மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

உலர் தீவனத்துக்கு விற்பனை நிலையங்கள்..!

ஓவியம்: ஹரன்

##~##

குளக்கரைப் பாறையில் அமர்ந்து காற்று வாங்கியபடியே, நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி. கருக்கலிலேயே கழனிக்கு வந்துவிட்ட 'ஏரோட்டி’ ஏகாம்பரம், வாத்தியாரின் அருகில் துண்டை விரித்து சற்றே கண்ணசந்திருந்தார்.

''யோவ்... காலையில பத்து மணிக்கு... இப்படி சட்டமா தூங்கிட்டிருக்கியே...'' 'காய்கறி' கண்ணம்மாவின் குரல் ஓங்கி ஒலிக்க... திடுக்கிட்டு எழுந்த ஏரோட்டி,

''இந்த கரன்ட் எப்ப வரும்... எப்ப போகும்னு தெரியலை. அதனால, காலையில நாலு மணிக்கே எழுந்து வயக்காட்டுக்கு வந்துட்டேன்... அதான்'' என்று முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தமர்ந்தார்.

''ம்... புரட்டாசி சனிக்கிழமைனு வெண்பொங்கலும் உளுந்தவடையும் செஞ்சேன். சாப்பிடுங்க'' என்று காய்கறி எடுத்துக் கொடுக்க...

''நான் விரதம்... மதியம்தான் சாப்பிடுவேன்'' என்று கையையும் வாயையும் வாத்தியார் கட்டிக் கொள்ள...  

''இங்க கொடு கண்ணம்மா, நான் சாப்பிட்டுக்குறேன்'' என்று ஏரோட்டி... நாக்கைச் சுழற்ற,

''அதான் தெரியுமே...'' என்றபடியே மொத்தத்தையும் ஏரோட்டியின் தட்டில் கவிழ்த்திய காய்கறி,

''பேப்பர்ல என்னாங்கய்யா முக்கியமான சேதி?'' என்று வாத்தியாரிடம் கேட்டார்.

''அம்மா உணவகம், அம்மா தண்ணீர் மாதிரி, குறைஞ்ச விலையில கால்நடைகளுக்குத் தீவனம் விக்கிறதுக்கு, 250 விற்பனை நிலையங்களைத் திறக்கப் போறாங்களாம். அதோட, 100 கால்நடைக் கிளை நிலையங்களை, தரம் உயர்த்தறதுக்கும் முதலமைச்சர் உத்தரவு போட்டுருக்காங்களாம். உலர் தீவன விற்பனை நிலையங்களுக்காக, பன்னிரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்களாம்'' என்றார், வாத்தியார்.

''பரவாயில்லையே... நல்ல விஷயமா இருக்குதே'' என்று காய்கறி, சந்தோஷ குரலில் சொல்ல...

''எங்க நல்ல விஷயமா இருக்கு..? திட்டங்களைப் போட வேண்டியது... அதுக்காக கோடிக் கணக்குல பணத்தை ஒதுக்க வேண்டியது. 'அப்படி ஒதுக்குற மானியமெல்லாம் ஒழுங்கா விவசாயிகளுக்குப் போய் சேருதா, திட்டமெல்லாம் ஒழுங்கா நடந்துக்கிட்டிருக்கா... இதையெல்லாம் யாராவது பாக்குறாங்களா..? போன வருஷம் சட்டசபையில கால்நடை மானியக் கோரிக்கை சமயத்துல, நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம் கொண்டு வந்தாங்க. 'தேர்வு செய்யப்படுற விவசாயிகளுக்கு 250 குஞ்சுகளோட பண்ணை வைக்க பேங்குல 1 லட்சத்து பதினேழாயிரம் ரூபாய் கடன் கொடுக்கப்படும். இதுல விவசாயி, 58 ஆயிரம் ரூபாயை மட்டும் பேங்குல கட்டுனா போதும். மீதிப் பணத்தை தமிழக அரசாங்கமும், நபார்டு பேங்கும் மானியமா கொடுத்துடும். அதை விவசாயியோட கடன் கணக்குல வரவு வெச்சுருவோம்'னு சொன்ன அரசாங்கம், 'இந்தக் கடனுக்கு விவசாயிகள்ட்ட எந்த உத்தரவாதமும் கேக்கக்கூடாது’னும் சொல்லியிருந்துச்சு. ஆனா, நிறைய மாவட்டங்கள்ல கலெக்டர் தேர்வு செஞ்சு அனுப்புற விவசாயிகளுக்கு பேங்குல கடன் கொடுக்குறதில்லையாம். விவசாயிகளை அலைக்கழிச்சுட்டே இருக்காங்களாம்'' என்றார், ஏரோட்டி.

