12 மரத்துக்கு 400 ரூபாயில் சொட்டுநீர் !
புறா பாண்டி
''ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யா... போன்ற இடுபொருட்களை தயார் செய்தால், 'நிழலில்தான் வைக்க வேண்டும்’ என்கிறார்களே... வெயிலில் வைத்தால் என்ன ஆகும்?''
கோகுல் நரேந்திரன், முக்கூடல்.
குடும்பம் தொண்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் ராமதாஸ் பதில் சொல்கிறார்.

''இயற்கை விவசாய இடுபொருட்கள், நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யா... போன்றவற்றின் ஆதாரமே நன்மை செய்யும் நுண்ணுயிரிகள்தான். பொதுவாக நுண்ணுயிரிகள் குளுமையான சூழ்நிலையில்தான் பல்கிப் பெருகும். அதனால்தான் நிழலில் வைக்கச் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு ஜீவாமிர்தத்தை எடுத்துக் கொள்ளலாம். இதைத் தயாரித்த உடன் 48 மணி நேரம் மர நிழலில் வைத்தால்தான் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகும். வெயிலில் வைத்தால், வெப்பத்தால் நுண்ணு
யிரிகளின் எண்ணிக்கை குறைந்து விடும். நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள ஜீவாமிர்தத்தைப் பயன்படுத்தினால், விளைச்சல் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. அதனால், நிழலில் வைத்திருந்து உரிய காலத்தில் பயன்படுத்துவதுதான் நல்லது.''
''எனக்குச் சொந்தமாக 12 தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க முடியுமா? இதற்கு எவ்வளவு செலவாகும்?''

சந்திரன், சென்னை.
##~## |
பெங்களூருவைச் சேர்ந்த ஐ.டி.இ. இந்தியா ( கே.பி டிரிப்) என்ற தொண்டு நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல மேலாளர் கோபாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
''விவசாயிகள் மத்தியில் சொட்டு நீர்ப்பாசனம் என்றால் அதிக செலவாகும், சிறிய அளவில் அமைக்க முடியாது... என்பது போன்ற பல மாயைகள் உள்ளன. ஆனால், மிகக் குறைந்த செலவிலேயே சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து விட முடியும் என்பதுதான் உண்மை. சிறிய அளவில் சாகுபடி செய்யும் பயிர்களுக்குக்கூட சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கலாம். இதற்கெல்லாம் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் தொட்டி அமைத்துக் கொண்டு, அதில் குழாய்களை இணைத்து பாசனம் செய்யலாம். 12 தென்னை மரங்களுக்கு 300 அடி நீளக்குழாய் தேவைப்படும். இதன் விலை 400 ரூபாய்க்குள்தான் இருக்கும். இந்தக் குழாய் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை உழைக்கும்.
அதேபோல வீட்டுக் காய்கறித் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும் சொட்டுநீர்ப்பைப் மற்றும் டியூப்களை நாங்கள் விற்பனை செய்கிறோம். இந்த அமைப்பு மூலம் 40 செடிகள் வரை தண்ணீர் பாய்ச்ச முடியும். இதனால் நீர் பாய்ச்சும் வேலையும் மிச்சம், தண்ணீர் செலவும் குறையும். இந்த அமைப்பின் விலை 195 ரூபாய்தான். இதை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.''
தொடர்புக்கு, அலைபேசி: 96009-44610.
''அதிகப் பராமரிப்பின்றி வளர்க்கப்படும் அலங்கார மீன் ரகம் உள்ளதா... மாநகராட்சி வழங்கும் குளோரின் கலந்த தண்ணீரை மீன் தொட்டியில் பயன்படுத்தலாமா?''
நா. ராஜ்குமார், திருப்பூர்.
புதுக்கோட்டை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியர் டாக்டர். ராவணேஸ்வரன் பதில் சொல்கிறார்.

