நீங்கள் கேட்டவை : இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி?'
புறா பாண்டி
##~## |
''இ.எம். கலவையை வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிவிரட்டியாகவும் பயன்படுத்த முடியுமா? இதை எப்படித் தயார் செய்வது?''
எஸ்.ராஜமோகன், தெம்மாவூர்.
ஆரோவில் பகுதியில் உள்ள இகோ-புரோ அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர் சுமதி பதில் சொல்கிறார்.
''எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிஸம்ஸ் (Effective Micro-Organisms) என்பதன் சுருக்கம்தான் இ.எம். (E.M.). தமிழில், 'திறன்மிகு நுண்ணுயிர்’ என்று அழைக்கப்படுகிறது. இத்திரவத்தில் நுண்ணுயிர்கள், உறக்க நிலையில் இருக்கும். இது, வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.
50 மில்லி இ.எம். திரவத்தை, 10 லிட்டர் நீரில் கலந்து பயிர்களின் மேல் தெளித்து வந்தால்... நல்ல பலனைக் காண முடியும். இந்த இ.எம். இயற்கை உர விற்பனையாளர்களிடமும் கிடைக்கும்

இதை எப்படித் தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம். ஒரு கிலோ வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கரைத்து, மூடியுடன் கூடிய ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் ஊற்றவும். இதனுடன் குளோரின் கலக்கப்படாத சுத்தமான தண்ணீர் 20 லிட்டர், இ.எம். திரவம் ஒரு லிட்டர் ஆகியவற்றையும் சேர்த்து, தொட்டியை மூடி வைக்கவும். தினமும், ஒரு முறை ஒரு வினாடி மட்டும் மூடியைத் திறந்து மூடி, உள்ளே உற்பத்தியாகும் வாயுவை வெளியேற்ற வேண்டும். ஒரு வாரத்தில், இக்கலவை, இனிய மணம், புளிப்புச் சுவையுடன் வெண்நுரையுடன் காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, இ.எம். சரியான முறையில் தயாராகியுள்ளது என்று அர்த்தம். இப்படித் தயாரிக்கப்பட்ட கலவையை 4 முதல் 5 வாரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
இ.எம். திரவத்தை மையமாக வைத்து, 5 பொருட்களைக் கலந்து 'இ.எம்.-5' என்கிற திரவமும் தயாரிக்கப்படுகிறது. இது, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சண நோய்கள் மற்றும் சிலவகை பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் திறனுடையது. ஒரு கிலோ வெல்லத்தை சம பங்கு நீரில் நன்கு கரைத்துக் கொண்டு, அதில், ஒரு லிட்டர் காடி, ஒரு லிட்டர் ரம் அல்லது விஸ்கி (40% ஆல்கஹால்), 6 லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் இ.எம். ஆகியவற்றை சேர்த்து, காற்று புகாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வார காலத்துக்கு மூடி வைத்தால், இ.எம்.-5 கரைசல் தயார். இதிலும் தினமும் வாயுவை வெளியேற்றி வர வேண்டும். தயாரான திரவத்தை காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமித்து, மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஒரு மடங்கு இ.எம்.-5 திரவத்துடன், 200 மடங்கு தண்ணீரைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்
(50 மில்லி கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர்). நோய்கள் கட்டுப்படும் வரை, இரண்டு நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து தெளிக்கலாம்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 0413-2622469.
''நிலத்தடி நீர் ஊற்றைக் கண்டுபிடிக்க, சித்தர்கள் பல நுட்பங்களைக் கையாண்டதாகச் சொல்கிறார்களே... அதைப் பற்றிய தகவல்களைத் தரமுடியுமா?''
டி. தங்கராஜ், ஸ்ரீவில்லிப்புத்தூர்.
சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சி செய்து வரும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரை. வேலுசாமி பதில் சொல்கிறார்.