மரத்தடி மாநாடு

''நீ சொல்றது வாஸ்தவம்தான்யா... எந்தத் திட்டமா இருந்தாலும், தொடர் கண்காணிப்பு இருக்கணும். இல்லாட்டி, எள்ளுதான். ஊட்டியில கூட இதே மாதிரி ஒரு பிரச்னையைச் சொன்னாங்க. சென்னை, கோயம்புத்தூர் மாதிரியான பெரிய நகரங்கள்ல இருக்குற மக்களுக்கு, அந்த நகரங்களைச் சுத்தி இருக்குற மாவட்டங்கள்ல விளையுற காய்கறிகளை, தரமாவும், நியாயமான விலையிலயும் கொடுக்குறதுக்காக 'காய்கறி சாகுபடியாளர்கள் அபிவிருத்தித் திட்டம்’னு போன மாசம் கொண்டு வந்தாங்க. அதன்படி, நீலகிரி மாவட்டத்துல விளையுற காய்கறிகளை கோயம்புத்தூருக்கு அனுப்புறதுக்கு ஏற்பாடு பண்ணுனாங்க. ஊட்டி, கோத்தகிரி பகுதிகள்ல 3 ஆயிரம் விவசாயிகளை ஒண்ணு சேர்த்து, நாலு விவசாயக் குழுக்களை இதுக்காக அமைச்சாங்க. மானிய விலையில், வாகனம், சேமிப்புக் கிடங்கு வசதியெல்லாம் செஞ்சு கொடுத்து, காய்கறி மொத்த வியாபாரிகளே, நேரடியா காய்கறிகளை வாங்குற மாதிரியும் ஏற்பாடு செஞ்சாங்க. ஆனா, வியாபாரிகள் பெரிய அளவுல வந்து வாங்க மாட்டேங்குறாங்களாம். அதிகாரிகளும் கண்டுக்க மாட்டேங்கறாங்களாம். அதனால இந்தத் திட்டத்துக்கு செலவு பண்ண தொகை, விழலுக்கு தண்ணி இறைச்ச கதையா போய்க்கிட்டிருக்குதாம்'' என்று தன் பங்குக்கும் ஒரு வேதனை கதை சொன்னார் வாத்தியார்.

''அடப்பாவிகளா... லட்சக்கணக்குல பணத்தைக் கொட்டி செலவு பண்ணி, இப்படியா சும்மா விடுவாங்க...'' என்று கைகளை முறித்து, சாபம் விட்டார் காய்கறி.

''எல்லா திட்டமும் அப்படித்தான், குறிப்பா விவசாயிகளை யாருமே கண்டுக்கறது இல்லை'' என்று, அதை ஆமோதித்த ஏரோட்டி,

''கோயம்புத்தூர், விவசாயப் பல்கலைக்கழகத்துல வருஷா வருஷம், உழவர் தின விழா, புதிய ரகங்கள் அறிமுக விழாவெல்லாம் நடக்கும். ஆனா, இந்த வருஷம் ஏனோ அந்த விழாவை நடத்தல. கிட்டத்தட்ட 150 விஞ்ஞானிகளுக்கு இட மாறுதல் வேற கொடுத்திருக்காங்களாம். எப்பவும் ஜூன் மாசம்தான் இப்படி, 'டிரான்ஸ்ஃபர்’ பண்ணுவாங்க. இந்த வருஷம் திடீர்னு இடையில மாத்தியிருக்காங்களாம். அதனால, அந்த விஞ்ஞானிகளோட ஆராய்ச்சிகள்லாம் அப்படி அப்படியே நிக்குதாம். இதுல பல கோடி ரூபாய் நஷ்டம் வருமாம். ஆனா, நிர்வாகம் கண்டுக்கவே இல்லைனு விவசாய சங்கக் கூட்டத்துல பேசிக்கிட்டாங்க'' என்று ஒரு தகவலைத் தட்டிவிட்டார்.

