மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் !

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எல்.ராஜேந்திரன்

 புறா பாண்டி

'குறைந்த செலவில் இயற்கைச் சான்றிதழ் கிடைக்குமா?''

''குறைந்த செலவில் இயற்கை விவசாயச் சான்றிதழ் பெற வழி இருக்கிறதா?''

-எஸ். கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர்.

##~##
கோவா மாநிலத்தில் உள்ள 'ஆர்கானிக் ஃபார்மிங் அசோசியேஷன் ஆஃப் இண்டியா’ (OFAI- Organic Farming Association of India) அமைப்பைச் சேர்ந்த நிம்சி, பதில் சொல்கிறார்.

''இயற்கை வழி விவசாயம் செய்பவர்கள், 'முறையாகச் செய்கிறார்களா?’ என்பதை ஆய்வு செய்து சான்றளிப்பது, உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. இப்படி சான்றளிக்க, பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ஆயிரக்கணக்கில் பணத்தைப் பறித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை நம்பி ஏமாற வேண்டாம். எங்கள் அமைப்பு மூலமாக சான்று பெற அதிகபட்சம் ஐநூறு ரூபாய்க்குள்தான் செலவாகும். 'ஆர்கானிக் ஃபார்மிங் அசோசியேஷன் ஆஃப் இண்டியா’ என்ற எங்கள் அமைப்பு, அகில இந்திய அளவில், இயற்கை விளைபொருட்களுக்கான சான்று வழங்குவதைக் கண்காணிக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. எங்களின் வழிகாட்டுதல்படி, இரண்டு விதமாக சான்றுகள் வழங்கப்படுகின்றன.

நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் !

'பி.ஜி.எஸ். எனப்படும் 'பார்ட்டிசிபேட்டரி கியாரன்டி சிஸ்டம்’ (PGS-Participatory Guarantee System)என்கிற முறையில் நான்கைந்து விவசாயிகள் குழுவாக இணைந்து, அவர்களுக்குள்ளாகவே முறையாகக் கண்காணித்து சான்றுகளை வழங்கிக் கொள்ளலாம். சான்று வழங்கிக்கொள்ளும் விவசாயிகளில் யாரொருவர் தவறு செய்தாலும், மொத்த விவசாயிகளின் சான்றும் பறிபோய்விடும் என்பதால், இதில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை.

அடுத்து, 'டி.பி.எஸ்.’ எனப்படும் 'தேர்ட் பார்ட்டி அப்ரைசல்’ (TPS-Third Party Appraisal)முறை. இதில், இயற்கை விவசாயத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த விவசாயிகளே சான்றுகளை வழங்கலாம். இந்த விவசாயிகள், குறிப்பிட்ட பண்ணையைக் கண்காணித்து, எங்கள் அமைப்புக்கு அறிக்கை சமர்ப்பித்து, அதன் மூலமாக சான்றிதழ் பெறலாம். இந்த இரண்டு முறைகளிலும் சான்றிதழ் பெறுவது குறித்து மேலும் தகவல் தேவைப்பட்டால், எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும். இந்த இரண்டு சான்றிதழ்களையும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புக்கு: OFAI, G-8, St. Britto’s Apartments., Feira Alta, Mapus-403507. Goa, India. Ph: 083-22255913, email:admin@ofai.org

'பசுங்கன்றுகள் இறப்பைத் தடுப்பது எப்படி?''

''எங்கள் பண்ணையில் பசுங்கன்றுகள் பிறந்த மூன்று மாதத்தில் இறந்து விடுகின்றன. என்ன காரணம்.... தடுப்பது எப்படி?''

-ம. மணிகண்டன், கணக்கன்குப்பம்.

கால்நடைப் பராமரிப்புத்துறையின் முன்னாள் மண்டல இணை இயக்குநர் டாக்டர். ஏ.ஆர். ஜெகத்நாராயணன் பதில் சொல்கிறார்.

''கன்றுகள் இறப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இறந்த கன்றுகளைப் பரிசோதித்துப் பார்த்துதான் அதைப் பற்றிய முடிவுக்கு வரமுடியும். ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி இன்மை மற்றும் நோய்த் தொற்று மூலமாக இறக்கின்றன என்றால்... ஒருசில விஷயங்களைக் கடைபிடிப்பதன் மூலமாக அதைத் தடுக்க முடியும். அதாவது, கன்று பிறந்தவுடன், போதுமான அளவுக்கு சீம்பால் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக கன்று வளரும். முதல் மூன்று நாட்கள் கிடைக்கும் சீம்பாலை, மனிதர்கள் குடிப்பதற்காக எடுத்துக் கொள்வது பல இடங்களில் வழக்கமாக இருக்கிறது. இப்படி செய்தால்... கன்று நோஞ்சானாகி, காலப்போக்கில் இறந்துவிடும்.

நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் !

கன்று போட்ட ஒரு வாரத்தில் கட்டாயம் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். பண்ணையில் சாணம், சிறுநீர், தீவனக் கழிவுகளை உடனுக்குடன் அகற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதன் மூலம் நோய்க்கிருமிகள் உருவாகி, கன்றுகளுக்கு வெள்ளைக் கழிச்சல் ஏற்படும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், கன்றுகள் சில நாட்களில் இறந்துவிடும்.

நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் !

மாடு சினையாக இருக்கும்போதே, சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பலரும், 'மாடு சினையாக இருக்கும்போது தடுப்பூசி போடக் கூடாது’ என நினைக்கிறார்கள். ஆனால், 8 மாத சினைக்குப் பிறகு, தராளமாக தடுப்பூசி போடலாம். கோமாரி, தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் தாய், கன்றுகளைத் தாக்காமல் இருக்க, இந்தத் தடுப்பூசிகள் அவசியம்.

