மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

"தென்னை போல பனையை சாகுபடி செய்ய முடியுமா ?

 புறா பாண்டி

 'பாம்புப்புடலை என்றொரு ரகம் இருந்தது. இன்று அதை பரவலாகக் காண முடியவில்லை. எங்கு பயிர் செய்கிறார்கள். அதன் சிறப்புத் தன்மை என்ன?''

பி. துரைசாமி, தாசராபாளையம்.

புடலை சாகுபடியில் அனுபவம் வாய்ந்த 'கேத்தனூர்’ பழனிச்சாமி பதில் சொல்கிறார்.

''பாம்புப்புடலைச் செடிகள் அந்தக் காலத்தில் ஊர்தோறும் இருக்கும். இதற்கு அதிகப் பராமரிப்புத் தேவையில்லை. சாதாரணமாகக் கயிறு கட்டிப் பந்தல் போட்டாலே போதும். வீட்டுத் தோட்டங்களில் துணி காய வைக்கும் கொடிகளில் கூட ஏற்றி விடுவார்கள். மளமளவென வளர்ந்து காய்த்துக் குலுங்கும். சுமார் 5 அடி நீளம் வரைகூட வளரும் தன்மை கொண்டது. பிஞ்சாக இருக்கும்போதே, காயின் அடி முனையில் கல்லைக் கட்டி விட வேண்டும். இப்படிச் செய்யா விட்டால் காய் சுருண்டு விடும். பாம்புப்புடலையை ஒரு முறை சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் அளவுக்குச் சுவையானது.

நீங்கள் கேட்டவை
##~##

இப்போது இந்த ரகம் அதிகளவில் பயிர் செய்யப்படுவதில்லை. இது ஏக்கருக்கு 10 டன் அளவுக்குத்தான் மகசூல் கொடுக்கும். ஆனால், நாட்டு ரகக் குட்டைப்புடலையில் ஏக்கருக்கு 40 டன் வரை மகசூல் கிடைக்கும். அது தவிர, இது நீளமாக இருப்பதால், சந்தைக்கு எடுத்துச் செல்வதும் சிரமம். அதனால்தான், இந்த ரகத்தை பலரும் சாகுபடி செய்வதில்லை.

இந்த ரகத்துக்குக் கேரளாவில் நல்ல விற்பனை வாய்ப்பு இருப்பதால், தேனி மாவட்டத்தில் ஓரளவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது. அதனால், தேனிப்பகுதியில் பாம்புப்புடலை விதைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பாம்புப்புடலை, குட்டைப்புடலை, வரிப்புடலை... என்று பல பாரம்பரிய ரகங்கள் உள்ளன. பாகற்காய் போல, புடலைக்கும் எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கிறது''

''தென்னை மரத்தைப் போல பனை மரத்தை சாகுபடி செய்யலாமா?''

மு. கண்ணன், அரியாண்டிபுரம்.

பனை மரங்கள் குறித்துத் தகவல் சேகரித்து வரும் ஈரோடு, பொன்தீபங்கர் பதில் சொல்கிறார்.

''தென்னையை வெச்சவன் தின்னுட்டுச் செத்தான்... பனையை வெச்சவன் பார்த்துட்டுச் செத்தான் என்று கிராமத்தில் சொல்வார்கள். ஆனால், இது உண்மையில்லை. பனையை வைப்பவர்கள், அவர்கள் காலத்திலேயே அதன் பலனை அனுபவிக்க முடியும். பனை மரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் முன் வருவதில்லை. பனை ஒரு கற்பக விருட்சம். அதன் அத்தனைப் பகுதிகளும் பலன் கொடுக்கக் கூடியவை. தமிழ்நாட்டு மண்ணுக்கு ஏற்ற மரம் இது. கடுமையான வறட்சியிலும்கூட வளரும் தன்மை கொண்டது.

நீங்கள் கேட்டவை

அந்தக் காலத்தில் தோட்டத்தைச் சுற்றி பனை மரங்களைத்தான் வேலியாக வைப்பார்கள். ஆடு மாடுகளைத் தடுப்பதோடு, இவை காற்றுத் தடுப்பு வேலியாகவும் செயல்பட்டன. மலையோரத் தோட்டங்களில் யானைகளின் நுழைவைத் தடுக்க இன்றும்கூட பனை நடவு செய்கிறாகள். பனை மரங்களில் குட்டை ரகங்கள்கூட உள்ளன. திருச்செந்தூர், ராமநாதபுரம்... போன்ற பகுதிகளில் விதம்விதமான பனைகள் உள்ளன.

நடவு செய்து 15 முதல் 20 ஆண்டுகள் கழித்துதான் பனை பலன் கொடுக்கும் என்பார்கள். என்னுடைய அனுபவத்தில் ஆறு ஆண்டுகளிலேயே பலன் எடுத்திருக்கிறேன். அதனால், குறுகிய காலத்தில் பலன் கொடுக்கும் பனை ரகங்களைத் தேர்வு செய்து நடவு செய்து முறையாக சாகுபடி செய்தால், பனையும் தென்னையைப் போலவே நல்ல பலன் கொடுக்கும். ஆனால், பனையை தனிப்பயிராக சாகுபடி செய்ய யாரும் முயற்சி செய்யவில்லை. பனை ஏறும் தொழில் செய்யும் சமூகத்தினரிடம் பனை குறித்த மேலும் பல தகவல்கள் கிடைக்கும்.''

