மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..?''

படங்கள்: வி. ராஜேஷ், கே. குணசீலன், வீ. நாகமணி

புறா பாண்டி

''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..?''

-எம். கிருஷ்ணன், ஈரோடு.

##~##

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நெல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர். எஸ். ராபின் பதில் சொல்கிறார்.

''விவசாய வரலாற்றில் முக்கியமான இடம் பெற்ற நெல் ரகம் கிச்சலி சம்பா. சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதிகளில் பாரம்பரியமாக பயிர் செய்யப்பட்ட, கிச்சிலி சம்பா நெல் ரகத்துக்கு 'ஆத்தூர் கிச்சிலி சம்பா’ என்ற பெயரும் உண்டு. மிகவும் சன்ன ரகமான இந்த நெல்லை தமிழ்நாடு முழுக்கவே விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்தார்கள்.

என்னதான், பாரம்பரிய ரகமாக இருந்தாலும், தொடர்ந்து சாகுபடி செய்யும்போது, இனக்கலப்பு ஏற்பட்டு விடும். அதனால், 1921-ம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள நெல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் மூலம்... பிரபலமான பாரம்பரிய ரகங்களை, கலப்பு ஏற்படாமல் 'தனி வழித் தேர்வு’ முறையில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட முதல் ரகம் கிச்சிலி சம்பாதான். அதற்கு ஜி.இ.பி.-24. (Government Economic Botanist) என்று பெயரிடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட இந்த ரகம், நாடு முழுக்க பரவலாக்கப்பட்டது.

நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..?''

ஒரு கட்டத்தில் நெல்லில் புதிய ரகங்கள் உருவாக்கும் ஆராய்ச்சி தொடங்கியபோது, தாய் ரகமாக கிச்சிலி சம்பாதான் தேர்வு செய்யப்பட்டது. உலக அளவில் உருவாக்கப்பட்ட சுமார் 750 நெல் ரகங்களுக்கு (பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.-8, ஐ.ஆர்.-40 போன்ற ரகங்களுக்கும் சேர்த்து) நம் மண்ணுக்குச் சொந்தமான கிச்சிலி சம்பாதான் 'தாய் வித்து’ என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் துறையில் இந்த ரகத்தின் விதையை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். ஏக்கருக்கு 30 மூட்டை விளைச்சல் கொடுக்கும் திறன் கொண்டது. இயற்கை விவசாய முறையில் கூடுதல் விளைச்சல் எடுக்கும் விவசாயிகளும் இருக்கிறார்கள்.''

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், நெல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422-2474967.

 ''தார்பார்க்கர், கிர் போன்ற காளைகளை உம்பளாச்சேரி பசுவுடன் இனச்சேர்க்கை செய்தால், கூடுதல் பால் கிடைக்குமா? ஏழு முறை இனச்சேர்க்கை செய்தால், தூய்மையான தார்பார்க்கர் கன்று கிடைக்கும் என்கிறார்கள். இது உண்மையா?''

-எம். சந்திரசேகர், தஞ்சாவூர்.

நாகப்பட்டினம் மாவட்டம், பாலையூரைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி, ரங்கநாதன் பதில் சொல்கிறார்.

''நான் டென்மார்க் தொண்டு நிறுவனத்தின் மூலம், டென்மார்க் இனக் காளைகளின் விந்தணுக்களை நம் நாட்டு மாடுகளில் கலப்பு செய்த பணியைச் செய்திருக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் தமிழ்நாட்டு நாட்டு மாடுகளான, உம்பளாச்சேரி, காங்கேயம் போன்றவற்றில் வட இந்தியக் காளைகளை இனச்சேர்க்கை செய்யும் போதுபால் உற்பத்தி கூடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

தூய்மையான தார்பார்க்கர், அல்லது கிர் மாட்டை உருவாக்க, ஐந்து தலைமுறையே போதும். அதாவது, உம்பளாச்சேரி பசுவுடன், தார்பார்க்கர் காளையை இனச்சேர்க்கை செய்து, பிறக்கும் கன்றில் உம்பளாச்சேரியின் குணாதிசயம் 50%, தார்பார்க்கரின் குணாதிசயம் 50% இருக்கும். இந்தக் கன்று பருவத்துக்கு வந்தவுடன், தார்ப்பார்க்கர் காளையுடன் இனச்சேர்க்கை செய்யும்போது, பிறக்கும் கன்றில் 65% தார்பார்க்கர் குணாதிசயம் இருக்கும்.

நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..?''

(இதுவே உம்பளாச்சேரி காளையுடன் இனச்சேர்க்கை செய்தால், 65% உம்பளாச்சேரி குணாதிசயம் இருக்கும்). இப்படி, தார்பார்க்கர் காளையை இனச்சேர்க்கை செய்யும்போது ஐந்தாவது தலைமுறையில் பிறக்கும் கன்று, தூய்மையான தார்பார்க்கர் இனமாக இருக்கும். இப்படி இனச்சேர்க்கை செய்யும்போது, ஒரே காளையைப் பயன்படுத்தக் கூடாது. இதனால், மரபு வழிப் பிரச்னைகள் உருவாகும். இந்த நுட்பத்தில், இரண்டு காளைகளை மாற்றி, மாற்றி இனச்சேர்க்கை செய்யும்போது, நீங்கள் விரும்பும் பசு ரகத்தைப் பெற முடியும்.''

