மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

'இயற்கை முறையில் காபி சாகுபடி செய்ய முடியுமா?'

 புறா பாண்டி

 ''இயற்கை முறையில் காபி சாகுபடி செய்வது சாத்தியமா?''

கே. நீலமேகம், சேலம்.

ஏற்காடு, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். ஆர். அருண்மொழியான் பதில் சொல்கிறார்.

''இயற்கை விவசாயத்துக்கு மிகவும் ஏற்றப் பயிர்களில் காபியும் ஒன்று. இதற்கு 50% வெயில், 50% நிழல் வேண்டும். அதனால்தான், மலைசவுக்கு என்று சொல்லப்படும் 'சில்வர் ஓக்’ மரத்தின் அடியில் காபியை சாகுபடி செய்கிறோம். இதனால் காபிக்குத் தேவையான நிழல் கிடைப்பதோடு, சில்வர் ஓக் மரங்களில் இருந்து உதிரும் இலைகள் மூலம் தேவையான இயற்கை உரமும் கிடைக்கிறது.

நீங்கள் கேட்டவை
##~##

ஒரு ஹெக்டேர் நிலத்தில் ஆண்டுக்குச் சுமார் 10 ஆயிரம் கிலோ இலைகள் உதிர்கின்றன.

இதனால் தோட்டம் முழுவதும் இயற்கையாகவே மூடாக்கு உருவாகிவிடுகிறது. இவை மட்கும்போது 100 கிலோ தழைச்சத்து 35 கிலோ மணிச்சத்து மற்றும் 45 கிலோ சாம்பல் சத்து ஆகியவை கிடைக்கும். இத்துடன் இதர நுண்ணூட்டச் சத்துக்களும் காபி செடிக்கு கிடைக்கின்றன.

காபித் தோட்டத்தில் காலியாக உள்ள இடங்களில் கொளுஞ்சி, கொள்ளு, தட்டைப்பயறு... போன்றவற்றை விதைத்து விடலாம். இவை, காற்றில் உள்ள தழைச்சத்துக்களை இழுத்து மண்ணை வளப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. அதன் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கலாம். சில்வர் ஓக் மரங்களை விடுத்து, கல்யாண முருங்கை மரங்களைக்கூட வளர்க்கலாம். மலைப்பிரதேசங்களிலும் இது வளரும். இம்மரத்துக்கும் காற்றில் உள்ள தழைச்சத்துக்களை கிரகிக்கும் தன்மை உள்ளது.

ஒரு ஹெக்டேர் காபிக்கு 25 டன் வரை தொழுவுரத்தை இடலாம். கண்டிப்பாக ஓராண்டு காலம் மட்க வைக்கப்பட்ட தொழுவுரத்தைத்தான் இடவேண்டும். இதில்தான் சத்துக்கள் அதிகளவில் இருக்கும். கோழி எருவாக இருந்தால்... இரண்டு ஆண்டுகள் மட்க வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தொழுவுரம் அல்லாமல், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா... போன்ற உயிர் உரங்களைக்கூட பயன்படுத்தலாம். இயற்கை உரங்களைப் பயன்படுத்தும்போது, பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் குறைவாகவே இருக்கும். அவற்றை எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம். இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது செலவு குறைவதோடு, கூடுதல் விலைக்கு விற்க முடியும். மேலும் விவரங்கள் தேவை என்றால்... எங்கள் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.''

தொலைபேசி: 04281-222456, 222234.

''கனகாம்பர நாற்றுகளை தயாரித்து விற்பனை செய்ய விரும்புகிறேன். அதற்கான விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதைப் பற்றிக் கூறவும்?''

மு. மோகன், சின்னவேப்பம்பட்டு.

கனகாம்பரம் பூ சாகுபடியில் அனுபவம் வாய்ந்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் வெங்கடபதி பதில் சொல்கிறார்.

''கனகாம்பரம், தமிழ்நாடு-புதுச்சேரிப் பகுதிகளில் உள்ள பல விவசாயிகளை லட்சாதிபதியாக்கிய பயிர். அதனால், நாற்றுகளுக்கான விற்பனை வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது. ஆனால், தரமான நாற்றுகள் இல்லாததால்... இன்று அதை சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தரமானச் செடியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் சந்தைக்கு வருகிறது என்றால், பழையபடி பலரும் அதை பயிரிட முன் வருவார்கள் என்பதே உண்மை.

