மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்!

ஓவியம் : ஹரன்

##~##

முருங்கை மரத்தில், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி காய்களைப் பறித்துக் கொண்டிருக்க... அவற்றைப் பொறுக்கிக் கொண்டிருந்தார் 'காய்கறி’ கண்ணம்மா. பருவ மழைத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சம் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதால்... மக்காச்சோள விதைப்புக்காக காலையிலேயே கிளம்பி வந்திருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம்.

''என்னய்யா ரெண்டு, மூணு நாளா காணோம்'' என்று வாத்தியாரிடம் கேட்டார், ஏரோட்டி.

''மருமகன் ஆபீஸ் மீட்டிங்குக்காக நாலு நாள் வெளிநாடு போயிருந்தார். அதனால துணைக்கு வந்து இருக்கச் சொல்லி பொண்னு போன் பண்ணியிருந்துச்சு. அதான் சென்னைக்குப் போயிருந்தேன். 'பிள்ளைங்க ஸ்கூலுக்கு லீவு போட முடியாது’னுதான் என்னை கிளம்பி, அங்க வர சொல்லுச்சு பாப்பா. ஆனா, நான் போயிருந்த சமயம் அடைமழை கொட்டித்தீர்த்து, ஸ்கூல்லாம்கூட லீவு விட்டாங்க. அப்பப்பா, என்ன ஊருய்யா அது... வெயில் அடிச்சாலும், மழை பெஞ்சாலும்... ஊரு நாறிடுது. பேருதான் தலைநகரம். நிஜத்துல அது நரகம். உண்மையிலேயே நாமெல்லாம் இருக்கறதுதான்யா சொர்க்கம்'' என்றார், வாத்தியார்.

''அந்தந்த ஊர்ல பழகினவங்களுக்கு அந்தந்த ஊருதான்யா சொர்க்கம். உன் பேரனை வந்து இங்க இருக்க சொல்லு பாப்போம்'' என்று வாத்தியாரை மடக்கினார், ஏரோட்டி.

''நீ சொல்றதும் சரிதான்...'' என்ற வாத்தியார்,

''மக்காச்சோளமா விதைக்கிற... விதை வாங்கினப்போ பில் வாங்கினியா? மக்காச்சோள விதைகள் அதிக அளவுல விற்பனை ஆகறதால, போலி விதைகள் உலவுதாம்யா. அரை கிலோ வாங்கினாலும் பில் வாங்கி வெச்சுக்கோ. அப்போதான், ஏதாவது பிரச்னைனா... இழப்பீடு கேக்க முடியும்'' என்று எச்சரிக்கை செய்தி சொன்னார்.

'நானெல்லாம் எப்பவுமே உஷார்தான்யா. உரக்கடையிலயும், கமிஷன் கடையிலயும் எப்பவும் கடன் வெச்சுக்கவே மாட்டேன். அதனால தைரியமா எல்லாத்துக்கும் பில் கேட்டு வாங்கிடுவேன். கடனுக்கு வாங்கறப்போதான் அதையெல்லாம் கேக்க முடியாம, விவசாயிங்க தடுமாறி நிப்பாங்க'' என்ற, ஏரோட்டி அப்படியே தானும் ஒரு செய்தியைச் சொன்னார்.

''போன வருஷம் மழை இல்லாம ஊரே காய்ஞ்சு போனதால, சென்னை தவிர, எல்லா மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களா அறிவிச்சு, நிவாரணம் கொடுத்தாங்க. அதுல தென்னைக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய்னு நிர்ணயிச்சிருந்தாங்க. நிறைய மாவட்டங்கள்ல தென்னைக்கான நிவாரணத்தைக் கொடுத்துட்டாங்களாம். தமிழ்நாட்டுலயே அதிகமா தென்னை சாகுபடி நடக்கற கோயம்புத்தூர் மாவட்டத்துல இதுவரைக்கும் ஒரு விவசாயிக்குக்கூட நிவாரணம் கொடுக்கலையாம். வேளாண் துறை அமைச்சர் தாமோதரனுக்கு கோயம்புத்தூர்தான் சொந்த மாவட்டம். அங்கேயே இந்த லட்சணமாம்'' என்றார்.

மரத்தடி மாநாடு : போலி விதைகள்...  உஷார்... உஷார்!

''ஆமாய்யா, நான்கூட கேள்விப்பட்டேன். என்கூட வேலை பார்த்த வாத்தியார் ஒருத்தர் அங்கதான் இருக்கார். அவருக்கு இன்னமும் நிவாரணம் கிடைக்கலையாம். அவர் விசாரிச்சுப் பார்த்தப்போ 'ஃபைலைக் காணோம்’னு தேடுறதா ஒரு தகவல் கிடைச்சுருக்கு. அதனால, 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல இதைப்பத்தி ஒரு மனு போடு’னு யோசனை சொல்லியிருக்கேன். அப்போ உண்மை தெரிஞ்சுடும்ல'' என்றார், வாத்தியார்.  

