மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்!

ஓவியம்: ஹரன்

##~##

டிராக்டர் வைத்து வயலில் உழவு ஓட்டிக் கொண்டிருந்தார் 'ஏரோட்டி’ ஏகாம்பரம். வானொலிக்கு காதுகளைக் கொடுத்து, கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தார், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி.

''என்னய்யா,  நின்னுட்டே தூங்கறீங்க?'' என்று வழக்கம்போல கலாய்த்தபடியே வந்து சேர்ந்தார் 'காய்கறி’ கண்ணம்மா!  

சட்டென்று கண்களைத் திறந்த வாத்தியார், ''என்னப் பாத்தா... தூங்குற மாதிரியா தெரியுது?'' என்று சிடுசிடுக்க... இவர்களை கவனித்துவிட்ட ஏரோட்டி... டிராக்டரை ஓரம் கட்டிவிட்டு வந்து அவர்களோடு அமர்ந்து கொள்ள... ஒரு செய்தியைச் சொல்லி, அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார்.

''காவிரி நதி நீர்ப் பிரச்னை, ரொம்ப நாளா ஓடிட்டு இருக்கறதால, டெல்டா பகுதிகள்ல இதுவரைக்கும் பெரிய அளவுல எந்த மேம்பாட்டுப் பணிகளையும் செய்யவே இல்லையாம். 'தண்ணி வீணா கடல்ல கலக்காதபடி, வடிகால்களை எல்லாம் புனரமைச்சு கொடுங்க’னு ரொம்ப நாளா விவசாயிகளும் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அதுக்கு இப்போதான் விடிவுகாலம் பொறந்திருக்கு. 'ஆசிய வளர்ச்சி வங்கி’கிட்ட 1,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, மாநில அரசு நிதியில இருந்து 500 கோடி ரூபாய் போட்டு, மொத்தம் 1,500 கோடி ரூபாயில, 40 கூடுதல் நீர் வழிந்தோடிகளைக் கட்டப் போறாங்களாம். அதோட, சிதிலமடைஞ்சுருக்குற 40 கடைமடை நீர்வழிந்தோடிகளை சீரமைக்கவும் போறாங்களாம். இன்னும் பல வேலைகளையும் செய்யப் போறாங்களாம். இதையெல்லாம் முடிச்சா... காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கீழ்க்கொள்ளிடம் அணைக்கட்டுகளைச் சேர்ந்த, நாலரை லட்சம் ஹெக்டேர் பாசனப் பரப்புக்கு உபயோகமா இருக்குமாம்'' என்றார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்!

''கமிஷன் அடிக்காம வேலை பாத்தா சரிதான்'' என்ற காய்கறி, தான் கொண்டு வந்திருந்த தினை மாவு உருண்டையை ஆளுக்கு இரண்டு கொடுத்தார்.

ருசித்துக் கொண்டே, ''என்கிட்டயும் டெல்டா சேதி ஒண்ணு இருக்கு'' என்ற ஏரோட்டி,

''ஆகஸ்டு மாசம் 2-ம் தேதி, மேட்டூர் டேம்ல தண்ணி திறந்தாங்கள்ல. அதை வெச்சு '12 லட்சம் ஏக்கர்ல நெல் சாகுபடி பண்ணுவாங்க’னு அதிகாரிகள் கணிச்சுருந்தாங்க. ஆனா, அந்த அளவுக்கு சாகுபடி நடக்கலையாம். அதனால, காரணம் தெரிஞ்சுக்குறதுக்காக, வேளாண் துறை அமைச்சர், வேளாண் துறை செயலாளர், ஆணையர் எல்லாரும் டெல்டா பகுதியில ஆய்வு பண்ணிருக்காங்க. 'விதை நெல், உரம் எல்லாம் தட்டுப்பாடா இருக்கு. எங்களுக்குத் தேவைப்படுற ரகம் கிடைக்கிறதில்ல. அதில்லாம விலை ரொம்ப அதிகமா இருக்கு’னு விவசாயிங்க புகார் சொல்லிருக்காங்களாம். அதை விசாரிச்சப்போ, வியாபாரிகள், மாவட்ட அதிகாரிகள் எல்லாம் கூட்டணி போட்டு, செயற்கையா தட்டுப்பாட்டை ஏற்படுத்தினதைக் கண்டுபிடிச்சுருக்காங்க. மாவட்ட அதிகாரிகளுக்கு செம 'டோஸ்’ விட்டு, கடுமையா எச்சரிக்கையும் பண்ணிருக்காங்களாம் அமைச்சர் தலைமையில போன குழுவினர். உரம், விதைநெல்லை பதுக்குறவங்களைக் கண்டுபிடிச்சு கடுமையான நடவடிக்கை எடுக்க தனிப்படையும் அமைக்கப் போறாங்களாம்'' என்றார்.