நீங்கள் கேட்டவை

தரமானச் செடி என்றால், அதற்கு சில அடிப்படையானத் தகுதிகள் உள்ளன. பூக்கதிர்களின் நீளம் 9 அங்குலம் இருக்க வேண்டும். செடி 3 அடி உயரமும், 3 அடி அகலமும் பரவி இருக்க வேண்டும். 120 கதிர்களும், 240 பூக்களும் கொண்ட செடிதான் தரமானது. கனகாம்பரம் நாற்றுக்களை உற்பத்தி செய்யும்போது... இந்த அளவுகோலைப் பின்பற்ற வேண்டும். செடி விற்றால் போதும் என்று இல்லாமல், அதை வாங்குபவர்களுக்கு சாகுபடி நுணுக்கங்களையும் நாமே சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கனாகம்பரம் சாகுபடியில் உள்ள முக்கிய பிரச்னை நூற்புழுத் தாக்குதல். இதை டிரைக்கோ டெர்மா விரிடி, வேப்பம் பிண்ணாக்கு போன்றவை மூலமாகக் கட்டுப்படுத்தலாம். இதை முக்கியமாக அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

மாசி, பங்குனி, சித்திரை வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில்தான் கனகாம்பரம் நல்ல மகசூல் கொடுக்கும். அதாவது, நன்றாக வெயில் அடிக்கும்போதுதான் நல்ல விளைச்சல் கிடைக்கும். மழைக்காலம் தொடங்கிய பிறகு விளைச்சல் குறையும். ஆனால், அந்த சமயங்களில் அதிக விலை கிடைக்கும். கிலோ 300 ரூபாய் வரைகூட விற்பனையாகும். சராசரியாக ஏக்கருக்கு 1 லட்ச ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.''

''நான் வளர்க்கும் நாட்டுக் கோழிகள், அசோலாவை உண்ண மறுக்கின்றன. அதை எப்படி பழக்குவது?''

ஜெ. விஜயகுமார், வெளுக்கம்பட்டு.

கேரளாவைச் சேர்ந்த அசோலா வளர்ப்புத் தொழில்நுட்ப வல்லுநரும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவின் பயிற்றுநருமான டாக்டர். கமலேசன் பதில் சொல்கிறார்.

''கோழிகளின் தீவனத்தை உடனடியாக மாற்ற முடியாது. சிறிது, சிறிதாகப் பழக்கப்படுத்திதான் மாற்ற வேண்டும். ஆரம்பக் காலங்களில், 300 கிராம் அசோலாவை இரண்டு முறை நன்றாக தண்ணீரில் அலசி, அழுத்தி பிழிந்து, ஒரு கிலோ தவிடு அல்லது பயறு வகை பொட்டு ஏதாவது ஒன்றுடன் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து, 400 கிராம் அசோலாவை இதேபோல கலந்து கொடுக்க வேண்டும். இப்படியே மாதம் 100 கிராமாகக் கூட்டிக்கொண்டே வரவேண்டும். அதிகபட்சமாக ஒரு கிலோ தவிட்டுக்கு... ஒரு கிலோ அசோலா என்கிற அளவில், வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் கேட்டவை

அசோலா உண்ணும் கோழியின் முட்டையும், இறைச்சியும் கூடுதல் சுவையாக இருக்கும். அசோலா கொடுப்பதால் வழக்கத்தைவிட, 10% கூடுதலாக முட்டைகள் கிடைக்கும். அசோலாவில் 'கரோட்டின்’ என்ற சத்து இருப்பதால், முட்டை வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை வைத்தே அசோலா உண்ணும் கோழியின் முட்டை என்று அடையாளம் கண்டுகொள்ளலாம்.'’

''நகராட்சிக் குப்பையை இயற்கை உரமாக மாற்ற முடியுமா? தற்போது பிரான்ஸில் வசிக்கும் நான், தமிழ்நாட்டுக்கு வந்து அது தொடர்பான வேலையைச் செய்யலாம் என்றிருக்கிறேன். ஆலோசனை சொல்லுங்கள்?''

