொட்டியில 35 ஆயிரம் மீன் குஞ்சுகள விடலாமாம். மீன் அரை கிலோ அளவு வளர்ற வரைக்கும் அதுக்குள்ளயே வளர்த்து, பிறகு விற்பனை செஞ்சுடுவாங்களாம்.
தைவான் நாட்டுல இருந்து இந்த தொட்டிகள இறக்குமதி செஞ்சுருக்காங்களாம். இது நல்ல பலன் கொடுத்துச்சுனா, மீன் வளர்க்க ஆசைப்படுற தனியார்களுக்கும் இந்த முறையைப் பத்தி பயிற்சி கொடுத்து, 'மிதவை கூண்டு முறை'யை விரிவுபடுத்தப் போகுதாம் மீன் வளத்துறை'' என்றார்.
''பரவாயில்லையே, நீகூட புதுசு, புதுசா சேதிகள தேத்திக்கிட்டு வர ஆரம்பிச்சுட்டே!'' என்று ஏரோட்டியைப் பாராட்டிய காய்கறி, ''போன தடவை ஒரு கணக்கு போட்டேனே... விடை கண்டுபிடிச்சுட்டியா?'' என்று கேட்டார்.
''காலே அரைக்கால் காசுக்கு... நாலே அரைக்கால் வாழைக்காய். அப்போ காசுக்கு எத்தனை வாழைக்காய்? இதுதானே... வாத்தியாராலேயே கண்டுபிடிக்க முடியல. எத்தனைனு நீயே சொல்லிடு'' என்றார், ஏரோட்டி.
''11 வாழைக்காய்... வரும்ய்யா'' என்று விடையச் சொன்னார் காய்கறி.
''அடி ஆத்தி, தலை சுத்துற கணக்கால்ல போட்டுட்டே... வழக்கமா நீ போடுற விடுகதை, புதிருக்கெல்லாம் விகடன் டாட் காம்/பசுமை விகடன் பக்கத்துல யாராச்சும் பதில் சொல்லிட்டே இருப்பாங்க. இந்த தடவை யாராச்சும் சொல்றாங்களானு நானும் பார்த்துட்டே இருந்தேன். ஒருத்தர்கூட சொல்லலையே!'' என்று நொந்து கொண்டார் வாத்தியார்.
''அதெல்லாம்... காப்படி, வீசம்படிங்கற பழங் கணக்கு தெரிஞ்சா... சுலபமா கண்டு பிடிச்சுடலாம். சரிசரி... இந்தத் தடவை எளிமையா ஒரு கணக்குப் போடுறேன். 'ஒரு தென்னந்தோப்புல மொத்தம் ஏழு வேலி. வேலிக்கு ஒருத்தன்னு மொத்தம் ஏழு காவக்காரங்க. ஒரு நாள் திருடன் ஒருத்தன் அங்க நுழைய... 'நீ எவ்ளோ வேணும்னாலும் திருடிக்க. வெளியில வர்றப்போ பாதியைக் கொடுத்துடணும்'னு ஒவ்வொரு வேலிய தாண்டறப்பவும் அந்தந்த வேலியோட காவக்காரங்க நிபந்தனை போட்டாங்க.
'சரி’னுட்டு உள்ள போன திருடன், தன்னால தூக்க முடிஞ்ச மட்டுக்கும் தேங்காய்களைத் தூக்கிட்டு வந்தான். ஒவ்வொரு காவக்காரன்கிட்டயும் பாதிப்பாதியா கொடுத்துட்டே வெளியில வந்தான். கடைசியில பார்த்தா... ஒரே ஒரு தேங்காய்தான் மிஞ்சுச்சு. அப்படினா... அவன் திருடினது எத்தனை தேங்காய்?'' என்றபடியே காய்கறி கிளம்ப... வாத்தியாரும், ஏரோட்டியும் அங்கேயே விரல்களை விரித்து, கணக்குப் போட ஆரம்பிக்க... அதோடு, முடிந்தது அன்றைய மாநாடு.
பதப்படுத்துதல் துறையில் பலவித மானியங்கள்...
உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சகம் மற்றும் தமிழக அரசு ஆகியவை இணைந்து, பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ்... தேசிய உணவுப் பதப்படுத்தும் இயக்கத் திட்டத்தின் மூலம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஏற்படுத்த, மானியங்களுடன் நிதியுதவி வழங்கி வருகின்றன.
கருவிகள், தளவாடங்கள் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றுக்கு மொத்தத் திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். விண்ணப்பங்களை, மாவட்ட உணவுப் பதப்படுத்தும் இயக்ககம், வேளாண் இணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மூலமாக மாநில தேசிய உணவுப் பதப்படுத்தும் இயக்கத் திட்ட இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இது உள்ளிட்ட இன்னும் பலவித மானியங்களுடன் கூடிய திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதுபற்றிய விவரங்கள் தேவைப்படுவோர், www.mofpi.nic.in என்ற இணையதளத்திலும், மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்திலும் தெரிந்து கொள்ளலாம்.