மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ரங்கா, புல்லட், சுசில்... ஒரு ஏக்கரில் 52 ரகங்கள்... மிளகாய் சாகுபடியில் கவனம் ஈர்க்கும் விவசாயி!

மிளகாய்களுடன் விஸ்வநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
மிளகாய்களுடன் விஸ்வநாதன்

முயற்சி

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப் பாளையம் சிறுமுகை அருகே உள்ள சம்பரவள்ளி பகுதி யைச் சேர்ந்தவர், விவசாயி விஸ்வநாதன். இவர் தன்னுடைய தோட்டத்தில் 52 வகையான மிளகாய் ரகங்களைச் சாகுபடி செய்து கவனம் ஈர்க்கிறார். விவசாயிகள், வேளாண் மைத் துறை அலுவலர்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப் பினரும், மிகுந்த ஆச்சர்யத் தோடு, இவருடைய மிளகாய் தோட்டத்தைப் பார்வை யிட்டுச் செல்கிறார்கள்.

ஒரு காலைப் பொழுதில் இவரது தோட்டத்துக்குச் சென்றோம். மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றவர், இங்கு பயிர் செய்யப்பட்டிருந்த மிளகாய் செடிகளைச் சுற்றிக் காண் பித்தபடியே பேசத் தொடங்கினார்.

அறுவடை பணியில் விஸ்வநாதன்
அறுவடை பணியில் விஸ்வநாதன்

‘‘நாங்க விவசாயக் குடும்பம். நான் கடந்த 45 வருஷமா விவசாயத்துல ஈடுபட்டுக்கிட்டு வர்றேன். எங்க குடும்பத்துக்கு மொத்தம் 12 ஏக்கர் நிலம் இருக்கு. இதுல வாழை, மஞ்சள், காய்கறிகள் சாகுபடி செய்றது வழக்கம். எந்த ஒரு பயிரா இருந்தாலுமே... மத்த விவசாயிகள் வழக்கமா பயிர் செய்யக் கூடிய ரகங்களை மட்டுமே சாகுபடி செய்றதுல எனக்கு உடன்பாடில்லை. ஆய்வு நோக்கத்தோடு பல ரகங்களையும் முயற்சி செஞ்சுப் பார்க்கணும்னு ஆசைப்படுவேன். இது வித்தியாசமான முயற்சினு பலரும் என்னைப் பாராட்டணும்ங்கறது என்னோட நோக்கம் இல்லை. பல ரகங்களையும் முயற்சி செஞ்சு பார்த்தாதான், அதுல சிறப்பானது எதுனு கண்டுபுடிச்சு, அதை அதிக பரப்புல பயிர் செய்யலாம், அந்த ரகங்களை மத்த விவசாயிகள்கிட்டயும் அறிமுகம் செஞ்சு, பரவலாக்கம் செய்யலாம். பொதுவா, எந்த ஒரு விவசாயியுமே, மிக குறைவான பரப்புலயாவது சோதனை முயற்சியா புதிய ரகங்களை முயற்சி செஞ்சு பார்க்கணும். நெல், வாழை, காய்கறிகள் உட்பட எல்லா விதமான பயிர்கள்லயும் புதிய ரகங்களைப் பயிர் செஞ்சு பார்த்துக்கிட்டே இருக்கணும். நான் வாழையில பல ரகங்களைப் பயிர் செஞ்சிருக்கேன்.

குறிப்பா சொல்லணும்னா, நேந்திரன் வகையைச் சேர்ந்த சொர்ணமுகி, சூப்பர் நேந்திரன், தேனி நேந்திரன், நாடன் நேந்திரன், செங்காலி கோடன் உள்ளிட்ட 15 ரகங்கள் பயிர் பண்ணியிருந்தேன். இந்தியாவுல வெவ்வேறு பகுதிகள்ல விளையக்கூடிய 62 வகையான தக்காளி ரகங்களைப் பயிர் செஞ்சு விதைப் பரவலாக்கம் செஞ்சுருக்கேன்.

மிளகாய்களுடன் விஸ்வநாதன்
மிளகாய்களுடன் விஸ்வநாதன்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தோடு எப்பவும் தொடர்புல இருப் பேன். எந்த ஒரு புதிய ரகங்கள் வந்தாலும் சோதனை முயற்சியா என்னோட நிலத்துல சாகுபடி செஞ்சு பார்த்துடுவேன். பூச்சி, நோய்த்தாக்குதல்கள் அதிகம் இல்லாத ரகங்கள், இயற்கை இடர்ப்பாடுகளுக்குத் தாக்குப் புடிக்கக்கூடிய ரகங்கள், அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களா இருந்தா, எங்க பகுதியில உள்ள மற்ற விவசாயிகளுக்கும் அதைப் பரிந்துரை செய்வேன். புதிய ரகங்களைப் பயிர் செய்றதுக்கான செயல்முறைகளையும் சொல்லிக் கொடுப்பேன்.

