மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...

படம்: வீ.சக்தி அருணகிரி ஓவியம்: ஹரன்

##~##

நெல் விதைப்புக்காக வயலை சகதியாக்கிக் கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். வழக்கம்போல 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, வரப்பிலமர்ந்து, நாளிதழ்களில் மூழ்கியிருந்தார். சற்று நேரத்தில் ஏரோட்டியின் நாய், பாசத்தோடு கத்தும் சப்தம் கேட்க, 'காய்கறி’ கண்ணம்மா வருவதை யூகித்து, வரப்பேறி வந்தார் ஏரோட்டி.

''யோவ்... ஆடு, மாடுகளுக்கு 'ஆந்த்ராக்ஸ்’ வந்துருச்சுனு பேச்சா இருக்கே... ஏதும் விசாரிச்சியா'' என்று கேட்டு மாநாட்டை ஆரம்பித்தார், வாத்தியார்.

''ஆமாய்யா... திண்டிவனத்துக்குப் பக்கத்துல இருக்கற நொளம்பூர் பகுதியில ஒரே திகிலா இருக்கு. ஆகஸ்ட் இருபத்தெட்டாம் தேதியில இருந்து இங்க ஆடு, மாடுகள்லாம் அடிக்கடி சாக ஆரம்பிச்சுருக்கு. கிட்டத்தட்ட இருபது, இருபத்தஞ்சு சாவு நடந்தபிறகு, கால்நடைத்துறையில ஆய்வு பண்ணி, ஆந்த்ராக்ஸ் நோய் பரவியிருக்கறதைக் கண்டுபிடிச்சுருக்காங்க. உடனே, முகாம் போட்டு ஊர்ல இருக்கற ஆடு, மாடு... செத்துப்போன ஆடு, மாடுகளோட கறியைச் சாப்பிட்டவங்க... ஆடு, மாடுகளை வளர்க்கறவங்கனு  தடுப்பூசி போட்டுருக்காங்க. இதுக்குப் பிறகும் சினை மாடு ஒண்ணு செத்துப் போச்சாம். 'ஆந்த்ராக்ஸுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை’னு அதிகாரிங்க சொன்னாலும், அந்தப் பகுதிகள்ல பயம் தெளியலையாம்'' என்றார், ஏரோட்டி.

''நீ தடுப்பூசி போட்டாச்சா?'' என்று காய்கறி கேட்க...

''முந்தா நேத்தே போட்டாச்சு...'' என்ற ஏரோட்டி, ''அதென்ன தூக்கு வாளியில... கமகமக்குது!'' என்றார்.

''உனக்குத்தான் மூக்கு வேர்த்துடுமே... சோள தோசை சுட்டு, கருவாட்டுக் குழம்பு வெச்சேன்'' என்ற காய்கறி, ஆளுக்கு இரண்டு தோசைகளை எடுத்துக் கொடுத்தார்.

மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...

தோசையை உள்ளே தள்ளியபடியே பேசிய வாத்தியார், ''உடுமலைப்பேட்டையிலருந்து மூணாறு போற வழியில, கேரள எல்லைக்குள்ள இருக்கு சின்னாறு. இங்க, சம்பக்காடு மலைவாழ் குடியிருப்புப் பகுதியில, ஆடு, மாடுகளுக்கு வினோத நோய் பரவுதாம். கால் விரல் வீங்கி, வாயில நுரை தள்ளி கொஞ்ச நாள்ல செத்துடுதாம். இருபது மாடுகள், பத்து ஆடுகள்னு இதுவரை செத்துருக்காம். காட்டுக்குள்ள, 6 காட்டெருமைகள், 2 யானைகளும் இதேமாதிரி இறந்துடுச்சாம். அந்த ஏரியாவுல இருந்துதான், பாம்பாறு, அமராவதி அணைக்கு தண்ணி வருதாம். அதனால, 'தண்ணி மூலமா இந்த நோய் தமிழ்நாட்டுலயும் பரவலாம்’னு மக்கள் பயப்படுறாங்க'' என்று வருத்த சங்கதி சொன்னார்.

