62 கிலோ எடை... “என் சேனைக்கிழங்கு கின்னஸில் இடம்பெறும்!’’ கவனம் ஈர்க்கும் கன்னியாகுமரி விவசாயி!

முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம், வேர்க் கிளம்பி கல்லன்குழி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வில்சன். இவர் தன்னுடைய தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த சேனைக்கிழங்கு(பிற மாவட்டங்களில் இதை கருணைக்கிழங்கு என்றழைப்பார்கள்) தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இயற்கை இடுபொருள்கள் அதிக அளவில் கொடுத்து மண் வளமாக இருந்ததால் பெரும்பாலான கிழங்குகள் நன்கு திரட்சியாக, அதிக எடையுடன் உள்ளன. குறிப்பாக, இதற்கு முன் வேறு எங்கும் பார்த்திடாத வகையில், 62 கிலோ எடை கொண்ட கிழங்கு இப்பகுதி விவசாயிகள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இதை இப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வில்சனின் தோட்டத்துக்கு நேரில் சென்று, அந்தக் கிழங்கை பார்வையிட்டு இவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசும் இப்பகுதி விவசாயிகள், ‘‘கடந்த பல வருஷமா சேனைக்கிழங்கு சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கோம். வழக்கமாக ஒவ்வொரு கிழங்கும் அதிகபட்சம் 12 - 15 கிலோதான் எடை இருக்கும். ஆனால், வில்சனோட தோட்டத்துல விளஞ்ச கிழங்கு கள்ல பெரும்பாலானவை 20 கிலோவுக்கு மேல எடை இருக்கு. இதுல மிகப்பெரிய ஆச்சர்யம் என்னென்னா... 62 கிலோ, 56 கிலோ, 37 கிலோ, 29 கிலோ எடை கிழங்குகள் வில்சன் தோட்டத்துல விளைஞ்சிருக்கு’’ என வியப்போடு தெரிவித்தார்கள்.
அந்தக் கிழங்குகளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானதால், ஒரு பகல்பொழுதில் வில்சனின் தோட்டத் துக்குச் சென்றோம். கரும்பாறைகள் போன்று காட்சி அளித்த பெரிய அளவிலான சேனைக் கிழங்குகளை, தன்னுடைய உதவியாளருடன் சேர்ந்து வேறு இடத்துக்கு நகர்த்திக் கொண்டிருந்த வில்சன், மிகுந்த உற்சாகத்தோடு நம்மை வரவேற்றார்.

‘‘சேனைக்கிழங்கு சாகுபடியை பொறுத்த வரைக்கும்... மண்ணு எந்தளவுக்கு வளமா இருக்கோ, அந்த அளவுக்குக் கிழங்கு நல்லா பெருக்கும். என்னோட தோட்டத்துல விளையுற சேனைக்கிழங்குகள் பெரும்பாலும் நல்லா பெரிய அளவுகள்லதான் இருக்கும். கடந்த காலங்கள்ல, 55 கிலோ, 50 கிலோ, 48 கிலோ எடையுள்ள கிழங்குகள் கிடைச்சுருக்கு. ரசாயன உரங்களைத் தவிர்த்துட்டு, இயற்கை உரங்களை அதிகமா கொடுத்துக்கிட்டே இருந்தோம்னா, மண்ணுல நல்லா வளம் கூடி, சேனைக்கிழங்குகள் நல்லா பெருக்கும். இன்னும் சொல்லப்போனா, கிழங்கு வகைச் சாகுபடிகளுக்கு ரசாயன உரங்களே பயன் படுத்தக் கூடாது’’ எனத் தெரிவித்தவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.
“நாங்க பல தலைமுறையா விவசாயக் குடும்பம். எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அந்தக் காலகட்டத்துல எங்க குடும்பத்துக்கு 7 ஏக்கர் நிலம் இருந்துச்சு. அப்பாகூட பண்ணைக்குப் போயி விவசாய வேலைகள் எல்லாம் பார்ப்பேன். நான் பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு, 1976-ம் வருஷம் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுல வெற்றிப்பெற்று, அரசு பணியில சேர்ந்து திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்துல பி.டி.ஓ-வா வேலை பார்த்து, 2008-ம் வருஷம் ஒய்வு பெற்றேன்.
