ஓவியம்: ஹரன்
##~## |
அரச மரத்தடி பிள்ளையார், அன்றைய தினம் அழகாக அலங்கரித்து வைக்கப்பட்டிருக்க... அதனருகே அமர்ந்து செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தார் 'வாத்தியார்' வெள்ளைச்சாமி. சற்று நேரத்தில் வந்துசேர்ந்த 'காய்கறி’ கண்ணம்மா, பிள்ளையார் முன்பாக போய் அமர... ஆட்களை வைத்து கிணற்று மோட்டாரை சரி செய்து கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரமும் வேலை முடித்து மேலே ஏறி வந்தார். தயாராக கொண்டு வந்திருந்த கேப்பைக்கூழை மூன்று பேருக்கும் பகிர்ந்த காய்கறி, ''என்னங்கய்யா டவுனு பக்கம் போயிருந்தீங்க போல?'' என்று கேட்டார்.
''நான் வேலையில இருந்தப்போ எடுத்திருந்த 'எல்.ஐ.சி. பாலிசி’யெல்லாம் முடிஞ்சு போச்சாம். முன்னயெல்லாம் பாலிசி முடிஞ்சா வீட்டுக்கு 'செக்' அல்லது 'டி.டி’ அனுப்பி வெச்சுடுவாங்க. இப்போலாம், நேரடியா நம்மளோட 'பேங்க் அக்கவுண்ட்’லதான் போடுவாங்களாம். அதுக்கு ஒரு பாரம் எழுதிக் கொடுக்கணுமாம். அதுக்காக போய் எழுதிக் கொடுத்துட்டு, அப்படியே கரன்ட் பில்லையும் கட்டிட்டு வந்தேன். அதுதான்...' என்று விவரம் சொன்னார் வாத்தியார்.
''நீதான் கம்ப்யூட்டர்ல புலி ஆச்சேய்யா. இப்போதான் கம்ப்யூட்டர்லயே கரன்ட் பில் கட்டலாம்ல. எதுக்காக இப்படி அலையுறே?'' என்று நக்கலாகக் கேட்டார் ஏரோட்டி.

''ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை 'ஈ.பி. ஆபீஸ்’ல 'டெபாசிட்’ வாங்குவாங்க. ஒவ்வொரு தடவையும் கணக்கு பண்றப்போ, போன தடவை கட்டுனதைவிட நாம அதிகமா கட்ட வேண்டி இருந்தா... அதை பில்லோட சேர்த்துக் கட்டணும். ஒருவேளை நாம கம்மியா கட்ட வேண்டி இருந்தா, பழைய டெபாசிட்ல கழிச்சுக்கிட்டு, மீதி இருக்குற பணத்தை நாம எழுதிக் கொடுத்துத்தான் வாங்கணும். எனக்கு கொஞ்சம் பணம் வர வேண்டியிருந்துச்சு. அதுதான் எல்லாத்தையும் ஒரே நாள்ல முடிச்சுட்டு வந்துட்டேன்'' என்ற வாத்தியார்,
''அருமையா இருக்கு கேப்பைக்கூழ். நம்ம ஊர் தட்பவெப்ப நிலைக்கு கேப்பைதான் சரியான உணவாம். ஆனா, அது தெரியாம இங்கிலீஷ் டாக்டருங்க... 'சப்பாத்தி சாப்பிடுங்க... சப்பாத்தி சாப்பிடுங்க'னு நம்மளையெல்லாம் வடநாட்டுக்காரங்களா மாத்திக்கிட்டிருக்காங்க. சப்பாத்தி சாப்பிட்டா, குடல் கெட்டுப் போயிடுமாம். கேப்பைதான் குடலுக்கு நல்லது செய்யுமாம். குறிப்பா, சர்க்கரை வியாதி இருக்கறவங்களுக்கு இதுதான் நல்லதாம்'' என்று அருமையான மருத்துவ ஆலோசனையையும் சொல்ல,
''என்னது, சப்பாத்தி சாப்பிட்டா குடல் கெட்டுருமா... இதென்ன புதுகுண்டு? நம்ம ஊருல சப்பாத்திக்குனே தனியா கடை போட்டிருக்காங்க. அப்பப்ப நான் அதைத்தானே ஒரு ரவுண்ட் கட்டிட்டிருக்கேன்'' என்று பதறினார் ஏரோட்டி!
