மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

எதுவா இருந்தாலும் கேட்கறதுக்கு... இலவச போன்! ஓவியம்: ஹரன்

##~##

 டிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கிடா வெட்டி சமைத்துக் கொண்டு வந்திருந்தார், 'காய்கறி’ கண்ணம்மா. அதை ஒரு கை பார்த்துவிட்டு, 'காய்கறி'யோடு தோட்டத்துக்குக் கிளம்பினார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். கூடவே, மிதிவண்டியை மிதித்தபடி வந்தார்... 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி.

தோட்டத்தில் நுழைந்ததுமே, துண்டை விரித்த ஏரோட்டி கட்டையை நீட்ட...

''என்னவோ வெட்டி முறிக்கப்போற மாதிரி அரிவாளெல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பினே...'' என்று சிரித்தார் காய்கறி.

''உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டுங்கறது தெரியாதா? நீங்க உக்காந்து பேசுங்க, நான் படுத்துக்கிட்டே பேசுறேன்'' என்றபடியே உருள ஆரம்பித்தார் ஏரோட்டி.

''ம்... இவ்வளவு நாளா 'தண்ணி இல்லை, மழை இல்லை’னு ஏங்கிட்டு இருந்தோம். கேரளாவும், கர்நாடகாவும் 'தண்ணி தர முடியாது’னு சொல்லிட்டே இருந்தாங்க.

இப்போ, அங்கயெல்லாம் மழை அடிச்சு ஊத்த ஆரம்பிச்சதும், தன்னால தண்ணி வர ஆரம்பிச்சுடுச்சு. எட்டு வருஷத்துக்குப் பிறகு மேட்டூர் நிறைஞ்சுருக்கு. ஆனா, அதையெªல்லாம் சேமிக்க வழி பண்ணாம, தூங்கிட்டிருக்கோம். டேம் நிறைஞ்சா... கொஞ்ச நாளைக்கு தண்ணி இருக்கும். அப்பறம் திரும்ப 'ததிங்கிணத்தோம்'தான் போட வேண்டியிருக்கும்'' என்று ஆதங்கம் பொங்கி, மாநாட்டை ஆரம்பித்தார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு

''அட, தண்ணி வருதேனு சந்தோஷப்பட்டுட்டிருந்தா... இப்படி சொல்லி, கலவரப்படுத்து றீங்களே'' என்று வருத்தப்பட்டார், காய்கறி.

''ஆமாம்... டேம் நிறைஞ்சா, வழியுற தண்ணி வீணா கடல்லதான கலக்கும். முன்ன யெல்லாம், ஆத்துல வெள்ளம் வந்தா... வழியில இருக்குற குளம், கம்மாயெல்லாம் நிரம்புற மாதிரி கால்வாய்கள தூர் எடுத்து வெச்சுருப்பாங்க. இப்பதான் ஏரி, குளம், கம்மாய்னு எல்லாத்தையும் ஆக்கிரமிச்சுட்டாங்களே இந்த அரசியல்வியாதிங்க. அதனாலதான், 'தண்ணிக்கு தாளம் போட வேண்டி யிருக்கும்’னு சொன்னேன்'' என்று விளக்கம் தந்தார் வாத்தியார்.

''அப்பத்தானே... காவிரி, முல்லை-பெரியாறு, பாலாறு, பவானியாறுனு தண்ணியை வெச்சுக்கிட்டு, தமிழ்நாட்டுல அரசியல் நடத்த முடியும்!'' என்று அலுத்துக் கொண்ட காய்கறி,

''விதை, உரம், பூச்சிக்கொல்லி பத்தின சந்தேகங்கள் எதுவா இருந்தாலும், போன்ல கேட்டு தெரிஞ்சுக்குறமாதிரி வேளாண்மைத்துறை ஒரு போன் நம்பர் கொடுத்துருக்கு. 1800 425 1501-ங்கற நம்பர்ல காலையில 10 மணியில இருந்து சாயங்காலம் 6 மணி வரை, போன் பண்ணி கேட்டுக்கலாம். இதுல பேசுறதுக்கு கட்டணம் கிடையாதாம். விடுமுறை நாட்கள்ல இந்த போன் வேலை செய்யாதாம்'' என்று உபயோகமான தகவலைத் தட்டிவிட்டார்.