தொடர்புக்கு, செல்போன்: 94433-46369.

 ''சாமை, வரகு போன்ற சிறுதானியங்களை பாரம்பரிய முறையில் தோல் நீக்கம் செய்ய முடியுமா? மின்சாரம் மூலம் இயங்கும் இயந்திரம் எங்கு கிடைக்கும்?''

-ஆர். சுதா, குடியாத்தம்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சிறுதானியங்கள் துறை பேராசிரியர், முனைவர். அ. நிர்மலாகுமாரி பதில் சொல்கிறார்.

''அந்தக் காலத்தில் வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை தோல் நீக்க உரலைப் பயன்படுத்தி வந்தோம். காலப்போக்கில் சிறுதானிய சாகுபடி குறைந்ததால், உரல்-உலக்கை பயன்பாடும் படிப்படியாக மறைந்து போனது. இப்போது, மீண்டும் சிறுதானியப் பயிர்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால், தோல் நீக்கும் இயந்திரங்களின் தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று சிறுதானியங்களை தோல் நீக்கிக் கொடுத்து வருகிறது. ஆயிரம் கிலோ என்ற அளவில் இருந்தால் மட்டுமே, அங்கு கொண்டு சென்று தோல் நீக்குவது லாபமாக இருக்கும். 200, 300 கிலோ என்றால், சிறிய வகை தோல் நீக்கும் இயந்திரங்களைக் கொண்டு தோல் நீக்கிக் கொள்ளலாம். 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை இந்த இயந்திரங்கள் வகை வகையாக விற்பனைக்கு உள்ளன. தோல் நீக்க, கல் நீக்க, பாலீஷ் செய்ய... என பல்வேறு வேலைகளுக்கும் இயந்திரங்கள் விதம்விதமாக உள்ளன.

நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..?''

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள இயந்திரத்தை மாடலாக வைத்து, சேலம் பகுதியில் தோல் நீக்கும் இயந்திரத்தை உற்பத்தி செய்து வருகிறார்கள். தற்போது, மிகச்சிறிய அளவிலேயே தேவை இருப்பதால், இந்த இயந்திரத்தின் விலை அதிகமாக உள்ளது. காலப்போக்கில் விலை குறையும். தோல் நீக்கும் இயந்திரம் தேவைப்படும் விவசாயிகள், எங்கள் துறையைத் தொடர்பு கொண்டால், அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு இயந்திரத்தை வடிவமைக்கப் பரிந்துரை வழங்குவோம்.''

தொடர்புக்கு, செல்போன்: 99949-16832. (காலை 10 மணி முதல் மாலை 5 வரை)

 ''என்னுடைய வீட்டுத் தோட்டத்தில் மிளகாய் பயிரிட்டுள்ளேன். அதில் வெள்ளைநிறப் பூச்சிகள் தாக்கியுள்ளன. இதைக் கட்டுப்படுத்துவது எப்படி?''

-கவாஸ் ஹுசைன், நெசப்பாக்கம், சென்னை.

வீட்டுத் தோட்டத்தில் அனுபவம் வாய்ந்த 'பம்மல்’ இந்திரகுமார் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..?''

''வீட்டுத் தோட்டத்தில் உள்ள காய்கறிப் பயிர்களை வெள்ளைநிற மாவுப்பூச்சி தாக்கி வருகிறது. இதை வந்த பிறகு தடுப்பதை விட, வரும் முன் தடுப்பதுதான் சிறந்தது. காரணம், மாவுப்பூச்சிகள் பஞ்சு போல இலையில் படர்ந்து விடும். அதன் மீது எவ்வளவு பூச்சிக்கொல்லி அடித்தாலும் அசையாது. ஆகையால், முதல்நாள் இரவு இரண்டு ஸ்பூன் மைதா மாவை (15 செடிகளுக்கான அளவு) தண்ணீரில் கலந்து, பசை போல காய்ச்சி வைக்கவும். மறுநாள் காலை ஐந்து மடங்கு தண்ணீரில், மைதா பசையைக் கலந்து தெளிக்கவும். இதனால், மாவுப்பூச்சிகள் செடியில் ஒட்டிக்கொண்டு இறந்து விடும்.

மாவுப்பூச்சி உட்பட அனைத்துப் பூச்சி நடமாட்டத்தை வீட்டுத்தோட்டத்தில் வரும் முன் தடுக்க வழி உண்டு. இஞ்சி, பூண்டு, மிளகாய் தலா 100 கிராம் எடுத்து, நன்றாக அரைத்து, 1 லிட்டர் நீரில் கரைத்து, 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து, காலை அல்லது மாலை வேளையில் ஒரு வார இடைவெளியில் தெளித்து வந்தால்... பூச்சிகள் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை.''

தொடர்புக்கு, செல்போன்: 99410-07057.

 ''காய்கறிக் கழிவுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் கலன் எங்கு கிடைக்கும்?''

-பிரியா, திருச்சி.

''கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் சாண எரிவாயு, காய்கறிக் கழிவுகளில் எரிவாயு தயாரிக்கும் கலன்களைத் தேவைக்குத் தக்கப்படி வடிவமைத்துக் கொடுக்கிறார்கள்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 -246296.

நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..?''