''யோவ்... நீ ரொம்பவே பதறத் தேவையில்ல. ஆனா, தொடர்ந்து அதை மட்டுமே சாப்பிட்டு வந்தா ஆகாதுணுதான் சொல்றாங்க. ஏன்னா, அது நம்ம மண்ணுல விளையற விஷயமில்ல. அந்தந்த மண்ணுல விளையறதைத்தான் அங்கங்க உள்ளவங்க சாப்பிடணும். அதுக்கு ஏத்தமாதிரிதான் நம்மளோட உடலமைப்பு இயற்கை யாவே படைக்கப்பட்டிருக்கு. மாத்தி சாப்பிட்டா, தண்ணி மட்டுமில்ல, அது தங்கமாவே இருந்தாலும் ஒரு கட்டத்துல விஷமாத்தான் மாறும்கிறது விஷயம் தெரிஞ்ச, அறிஞ்ச, புரிஞ்ச பெரியவங்களோட வாக்கு'' என்று சொல்லி, ஏரோட்டிக்கு ஆறுதல் தந்தார் வாத்தியார்!

''என் வீட்டுக்காரர்கூட, கேப்பை விதை வாங்கி வெச்சுருக்கார். ஒரு மழை பெய்ஞ்சா விதைச்சுடலாம்னு காட்டை உழுது தயாரா வெச்சுருக்கார். இந்த வருஷம் விலையும் பரவாயில்லையாம். 100 கிலோ மூட்டை 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வித்துட்டுருக்குதாம்'' என்று தகவல் தந்தார் காய்கறி.
''மழைதான் பெய்ய மாட்டேங்குதே... நிறைய ஏரியாவுல இன்னும் சரியா மழை பெய்யாததால ஆடு, மாடுகளுக்கு இன்னமும் தீவனத்துக்கு பயங்கரமான தட்டுப்பாடுதானாம். அதனால ரொம்ப தூரம் போயெல்லாம் வைக்கோலை வாங்கிட்டு வந்து 'ஸ்டாக்’ வெக்கிறாங்களாம். பெரியகுளத்துக்குப் பக்கத்துல மேல்மங்கலம், தாமரைக்குளம் கிராமங்கள்ல வராக நதி தண்ணியை வெச்சு, நெல் சாகுபடி நடக்கும். 500 ஏக்கர்ல இப்போ ரெண்டாம் போகம் நெல்லை அறுத்துட்டு இருக்காங்க. திண்டுக்கல், மதுரை சுத்து வட்டாரத்துல மாடு வளக்குறவங்க, இந்த விவசாயிகள்ட்ட ஒரு ஏக்கர் வைக்கோலுக்கு 15 ஆயிரம் ரூபாய்னு விலை பேசி அட்வான்ஸ் கொடுத்து வெச்சுருக்காங்களாம். ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஏக்கர் வைக்கோலுக்கு 3 ஆயிரம் ரூபாய்தான் விலை கிடைக்குமாம். இப்போ 'நெல்லுல கிடைக்கிறதைவிட அதிக லாபம் கிடைக்குது’னு விவசாயிங்க சந்தோஷத்துல இருக்காங்க'' என்றார், ஏரோட்டி.
''மரவள்ளி, கரும்பு எல்லாத்துக்கும்கூட இந்த வருஷம் நல்ல விலை கிடைக்குதாம். கரூர் மாவட்டத்துல வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஓரம்புப்பாளையம், புள்ளம், கவுண்டன்புதூர், வடிவேல் நகர் பகுதிகள்ல இந்த தடவை நிறைய பேர் மரவள்ளி போட்டிருந்தாங்களாம். இப்போ அறுவடை நடந்துட்டுருக்கு. இந்த வருஷம் வரத்து குறைவா இருக்கறதால, மரவள்ளி விவசாயிகளுக்கு ஜாக்பாட் பரிசுதான். போன வருஷம் டன் 1,350 ரூபாய்னு வித்தது, இப்போ டன் 17 ஆயிரம் ரூபாய் வரை விக்குதாம்.