நான் பசுமை விகடனோட நீண்டகால வாசகர். இதைப் படிக்குறதுனால புதுப் புதுத் தொழில்நுட்பங்களையும் ரகங்களையும் தெரிஞ்சுக்க முடியுது. நாம நேரடியா போயி பார்க்க முடியாத தோட்டங்களைப் பசுமை விகடன் மூலம் நேரடியா பார்த்தது மாதிரி யான அனுபவம் கிடைக்குது. இதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, ரசாயன இடுபொருள்களைப் பயன்படுத்துறதை இயன்றவரைக்கும் குறைக்க ஆரம்பிச்சேன். கடந்த சில வருஷங்களா, இரண்டரை ஏக்கர்ல இயற்கை முறையில வாழை சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். மிளகாய் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப குறைவான அளவு ரசாயன இடுபொருள்கள் பயன் படுத்துறேன். இயற்கை உரங்கள் மூலம் மண்ணை வளப்படுத்துறதுக்காக, பசுந்தாள் விதைப்பு செஞ்சு, அடியுரமா ஒரு ஏக்கருக்கு, வருஷத்துக்கு 20 டன் வீதம் எரு கொடுக்குறேன்.

பறவை பார்வையில் மிளகாய் சாகுபடி வயல்
பறவை பார்வையில் மிளகாய் சாகுபடி வயல்

மிளகாய் விதைப்பு செஞ்ச பிறகு, பயிர் வளர்ச்சி ஊக்கியா பஞ்சகவ்யா, மீன் அமிலம் பயன்படுத்துறேன். பூச்சிகளைக் கட்டுப்படுத்த வரப்பு ஓரங்கள்ல ஆமணக்கு, சோளம் விதைப்பு செய்வேன். கொஞ்சம் கூட ரசாயன இடுபொருள்களே பயன் படுத்தாம, 100 சதவிகிதம் இயற்கை முறையில மிளகாய் சாகுபடி செய்யணும்ங்கறதுதான் என்னோட எண்ணம். கூடிய சீக்கிரம் என்னோட எண்ணத்தை நடைமுறைப் படுத்தி, மிளகாய்ல வெற்றிகரமான விளைச்சல் எடுக்க முடியும்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு.

மிளகாய்த் தோட்டம்
மிளகாய்த் தோட்டம்

இந்தப் பகுதியில உள்ள 40 விவசாயிகள் ஒருங்கிணைஞ்சு அறம் உயிர்ம உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்கி இயற்கை விவசாயம் தொடர்பான செயல் பாடுகள்ல கவனம் செலுத்த ஆரம்பிச் சிருக்கோம். பஞ்சகவ்யா, மீன் அமிலம் உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் தயார் பண்ணி விற்பனை செய்றோம்’’ என்று சொன்னவர், தற்போது பயிர் செய்துள்ள 52 மிளகாய் ரகங்கள் குறித்து விவரித்தார்.

“கடந்த 6 வருஷங்களா மிளகாய் சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். இதுக்காக சத்தீஸ்கர் மாநிலத்துல உள்ள ஒரு தனியார் நிறுவனத் தோட ஒப்பந்தம் போட்டிருக்கேன். அவங்க இந்தியாவுல பல்வேறு மாநிலங்கள்லயும் விளையக்கூடிய மிளகாய் ரகங்களோட விதைகளை என்கிட்ட கொடுத்துடுவாங்க. அதுக்கு நான் பணம் கொடுக்க வேண்டிய தில்லை. அந்த விதைகளைப் பயன்படுத்தி. என்னோட நிலத்துல பச்சைமிளகாய் உற்பத்தி செஞ்சு, அந்தத் தனியார் நிறுவனம் மூலமாகவோ, தனிப்பட்ட முறையிலோ சூப்பர் மார்க்கெட்கள் மூலம் விற்பனை செய்றேன். உற்பத்தி செலவு போக, கிடைக்கக்கூடிய லாபத்துல 60 சதவிகிதம் எனக்கு, 40 சதவிகிதம் அந்தத் தனியார் நிறுவனத்துக்கு இது ஒப்பந்தம்.