''அலங்கார மீன், சாப்பிடப் பயன்படுத்தும் மீன்... என எதுவாக இருந்தாலும், அதற்கு கட்டாயம் பராமரிப்பு தேவை. இயற்கைச் சூழலில் இருந்து மீனைப் பிரித்து வளர்க்கும்போது அதற்கு பல்வேறு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதனால்தான் பராமரிப்பு அவசியம். ஒரு வேளை மீன் வளர்ப்பவர்கள் வெளியூர்களுக்குச் செல்ல நேர்ந்தால் அதிகபட்சமாக நான்கு நாட்கள் வரை மீன்கள் தாங்கும். அதற்கேற்றவாறு கொஞ்சம் உணவைத் தொட்டியில் இட்டுச் செல்லலாம்.
காற்றுக்கருவி தொடர்ந்து இயங்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நான்கு நாட்களுக்கு மேல் ஆனால், மீன்களுக்குள் உணவுக்காக சண்டை ஏற்பட்டு, சிறிய மீன்களை பெரிய மீன்கள் உண்ணத் தொடங்கி விடும். அதனால் கட்டாயம் நான்கு நாட்களுக்கு மேல் மீன்களுக்கு உணவிடாமல் விடக்கூடாது.
சில நேரங்களில் ஏதாவது நோய் தாக்கி ஒரு மீன் இறந்தால், உடனே அதனை கவனித்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், தொட்டியில் உள்ள அனைத்து மீன்களும் இறந்துவிட வாய்ப்பு உண்டு. 'மீன்கள் எவ்வளவு போட்டாலும் சாப்பிடுகிறது’ என்று தொடர்ந்து உணவு கொடுக்கக் கூடாது. அதிக உணவு போடுவதால், மீன்கள் சுவாசிக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அடுத்து, குளோரின் கலந்த தண்ணீரை கண்டிப்பாக மீன் தொட்டியில் பயன்படுத்தக் கூடாது. கிணற்று நீர், ஆற்று நீர், ஆழ்குழாய் நீர்... போன்றவற்றை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.''
தொடர்புக்கு: இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி மையம், தொழிற்பேட்டை அஞ்சல், புதுக்கோட்டை-622004. தொலைபேசி: 04322-271443.
''பூத் ஜலக்கியா (மிகவும் காரமான) மிளகாய், தமிழ்நாட்டில் வளருமா?''
சொக்கலிங்கம், கோவை.
திரிபுரா மாநிலம், அகர்தலாவில் உள்ள மண்டல ஸ்பைசஸ் போர்டு அலுவலகத்தின் உதவி இயக்குநர் தேவானந்த் சேனாய் பதில் சொல்கிறார்.

''வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக பூத் ஜலக்கியா பயிர் செய்யப்படுகிறது. சிவப்பு நிறத்தில் உள்ள மிளகாய் ஒரு கிலோ

1,300 வரை விற்பனையாகிறது. திறந்தவெளியில் இந்தச் செடி வளராது. பாதி நிழலும், பாதி வெயிலும் தேவை. எனவே தென்னை, பாக்கு... தோப்புகளில் பயிர் செய்யலாம். மண்ணில் எப்போதும் ஈரம் இருக்கும் இடத்தில்தான் நன்றாக வளரும்.
ஆகையால், தொடர்ந்து நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். சமவெளியில் பயிரிட்டால் விளைச்சலும், பயிரின் ஆயுள் காலமும் குறையும். பொதுவாக மூன்று ஆண்டுகள் வரை விளைச்சல் கொடுக்கக் கூடியது இந்தச் செடி. ஆனால், சமவெளியில் சாகுபடி செய்தால், ஓர் ஆண்டுதான் விளைச்சல் கொடுக்கும்.
தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைச்சார்ந்த பகுதிகளில் நன்றாக விளைச்சல் கொடுக்கும். இதன் விதை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டுமே வடகிழக்கு மாநிலங்களின் சந்தையில் கிடைக்கும். ஒரு கிலோ
10 ஆயிரம் ரூபாய் எனும் அளவுக்கு விற்பனை செய்கிறார்கள். விதை தேவைப்படுபவர்கள் நேரில் வந்து வாங்கிச் செல்லாம். மற்ற வழிக்காட்டுதல் தேவைப்படுபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.''
தொடர்புக்கு: மண்டல ஸ்பைசஸ் போர்டு அலுவலகம், அகர்தலா, தொலைபேசி: 0361-2229776. (ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தொடர்பு கொள்ளவும்) உதவி இயக்குநர், அலைபேசி: 094021-68230. (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசலாம்)
'மொட்டைக் கம்பு' என்று சொல்லப்படும் வீரிய ஒட்டுக் கம்பு விதை எங்கு கிடைக்கும்?
கே. பாலசுப்பிரமணியன், காங்கேயம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சிறுதானியத் துறையில், வீரிய ஒட்டுக் கம்பு விதை உள்ளிட்ட அ¬னைத்து சிறுதானியங்கள் குறித்தத் தகவல்களும் கிடைக்கும்.
தொடர்புக்கு, தொலைபேசி: 0422-2450507.
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை
'நீங்கள் கேட்டவை'
பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2
என்ற முகவரிக்கு தபால் மூலமும்
pasumai@vikatan.com என்ற முகவரிக்கு
இ-மெயில் மூலமும் PVQA(Space) உங்கள் கேள்வி (Space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.