அதுக்குப் பிறகு கடந்த 14 வருஷமா, நான் முழு நேரமா விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். என்கிட்ட 40 சென்ட் பரப்புல தென்னந்தோட்டம் இருக்கு. இதுல ஊடு பயிரா வாழை, சேனைக்கிழங்கு, சேப்பங் கிழங்கு உட்பட இன்னும் சில பயிர்கள் சாகுபடி செய்றது வழக்கம். 2008-ம் வருஷம், நான் விவசாயம் செய்ய ஆரம்பிச்ச புதுசுல குறைவான அளவு ரசாயன உரங்கள் பயன் படுத்திக்கிட்டு இருந்தேன். அதையும் படிப்படியா குறைச்சு, 2013-ம் வருஷத்துல இருந்து முழுமையா இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். மாட்டு எரு, ஆட்டு எரு, கோழி எரு, இலைதழைகள் மட்டுதான் பயன்படுத்துறேன்’’ என்று சொன்னவர், சேனைக்கிழங்கு சாகுபடி குறித்த தகவல்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

‘‘தென்னந்தோட்டத்தோட மொத்த பரப்பு 40 சென்ட். இதுல 20 சென்ட் பரப்புல மட்டும் ஊடுபயிரா சேனைக்கிழங்கு பயிர் செய்றது வழக்கம். பங்குனி மாசம் கடைசியில பயிர் வெச்சா, மார்கழி கடைசியில அறுவடைக்கு வந்துடும். 15 - 20 அடி இடை வெளியில தலா ஒரு செடி உருவாகுற மாதிரி விதைக்கிழங்கை ஊனுவேன். விதைக்கிழங்கு ஊன்றப்ப, மாட்டு எரு, ஆட்டு எரு, கோழி, இலைதழைகள் எல்லாம் கலந்து ஒரு குழிக்கு 20 கிலோ வீதம் அடியுரம் கொடுப்பேன். மாசத்துக்கு ஒரு தடவை தலா 10 கிலோ மாட்டு எரு, இலைதழைகள், தலா 2 கிலோ ஆட்டு எரு, கோழி எரு கலந்து கொடுப்பேன். 6 மாசம் வரைக்கும்தான் இடுபொருள்கள் கொடுக்க வேண்டிய திருக்கும். அதுக்கு பிறகு எந்த ஒரு பராமரிப் பும் கிடையாது. இது தென்னையோட வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்குது. இதனால தென்னைக்குனு தனியா எந்த ஒரு பரா மரிப்பும் செய்றதில்லை’’ என்று சொன்னவர், மகசூல் மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
வருமானம்
“சேனைக்கிழங்கைப் பொறுத்த வரைக்கும்... மார்கழி, தை மாசங்கள்ல விற்பனை பண்ணினா, கிலோவுக்கு 25 - 30 ரூபாய்தான் விலை கிடைக்கும். நாலஞ்சு மாசம் இருப்பு வச்சிருந்து கல்யாண முகூர்த்த நாள்கள்ல விற்பனை பண்ணினா, ஒரு கிலோவுக்கு 40 - 45 ரூபாய் விலை கிடைக்கும். 20 சென்ட் பரப்புல பயிர் பண்ணியிருந்த 30 செடிகள் மூலம் மொத்தம் 1,050 கிலோ சேனைக்கிழங்கு கிடைச்சுருக்கு. ஒரு கிலோவுக் குக் குறைந்தபட்சம் 40 ரூபாய் வீதம் விலை கிடைச்சாலே, மொத்தம் 42,000 வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச் செலவுகளும் போக, 25,000 ரூபாய் லாபம் கிடைக்கும். குறைவான பரப்புல, அதுவும் ஊடுபயிர்ல இந்தளவுக்கு வருமானம் கிடைக்குறதுங்கற சந்தோஷமான விஷயம்’’ எனச் சொல்லி முடித்தார்.
