மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

கரிசலுக்கு ஏற்ற பருத்தி ரகம் எது ?

 புறா பாண்டி

''கரிசல் நிலத்தில் சாகுபடி செய்வதற்கேற்ற பருத்தி ரகம் எது?''

உ. காஜாமைதீன், எட்டையாபுரம்.

வேப்பந்தட்டை, பருத்தி ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆர்.கவிமணி பதில் சொல்கிறார்.

''ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பல பருத்தி ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்ரீவில்லிபுத்தூர்-3 மற்றும் 4 ஆகிய ரகங்கள் கரிசல் நிலத்துக்கு ஏற்றவை.  இவை, இறவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கும் பொருத்தமாக இருக்கும். இந்த ரகங்களில் சராசரி மகசூலாக ஏக்கருக்கு 18 குவிண்டால் வரை கிடைக்கும்.

நீங்கள் கேட்டவை

பொதுவாக பருத்தியைத் தாக்கும் தத்துப்பூச்சியை எதிர்த்து வளரும் தன்மை இந்த ரகங்களுக்கு உண்டு. பரவலாக பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் ஒரு பழக்கம் உள்ளது. விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் அளவைக் காட்டிலும் கூடுதலாக பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கிறார்கள். அதுவும் 'சிஸ்டமிக்' என்று சொல்லப்படும் ஊடுருவிப் பாயும் நஞ்சுகளை அளவுக்கு அதிகமாக தெளிக்கிறார்கள். இதனால் நாம் அழிக்க நினைக்கும் புழுக்கள் எதிர்ப்புத் தன்மை கொண்டவையாக மாறி விடுகிறதே தவிர, அழிவதில்லை. அதனால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதை முடிந்த அளவுக்குக் குறைத்துக் கொண்டு 'ஒருங்கிணைந்தப் பருத்தி சாகுபடி’ தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதுதான் சிறந்த முறையாகும்.

இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது பற்றிய ஆய்வு எங்கள் மையத்தில் நடந்து வருகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த ஆய்வு முழுமையடைந்து விடும். அதன் பிறகு அந்தத் தொழில்நுட்பங்கள் மக்கள் பயன்படுத்தும் வகையில் அறிவிக்கப்படும்.

தற்போது இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் பருத்திக்குக் கூடுதல் விலை கிடைக்கிறது, என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 04328-264866.

''தமிழ்நாட்டில் எத்தனை மா ரகங்கள் உள்ளன. அவற்றின் கன்றுகள் எங்கு கிடைக்கும் ?

வீ. ஐயப்பன், ஜாம்புவானோடை.

கன்னியாகுமரியில் உள்ள அரசுத் தோட்டக்கலைப் பண்ணையின் மேலாளர் குமரேசன் பதில் சொல்கிறார்.

''தமிழ்நாடு முழுவதும் 53 தோட்டக்கலை பழப் பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பழ வகைக் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த 53 பண்ணைகளில் உள்ள அனைத்து மா ரகங்கள் மற்றும் வெளிமாநில ரகங்களை கன்னியாகுமரி பண்ணையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறோம்.

நீங்கள் கேட்டவை

மா ரகங்களை உற்பத்தி செய்ய பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் கன்னியாகுமரி பண்ணை. சுமார் 32 ஏக்கரில் இந்தப் பண்ணை அமைந்துள்ளது. தமிழக அளவில் மொத்தம் பயன்பாட்டில் உள்ள 42 ரகங்களைச் சேர்ந்த மாமரங்கள் இங்குள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதத்தில் காய்க்கும் மாங்காய்களை முக்கியப் பருவம் என்போம். ஆனால், குமரி மாவட்டத்தில் மட்டும் முக்கியப்பருவம் இல்லாமல், அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் காய்க்கும். இதைத்தான் இடைப்பருவம் என்கிறோம்.

இப்பருவத்தில் காய்க்கும் மாங்காய்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. இடைப்பருவத்தில் அதிக மகசூலைத் தருகிற மா ரகங்கள் இந்தப் பண்ணையில் மட்டும்தான் அதிகளவில் உள்ளன. இடைப்பருவ மா குறித்து ஆராய்ச்சிகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.