''சித்தர்களை, 'மந்திரம், மருத்துவம் கற்றவர்கள்’ என்றே பெரும்பாலும் அறிந்து வந்துள்ளோம். ஆனால், சித்தர்கள்தான், தமிழ் மண்ணின் முதல் விஞ்ஞானிகள். விவசாயம் உட்பட, அவர்கள் தொடாத துறைகளே இல்லை. 'நீர் வளம் இருந்தால் மட்டுமே, விவசாயம் செழிக்க முடியும். மழைநீரை சேமித்து, ஏரி, குளங்கள் மூலம் பாசனம் செய்தாலும், மழை பொய்க்கும்போது, சேமித்து வைத்த பணத்தை எடுத்து செலவு செய்வது போல, நிலத்தடி நீரை கவனமாக செலவழிக்க வேண்டும்’ என்கிறார்கள், சித்தர் பெருமக்கள்.

நீருற்று கண்டுப்பிடிக்கும் முறைகளை பண்டிதர்கள் முதல் பாமர மக்கள் வரை யாவரும், எளிதாக உணர்ந்து செயல்படும் வகையில் தெளிவாகச் சொல்லி சென்றிருக்கிறார்கள். 'புற்று கண்ட இடத்தில் கிணறு வெட்டு’ என்பது பரவலாக அறிந்த செய்தி. ஒரு மரத்தின் கிளைகள் அனைத்தும், மேலே, நோக்கி செல்ல, ஒரே ஒரு கிளை மட்டும் கீழ் நோக்கி இருந்தால், 'நிச்சயம் அந்த இடத்தில் நீருற்று இருக்கும்’ என்கிறார்கள். அவர்கள் அருளிய சில வழிமுறைகளைப் பார்ப்போம்.
கிணறு வெட்டுவதற்கான தேர்வு செய்த இடத்தில், மலரும் நிலையில் உள்ள மல்லிகை மொக்குகளை ஒரு கிலோ அளவுக்கு மாலை நேரத்தில் தரையில் குவியலாகக் கொட்டி, கூடையைப் போட்டு மூடவேண்டும். மறுநாள் காலையில் அந்த மல்லிகை மொக்குகள் நன்றாக மலர்ந்திருந்தால், 'அந்த இடத்தில் நீருற்று உள்ளது’ என்று அர்த்தம். வாடி விட்டால், 'நீருற்று இல்லை’ என்று அர்த்தம்.
இதேபோல, ஒரு கிலோ ஆமணக்கு விதையை நிலத்தில் குவியலாகக் கொட்டி, மூடி வைத்து... காலையில் கூடையைத் திறந்து பார்க்கும்போது, விதைகள் சிதறி இருந்தால், 'அந்த இடத்தில் நீருற்று உள்ளது’ என்றும், குவியல் கலையாமல் இருந்தால், 'நீருற்று கிடையாது’ என்றும் சித்தர்களின் ஜால வித்தை சூத்திரங்கள் சொல்கின்றன. சித்தர்கள் சொல்லி வைத்த இந்த நுட்பங்களை, பரிசோதனை செய்து பார்த்தபோது, நல்ல பலன்கள் கிடைத்துள்ளன.''
தொடர்புக்கு, செல்போன்: 98655-24179.
''தென்னங்கன்றுகளைப் போல, பனங்கன்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்ய முடியுமா?''
எம். குணா, பவானி.
பனை மரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பொன். தீபங்கர் பதில் சொல்கிறார்.
''பனை மரத்தை நம் முன்னோர்கள் 'கற்பக விருடசம்’ என்று சொல்லி வைத்துள்ளார்கள். அதாவது, மரத்தின் அடி முதல் நுனி வரை அத்தனைப் பகுதிகளும் பலன் தரக்கூடியவை. பனையில் ஆண், பெண் மரங்கள் உண்டு. ஆண் பனை காய்க்காது. பெண் பனை மட்டுமே காய்க்கும் தன்மை கொண்டது. எனவே, நிலத்தில் நடவு செய்யும்போது, மகரந்தச் சேர்க்கைக்காக நூறு பெண் மரங்களுக்கு, இரண்டு ஆண் மரங்கள் என்கிற விகிதத்தில் வளர்க்கலாம். பனம்பழத்தில் ஒரு கொட்டை மட்டும் இருந்தால், அதில் பெண் மரமாக வளரும். இரண்டு, மூன்று கொட்டைகள் உள்ளவை, ஆண் மரங்களாக வளரும். இந்த நுட்பத்தை, கேரள மாநில விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளார்கள்.