''நாலஞ்சு மாசத்துக்கு முன்ன, 'விளைபொருட்கள் விற்பனையில வெளிநாட்டு கம்பெனிகளை அனுமதிக்கக் கூடாது’னு விவசாயிகளெல்லாம் திரண்டு டெல்லியில போராட்டம் நடத்தினாங்க தெரியுமோ..! ஆரம்பத்துல, இதை மத்திய அரசு கண்டுக்கவே இல்ல. அடுத்தடுத்த நாட்கள்ல டெல்லியே ஸ்தம்பிச்சு போற அளவுக்கு போராட்டம் வலுவடையவே, பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துச்சு அரசாங்கம்.

'விவசாயிகளுக்கான சாதக, பாதகங்களை விசாரிக்கறதுக்காக தனி கமிட்டி அமைப்போம்... அதுல விவசாய பிரதிநிதிகளையும் சேர்ப்போம்’னு உறுதிமொழி கொடுத்துச்சு அரசு. இப்ப, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நாலு விவசாயிகளோட ஒரு கமிட்டியை அமைச்சுருக்காங்க. இதுல தமிழ்நாட்டுல இருந்து, விவசாய பிரதிநிதியா திருப்பூரைச் சேர்ந்த நல்லாகவுண்டர் இடம்பிடிச்சுருக்கார்'' என்றார், வாத்தியார்.

''எப்பவும் வடநாட்டுக்காரங்களைத்தானே இநத மாதிரி கமிட்டி, கமிஷன்லயெல்லாம் போடுவாங்க. எப்படியோ தமிழ்நாடுனு ஒண்ணு இருக்கறதும்... வடக்க இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சுருக்கே...''  என்று நக்கலாகச் சொன்ன காய்கறி,

''போன தடவை போட்ட கணக்குக்கு விடை தெரிஞ்சுதா..?'' என்று கேட்டார்.

''தேங்காய் திருடின கணக்குதான..! அந்த திருடன் மொத்தமா திருடினது 128 தேங்காய். சரிதான..!' என்றார், ஏரோட்டி.

''அட, ராமானுஜம் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு பயபுள்ளையே... சரியா கண்டுபிடிச்சுட்டியே'' என்று பாராட்டுப் பத்திரம் வாசித்த காய்கறி,

''இன்னிக்கு ஒரு கணக்குப் போடுறேன். கண்டுபிடி... பார்க்கலாம். அதாவது, ஒருத்தர், '100 லிட்டர் பாலை இலவசமா கொடுக்கறது’னு முடிவெடுத்தார். பெரியவங்களுக்கு ஆளுக்கு 3 லிட்டர் பால்; இளந்தாரிங்களுக்கு ஆளுக்கு 2 லிட்டர் பால்; சின்னப் பசங்களுக்கு ஆளுக்கு அரை லிட்டர் பால்னு மொத்தம் 100 பேருக்கு பாலை ஊத்திட்டார். அப்படினா... பெரியவங்க, இளந்தாரிங்க, சின்னப் பசங்க எத்தனை எத்தனை பேர்?'' என்று காய்கறி முடிக்க... கண்களை உருட்டி உருட்டி ஏரோட்டி விழிக்க... கூடையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார் காய்கறி. அன்றைய மாநாடு, அத்தோடு முடிவுக்கு வந்தது.

'அது, 100 கிலோ அல்ல!’

பசுமை விகடன் 10.07.13 தேதியிட்ட இதழில் 21-ம் பக்கம் 'புறக்கடையில் பாரம்பரிய நெல்...’ கட்டுரையில், ''130 சதுர அடியில், 100 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும்...'' என்று நாகர்கோயில், கௌதமன் குறிப்பிட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.

''அது சரியான கணக்கல்ல. அந்த அளவுக்கு நெல் கிடைக்காது'' என்று ஐதராபாத் வாசகர் நந்தகுமார் குரல்வழி சேவை மூலமாக தெரிவித்திருந்தார்.

இதைப் பற்றிக் கேட்டபோது, ''100 கிலோ  என்று தவறுதலாக வெளியாகிவிட்டது. தற்போதுதான், அறுவடை முடிந்தது. அதில், 4 கிலோ நெல் கிடைத்தது. இன்னும் முழுமையாக கவனம் செலுத்தி, தேவையான இடுபொருட்களைக் கொடுத்திருந்தால்... அதிகபட்சம் 10 கிலோ வரை கிடைத்திருக்கக் கூடும்'' என்று சொன்னார் கௌதமன்.

தவறுதலாக தகவல் வெளியானதற்கு மிகவும் வருந்துகிறோம்.

- ஆசிரியர்