நீங்கள் கேட்டவை
புறா பாண்டி
''திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுநீர், விவசாயத்தைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றால், சாயப்பட்டறைகளில் இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சிலர் ஆலோசனை கூறுகிறார்கள். அத்தகையச் சாயங்கள் எளிதில் கிடைக்கின்றனவா?''
-க. வெங்கடேசன், சென்னை.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில் உள்ள இயற்கைச் சாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அலகு, (டாக்டர். சௌந்திரம் அறக்கட்டளை) துணைச் செயலர் ஆறுமுகம் பதில் சொல்கிறார்.

''ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். கண்ணைக் கவரும் ஓவியங்கள், அழகு மிளிரும் ஆடைகள்... என்று மூலிகைகளை வைத்தே சாதனை படைத்தார்கள். இடைப்பட்டக் காலத்தில் நாகரிகம் என்ற பெயரில் ரசாயனம் வந்தது. அதன் பாதிப்புதான் இப்போது திருப்பூரில் பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

எங்கள் நிறுவனத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக இயற்கைச் சாயங்கள் குறித்த ஆய்வு நடக்கிறது. நாங்கள் உற்பத்தி செய்யும் காதித் துணிகளுக்கு, இயற்கைச் சாயங்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இதைக் கேள்விப்பட்டு ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் சாயங்களை வாங்கிச் செல்கிறார்கள். திருப்பூரில் உள்ள சில சாயப்பட்டறைகள்கூட எங்களிடம் வாங்குகின்றன.
##~## |
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய வேளாண் அமைச்சகம், இயற்கைச் சாய உற்பத்திக்கான சில திட்டங்களைச் செயல்படுத்தும் வாய்ப்பை எங்களுக்குக் கொடுத்திருக்கிறது. அதன்படி சுற்று வட்டார கிராம மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களை மூலிகை சாகுபடி செய்ய வைத்து, நாங்களே கொள்முதல் செய்கிறோம். அவற்றின் மூலம்தான் சாயங்களைத் தயாரித்து வருகிறோம்.
'இயற்கைச் சாயத்தை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியாது. விலை அதிகமானது’ என்றெல்லாம் கூறப்படுகிறது. அதிக விலை என்பது உண்மைதான். தீங்கு இல்லாத பொருள் என்பதால், அதிக விலைக்கு விற்றாலும், நன்மைதானே. அதேசமயம், அதிக உற்பத்தி என்பதும் சாத்தியமே! சரியாக திட்டமிட்டு, அதிகளவில் உற்பத்தி செய்யும்போது விலை குறைய வாய்ப்பிருக்கிறது. இதற்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள் எங்களை அணுகலாம்.''
தொடர்புக்கு: இயற்கைச் சாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அலகு, டாக்டர். சௌந்திரம் அறக்கட்டளை, காந்திகிராமம், திண்டுக்கல் மாவட்டம். தொலைபேசி: 0451-2453347.
''எனது நிலக்கடலை வயலில் புரோட்டீனியாப் புழுக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியுமா?''
-சுபேர், ஷாகிர், மீனம்பூர்.
திருவண்ணாமலை மாவட்டம், பாலப்பாடி, முன்னோடி இயற்கை விவசாயி இரா. செல்வராசு பதில் சொல்கிறார்.

''இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள், பூச்சி மற்றும் நோய் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிலக்கடலை விதைக்கும்போதே பூச்சிவிரட்டியையும் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வேப்பிலை, நொச்சி, எருக்கன், சோற்றுக்கற்றாழை, பிரண்டை, தழுதாலை, நாய்துளசி ஆகியவற்றை தலா இரண்டு கிலோ வீதம் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 2 கிலோ பசுஞ்சாணம், ஐந்து லிட்டர் மாட்டுச்சிறுநீர், ஒரு கிலோ வெல்லம் ஆகியவற்றை சேர்க்கவும். இந்தப் பொருட்களை 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கேனில் போட்டு, பத்து லிட்டர் தண்ணீர் கலந்து நிழலான இடத்தில் வைக்கவும். சரியாக 15-ம் நாள் பூச்சிவிரட்டி தயாராகிவிடும். விதைத்த 22-ம் நாள் முதல் களை எடுக்கும் சமயத்திலேயே பூச்சிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பூச்சிவிரட்டியைத் தெளித்துவிட வேண்டும்.
45-ம் நாளுக்கு மேல் செடிகள், தளதளவென இருக்கும். இந்த நேரத்தில்தான் புரோட்டீனியாப் புழுக்களின் தாக்குதல் தொடங்கும். அதனால், விதைத்த 30-ம் நாளே புகையிலைக் கரைசல் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 கிலோ வேப்பங்கொட்டை, 5 கட்டு புகையிலைக் குச்சி, 2 கிலோ நாய்துளசி, அரை கிலோ வசம்பு ஆகியவற்றை, 5 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் இட்டு, அதனுடன் 10 லிட்டர் தண்ணீரைக் கலந்து 15 நாட்கள் ஊற வைத்தால், புகையிலைக் கரைசல் தயார். சரியாக 45-ம் நாள் பத்து லிட்டர் நீரில் அரை லிட்டர் புகையிலைக் கரைசல், ஒரு லிட்டர் பூச்சிவிரட்டி ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். புரோட்டீனியா புழு, இலைச்சுருட்டுப் புழு போன்றவற்றை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஒரு தெளிப்புக்குள் புழுக்கள் அடங்காவிடில், 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை தெளிக்கலாம்.''
''அழகு கொய்மலர்கள் சாகுபடி செய்ய விரும்புகிறேன். எந்த வகையான மலர்களைப் பயிரிட்டால் லாபகரமாக இருக்கும்?''
கௌசல்யா கார்த்திகேயன், காஞ்சிபுரம்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, மலரியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். ஸ்வர்ணப்பிரியா பதில் சொல்கிறார்.

