மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

ஏறுமுகத்தில் மக்காச்சோளம்...இறங்குமுகத்தில் கொப்பரை..!

நீண்ட வரிசையில் நின்று வீட்டுக்கான மின் கட்டணத்தைக் கட்டிவிட்டு, களைப்பாக மின்வாரிய அலுவலகம் முன் நின்று கொண்டிருந்தார் 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி.

கொஞ்சம் மழை பெய்திருந்ததால்... 'தோட்டத்தை ஓர் உழவு ஓட்டி வைக்கலாம்’ என்று எண்ணி டிராக்டரைக் கூப்பிட வந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், வாத்தியாரைப் பார்த்தவுடன்... அவரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு தோட்டத்தை நோக்கி மிதிக்க ஆரம்பித்தார். வழியிலேயே 'காய்கறி’ கண்ணம்மாவின் தலை தட்டுப்பட, மூவரும் பேசியபடியே நடக்க ஆரம்பித்தனர்.

மரத்தடி மாநாடு
##~##

''தேர்தல், தேர்தல்னு சொல்லி ஒரு வழியா நடந்து முடிஞ்சு போச்சு. முக்குக்கு முக்கு நின்னுக்கிட்டிருந்த போலீஸெல்லாம் அவங்கவங்க வேலையைப் பாக்க போனதுக்கப்பறம்தான் ஜனங்களும் சம்சாரிகளும் ரோட்டுல சாமான் செட்டை எடுத்துட்டுப் போக முடியுது. அதனால, இப்போதான் பொள்ளாச்சி, காங்கேயம் சந்தைகளுக்கெல்லாம் தேங்காய், கொப்பரை வர்றதுக்கு ஆரம்பிச்சுருக்காம். ஆனா என்ன... வரத்து அதிகமானவுடனே வழக்கம்போல விலையும் கொஞ்சம் இறங்கிடுச்சு. கொப்பரை கிலோ 64 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு டன் 18 ஆயிரம் ரூபாய்க்கும்தான் விற்பனையாகியிருக்கு'' என்று ஒரு செய்தியைச் சொல்லி மாநாட்டை ஆரம்பித்து வைத்த வாத்தியார், தொடர்ந்தார்.

''மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைச்சிட்டிருக்கு. போன செப்டம்பர் மாசத்துல ஒரு மூட்டை மக்காச்சோளம் 950 ரூபாய்க்குத்தான் விற்பனையாச்சு. அதனால, நிறைய விவசாயிகள் விக்காம இருப்பு வைச்சிருந்தாங்க. இப்போ மக்காச்சோளத்துக்கு தேவை அதிகமாயிட்டதால தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் ஏற ஆரம்பிச்சிருக்கு. தேர்தல்னால இந்த வர்த்தகமும் முடங்கிப் போயிருந்துச்சாம். இப்போதான் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு. அதில்லாம ஏற்றுமதி வாய்ப்பும் அதிகமாயிருக்கறதால இப்போதைக்கு ஒரு மூட்டை மக்காச்சோளம் 1,350 ரூபாய் வரை விலை போயிக்கிட்டிருக்காம்'' என்றார்.

''ஆனா, இந்த மஞ்சள்தான் அதே இடத்துல நின்னுக்கிட்டிருக்கு'' என்ற வருத்தக்குரல் காட்டிய ஏரோட்டி...

''ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கோபிச்செட்டிபாளையம் கூட்டுறவுச் சங்கம்னு எல்லா மஞ்சள் மார்க்கெட்டுக்கும் மஞ்சள் அதிகமா வர ஆரம்பிச்சிருக்காம். குறிப்பா, இருப்பு வெச்சிருந்த மஞ்சளைத்தான் நிறைய விவசாயிக எடுத்துக்கிட்டு வர்றாங்களாம். ஆனா, விலைதான் இறங்கிட்டே இருக்காம். ஒரு குவிண்டால் அதிகபட்சமா 9,359 ரூபாய் வரை ஏலம் போயிருக்கு. விலை குறைவா இருக்குனு நினைச்ச நிறைய விவசாயிகள் மஞ்சளை திரும்ப எடுத்துக்கிட்டுப் போக ஆரம்பிச்சுட்டாங்களாம். அதனால இருபதாம் தேதி கொஞ்சம் விலை அதிகரிச்சி, குவிண்டால் 9,700 ரூபாய் வரைக்கும் ஏலம் போச்சாம்'' என்றார்.

தனது கூடையில் வாங்கி வைத்திருந்த முலாம்பழச் சாறை ஆளுக்குக் கொஞ்சமாகக் கொடுத்த காய்கறி, அப்படியே தன் பங்குக்கு ஒரு செய்தியையும் சொல்ல ஆரம்பித்தார்.

''ஈரோடு மார்க்கெட்டுக்கு, வழக்கம்போல இந்த கோடையிலயும் ஆந்திராவுல இருந்து முலாம்பழம் வர ஆரம்பிச்சிருக்கு. இப்போதைக்கு கிலோ இருபது ரூபா வரைக்கும் வித்துக்கிட்டிருக்காம். இது உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சின்றதால பழத்தோட ஜூஸ் வியாபாரம் சக்கைப் போடு போடுதாமாம்'' என்றார்.

