'கொய்யாவுக்கு ஊடுபயிராக பாமரோசவைப் பயிரிடலாமா?'
புறா பாண்டி

''வாடன் சம்பா என்ற ரக நெல்லின் சிறப்புத் தன்மை என்ன? இதை சமைக்க அதிக நேரம் ஆகுமா?''
வெ. பிரபாகர், திருச்சி.
பாரம்பர்ய நெல் ரக சேகரிப்பாளர் எட்வின் ரிச்சர்ட் பதில் சொல்கிறார்.

''பாரம்பர்ய நெல் ரகங்களில் 'வாடன் சம்பா’வுக்கு தனி இடம் உண்டு. இன்றும் இந்த ரகம் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியில் அதிகமாக பயிரிடப்படுகிறது. இது 150 நாட்கள் வயது கொண்டது. ஏக்கருக்கு 20 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். இயற்கை உரங்கள் மட்டும் கொடுத்தாலே போதும். பூச்சி, நோய்த் தாக்குதல் இருக்காது. மானாவாரி மற்றும் இறவை இரண்டு முறைக்குமே ஏற்றது. ராமநாதபுரம் பகுதியில் மானாவாரியாகத்தான் இதைச் சாகுபடி செய்கிறார்கள். குறிப்பாக இந்த ரகத்தை பொங்கல் சமைப்பதற்காகத்தான் உபயோகப்படுத்துகிறார்கள். 'பொங்கும் சமயத்தில் நல்ல வாசனை வீசும்’ என்பார்கள். பொதுவாக வறட்சியைத் தாங்கி வளரும் நெல் ரகங்கள் சற்றுக் கடினத் தன்மையுடன்தான் இருக்கும் என்பதால்தான் சமைக்கக் கூடுதல் நேரம் பிடிக்கிறது. ஆனாலும், சுவை அதிகமாக இருப்பதால், இது பலராலும் விரும்பப்படுகிறது.''
தொடர்புக்கு, எட்வின் ரிச்சர்ட், அலைபேசி: 94432-75902.
''நாட்டுப் பசு மாடுகளைப் பாதுகாக்க கோசாலை தொடங்க விரும்புகிறேன். இதற்கு யாரிடம் அனுமதி வாங்க வேண்டும். நிதி உதவி கிடைக்குமா?''
டி.ராஜேந்திரன், மாரண்டஅள்ளி.
பாரதீய கோவம்ச ரக்ஷன் சம்வர்தன் பரிஷத் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் சுவாமி ஆத்மானந்தா பதில் சொல்கிறார்.

''ஆரம்பக் காலங்களில் கோயில்கள் மற்றும் ஆன்மிக அமைப்புகள்தான் கோசாலைகளை நடத்தி வந்தன. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பசு மாடுகள் மற்றும் கறவை வற்றிய மாடுகளை, கோசாலையில் வைத்து பராமரித்து வந்தனர். அவற்றை ஏழைகளுக்கும் வழங்கி வந்தனர். சேவையோடு நமது பாரம்பர்ய இன மாடுகளைக் காப்பாற்றுவற்கும் கோசாலைகள் பயன்பட்டன. தெய்வமாகப் பார்த்த காலம் மாறி, இப்போது பணம் கறக்கும் இயந்திரமாகத்தான் பசுவைப் பார்க்கிறோம். அதனால்தான் வெளிநாட்டு கலப்பினங்களின் வருகையால், பாரம்பர்ய இனங்கள் அழிந்து வருகின்றன. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நாட்டு மாடுகளின் மகத்துவம், மக்களுக்குப் புரிய தொடங்கிய பிறகுதான், நாடு முழுக்கவே கோசாலை தொடங்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் மூலமாக கோசாலை தொடங்க வேண்டும் என்பதுதான் எங்கள் அமைப்பின் நோக்கம்.
தமிழ்நாட்டில் இதுவரை 148 கோசாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. கோசாலை தொடங்க, யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.
நிதி உதவி பெற வேண்டும் என்றால், சங்கம் அல்லது அறக்கட்டளை பெயரில் கோசாலை தொடங்க வேண்டும். இதை அருகில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, கால்நடை நல வாரியத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அவர்கள் ஆய்வு செய்து, கோசாலைப் பராமரிப்பு, கால்நடை மருத்துவமனை அமைப்பது, பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடத்துவது போன்ற பணிகளுக்கு நிதியுதவி வழங்குவார்கள். ஆரம்பத்தில் ஐந்து மாடுகளைக் கொண்டு தொடங்குவது நல்லது. நமது வசதியைப் பொறுத்து, கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். நமது சிறப்பான சேவையின் மூலமாக, பொதுமக்களிடமிருந்து கூட நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளலாம். மாடுகளில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, பஞ்சகவ்யா, விபூதி, குளியல் சோப்... போன்ற பல பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டுவதற்குகூட வழி உண்டு.''
தொடர்புக்கு, பாரதீய கோவம்ச ரக்ஷன் சம்வர்தன் பரிஷத், அலைபேசி: 94432-29061.
''அக்னி அஸ்திரம் தயாரிப்பது எப்படி? இதை வாழையில் வாடல் நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தலாமா?''
மு. குமார், திருச்சி.
ஜீரோ பட்ஜெட் பிதாமகர் சுபாஷ் பாலேக்கர் தன்னுடைய பயிற்சி வகுப்புகளில் தந்திருக்கும் விளக்கங்களே இந்தக் கேள்விக்கு பதிலாக இங்கே இடம் பிடிக்கிறது.