மிளகாய்த் தோட்டம்
மிளகாய்த் தோட்டம்

ஒரு ஏக்கர்ல மிளகாய் சாகுபடி செஞ்சா, சராசரியா 10 டன் பச்சை மிளகாய் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்குச் சராசரியா 25 ரூபாய் வீதம் விலை கிடைக்கும். 10 டன் மிளகாய் விற்பனை மூலம் 2,50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல சாகுபடி செலவு 50 சதவிகிதம் போக 1,25,000 ரூபாய் லாபம் கிடைக்கும். இதுல 40 சதவிகித தொகையை அந்தத் தனியார் நிறுவனத்துக்கு கொடுத்துடுவேன். 60 சதவிகிதம் எனக்கு. ஒரு ஏக்கர்ல பல விதமான மிளகாய் ரகங்கள் சாகுபடி செய்றது மூலமா, எனக்கு 75,000 ரூபாய் லாபம் கிடைக்குது. சில சமயங்கள்ல இயற்கை இடர்ப்பாடுகளால மகசூல் குறையுறப்பவும்... மிளகாய்க்கு சரியான விலை கிடைக்காம போகுறப்பவும் லாபத்தோட அளவு குறையும்.

ஆரம்பத்துல தென்னிந்திய மாநிலங்கள்ல பயிர் செய்யக்கூடிய 20 வகையான மிளகாய் ரகங்களைப் பயிர் செஞ்சேன். இப்ப காஷ்மீர், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உட்பட இன்னும் பல மாநிலங்களைச் சேர்ந்த ரங்கா, புல்லட், சீனி மிளகாய், நீல சம்பா, பஜ்ஜி மிளகாய், சுசில், சிமோகா, ஆந்திரா சிவப்பு மிளகாய், நெல்லூர் மிளகாய், வால் மிளகாய் உள்ளிட்ட 52 வகையான மிளகாய் ரகங்களை ஒரு ஏக்கர் பரப்புல பயிர் செஞ்சுருக்கேன்.

செடிக்கு செடிக்கு 2 அடி... பாருக்கு பார் 3.5 அடி இடைவெளி விட்டிருக்கேன். சொட்டுநீர்ப் பாசனம் மூலம் இங்கவுள்ள மிளகாய் செடிகளுக்குத் தண்ணீர் கொடுக்குறேன். இதன் மூலம் மண்வளம் சிறப்பாக இருக்கும். இந்தப் பகுதியில மிளகாய் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் கோடைக்காலத்துல பயிரோட வளர்ச்சியும், உற்பத்தித் திறனும் குறைவா இருக்கும். அந்த மூணு மாதம் மட்டும் மிளகாய் சாகுபடி செய்ய மாட்டோம். மீதம் உள்ள 9 மாதங்கள்ல இரண்டு போகம் மிளகாய் சாகுபடி செய்வேன். விதை தேவைக்காக ஒரு செடிகள்ல கூடுதல் கவனம் செலுத்தி பராமரிப்பேன்’’ எனத் தெரிவித்தார்.


தொடர்புக்கு, விஸ்வநாதன்

செல்போன்: 94439 11758.

மிளகாய்களின் வகைகள்
மிளகாய்களின் வகைகள்

சிறப்புப் பயிற்சி!

``மிளகாய் சாகுபடி தொடர்பான தொழில் நுட்பங்களைக் கத்துக்குறதுக்காக ஹைதராபாத்துல செயல்படக்கூடிய மத்திய அரசு நிறுவனம் நடத்தும் பயிற்சியில கலந்துகிட்டேன். டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, மேற்கு வங்காளம், கர்நாடகா உட்பட இன்னும் பல மாநிலங்களுக்கும் போயி மிள்காய் உள்ளிட்ட இன்னும் பலவிதமான பயிர்களுக்காகவும் பயிற்சி எடுத்திருகேன். இதனாலதான் புதிய முயற்சிகள் செஞ்சு பார்க்கக்கூடிய ஆர்வம் அதிகமாகிகிட்டே இருக்கு.

எட்டு வருஷத்துக்கு முன்னாடி `பூத் ஜலாகியா’ மிளகாய் ரகத்தைப் பயிர் செஞ்சேன். அந்தச் செடி 6 அடி சுற்றளவுக்குப் படர்ந்து வளர்ந்துச்சு... அதோட உயரம் 6 அடி இருந்துச்சு. அதை எங்க பகுதி விவசாயிகள் ரொம்ப ஆச்சர்யமா பார்த்தாங்க. அதுல காரத்தன்மையும் ரொம்ப அதிகம்’’ என்கிறார் விஸ்வநாதன்.