சினை மாட்டுக்கு 8-ம் மாதம் குடற்புழு நீக்க மருந்து கொடுக்கலாம். குடற்புழு நீக்க மருந்து தொப்புள் கொடி மூலம் கன்றுக்கும் செல்லும். இதனால், கருவில் உள்ள கன்று ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த நடைமுறைகளையெல்லாம் பின்பற்றினாலே, கன்றுகளின் இறப்பை பெரும்பாலும் தடுத்துவிட முடியும். எதற்கும்... அடுத்தத் தடவை கன்று போட்டவுடன், அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து வந்து, பண்ணையைப் பார்வையிடச் செய்து, ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.''

தொடர்புக்கு, செல்போன்: 99442-69950.

'உப்புத் தன்மை குறைந்து நல்ல நீர் வர என்ன வழி?''

''தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். நிலத்தில் எங்கு 'போர்’ போட்டாலும், உப்பு நீர்தான் வருகிறது. என்ன காரணம்?''

-சி. ஜெகந்நாதன், வெள்ளையம்மாள்புரம்.

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி மோகன்ராஜ் யாதவ், பதில் சொல்கிறார்.

''தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்ல, நாகப்பட்டினம், திருவாரூர் என கடற்கரையோர மாவட்டங்கள் முழுவதிலும், 40 அடிக்கு கீழே 'போர்’ போடும்போது இந்தப் பிரச்னை வரும். கடற்கரையோரங்களில், சுமார் 30 அடிக்குள்தான் நல்ல நீர் இருக்கும். அதற்கு கீழே சென்றால், கடல் நீர் வந்துவிடும். எனவே, ஆழத்தில் கவனம் அவசியம். கிடைக்கும் மழை நீரை முழுமையாக சேகரித்துப் பயன்படுத்தினால், 'போர்’ போட வேண்டிய அவசியம் இருக்காது.

நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் !

பயிர்களுக்கு உப்பு நீரைப் பாய்ச்சினால், படிப்படியாக பயிர்களின் வளர்ச்சி குறைந்து ஒரு கட்டத்தில் அந்த நிலமே, உவர்நிலமாக மாறிவிடும். எனவே, ஒரு ஏக்கர் நிலம் இருந்தால், அதில்

நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் !

30 சென்ட்டில் பண்ணைக்குட்டை வெட்டி, மழை நீரை சேமிக்க வேண்டும். இந்த நீரைப் பயன்படுத்தி ஒரு போகம் சாகுபடி செய்யலாம். குட்டையின் நீள, அகலம் எவ்வளவு வேண்டுமானாலும், இருக்கலாம். ஆழம் மட்டும் 9 அடிக்கு கீழே செல்லக் கூடாது. அப்படித் தோண்டினால், மண் சரிந்து விழுந்து கொண்டே இருக்கும். பண்ணைக்குட்டை வெட்டுவதற்கு, அரசு மானியம் கிடைக்கிறது. உங்கள் பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் துறையைத் தொடர்பு கொண்டால், மேலும் தகவல்களைப் பெறலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, உப்பு நீரை நல்ல நீராக மாற்றும் ஆய்வை மத்தியப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் செய்தார்கள். அப்போது, நிலத்தில் பல பகுதிகளில் மழை நீரை சேமித்து, அதை ஆழ்துளைக் கிணற்றில் விட்டார்கள். இதன் மூலம் உப்புத் தன்மை குறைந்து, நல்ல நீர் வரத் தொடங்கியது. இந்த நுட்பம் பற்றியும், வேளாண் பொறியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், விவரங்கள் கிடைக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 94430-14897.

'வெள்ளைக் கத்திரி விதை எங்கு கிடைக்கும்?''

''தஞ்சாவூர் மாவட்டத்தில் 'வெள்ளைக் கத்திரி’ என்று ஒரு ரகம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்த ரகம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் விளையுமா... விதைகள் எங்கு கிடைக்கும்?''

-பி. சிவகுமார், மோளங்குட்டப்பாளையம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பாஸ்கரன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் !

''தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்ய ஏற்ற ரகம் வெள்ளைக் கத்திரி. பொதுவாக, கத்திரியில் அதிகமாக சொத்தை விழும். இந்த ரகத்தில் பெரும்பாலும், சொத்தை இருக்காது. அதேபோல, கத்திரியை உரிய காலத்தில் அறுவடை செய்யாவிட்டால், பாதிப்பு ஏற்படும் என்பார்கள். ஆனால், இந்த ரகத்தைப் பத்து நாட்கள்கூட அறுவடை செய்யாமல், விட்டு வைக்கலாம். வழக்கமாக கத்திரியை அறுவடை செய்து, மூட்டை மேல், மூட்டை வைத்து எடுத்துச் செல்வார்கள். இந்த ரகத்தை பதமாக எடுத்துச் செல்ல வேண்டும். மேலே மூட்டையோ, கூடையோ வைத்தால்... காய் அடிபட்டு அழுகி விடும்.

இந்த ரகம், நன்றாக வெயில் அடிக்கும் காலங்களில் அதிக விளைச்சல் தருகிறது. ஒரு ஏக்கருக்கு 100 கிராம் விதை போதுமானது. எங்கள் பகுதிக்கு வந்தால், விவசாயிகளிடமே நேரடியாக வெள்ளைக் கத்திரி விதைகளை வாங்க முடியும். ஒரு முறை விதை வாங்கினால், அதிலிருந்து விதைகளைப் பெருக்கிக் கொள்ள முடியும். பிறகு நீங்கள் பலருக்கும் விதைகளைக் கொடுத்து உதவலாம்.''

தொடர்புக்கு, அலைபேசி: 94428-71049.

 விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space)- உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.