''காய்ப்புழு, தண்டுத் துளைப்பான்... போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்தவும், வாழையில் வாடல் நோயை விரட்டவும், அக்னி அஸ்திரத்தைப் பயன்படுத்தலாம்.
அரை கிலோ புகையிலை, அரை கிலோ பச்சை மிளகாய், அரை கிலோ பூண்டு, 5 கிலோ வேப்பிலை ஆகியவற்றை அரைத்து
15 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கரைக்க வேண்டும். இதை நான்கு முறை கொதிக்க வைத்து இறக்கி, 48 மணி நேரம் கழித்து சுத்தமானத் துணியால் வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம். பூச்சிகளை விரட்ட 200 லிட்டர் நீரில் 6 லிட்டர் அக்னி அஸ்திரத்தைக் கலந்து தெளிக்க வேண்டும்.
வாடல் நோயைத் தடுக்க, கன்று நடவு செய்தவுடன் மாதம் ஒரு முறை அக்னி அஸ்திரத்தை இலை வழி தெளிப்பாகத் தெளிக்க வேண்டும். இப்படி நான்கு மாதம் தெளித்து வந்தால் வாடல் நோய் அண்டாது.''
''கொய்யாவில் ஊடுபயிராக பாமரோசாவைச் சாகுபடி செய்யலாமா? இதனால் கொய்யா விளைச்சல் குறையுமா?''
வி. வினோத், ராஜபாளையம்.
பாமரோசா சாகுபடியில் அனுபவம் வாய்ந்த அன்புச்செழியன் பதில் சொல்கிறார்.

''பாமரோசா சூரிய ஒளியை விரும்பும் பயிர். சில இடங்களில் தென்னையில் ஊடுபயிராக பாமரோசா சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், விளைச்சல் குறைவாகத்தான் கிடைக்கிறது. அதேசமயம், கொய்யாவைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னை இருக்காது என்றே கருதுகிறேன். கொய்யாத் தோப்பு முழுவதும் பாமரோசா வளர்ந்து நின்றால், களைகள் முளைக்க வாய்ப்பு இருக்காது. நீரும் அதிகமாக ஆவியாகாது. பாமரோசா அடிப்படையில் வாசனைப் பயிர் என்பதால், இயற்கையாகவே பூச்சிகளை விரட்டும் திறனும் இருக்கும். இந்தக் காரணங்களால், கொய்யாவுக்கு நன்மைதான் ஏற்படும்.''
''கோழி வளர்ப்பு சம்பந்தமாக சான்றிதழ் பாடம் படிக்க விரும்புகிறேன். யாரைத் தொடர்பு கொள்வது?''
பி. விஜய், திண்டிவனம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், விரிவாக்கக் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மூலம் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு குறித்த பாடங்கள் அஞ்சல் வழிக் கல்வியாக வழங்கப்படுகின்றன.
தொடர்புக்கு, இயக்குநர், விரிவாக்கக் கல்வி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை- 600 051 தொலைபேசி: 044-2555 1586, 2555 1579.
''நர்சரி கார்டன் தொடங்க விரும்புகிறேன். இதற்குப் பயிற்சி எங்கு கிடைக்கும்?''
ஏ. பாஸ்கரன், திருமீயச்சூர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நர்சரி கார்டன் தொடங்குவது குறித்த பாடத் திட்டம் வைத்துள்ளார்கள். நேரடி களப்பயிற்சியும் கொடுக்கிறார்கள். இங்கு வழங்கப்படும் சான்றிதழ், வங்கியில் கடன் பெற உதவியாக இருக்கும்.
தொடர்புக்கு, இயக்குநர், திறந்தவெளிப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை-3, தொலைபேசி: 0422-2431222.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை' பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் Pasumai@Vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA(Space) உங்கள் கேள்வி (Space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம். |