இதேமாதிரி வெல்லம் காய்ச்சுற கரும்பும் ஒரு டன், 3 ஆயிரத்து 300 ரூபாய் வரைக்கும் விலை போகுதாம். போன வருஷம் இந்தக் கரும்புக்கு உடுமலைப்பேட்டை ஏரியால சரியான விலை கிடைக்கலையாம். அதனால, இந்த வருஷம் நிறைய பேர் கரும்பு போடலை. தண்ணி பிரச்னை வேற இருந்ததால கரும்பு சாகுபடி ரொம்பவும் குறைஞ்சுடுச்சு. வழக்கமா, ஓணம் பண்டிகைக்கு கேரளாவுல அதிகளவு வெல்லம் தேவைப்படும். அதுக்காக இந்த மாசம்தான் உற்பத்தியை ஆரம்பிப்பாங்க. இப்போ உற்பத்தி குறைஞ்சதால கரும்புக்கு நல்ல விலை கிடைச்சுட்டு இருக்கு. தேவை அதிகமா இருக்கறதால இன்னமும் விலை ஏறுமாம்'' என்றார், வாத்தியார்.
''அப்பாடா... இப்போதான் கேக்குறதுக்கே கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. நல்ல விலை கிடைச்சு, நம்ம சம்சாரிங்க நல்லா இருந்தாத்தானே நாடும் நல்லாயிருக்க முடியும்'' என்று குஷியோடு சொன்ன காய்கறி,
''போன தடவை போட்ட கணக்குக்கு விடை தெரிஞ்சுதா?'' என்று கேட்டார்.
''பால் கணக்குதானே... பெரியவங்க
5 பேர், இளந்தாரிங்க 25 பேர், சின்னப்பசங்க 70 பேரு. கணக்கு சரியா'' என்று முந்திக் கொண்டு விடை சொன்னார் ஏரோட்டி.
''ம்... வாத்தியார் சொல்லிக் கொடுத்தாராக்கும்...'' என்று நக்கலாக காய்கறி கேட்க...
''அந்தாளாத்தான் கண்டுபிடிச்சுருக்கார். ஆனா, நீ சொன்ன கணக்குக்கு சரியான விடையே பலவிதமா வருது. இணையதளத்துல 'பசுமை விகடன்’ படிக்கிறவங்க, நிறைய பேரு அதையெல்லாம் எழுதியிருக்காங்க'' என்று சொன்னார் வாத்தியார்.
''அப்படியா...'' என்று சந்தோஷமாகக் கேட்ட காய்கறி,
''தலையில இருக்கற கூடை நிறைய முட்டையோட ஒரு வியாபாரி ரோட்டுல நடந்து வர்றார். எதிர்ல வந்த சைக்கிள்காரர், மோதவும்... கூடை கீழ விழுந்து முட்டையெல்லாம் உடைஞ்சு போயிடுச்சு. அக்கம்பக்கத்துல இருந்தவங்க வந்து பஞ்சாயத்து பண்ணி, 'எத்தனை முட்டை இருந்ததோ, அதுக்கான பணத்தை நீ நஷ்டஈடா கொடுக்கணும்’னு சைக்கிள்காரர்கிட்ட சொல்லிடறாங்க. வியாபாரியோ... 'கூடையில எத்தனை முட்டை இருந்ததுனு சரியா எனக்குத் தெரியாது. ஆனா, மொத்த முட்டைகளை ரெண்டு ரெண்டா பிரிச்சா... ஒரு முட்டை மிச்சம் இருக்கும். மூணு மூணா பிரிச்சா... ரெண்டு முட்டை மிச்சம் இருக்கும். நாலு நாலா பிரிச்சா... மூணு முட்டை மிச்சம் இருக்கும். அஞ்சஞ்சா பிரிச்சா நாலு முட்டை மிச்சம் இருக்கும். ஏழு ஏழாப் பிரிச்சா மிச்சம் விழுகாது’னு சொன்னார். அப்படினா, மொத்தம் எத்தனை முட்டை? இணையதளத்துல காப்பி அடிக்காம, ஒழுங்கா கணக்கு போட்டுச் சொல்லுங்க'' என்றபடியே காய்கறி கிளம்ப, முடிவுக்கு வந்தது, மாநாடு.