மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி?'

நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி?'

 புறா பாண்டி

##~##
''புங்கன் விதையில் இருந்து பயோ-டீசல் எடுத்துப் பயன்படுத்த முடியுமா? புங்கன் மரத்துக்கு வேறு பயன்பாடுகள் இருக்கின்றனவா?

ஆர். மனோகரன், திருப்பூர்.

மேட்டுப்பாளையம், வனக்கல்லூரியின் முதுநிலை ஆராய்ச்சியாளர் பெ. குமார், பதில் சொல்கிறார்.

''புங்கம், 'பாப்பிலியோனாசே’ என்கிற (Papilionaceae)குடும்பத்தைச் சார்ந்த ஒரு நடுத்தர பசுமை மாறா மரம். இந்தியாதான் இதன் தாயகமாகக் கருதப்படுகிறது. 5 முதல் 10 வருட வயதுள்ள ஒரு மரத்தில் இருந்து... தோராயமாக 250 கிலோ விதை கிடைக்கும். இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிலோ விதை 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. புங்கன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பயோடீசலாகப் பயன்படுத்தலாம். டீசல் வாகனங்கள் மற்றும் நீர் இறைக்கும் டீசல் இன்ஜின்களில், டீசலுடன் 20% அளவு கலந்து பயன்படுத்தலாம். இதற்காக இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை.

இந்த எண்ணெயை சுத்திகரித்து தனியாகவே பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் புங்கன் பயோ-டீசல் பெருமளவிலான பயன்பாட்டுப் பொருளாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிகளவு கார்பன்-டை-ஆக்ஸைடை உள்வாங்கும் திறன், புங்கன் மரத்துக்கு உண்டு. ஆகையால், இம்மரம் 'கார்பன் கிரெடிட்’ திட்டத்துக்கும் பயன்படுகிறது.

நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி?'

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ஒடிசா, பீகார் மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இது, அனைத்து மண் வகைகளிலும் நன்றாக வளரும் தன்மையுடையது. உவர் நிலத்திலும்கூட வளரும் சிறப்புத்தன்மை இதற்கு உண்டு.

நல்ல ஈரப்பதத்துடன், வடிகால் வசதியுள்ள மண்ணில், இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். மானாவாரி நிலத்தில் மண் அரிப்பைத் தடுப்பதற்காக வளர்க்கலாம். தண்ணீர் தேங்கி நிற்கும் நிலங்களில்கூட சிறிது காலம் தாக்குப் பிடித்து வளரும். நன்கு பழுத்த முதிர்ந்த விதைகளை.. ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதத்துக்குள் சேகரிக்க வேண்டும். ஒரு கிலோவுக்கு கிட்டத்தட்ட 1,000 விதைகள் வரை இருக்கும். சேகரிக்கப்பட்ட விதைகளை நாற்றங்கால் உற்பத்திக்கு உடனடியாகப் பயன்படுத்திவிட வேண்டும். இதை சேமித்து வைத்துப் பயன்படுத்தினால், முளைப்புத்திறன் குறையும்.

புங்கன் மரத்தை வரப்பு ஓரங்களில் நடவு செய்யலாம் அல்லது மரப்பயிர்களுடன் ஊடுபயிராகவும், சாகுபடி செய்யலாம். பயிர் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்தை புங்கன் மரம் தனது வேர்முடிச்சுகள் மூலம் சேகரித்து பிரதான பயிருக்கு அளிக்கும். மேலும், இதன் இலை, சருகுகள், எளிதில் மட்கி விடுவதால், நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால்,  பிரதான பயிர்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். இயற்கைப் பூச்சிவிரட்டி பயன்பாட்டுக்கு புங்கன் பிண்ணாக்கு மற்றும் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.''

தொடர்புக்கு, செல்போன்: 99769-54274.