அந்த நேரத்தில் தோட்டத்தை உழுவதற்காக டிராக்டர்காரர் வர, அவரை அழைத்துக் கொண்டு போய் உழ வேண்டிய நிலத்தைக் காட்டிவிட்டு வந்தமர்ந்த ஏரோட்டி, ''அடிச்ச வெயிலுக்கு திடீர்னு கொஞ்சம் மழை பேய்ஞ்சு பூமி குளிந்து போச்சுல்ல'' என்றார்.

''பூமி குளிர்ந்தது சரிதான். ஆனா... திடீர்னு பேஞ்ச மழையை ஆடு, மாடுகளாலதான் தாங்க முடியாமப் போயிடுச்சு'' என்ற வாத்தியார்,

''சேலம் பகுதியிலெல்லாம் இப்படி திடீர் மழையினால பசு மாடுகளுக்கு, 'கோமாரி’ நோய் வர ஆரம்பிச்சிருச்சாம். நூறு மாடுகளுக்கு மேல இறந்து போச்சாம். சேலம், சுகவனேஸ்வரர் கோயில்ல இருக்குற மாட்டுக்கும் இந்த நோய் வந்திருக்காம். அதுக்கு வைத்தியம் பார்த்துக்கிட்டிருக்கற சேலம், கால்நடைத்துறை டாக்டர் அருட்பிரகாசம், 'மாட்டுக்கு காய்ச்சல் வந்தாலோ, வாய்ப்பகுதியில கொப்புளம் வந்தாலோ... உடனே சுதாரிச்சு டாக்டருங்ககிட்ட காட்டுங்க. இல்லாட்டி மாடுகளைக் காப்பாத்துறது கஷ்டமாயிடும். முன்னாடியே தடுப்பூசி போட்டுட்டா இந்த நோய் தாக்காது. இது மனுஷங்களுக்கும் பரவும்கிறதால ஜாக்கிரதையா இருக்கணும்'னு எச்சரிக்கை விட்டிருக்கார்'' என்ற வாத்தியார், ''மழையைப் பத்திய இன்னொரு சேதியும் இருக்கு'’ என்று தொடர்ந்தார்.

''போன வருஷம் பேய்ஞ்ச அளவுக்கே இந்த வருஷமும் மழை பெய்யும்னு டெல்லியில இருக்கற வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் சொல்லியிருக்காங்க. கேரளாவுல ஜூன் மாச ஆரம்பத்துல பருவமழை ஆரம்பிச்சுடுமாம். தமிழ்நாட்டுக்கும் ஓரளவுக்கு மழை கிடைக்குமாம். ஆனா... காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், குஜராத்... மாநிலங்கள்லதான் மழை இந்த வருஷம் குறைஞ்சிடுமாம்'' என்று வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ரமணன் கணக்காக வானிலை அறிக்கையை வாசித்தார், வாத்தியார்.

''எதுக்கும் வழக்கம்போல உழவு ஓட்டி வெக்க வேண்டியதுதான். பெய்ஞ்சா விதைப்போம். இல்லேன்னா சும்மா உட்கார வேண்டியதுதான்'' என்ற ஏரோட்டி,

''நாமக்கல் மாவட்டத்துல வருஷா வருஷம் மாசி மாசம் தொடங்கி சித்திரை மாசம் வரைக்கும் கூடுற பேளுக்குறிச்சி சந்தை... இப்போ களைக் கட்ட ஆரம்பிச்சிருக்கு. கூட்டம் கூட்டமா வந்து சீரகம், சோம்பு, மிளகு, கடுகு, ஏலக்காய், கசகசா, வெந்தயம்னு சாமான்களை மக்கள் வாங்கிட்டுப் போறாங்களாம். வெளிமாநிலத்துல இருந்தெல்லாம்கூட வர்றாங்களாம். இந்த வருஷமும் எப்பவும் போல தரமான சாமான்களைத்தான் சந்தைக்குக் கொண்டு வந்துருக்காங்களாம். வாரா வாரம் வெள்ளிக்கிழமை ராத்திரியில இருந்து சனிக்கிழமை மதியானம் வரைக்கும் சந்தை நடக்குமாம். இந்த வருஷம் ஒரு செட் சாமானை 900 ரூபாய்க்கு விக்கிறாங்களாம்'' என்றார்.

''பரவாயில்லையே, நாமளும் ஒரு எட்டு போய் வாங்கலாம் போலிருக்கே'' என்ற காய்கறி,

''இந்த மீனு பாத்தீங்களா.. என்னா விலை விக்கிதுனு. கடல்லயெல்லாம் மீன்கள் இனப்பெருக்கம் நடக்குறதுக்காக மீன் பிடிக்க தடை போட்டிருக்காங்களாம் அதனால, உள்ளூர்ல ஏரி, குளத்துல பிடிக்கிற மீன்களுக்கு செம கிராக்கியாம். எப்பவுமே குளத்து மீனு ருசியா இருக்கறதால கொஞ்சம் கிராக்கியாத்தான் இருக்கும். ஆனா, இப்போ விலையெல்லாம் எகிறிப் போயிடுச்சு. விரால் ஒரு கிலோ 300 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. கெண்டை கூட கிலோ 120 ரூபாய்க்கு விக்குது. குளத்தைக் குத்தகை எடுத்தவங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்களாம்'' என்று சொல்லிக்கொண்டே கூடையைத் தூக்கிக்கொண்டு நடையைக் கட்ட முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.