''என்கிட்ட ஒரு சேதி இருக்கு'' என்று பரபரத்த காய்கறி,

''கம்பம் பக்கத்துல இருக்குற காமையகவுண்டன்பட்டியில 'காளிதாஸ்’ங்கிறவர்

திசுவாழை சாகுபடி பண்ணியிருக்கார். வழக்கமா ஒரு குலைதானே தள்ளும். இவர் தோட்டத்துல ரெண்டு குலை தள்ளியிருக்கு. ரெண்டுமே நல்ல பெரிசா வளந்துருக்குதாம். சுத்துப்பட்டு ஜனங்க எல்லாம் ஆச்சர்யமா வந்து பாக்கறாங்களாம்'' என்றார்.

''பரவாயில்லையே... உன் இன்வால்வ்மென்ட்டை நான் பாராட்டுறேன்'' என்று 'வைகைப் புயல்' கணக்காக ஏரோட்டி நக்கல் செய்ய, முகம் சிவந்தார், காய்கறி.

''அதவிடு கண்ணம்மா...'' என்ற வாத்தியார்,

மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...

''வறட்சி நிவாரணத்துக்காக அரை ஏக்கர்ல இருந்து, ஒரு ஏக்கர் வரை நிலம் வெச்சுருக்கவங்களுக்கு... கால்நடைத் தீவனம் (சோளம்) பயிர் பண்றதுக்கு 50 சதவிகித மானியத்துல, திருவள்ளூர் மாவட்டத்துல கடன் கொடுத்துருக்காங்க. இப்ப அறுவடை நேரமா பார்த்து, 'அறுவடை பண்ற தீவனத்துல பாதியை எங்ககிட்ட கொடுக்கணும்.  கிலோவுக்கு ரெண்டு ரூபாய்னு கொடுப்போம்’னு சொல்லி கட்டாயப்படுத்துறாங்களாம் ஆவின் அதிகாரிங்க. ஏக்கருக்கு ஆறாயிரத்து ஐநூறு ரூபாதான் மானியம். ஆனா, பதினஞ்சாயிரம் ரூபாய் வரை செலவு பண்ணி, பயிர் பண்ணியிருக்கற விவசாயிங்க, 'எங்க ஆடு, மாடுகளுக்கு தீவனம் வேணும்னுதான் கடன் வாங்கி பயிர் பண்ணியிருக்கோம். அதை கேட்டா எப்படி?’னு கொதிச்சுட்டிருக்காங்க'' என்று வேதனைப்பட்டார்.

''பிச்சை எடுக்குமாம் பெருமாளு... பிடுங்கித்திங்குமாம் அனுமாருங்குற கதையால்ல இருக்கு'' என்ற காய்கறி,

''சரி முட்டை கணக்கு போட்டேனே... விடை என்னாச்சு?'' என்றார்.

''கண்டுபிடிச்சாச்சு... கண்டுபிடிச்சாச்சு, 119 தானே!'' என்றார் ஏரோட்டி குஷியோடு.

''சபாஷ்'' என்று தட்டிக் கொடுத்த காய்கறி,

''குடியானவர் ஒருத்தர், சதுரமா ஒரு நிலத்தை வாங்கினார். அதுக்கு, 'முள் கம்பி வேலி போடணும்’னு நினைச்சார். ஆளுங்கள வரச்சொல்லி கேட்டப்போ, 'ஒரு பக்கத்துக்கு 72 தூண் ஊனணும்’னு சொல்றாங்க. அப்போ மொத்தம் அவர் எத்தனைத் தூண் வாங்க வேண்டியிருக்கும்?'' என்று கேட்டபடியே காய்கறி கிளம்ப, முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.