''நாங்கள் தேங்காயை 'செக்’கில் பிழிந்து, எண்ணெய் எடுத்து வருகிறோம். எண்ணெய் கெட்டுப் போகாமல் இருக்க, ஆட்டும்போது, வேப்பங்கொட்டைகளையும் சேர்க்கிறோம். இந்த முறை சரியானதுதானா?''

சி. கணேசன், உளுந்தூர்பேட்டை.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம், இயற்கை மருத்துவர் ஸ்ரீராமுலு பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி?'

''எந்த எண்ணெய் என்றாலும், அதனுடன் மற்றொரு எண்ணெய் தன்மை கொண்ட பொருளைச் சேர்த்தால், அது கலப்படம்தான். வேப்பங்கொட்டை சேர்ப்பதும் கலப்படம்தான். இது எண்ணெயின் இயற்கைத் தன்மையை மாற்றிவிடும். காய்கறி, பழங்கள்... போன்றவை உண்ணும் நிலையில் இருந்து, அடுத்த நிலைக்கு உருமாற்றம் அடைவதைத்தான் நாம் 'கெட்டுப்போய் விட்டது’ என்று சொல்கிறோம். பழம் பழுத்து விட்டால், அதன் வாழ்க்கைச் சுழற்சி முடிந்துவிடும். அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, அதன் வாழ்க்கைச் சுழற்சியைத் தள்ளிப்போடுகிறோம். இது இயற்கைக்கு எதிரானது. இதனால், அந்தப்பழம் நமக்கு கொடுக்க இருந்த சத்துக்களைச் சிதைத்து விடுகிறோம். இதுபோலத்தான், தேங்காய் எண்ணெயும். சரியான முறையில், எண்ணெய் பிழியப்பட்டிருந்தால், அதன் வாழ்வு காலம் ஓர் ஆண்டு. இந்த ஓர் ஆண்டு காலத்தில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை எண்ணெயை, சூரிய ஒளியில் மூன்று மணி நேரம் வைத்து எடுத்தாலே போதும். ஓர் ஆண்டு கழிந்த பிறகும் அதைப் பயன்படுத்த நினைப்பது நமது பேராசைதான்.''

தொடர்புக்கு, செல்போன்: 97868-66774.

''கோழிப் பண்ணை வைத்துள்ளோம். கோழிகளுக்குத் தேவையான தீவனங்களை நாங்களே உற்பத்தி செய்து கொள்ளும் தொழில்நுட்பத்தைச் சொல்ல முடியுமா?''

எச். சம்பத், ஈரோடு.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி டாக்டர். து. ஜெயந்தி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி?'

''கோழிகளுக்கு சமச்சீரான அளவில் தீவனம் கொடுக்கும்போதுதான், அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். சொந்தமாக தீவனம் தயாரிக்கும்போது... செலவு குறைவதோடு, தரமான பொருட்களைத் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனால், உங்களுக்குத் தேவையான தீவனங்களை நீங்களே தயாரித்துக் கொள்வது என முடிவு எடுத்திருப்பது நல்ல விஷயம். 100 கிலோ தீவனம் தயாரிக்க, எந்த மூலப்பொருட்கள் என்ன அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்பது இங்கே தனியாக அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவணையைப் படித்தவுடன், பலருக்கும் தாது உப்புக்கலவை, வைட்டமின் கலவை எங்கு கிடைக்கும் என்று சந்தேகம் ஏற்படலாம். இவையெல்லாம் கால்நடை மருந்துகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் கிடைக்கும். இந்த மூலப்பொருட்களைத் தீவன அரவை இயந்திரம் மூலம் அரைத்து, கோழிகளுக்குக் கொடுக்கலாம்.

நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி?'

''கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பழப்பயிர்கள் துறை முகவரி கிடைக்குமா?''

எம். சுந்தரம், கிருஷ்ணகிரி.

''வாழைப்பழம் முதல் தமிழ்நாட்டில் வளரும் அத்தனைப் பழப்பயிர்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் இந்தத் துறை மூலம்தான் நடத்தப்படுகிறது'

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பழப்பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3 தொலைபேசி: 0422-6611269

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space)-உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.