''ம்... அப்ப, தனிப்படைக்கு நல்ல வரும்படி கிடைக்கும்னு சொல்லு'' என்று சொல்லி 'கபகப'வென சிரித்தார், காய்கறி.

''எந்தப் பொருளுக்கு தடை போடுறாங்களோ, உடனே, அந்தப் பொருளோட விலை உயர்ந்துடும். அதை கண்காணிக்கிற அதிகாரிகளோட பணப்பையும் கனத்துடும். 'குட்கா’, 'புகையிலை’ கதையெல்லாம் அந்த மாதிரிதானே போயிட்டிருக்கு. என்னிக்காவது ஒரு நாள் மக்கள் புரட்சி வந்து, அதிகாரிகள், அரசியல்வாதிகளையெல்லாம் புரட்டி எடுக்கப் போறாங்க. அப்போதான் நாட்டுக்கு நல்ல வழி பிறக்கும்'' என்ற வாத்தியார், ''ஒரு முக்கியமான சேதிய்யா'' என்றபடியே செய்திக்குள் போனார்.

''தமிழ்நாட்டுல 82 லட்சம் விவசாயக் குடும்பங்கள் இருக்குனு கணக்கெடுத்திருக்காங்க. பண்ணைப் பயிர் மேலாண்மைத் திட்டத்துல, பாரம் 1 மூலமா விவசாயிகளின் பெயர், தோட்டத்தோட சர்வே எண், நீர்ப்பாசன முறை, செல்போன் நம்பர்... மாதிரியான அடிப்படை விவரங்களை சேகரிச்சுட்டு இருக்காங்க. இந்த விவரங்களை கம்ப்யூட்டர்ல ஏத்தி, ஒவ்வொரு விவசாயிக்கும் பிரத்யேகமா குறியீட்டு எண் கொடுப்பாங்களாம். அதுக்கப்பறம் அந்த விவசாயிகளோட நிலத்துல மண் பரிசோதனை செஞ்சு கையேடு கொடுப்பாங்க. அதுல அவங்கவங்க மண்ணுக்கேத்த விதை, உரம், தொழில்நுட்பங்கள் எல்லாம் போட்டிருப்பாங்களாம். அந்த குறியீட்டு எண்ணை வெச்சு, ஆன்லைன் மூலமாவே விவரங்களைத் தெரிஞ்சுக்கலாமாம். இந்த கையேடு வெச்சுருக்குற விவசாயிகளுக்கு மட்டும்தான், இனி அரசாங்கத்தோட மானியம், மத்த சலுகையெல்லாம் கிடைக்குமாம். அதனால, உடனடியா பதிவு பண்ணி வெச்சுடு'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் வாத்தியார்.

அப்போது ஒன்றிரண்டாக தூறல்கள் விழ ஆரம்பிக்க, ''மழை பெருசாகுறதுக்குள்ளாற கிளம்பறேன். போன தடவை, வேலி கணக்கு போட்டேனே... 'எத்தனை தூண்?’ போடணும்கிறத கண்டுபிடிச்சீங்களா?'' என்று காய்கறி கேட்டு முடிக்கும் முன்னரே,

''ம்க்கும்... பிசாத்து கணக்கு. அப்பவே கண்டுபிடிச்சுட்டோமே... 284 தானே'' என்று சட்டென பதில் தந்தார் ஏரோட்டி.  

''பரவாயில்லையே...'' என்ற காய்கறி,

''ஒருத்தர் சந்தையில இருந்து வீட்டுக்கு ஏழு மாம்பழம் வாங்கிட்டு வந்தார். ஆனா, திடீர் விருந்தாளிங்க கொஞ்ச பேரும் வந்துட்டதால... மொத்தம் பன்னெண்டு பேர் வீட்டுல இருக்காங்க. ஏழு மாம்பழத்தை பன்னெண்டு பங்கா பிரிச்சுக் கொடுக்கணும். கூட, குறையப் போயிடுச்சுனா... சின்னப்பிள்ளைங்க அழுவுறதுக்கு ஆரம்பிச்சுடும். அதனால, எந்தப் பிரச்னையும் இல்லாம சரி பங்கா துண்டு போட்டு பிரிச்சுக் கொடுத்துட்டார். எப்படி?''

''மண்டை காயுது... கண்டுபிடிக்கறதுக்கு லேசா ஏதாச்சும் வழியைக் காட்டு'' என்றார், ஏரோட்டி.

''சரி... ஒரு மாம்பழத்தை அதிகபட்சமா நாலு துண்டு போட்டார். இதுக்கு மேல சொல்ல மாட்டேன்'' என்றபடி காய்கறி கிளம்ப, முடிவுக்கு வந்தது, மாநாடு.