''பிறந்தநாள், திருமண விழா... போன்ற மகிழ்வான நேரங்களில் கொய் மலர்களைக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம். முன்பெல்லாம் இந்த வகைப் பூக்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இன்று, தமிழ்நாட்டிலேயே கொய்மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், தேவையான அளவில் உற்பத்தி இல்லை.
கொய்மலர்களை பசுமைக் கூடாரத்தில்தான் வளர்க்க வேண்டும் என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால், திறந்தவெளியிலேயே பல கொய்மலர்களை வளர்க்க முடியும் என்பதுதான் உண்மை. பூங்கொத்தில் கொய்மலர்களுடன் இணைத்து வைக்கப்படும் கோல்டன் ராட்,... போன்றவற்றையும் திறந்தவெளியில் வளர்க்க முடியும்.

வாழையில் ஊடுபயிராக ஆல்பீனியா மலரையும், தென்னையில் ஊடுபயிராக ஹெலிகோனியா மலரையும் சாகுபடி செய்யலாம். ரோஜா, ஆந்தூரியம்... போன்றவற்றை பசுமைக் குடில் அமைத்தும் சாகுபடி செய்யலாம். ரோஜாவுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு பெரிய அளவுக்கு தேவை இருக்கிறது. இதை மனதில் கொண்டு சாகுபடி செய்தால், நல்ல லாபம் பார்க்க முடியும். அதேப்போல சிவப்பு வண்ண ஆந்தூரியம் மலருக்கும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.
மலர் சாகுபடியில் இறங்கும் முன்பு, ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்படும் பயிற்சியில் கலந்து கொள்வதோடு, அருகில் உள்ள மலர் பண்ணைகளுக்கு சென்று பார்வையிடுவதும் அவசியம். அதன் பிறகு சாகுபடி செய்தால், கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.''
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், மலரியல் ஆராய்ச்சி மையம், தோவாளை, கன்னியாகுமரி மாவட்டம். தொலைபேசி: 04652-285009.
''பாலில் இருந்து நெய் காய்ச்சும் முறைகளில் சிறந்த முறை எது?''
ஆர். கணபதி, ராசிபுரம்.
நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி, பால் அறிவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். இளங்கோவன் பதில் சொல்கிறார்.


''பெரிய பால் பண்ணைகளில் கறந்த பாலில் இருந்து இயந்திரம் மூலம் கிரீம் எடுத்து, நெய்யாக மாற்றும் முறைதான் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. சிறிய அளவில் நடத்தப்படும் பண்ணைகளில் கிரீம் எடுத்தவுடன், அதை பிறை ஊற்றி 12 மணி நேரம் வைத்திருப்பார்கள். பின்புதான் அது வெண்ணெயாக மாறும். இந்த வெண்ணெயைக் காய்ச்சும்போதே மணம் மூக்கைத் துளைக்கும்.
பாலைக் காய்ச்சி பிறை ஊற்றித் தயிராக்கி, பின் மத்து மூலம் கடைந்து வெண்ணெய் எடுத்து, அதில் முருங்கை இலையைப் போட்டு நெய் காய்ச்சும் முறையும் இருக்கிறது. இது ஓர் அற்புதமான கண்டுபிடிப்பு. பொதுவாக, நெய்யில் அமிலம் உருவாகி, அது சீக்கிரம் கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. முருங்கை இலைக்கு, அந்த அமிலத்தை முறிக்கும் குணம் உண்டு என்பதால்தான் முன்னோர்கள் இப்படி நெய் காய்ச்சினார்கள். இதுதான் சிறந்த பாரம்பர்யத் தொழில்நுட்பம். இப்படித் தயாரிக்கப்படும் நெய் சுவையாகவும் இருக்கும்!''
''அரிசியில் உள்ள தாதுப்பொருட்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டியப் பொருட்களைப் பற்றிய விவரங்களும் எங்கு கிடைக்கும்?''
டி. ராமசாமி, தேவபாண்டலம்.
தஞ்சாவூரில் பயிர் பதன ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரிசியில் உள்ள சத்துப் பொருட்கள் மற்றும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும்.
தொடர்புக்கு: 04362-228155, 226676
படங்கள்:க. தனசேகரன், கே. குணசீலன், வீ. சிவக்குமார்
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை'
பசுமை விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2
என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு
இ-மெயில் மூலமும் PVQA (space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.