''சரி, எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் கிளம்பணும். போன தடவை நான் போட்ட கணக்குக்கு விடை தெரிஞ்சுதா?' என்றார் காய்கறி.

''மாம்பழத்தை பன்னெண்டு பங்கா எப்படி பிரிக்கிறதுனு கேட்டதுதானே... எனக்குத் தெரியல. வாத்தியார்தான் கண்டுபிடிச்சு சொன்னாரு. 'நாலு பழங்களை மூணு மூணு துண்டுகளாக வெட்டி ஆளுக்கொரு துண்டைக் கொடுத்துடணும். மூணு பழங்களை நாலு துண்டா வெட்டி ஆளுக்கொரு துண்டு கொடுத்துடணும்’ சரிதானே'' என்றார் ஏரோட்டி.

இதைக்கேட்டு காய்கறி தலையை ஆட்ட... ''சரி, இந்தத் தடவை நான் ஒரு கணக்கு போடுறேன்... 'ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எல் லாரும், கோவில் திருவிழாவுக்காக மாட்டு வண்டி கட்டிக்கிட்டு கிளம்பினாங்க. மொத்தம் மூணு வண்டி. மொத வண்டியில பொம்பிளைங்கள்லாம் ஏறிக்கிட்டாங்க. ரெண்டாவது வண்டியில குழந்தைகள்லாம் ஏறிக்கிட்டாங்க. மூணாவது வண்டியில சாமான்களையெல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டு ஆம்பளைங்க ஏறிக்கிட்டாங்க. ஆம்பிளை களையும் பொம்பிளைகளையும் கூட்டினா மொத்தம் எத்தனை பேர் வருதோ... அத்தனை எண்ணிக்கையில குழந்தைங்க இருந்தாங்க. ஆம்பிளைங்களையும் குழந்தைகளையும் கூட்டினா 14 பேர். பொம்பிளைங்களையும் குழந்தைகளையும் கூட்டினா, 19 பேர். அப்போ, மொத்தம் எத்தனை ஆம்பளை... எத்தனை பொம்பளை... எத்தனைக் குழந்தைங்க? அடுத்த முறை வர்றப்போ பதில சொல்லுங்க'' என்றபடியே துண்டை உதறிக் கொண்டு ஏரோட்டி எழுந்து நிற்க, முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.  

மஞ்சளை சேமிங்க...லாபத்தை அள்ளுங்க!

கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழக உள்நாடு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மைய இயக்குநர் அஜ்ஜன், மஞ்சள் விலை நிலவரம் பற்றி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ''தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 2012-ம் ஆண்டு தொடங்கி, மஞ்சள் விலை மிகவும் குறைந்து குவிண்டால்,

3 ஆயிரத்து 500 ரூபாய் அளவுக்குத்தான் விற்பனையானது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன்தான் மஞ்சள் விலை இருந்து வருகிறது. தற்போது, ஆந்திர மாநில விவசாயிகள் குவிண்டால், 5 ஆயிரத்து 700 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலான ஆந்திர விவசாயிகள் இந்த விலைக்கு மஞ்சளை விற்பனை செய்துவிட்ட நிலையில், தமிழக விவசாயிகள் சிலர், நல்ல விலையை எதிர்பார்த்து, மஞ்சளை சேமித்து வைத்துள்ளனர். இந்தியாவில், இருப்பு வைக்கப்பட்டுள்ள 45 லட்சம் மஞ்சள் மூட்டைகளில் தமிழகத்தில் மட்டும் 30 லட்சம் மூட்டைகள் உள்ளன.

ஈரோடு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், கடந்த 25 ஆண்டுகள் நிலவிய மஞ்சள் விலையை ஆய்வு செய்ததில், நவம்பர் மாதத்தில், ஒரு குவிண்டால் மஞ்சள், 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் விற்பனையாக வாய்ப்புள்ளது எனத் தெரிய வருகிறது. அதனால், மஞ்சளை சேமித்து வைத்து அடுத்த மாதம் விற்பனை செய்து லாபம் அடையலாம்'' என்று தெரிவித்துள்ளார்.