தொடர்புக்கு, வில்சன்,
செல்போன்: 94866 35679

சாதனை புத்தகத்தில் என்னுடைய சேனைக்கிழங்கு இடம்பெறும்
“சேனைக்கிழங்கு, கேரளாவுலதான் அதிகமா சாகுபடி செய்றாங்க. அந்த மாநிலத்துல 56.1 கிலோ எடையுள்ள சேனைக்கிழங்கை விளைவிச்ச விவசாயி தாமஸ் குட்டி கடந்த ஆண்டு இந்திய சாதனை புத்தகத்துல (இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்) இடம்பிடிச்சார். கேரளாவுல தான் இந்தளவுக்குப் பெரிய அளவுல சேனைக்கிழங்கு விளையும்னு தாமஸ் குட்டி பேசியிருந்தார். அதைவிட பெரிய அளவு சேனைக்கிழங்கு விளைவிக்க முடியும்னு ஆசைப்பட்டேன். என்னோட ஆசை நிறைவேறியிடுச்சு.
இப்ப நான் விளைவிச்சிருக்குற 62 கிலோ எடை கொண்ட இந்தக் கிழங்கை இந்திய புக் ஆஃப் ரெக்கார்டுல இடம்பெறச் செய்யும் முயற்சியில இறங்கியிருக்கேன். அடுத்த முறை எப்படியும் 75 கிலோ எடை இருக்குற மாதிரி நல்லா இன்னும் பெரிய அளவு சேனைக்கிழங்கு விளைவிச்சு கின்னஸ் புத்தகத்துல இடம்பெற வைக்கும் முயற்சியில இறங்கப்போறேன். கின்னஸ் புத்தகத்துல இடம்பெறணும்னா, விதை நடுறதுல இருந்தே அதை ஆவணப்படுத்தணும்னு சொன்னாங்க. அதுக்கான முயற்சியிலயும் இறங்கியிருக்கிறேன்” என்கிறார் வில்சன்.
இப்படித்தான் சாகுபடி!
20 சென்ட் பரப்பில் சேனைக்கிழங்கு சாகுபடி செய்வதற்கு, வில்சன் சொல்லும் செயல் முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுடைய நிலம் அவசியம். 15 அடி இடைவெளியில் 4 அடி சுற்றளவு, 1.5 அடி ஆழம் கொண்ட குழி எடுக்க வேண்டும். குழியில்... மாட்டு எரு, ஆட்டு எரு, கோழி எரு, இலைதழைகள் அனைத்தும் கலந்து 20 கிலோ இட வேண்டும். அதிக எடை கொண்ட கிழங்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே 10 கிலோ எடை கொண்ட விதைக்கிழங்கை தேர்வு செய்து அதை நிலத்தில் ஊன்றி, மண்ணைப் போட்டு மூட வேண்டும்.
30 நாள்களுக்குப் பிறகு வேர்கள் வெளியில் தென்படத் தொடங்கும். அப்போது ஒவ்வொரு செடியைச் சுற்றிலும்... தலா 10 கிலோ மாட்டு எரு, இலைதழைகள், தலா 2 கிலோ ஆட்டு எரு, கோழி எரு கலந்து வைத்து மண் அணைக்க வேண்டும். அதன் பிறகு எப்போதெல்லாம் வேர்கள் வெளியில் வருகிறதோ, அப்பொதெல்லாம் இதேபோல் இடுபொருள்கள் வைத்து மண் அணைக்க வேண்டும். எப்போதும் மண்ணில் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதேசமயம், தேங்கி நிற்கும் அளவுக்குத் தண்ணீர் கொடுத்துவிடக் கூடாது. கிழங்குகள் முதிர்ச்சி அடைந்து, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருக்கும்போது, 7 - 8 அடி உயரத்துக்குச் செடிகள் வளர்ந்திருக்கும்.
கூடுதல் கவனம்
“தென்னையில சேனைக்கிழங்கை ஊடுபயிரா சாகுபடி செய்றதுனால, கூடுதல் கவனம் செலுத்துவேன், காரணம், தென்னை மட்டைகள் விழுந்து, சேனைக்கிழங்கு செடிகள் ஓடிஞ்சுப் போகுறதுக்கான வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை அப்படி ஒடிஞ்சா, ஊன்று கம்பு கொடுப்பேன்’’ என்கிறார் வில்சன்.