தொடர்புக்கு: தொலைபேசி: 0424-2274700.

''எங்கள் தோட்டத்தில் நீலம், பெங்களூரா... போன்ற மா மரங்கள் உள்ளன. இந்த ரகங்களின் மாம்பழங்கள் குறைந்த விலைக்குத்தான் விற்பனையாகின்றன. எனவே, இந்த மரங்களை வெட்டிவிட்டு, புதிய கன்றுகளை வைக்கலாமா?

தபஸ்வினி, திருவள்ளூர்.

பழ மரங்களுக்கு ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த வேளாங்கன்னியைச் சேர்ந்த லோகநாதன் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''பழ மரங்கள் நடவு செய்யும் போது, எந்த ரகம் நல்ல லாபம் தரும் என்று யோசிக்காமல் நடவு செய்து விடுகிறோம். அவை ஐந்து ஆண்டு காலம் வளர்ந்த பிறகுதான், இந்த ரகத்தைக் காட்டிலும், அந்த ரகத்தை வைக்கலாம் என்று மனது அலை பாய்கிறது. உடனே, பலர் மரங்களை வெட்டி விட்டு, புதிய கன்றுகளை நடவு செய்து விடுகிறார்கள். இதனால், பணமும் காலமும்தான் விரயம். இதைத் தவிர்த்து, மாற்று முறையில் யோசித்தும் செயல்படலாம். ஏற்கெனவே, வளர்ந்துள்ள நீலம், பெங்களூரா... மரத்தை வெட்டி அகற்றாமல், அல்போன்சா, பங்கனப்பள்ளி... என்று எந்த ரகத்தை வேண்டுமானாலும் அவற்றில் ஒட்டுக் கட்டிக் கொள்ளலாம். இதுபோல ஒரு மரத்தில் முப்பது ரகங்களைக்கூட ஒட்டுக் கட்டலாம்.

மழை பெய்யும் மாதங்களான ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் ஒட்டுக் கட்டுவதற்கு ஏற்ற மாதங்கள். மரத்தை முழுவதும் மொட்டையடிக்காமல் அதில் சில கிளைகளை மட்டும் வெட்டி அதில் ஒட்டுக் கட்டுவது நல்லது. நர்சரி நடத்துபவர்களிடம் ஒட்டுக் கட்டும் தொழில்நுட்பம் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.''

தொடர்புக்கு: அலைபேசி: 99652-42196.

''கால்நடைகளுக்கு ஹோமியோபதி மருந்து கொடுப்பது சரியானதா? முதலுதவி செய்ய என்ன வகையான மருந்துகளைப் பயன்படுத்தலாம்?''

கே. சாந்தா, திருச்சி.

ஹோமியோபதி மருத்துவர், தில்லைநாயகம் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை

''ஜெர்மன் நாட்டில் வாழ்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர். சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் ஹோமியோபதி மருத்துவம். அவர், அலோபதி மருத்துவம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, அதற்கு மாற்றாக இம்முறையை உருவாக்கினார். இம்மருத்துவ முறை இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. இதில் அலோபதியைக் காட்டிலும் செலவு குறைவானதோடு, பக்க விளைவுகளும் கிடையாது. பல ஆண்டுகளாகவே, கால்நடைகளுக்கும் ஹோமியோபதி மருத்துவம் நடைமுறையில் உள்ளது. இது பற்றி பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

என்னுடைய மாடுகளுக்கு ஹோமியோபதி மருந்துகளை மட்டுமே கொடுத்து வளர்த்தேன். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகளையே கால்நடைகளுக்கும் கொடுக்கலாம். உதாரணத்துக்கு 'காணை’ என்று சொல்லப்படும் கோமாரி நோய்க்கு 'மெர்சால் 200’ (விமீக்ஷீநீ sஷீறீ) என்ற மருந்து கலக்கப்பட்ட 10 மாத்திரைகளைக் கொடுக்கலாம். இந்த மாத்திரைகளை நூறு மில்லி நீரில் கலந்து நாக்கில் படுமாறு கொடுக்க வேண்டும். மலச்சிக்கல் மற்றும் சாணம் வெளியேறாமை போன்றவை ஏற்பட்டால், 'நாக்ஸ் வாமிக் 200’ (ழிuஜ் ஸ்ஷீனீவீநீ) என்ற மருந்தைக் கொடுக்கலாம். ஆடுகளுக்கு என்றால், மருந்தின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற பல முதலுதவி மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன. சரியான மருத்துவரின் உதவியுடன் மருந்துகளைக் கொடுத்தால், தக்க பலன் கிடைக்கும். ஆர்வமும், விருப்பமும் உள்ள விவசாயிகள் இந்த மருத்துவ முறையை எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.''

தொடர்புக்கு: அலைபேசி: 94432-79398.

''தென்னையில் தரமான ஒட்டுக்கன்றுகள் எங்கு கிடைக்கும்?''

பி. குபேந்திரன், உசிலம்பட்டி.

கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியார் நகரில் தென்னை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு ஒட்டு ரகத் தென்னங்கன்றுகள் கிடைக்கும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04253-288722.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை'

பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும்  PVQA (space)-உங்கள் கேள்வி(space)உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.