நீலம், பெங்களூரா, ஹுமாயுதீன், அல்போன்சா, பங்கனப்பள்ளி, காலப்பாடு... போன்ற ரகங்கள் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். மோகன்தாஸ், நாடன்... போன்றவை புளிப்புத் தன்மையுடன் இருப்பதால்... ஊறுகாய்க்கு ஏற்றவை. இப்படிப்பட்ட சிறப்புத் தன்மையுடன் கூடிய பல ரகங்கள் இங்குள்ளன. மாங்கன்றுகளை வாங்கும்போதே அது பற்றிய தகவல்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். இது தவிர, அருகில் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகினால், அந்த பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையின் குறித்தத் தகவல் சொல்வார்கள். அந்த பண்ணைக்கு சென்று அங்கு உற்பத்தி செய்யப்படும் மாங்கன்றுகளை வாங்கிக் கொள்ளலாம்.''

தொடர்புக்கு, அரசுத் தோட்டக்கலைப் பண்ணை, கன்னியாகுமரி. தொலைபேசி: 04652-270169.

'’காளை மாடுகளுக்கு கால்நடை மருத்துவர் மூலம் இனப்பெருக்க நரம்பை வெட்டுவது சரியா? அல்லது கிராமப்புறத்தில் நடைமுறையில் உள்ள அதிரடி முறை சரியா?''

பி. நாகராஜன், ஆச்சாம்பட்டி.

சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். துரைசாமி பதில் சொல்கிறார்.

''பொதுவாக உழவுப் பணி செய்யும் காளைகளுக்கு, குடும்பக் கட்டுப்பாடு செய்வது பல காலமாக இருந்து வரும் பழக்கம். வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போதோ அல்லது வண்டியிழுத்துக் கொண்டிருக்கும்போதோ, எதிரே பசுவைக் கண்டால் காளைகள் தாவத் தொடங்கி விடும். அதனால்தான் வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் காளைகளுக்கு இனப்பெருக்க நரம்பைத் துண்டித்து, குடும்பக் கட்டுப்பாடு செய்கிறார்கள்.

நீங்கள் கேட்டவை

சீக்கிரமாகவே அதிக எடை வர வேண்டும் என்பதற்காக ஆடுகளுக்கும் இப்படிச் செய்யும் பழக்கம் உள்ளது.

கிராமப்புறங்களில் காளை மற்றும் கிடா ஆட்டின் விதைக் காய்களை நெறித்து விடும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இப்படிச் செய்யும்போது கால்நடைகள் வலியில் துடித்துப் போகின்றன. இதனால், விதைகள் வீங்கி, அவற்றின் உயிருக்கேகூட ஆபத்து வர வாய்ப்புகள் உள்ளன. ஆனால், கால்நடை மருத்துவமனைகளில் மிக எளிய முறையில் கண்ணிமைக்கும் நேரத்தில் இனப்பெருக்க நரம்பை வெட்டி விட முடியும். இதற்காக பாக்கு வெட்டி போல பிரத்யேகமான கருவி இருக்கிறது. இதன் மூலம் காயம் மற்றும் ரத்தப்போக்கு போன்றவை தவிர்க்கப்படுகின்றன. அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் இந்த வசதி உள்ளது. ஆடு, மாடுகளுக்குப் பெரிதாக தொல்லைக் கொடுக்காத இந்த முறைதான் சரியானது.''

''முற்றிலும் மரங்களைப் பயன்படுத்தி வீடு கட்ட விரும்புகிறேன். எந்த மரம் ஏற்றது. இதற்கு யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?''

பழனிகுமார் குருசாமி, ராமநாதபுரம்.

ஆரோவில் மூங்கில் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பொ. பாலசுந்தரம் பதில் சொல்கிறார்.

