நீங்கள் கேட்டவை - ஈரப்பத விதை நெல்... எளிதாகக் கண்டறிவது எப்படி?

##~## |
''விதைக்காக நெல்லை சேமிக்கும்போது, 12% ஈரப்பதம் இருக்க வேண்டும் என்கிறார்கள். கருவிகள் இல்லாமல், ஈரப்பதத்தை அறிய முடியுமா?''
-சி. செல்வராஜ், புதியம்புத்தூர்.
திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். தேவநாதன் பதில் சொல்கிறார்.
''விதைக்கு நெல்லை சேமிக்கும்போது, அதன் ஈரப்பதம் மிகவும் முக்கியம். ஈரப்பதம் கூடினாலும், குறைந்தாலும், விதையின் முளைப்புத்தன்மை பாதிக்கப்படும். ஆகையால், விதையை சேமிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது, விஞ்ஞான வளர்ச்சியால், மின்னணுக் கருவி மூலம் ஈரப்பதத்தை எளிதாக அறிந்து விடுகிறோம். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர், எந்தக் கருவியும் இல்லாமல் ஈரப்பதத்தை அறிந்து செயல்பட்டதைப் பாராட்டத்தான் வேண்டும். இன்றளவும், அந்த நுட்பம் பயன்பாட்டில் உள்ளது.
விதை நெல்லை சூரிய ஒளியில் உலர்த்துவதில்தான் சூட்சமம் உள்ளது. நினைத்த நேரத்தில் விதை நெல்லை, காய வைக்கக் கூடாது. காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையிலும் களத்தில் கொட்டி, மூன்று நாட்களுக்கு உலர்த்த வேண்டும். நெல்லை கால்களால் தள்ளியபடி உலர்த்தும்போது, சலசலவென்று சத்தம் கேட்கும். நெல்லை கைகளில் அள்ளி வைத்து திருகிப் பார்த்தால், எளிதாக தோல் உரியும். அரிசியை வாயில் எடுத்து கடித்தால், 'கடுக்’கென்று சத்தம் கேட்கும். இந்த அறிகுறிகளை வைத்து, நெல் 12 % ஈரப்பதத்துடன் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இந்தளவு ஈரப்பதம் இருந்தால்... விதையின் முளைப்புத்திறன் 80% அளவுக்கு இருக்கும்.

இப்படி உலர்த்தி சேமிக்கப்பட்ட விதையை, அதிகபட்சம் 12 மாதங்களுக்குள் விதைத்து விட வேண்டும். காலம் கடந்தால், முளைப்புத்திறன் குறையும். சிலசமயம், தொடர் மழையின் காரணமாக, விதை நெல்லின் ஈரப்பதம் அதிகரித்திருக்கும். எனவே, அந்த சமயத்தில், நன்றாக சூரிய ஒளி அடிக்கத் தொடங்கியவுடன், ஏற்கெனவே சொன்னதுபோல காலை அல்லது மாலை நேரத்தில் உலர்த்த வேண்டும். சேமிக்கும்போது, வேப்பிலை, வசம்புத்தூள் (ஒரு கிலோ விதைக்கு 5 கிராம்) ஆகியவற்றைப் பயன்படுத்தினால், பூச்சிகள் தாக்காது. விதை மூட்டைகளை நேரடியாக தரையில் வைத்தால், பூமியின் ஈரப்பதம் விதைகளில் பரவ வாய்ப்பு உண்டு. பலகை, கற்கள் ஆகியவற்றின் மீதுதான் விதை மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 044-27620233/27620383.
''வறட்சியைத் தாங்கி வளரும் உயிர்வேலி எது?''
-எஸ். கந்தசாமி, ஈரோடு.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகில் உள்ள முன்னோடி விவசாயி 'டி. களத்தூர்’ மோகனகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
''எனக்கு அரிய வகைப் பயிர்களை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்தத் தேடுதல் மூலம்தான், 'சூடான் முள்’ என்று சொல்லப்படும் 'மெல்லிபேரா’ பற்றி தெரிந்து கொண்டேன். பருவ மழை தொடங்கும் முன் விதைகளை விதைத்து விட்டால் போதும். கிடுகிடுவென வளர்ந்து வந்துவிடும். ஆடுகள் இதன் இலைகளைத் தின்னும் என்றாலும், செடிகளில் உள்ள முள்ளைத் தாண்டி நிலத்துக்குள் வர முடியாது. என்னுடைய அனுபவத்தில் சூடான் முள் போல ஒரு உயிர்வேலியைப் பார்த்ததில்லை. இந்த முள்ளை அப்படியே விட்டுவிட்டால், வளர்ந்து மரமாகி விடும். ஆகையால் நமக்கு தேவையான உயரத்தில் கவாத்து செய்து விட வேண்டும். மானாவாரி நிலங்களுக்கு இந்த உயிர்வேலி பாதுகாப்பானது. செலவும் குறைவு. இதன் விதை, கிலோ 500 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