ஜெ. மதன்குமார், பிரான்ஸ்.

வேலூர், ஸ்ரீபுரம், தங்கக் கோயிலின் சுற்றுச்சூழல் ஆலோசகர் மீனாட்சி சுந்தரம் பதில் சொல்கிறார்.

'' எக்ஸ்னோரா அமைப்பு மூலம், முன்பு வேலூர் மாநகராட்சியிலும், இப்போது ஸ்ரீபுரம் கோயில் வளாகத்திலும் சுற்றுச்சூழல் தூய்மைப் பணிகளை செய்து வருகிறோம். பொதுவாக நகர்ப்புற குப்பைகளில் மறுசுழற்சிக்குப் பயன்படும் பொருட்கள்தான் உள்ளன. குறிப்பாக ரப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றைச் சொல்லலாம். கூடவே, மெடிக்கல் வேஸ்ட், பேட்டரி போன்ற திரும்பப் பயன்படுத்த முடியாத ரசாயனப் பொருட்களும் கிடைக்கின்றன. அடுத்து, மட்கும் தன்மை கொண்ட காய்கறிக்கழிவுகள், உணவுப்பொருட்கள் போன்றவைக் கிடைக்கின்றன.

நீங்கள் கேட்டவை

இவற்றிலிருந்து பிளாஸ்டிக், ரப்பர், இரும்பு, போன்றவற்றை தனியாகப் பிரித்து எடுத்து விற்பனைக்கு அனுப்பிவிடலாம். ரசாயன பொருட்களைப் பிரித்தெடுத்து அகற்றிவிட்டால், மீதமிருக்கும் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கலாம். துளிகூட ரசாயனங்கள் இல்லாது பிரித்தெடுப்பது முக்கியம். அவை இயற்கை உரத்துடன் கலந்துவிட்டால், அவற்றிலிருக்கும் நச்சு மண்ணிலும், பயிரிலும் கலந்துவிடும்.

பிரித்தெடுக்கப்பட்ட மட்கும் தன்மையுள்ள கழிவுகளை நிழலான இடத்தில் மட்க வைப்பதன் மூலம் இயற்கை உரம் கிடைக்கும்.

பிரித்தெடுக்கப்பட்ட நூறு டன் மட்கும் குப்பையிலிருந்து, சராசரியாக 25 டன் அளவுக்கு இயற்கை உரம் கிடைக்கும். இன்றையத் தேதியில் ஒரு கிலோ இயற்கை உரம், 3 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

25 டன் இயற்கை உரம் மூலம் 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் செலவு 25 ஆயிரம் போக, நிகர லாபமாக 50 ஆயிரம் கையில் நிற்கும். பெரிய அளவில் செய்ய நினைத்தால், இயந்திரங்கள் எல்லாம் தேவைப்படும். அதற்கு தகுந்தாற்போல் செலவும் லாபமும் இருக்கும்.

இயற்கை உரத்துக்கானத் தேவை நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நர்சரி கார்டன், தேயிலைத் தோட்டங்கள், பழத்தோட்டங்களுக்கு இயற்கை உரத்தை வாங்கி பயன்படுத்துகிறார்கள். நகராட்சிக் கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை வேளாண்மை துறையும்கூட வாங்கி விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறது. எனவே, இயற்கை உரத்திற்கான விற்பனை வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

திருப்பூர், கோவை, திருச்சி...போன்ற மாநகராட்சிகளில் இந்த வகைப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுகுறித்து மேலும் தகவல்கள் வேண்டும் என்றால், எங்கள் கோயிலுக்கு வருகை தந்து, அங்கு நடக்கும் கழிவு மறுசுழற்சிப் பணிகளைப் பார்வை இடலாம்.''

தொடர்புக்கு, அலைபேசி: 99429-93020.

வேலிமசால், சூபாபுல்... போன்ற தீவன விதைகள் எங்கு கிடைக்கும்?

 ஜெலின், திருச்சி.

''நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் இந்த விதைகள் கிடைக்கின்றன.'' தொடர்புக்கு: இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் மையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல்-637002. தொலைபேசி: 04286-266345, 266244.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை'

பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2

என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்  PVQA(space) உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.