புறா பாண்டி, படங்கள் : க.ரமேஷ்,க.பாலாஜி
##~## |
''பத்து ஆண்டுகளுக்கு முன்பு 'பீதனக்கண்’ மரம் பற்றி, பிரமாதமாகப் பேசினார்கள். இப்போது, இந்த மரத்துக்கு வரவேற்பு எப்படி உள்ளது?''
-எஸ். பக்தவசலம், பழைய காஞ்சிபுரம்.
கோயம்புத்தூர் மரம் வளர்ப்போர் சங்கத்தின் பொருளாளரும், முன்னோடி விவசாயியுமான, மது. ராமகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
''பீதனக்கண் மரத்துக்கு பீ மரம், பெரு மரம், தீக்குச்சி மரம்... என, பல பெயர்கள் உண்டு. 'தீக்குச்சி தயாரிப்புக்கு இந்த மரம் தேவை’ என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரம் செய்யப்பட்டது. 'எந்த நிலத்தில் பயிர் செய்யலாம், எதில் செய்யக் கூடாது?’ என்பதைத் திட்டமிடாமல், இந்த மரக்கன்றுகளை வளர்த்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிகம்.
இந்த மர சாகுபடியைப் பொருத்தவரை இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இது, செம்மண் நிலத்தில் மட்டும்தான் நன்றாக வளரும். இது தெரியாமல், வண்டல் நிலத்தில் சாகுபடி செய்து பல விவசாயிகள் கையைச் சுட்டுக் கொண்டனர். இந்த மரத்தை திடீரென கம்பளிப் புழு தாக்கும். என்னதான் பூச்சிவிரட்டி தெளித்தாலும், இலைகள் முழுவதையும் தின்று தீர்க்காமல் அவை அகலாது.

அதனால், மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். பெருமரம் என்ற பெயருக்கு தகுந்தபடி, பெருத்து

வளரும். முறையாக கவாத்து செய்வது முக்கியம்.
என்னுடைய பண்ணையில், எட்டு வயது கொண்ட, இரண்டு பெரு மரங்கள் இருந்தன. அண்மையில் அவற்றில் ஒரு மரத்தை மரப்பாச்சி பொம்மை செய்வதற்காக, 4 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி வாங்கிச் சென்றார்கள். இன்றும்கூட இந்த மரத்துக்குத் தேவை அதிகமாக உள்ளது. நாம் மரத்தை அறுத்துக் கொடுத்தால், ஒரு டன் 6 ஆயிரம் ரூபாய் என, தீப்பெட்டி தொழிற்சாலைகள் வாங்கிக் கொள்கின்றன. மரத்தின் மீது குறை ஒன்றுமில்லை. எப்படி வளர்க்க வேண்டும் என்று கற்றுக்கொண்டால், எல்லா மரங்களும் லாபம் தரும்.''
தொடர்புக்கு, செல்போன்: 94424-16543.
''மானாவாரியில் வளரக் கூடிய தீவனப்பயிர்கள் பற்றி சொல்ல முடியுமா?''
வி. குமரேசன், செம்புளிச்சம்பாளையம்.
காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர். குமாரவேலு பதில் சொல்கிறார்.