பனங்கொட்டைகளைச் சேகரித்து, தண்ணீர் தேங்கி நிற்காத நிலத்தில் பரவலாகக் கொட்டி வைத்து... அவற்றை மூடும் அளவுக்கு மண்ணைத் தூவி விடவும். வாய்ப்பிருந்தால், வாரம் இரண்டு முறை லேசாக தண்ணீர் தெளித்து விடலாம்.
அடுத்த, மூன்று மாதங்களில், அவை முளைப்பு எடுக்கும். முளைத்த கொட்டைகளைத் தேர்வு செய்து நடவு செய்யலாம். தண்ணீர் வசதி உள்ள இடங்களில், பனை மரங்கள் வளர்ந்து பலன் கொடுக்க 15 ஆண்டுகள் ஆகும். வறட்சியான பகுதி என்றால், 25 ஆண்டுகள் வரை ஆகும்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 0424-2257110.
''கோழித் தீவனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அதன் மூலப்பொருளான, 'எம்.பி.எம்' என்றழைக்கப்படும், இறைச்சி, எலும்புத் தூள்களை நாங்கள் தயாரித்து அனுப்பி வருகிறோம். தற்சமயம், இந்த மூலப்பொருட்களில் 'குரோமியம்’ கலந்திருப்பதாகச் சொல்லி, அவற்றை வாங்க மறுக்கிறார்கள். இதைச் சரி செய்ய வழி சொல்ல முடியுமா?''
ஷே. ஷாஜகான், விழுப்புரம்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின், கால்நடைத்தீவனப் பகுப்பாய்வு மற்றும் தர உறுதி ஆய்வகத்தின் துணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். நடராஜன் பதில் சொல்கிறார்.

''இறைச்சி மற்றும் எலும்புத் தூள்களில் குரோமியம் கலப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. பொதுவாக தோலைப் பதப்படுத்த, குரோமியத்தை பயன்படுத்துவார்கள். ஒருவேளை தோல் கழிவுகளை, இறைச்சி மற்றும் எலும்புத் தூள்களில் கலந்தால் மட்டுமே குரோமியம் இருக்க வாய்ப்பு உண்டு. இயற்கையாகவே, மிக, மிகநுண்ணிய அளவில் மனிதன், விலங்கு உடல்களில், மற்ற கனிமங்களை போலவே, குரோமியம் இருக்கும். எனவே, குரோமியத்தின் அளவை வைத்துத்தான் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பின் அளவுகளையும், அவற்றை நீக்கும் வழிமுறைகளையும் சொல்ல முடியும். மேற்கொண்டு விளக்கங்கள் தேவை எனில், எங்கள் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம்.''
தொடர்புக்கு, கால்நடைத் தீவனப் பகுப்பாய்வு மற்றும் தர உறுதி ஆய்வகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266288.
''தென்னை நார்க்கழிவை மட்க வைக்கும் தொழில்நுட்பம் எங்கு கிடைக்கும்?''
என். திருநாவுக்கரசு, திண்டுக்கல்.
''திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், 'தேசிய கடல்சார் சயனோ-பாக்டீரியா’ துறை செயல்பட்டு வருகிறது. இங்கு தென்னை நார்க்கழிவுகளை எளிதாக மட்க வைக்கும் 'சயனோ-பாக்டீரியா’வை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.''
தொடர்புக்கு, தேசிய கடல்சார் சயனோ-பாக்டீரியா துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி-620024.