''வீடு கட்டுவதற்கு ஏற்ற மரம் மூங்கில்தான். வேகமாக வளர்ந்து பலன் கொடுக்கக் கூடிய மர வகைகளில் முதலிடத்தில் இருப்பது இம்மரம்தான். தவிர வெட்ட வெட்ட துளிர்த்துக் கொண்டே இருப்பதும் இதன் சிறப்பு. அதனால்தான் இம்மரத்தைப் பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் கட்டப்படும் வீடுகள் சுமார் ஐம்பது ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கக் கூடியவை. செங்கல், சிமென்ட் கொண்டு கட்டும்போது, ஒரு சதுர மீட்டருக்கு 18,000 ரூபாய் வரை செலவாகும். மூங்கில் வீட்டுக்கு 13,000 ரூபாய் செலவு ஆகும். கோடைக் காலத்தில் அதிக வெப்பம் இருக்காது. குளிர் காலத்தில் இதமாக இருக்கும். கான்கிரீட் வீடுகளைக் காட்டிலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சுமார் நாற்பது ஆண்டுகள் வரை நிலைத்து நிற்க கூடியவை மூங்கில் வீடுகள்.

நீங்கள் கேட்டவை

இயற்கையோடு கை கோத்து வாழ விரும்புபவர்கள், நிச்சயம் மூங்கில் வீட்டைத்தான் தேர்வு செய்வார்கள். நம் நாட்டவர்கள் மூங்கிலின் பெருமையை இன்னும் அதிகமாக உணரவில்லை. ஆனால், சீனா, ஜப்பான்... போன்ற நாடுகளில் வீட்டுக்கு வீடு மூங்கில் வளர்க்கிறார்கள். இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்களில்கூட மூங்கிலை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

மூங்கில் ஓர் அற்புதமான கற்பக விருட்சம். இதன் ஒவ்வொரு பாகத்தையும் பயன்படுத்தலாம். இப்போது சோப்பு, அலங்காரப் பொருட்கள், நாற்காலி, சைக்கிள்... போன்ற பொருட்களைத் தயாரிக்கிறோம். மூங்கிலைப் பயன்படுத்தி வீடு கட்ட விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கிறோம்.''

தொடர்புக்கு, அலைபேசி: 99436-44757.

''போலி விதை, போலி உரம்... போன்றவற்றை  விற்பனை செய்யும் நபர்கள் மீது எங்கு புகார் செய்ய வேண்டும்?''

ஆர். கண்ணன், தேவியாக்குறிச்சி.

''விதைகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட கூடுதல் விலை கேட்டாலோ அல்லது உரம், விதை போன்றவை போலி என்று தெரிய வந்தாலோ, மாவட்ட வேளாண் இணை இயக்குநரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம். அங்கும் உரிய பரிகாரம் கிடைக்காவிட்டால், நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.

இதுபோன்று பிரச்னை ஏற்பட்டு தவிப்பவர்களுக்கு சென்னையில் உள்ள 'சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப்’ என்ற அமைப்பு உதவி வருகிறது. இவர்களைத் தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்களைப் பெறலாம். நீங்கள் விதை வாங்கும் கடைக்காரர், அங்கீகாரம் பெற்ற நபர்தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டு, தரமானச் சான்று பெற்ற விதைகளை மட்டுமே வாங்குங்கள். மறக்காமல் விதை வாங்கியதற்கான ரசீதையும் கேட்டு வாங்குங்கள். இந்த ரசீது, விதைகள் அடைக்கப்பட்டிருந்த பை ஆகியவற்றை பத்திரப்படுத்துவதோடு, கொஞ்சம்போல விதைகளையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது பின்னாளில் விதைகள் தொடர்பான பிரச்னைகள் வரும்போது உதவியாக இருக்கும்.''

தொடர்புக்கு:   சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப், சென்னை. தொடர்புக்கு, தொலைபேசி :044-24460387.

படங்கள்:மு.  நியாஸ்  அகமது, எஸ்.  சாய்தர்மராஜ்

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை' பசுமை விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.comஎன்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்   PVQA (space)-உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.