''முயல் மசால், கொழுக்கட்டைப் புல் ஆகியவை மானாவாரி நிலங்களில் வளரக்கூடியவை. பசுந்தீவனத்துக்காக, சவண்டல் (சூபாபுல்), கிளரிசீடியா... போன்ற மரங்களை வரப்பு ஓரங்களில் உயிர்வேலியாக சாகுபடி செய்யலாம். இந்த இரண்டு மரங்களும், கடுமையான வறட்சியிலும் தாக்குப் பிடித்து வளரக்கூடியவை. முயல் மசால், கொழுக்கட்டைப் புல்லைத் தனியாக சாகுபடி செய்வதைவிட, ஊடுபயிராகச் செய்வதுதான் லாபகரமானது. மலைவேம்பு, குமிழ் போன்ற மரங்களை 5 மீட்டர் இடைவெளியில் சாகுபடி செய்யலாம். இரண்டு மரங்களுக்கு இடையில், தீவனப் பயிர்களை சாகுபடி செய்யலாம்.
முயல் மசாலும், கொழுக்கட்டைப் புல்லும் ஒரு முறை விதைத்துவிட்டால், அந்த நிலத்தில், விதைகளைப் பரப்பி வளர்ந்து கொண்டே இருக்கும். கோடைக்காலத்தில் காய்ந்திருந்தாலும்... மழை ஈரம் பட்டவுடன் துளிர்த்து வளரும். இந்த இரண்டு தீவன விதைகளும், எங்கள் மையத்தில் மானிய விலையில் கிடைக்கின்றன. தேவைப்படும் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். பாசன வசதி உள்ள நிலங்களுக்கு ஏற்ற தீவனப் புல் கரணைகளும் விற்பனைக்குக் கிடைக்கும்.''
தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், (எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அருகில்) காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203. தொலைபேசி: 044-27452371.
''நீளப் புடலை, குட்டைப் புடலை... ஆகியவற்றின் வித்தியாசம் என்ன?''
-எஸ். சிவசாமி, வாழப்பாடி.
திண்டுக்கல் மாவட்டம், பண்ணைப்பட்டியைச் சேர்ந்த ரத்தினசாமி பதில் சொல்கிறார்.
''புடலையில் நாட்டு ரகத்துக்குத்தான் மவுசு அதிகம். நீளப் புடலை, குட்டைப் புடலை... என்ற இரண்டு ரகங்களுமே நாட்டு ரகங்கள்தான். இவைதான் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இரண்டு ரகங்களுக்கும் சாகுபடி முறை ஒன்றுதான். ஆனால், அறுவடை செய்யும்போது நீளப் புடலையில் கவனம் செலுத்த வேண்டும். காய் உடையாமல் இருக்க இலை, தழைகளை வைத்து கட்டி விற்பனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படிப் பாதுகாத்து எடுத்துச் செல்வதற்கு தகுந்தபடி விலையும் கிடைக்கும்.


குட்டையை விட, நீளம் அதிக விலைக்கு விற்பனையாகும். கிலோவுக்குக் குறைந்தபட்சம் மூன்று ரூபாய் அதிகம் கிடைக்கும். நீளப் புடலை சுவை அதிகம் கொண்டது. அதனால்தான், கூடுதல் விலை கிடைக்கிறது. குட்டையை அறுவடை செய்து கையாள்வது எளிது. அதனால், கொஞ்சம் குறைவான விலை கிடைத்தாலும், விவசாயிகள் குட்டை ரகத்தைத்தான் விரும்புகிறார்கள். இந்த இரண்டு ரகங்களின் விதைகளும், திண்டுக்கல், கோயம்புத்தூர் பகுதிகளில் கிடைக்கின்றன. நீளப் புடலையை விட, குட்டைப் புடலை கூடுதல் மகசூல் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.''
தொடர்புக்கு, செல்போன்:99439-39472.
''சிறுதானிய உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?''
-எம். செல்வகுமார், திருத்துறைப்பூண்டி.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர்.ஆர். விஸ்வநாதன், பதில் சொல் கிறார்.
''முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் சிறுதானிய உணவு சமைக்காத வீடுகளே இருக்காது. இன்று நிலைமை தலைகீழ். பெயர்தான், சிறிய தானியம் என்றாலும், இதில் சத்துக்கள் ஏராளம். அரிசிச் சோறு சாப்பிடுவதுதான் நாகரிகம் என்று நினைக் கிறோம். ஆனால், சிறுதானியங்களில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. சிறுதானியங்களைப் பயன்படுத்தி முறுக்கு, அதிரசம், புட்டு... என பாரம்பரிய உணவுகள், பிரட், நூடுல்ஸ்... போன்ற அடுமனை உணவுகள் மற்றும் உடனடியாகத் தயாரித்து சாப்பிடும் 'ரெடி டூ ஈட்’ உணவு வகைகள் தயாரிக்கவும், பயிற்சி கொடுத்து வருகிறோம். கட்டண அடிப்படையில், வழங்கப்படும் இப்பயிற்சி களுக்கு முன்பதிவு முக்கியம்.''
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3. தொலைபேசி: 0422 6611340/6611268.
''கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவ முறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அமைப்பு எங்கு உள்ளது?''
-ஆர். கந்தசாமி, புதுக்கோட்டை.
''தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின், மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவ ஆய்வு மையம், தஞ்சாவூரில் செயல்பட்டு வருகிறது.''
தொடர்புக்கு, தொலைபேசி: 04362-204009.