மானாவாரி நிலங்கள் என்றால், விதைப்பதைக் காட்டிலும் கன்றுகளாக வளர்த்து நடவு செய்வது நல்லது. சில நர்சரிகளில் இதன் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மரப்பயிர்கள் சாகுபடி செய்யும் தோட்டங்களில், சூடான் முள்ளை உயிர்வேலியாக அமைத்து, பாதுகாப்பு அரணை உருவாக்கலாம். விலை உயர்ந்த சந்தனம், தேக்கு... போன்ற மரங்கள் ஓரளவு வளர்ந்த பிறகு, இந்த முள்ளை உயிர்வேலியாகப் போட்டால், திருடர் பயம் இருக்காது. ஜே.சி.பி., பொக்லைன்... போன்ற வாகனங்களை வைத்து, முள்ளை அகற்றிவிட்டுத்தான் மரங்களை அறுவடை செய்ய முடியும். அந்த அளவுக்கு சூடான் முள் வளர்ந்து நின்று பாதுகாக்கும்.''
தொடர்புக்கு, செல்போன்: 98944-01680.
''எங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர், காங்கேயம் சினை ஊசி போட வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது என்கிறார். இது உண்மையா?''
- வி. கிருபாகரன், மகுடஞ்சாவடி.சேலம் மாவட்டம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சேனாபதி காங்கேயம் மாடு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கார்த்திகேயன் பதில் சொல் கிறார்.
''தமிழ்நாட்டின் பாரம்பரிய இனமான காங்கேயம் இனத்தைப் பெருக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள கால்நடைப் பண்ணையில் காங்கேயம் இன காளைகளை வளர்த்து, விந்தணுவைச் சேகரித்து... அதை உறைய வைத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகிறார்கள். அண்மையில், இந்தப் பண்ணையில் இருந்த காங்கேயம் இனக் காளைகள் சில இறந்துவிட்டன. இதனால், காங்கேயம் உறை விந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால், கால்நடைப் பராமரிப்புத் துறையினர், காங்கேயம் மாடுகள் அதிகம் உள்ள ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகளில் மட்டும் காங்கேயம் சினை ஊசிகளை மாடுகளுக்குப் போட்டு வருகின்றனர்.

மற்ற பகுதிகளில் சினை ஊசி சப்ளை இல்லை. இதனால்தான், காங்கேயம் சினை ஊசி போட்டிருக்க மாட்டார்கள். மற்றபடி அரசு உத்தரவு எதுவும் கிடையாது. அக்டோபர் இறுதிக்குள் சினை ஊசி பற்றாக்குறை தீர்ந்துவிடும் என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆகையால், நவம்பர் மாதம் வழக்கம்போல, அரசு கால்நடை மருத்துவமனைகளில் காங்கேயம் சினை ஊசி போடுவார்கள்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 04257-294234.
''செஞ்சந்தன மரம் எந்த மாதிரியான நிலத்தில் வளரும்? எத்தனை ஆண்டுகள் கழித்து பலன் கிடைக்கும்? வெட்டும்போது அனுமதி வாங்க வேண்டுமா?''
-ரவிச்சந்திரன், தஞ்சாவூர்.
நீலகிரி மாவட்ட வனப்பாதுகாவலர் பத்திரசாமி இ.வ.ப. பதில் சொல்கிறார்.
''அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். இந்த அணு யுகத்துக்கு ஏற்ற மரமும்கூட. பல அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் விளையும் 90% மரங்களை ஜப்பான் நாடுதான் இறக்குமதி செய்து வருகிறது. ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர்... போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளைச் செய்யும் மருத்துவர்கள், சிகிச்சையின்போது கதிர்வீச்சைத் தடுப்பதற்காக, சிறிதாக வெட்டப்பட்ட செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறார்களாம். ஒலி அலைகளைத் தடுக்கும் திறன் கொண்டது. வெப்பத்தையும் அதிக அளவில் கடத்தாது. கலைப்பொருட்கள் செய்வதற்கும், கிடார்...போன்ற இசைக்கருவிகள் செய்வதற்கும் இந்த மரத்தைப் பயன்படுத்து கிறார்கள்.

இவ்வளவு சிறப்புகள் இம்மரங்களுக்கு இருப்பதால், இவற்றின் சந்தை வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சரளை மற்றும் செம்மண் கலந்த மண் வகைகளில் இம்மரம் சிறப்பாக வளரும். படுகை நிலத்தில்கூட நன்றாக வளரும். ஆனால், நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டியது அவசியம். ஆழமான மண்கண்டம் உள்ள மானாவாரி செம்மண் நிலங்களிலும் வளர்க்கலாம். உங்களுக்குத் தேவையான செஞ்சந்தனக் கன்றுகளை அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். செஞ்சந்தனம் பலன் கொடுக்க 20 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும். மரங்கள் நன்றாக முதிர்ந்ததும்... கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா வாங்கி, மாவட்ட வனத்துறை அலுவலரிடம் கொடுத்தால், அவர்கள் நம்முடைய நிலத்தில் இருக்கும் மரங்களை வனச்சரகர் மூலமாக ஆய்வு செய்து வெட்டுவதற்கு அனுமதி வழங்குவார்கள். வெட்டிய பிறகு, வனத்துறை அதிகாரிகளை அணுகினால், ஒரு குறியீடு கொடுப்பார்கள். அந்தக் குறியீட்டைப் பொறித்து, மரத்தை விற்பனைக்காக இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.''
''பெருநெல்லியை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய விரும்புகிறேன். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?''
மன்னா.வை. ரத்தினசபாபதி, வெள்ளிமலை.
''தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், இதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.''
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3. தொலைபேசி: 0422-6611340/6611268.