''ஆமாய்யா.. இதுக்கு காரணமா இருக்கற அதிகாரிகளை பொறி வெச்சு பிடிச்சு கோர்ட்டுல நிறுத்தறதுதான் நல்லது'' என்று சீறினார் காய்கறி.

''கண்டிப்பா நிறுத்தியே ஆகணும்'' என்று தானும் கொதித்தார் ஏரோட்டி.

''தங்க நாற்கரச் சாலைனு ஒரு திட்டம் கொண்டு வந்தாங்க தெரியும்ல. இதோட மூன்றாம் கட்ட வேலைகள்ல... சேலத்துல இருந்து கேரளா வழியா கன்னியாகுமரிக்கு 640 கிலோ மீட்டர் தூர சாலையும் இடம்பிடிச்சுருக்கு. இதுக்காக கன்னியாகுமரி மாவட்டத் துல மத்திய அரசாங்கம் நிலத்தைக் கையகப்படுத்திக்கிட்டு இருக்கு. நஷ்டஈட்டுத் தொகையையும் அறிவிச்சுருக்காங்க. அதாவது, ஒரு சென்ட் நிலத்துக்கு 2 ஆயிரத்து ஐநூறு ரூபாய், கான்கிரீட் வீடு இருந்தா... சதுரடிக்கு 500 ரூபாய், ஓட்டு வீட்டுக்குக் கிடையாதுனு சொல்லியிருக்காங்க. இதைக் கேட்டு கொதிச்சு போயிருக்காங்க அந்த மக்கள். பின்னே... இதே ரோட்டுக்காக கேரள எல்லைக்குள்ள ஒரு சென்ட் நிலத்துக்கு அஞ்சே கால் லட்ச ரூபாய் வரை இழப்பீடு, கான்கிரீட் வீட்டுக்கு சதுரடிக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் இழப்பீடுனு கொடுக்கறப்ப... கோபம் வராம எப்படியிருக்கும். கேரளாவுலயும் குறைச்சலாத்தான் இழப்பீடு அறிவிச்சாங்களாம். ஆனா, அங்க இருக்கற எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் போராடி தொகையை உயர்த்தி வாங்கிக் கொடுத்தாங்களாம். நம்ம ஊர் எம்.பி., எம்.எல்.ஏ. யாரும் இதை கண்டுக்காததால... மத்திய அரசு இவ்வளவு கம்மியா இழப்பீடு அறிவிச்சுருக்காம்'' என்றார், வாத்தியார்.

''நம்ம ஆளுங்களுக்கு கட்சித் தலைமைக்கு சலாம் போடவும்... அவங்களுக்கு தேவையான வேலைகளைச் செய்றதுக்குமே நேரம் போதாது. இதுல இதையெல்லாம் வேற செய்வாங்களாக்கும்?!' என்று நக்கலாக ஏரோட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதே சில தூறல்கள் விழ, கூடையைத் தூக்க எத்தனித்தார், காய்கறி.

''அம்மா, மின்னல்... எங்க கிளம்புற? போன தடவை நான் போட்ட கணக்குக்கு விடை சொல்லிட்டு போ ஆத்தா'' என்று ஏரோட்டி தடுத்தார்.

''ஆங், மறந்துட்டேன்... அன்னிக்கு சாயங்காலமே கண்டுபிடிச்சுட்டேன்'' என்ற காய்கறி,

''அதாவது, 'ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும், கோவில் திருவிழாவுக்காக மாட்டு வண்டி கட்டிக்கிட்டு கிளம்பினாங்க. மொத்தம் மூணு வண்டி. மொத வண்டியில பொம்பளைங்கள்லாம் ஏறிக்கிட்டாங்க. ரெண்டாவது வண்டியில குழந்தைங் கள்லாம் ஏறிக்கிட்டாங்க. மூணாவது வண்டியில சாமான்களையெல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டு, ஆம்பளைங்க ஏறிக்கிட்டாங்க. ஆம்பளைங்களையும் பொம்பளைங்களையும் கூட்டினா மொத்தம் எத்தனை பேர் வருதோ... அத்தனை எண்ணிக்கையில குழந்தைங்க இருந்தாங்க. ஆம்பளைங்களையும் குழந்தைகளையும் கூட்டினா 14 பேர். பொம்பளைங்களையும் குழந்தை களையும் கூட்டினா, 19 பேர். அப்போ, மொத்தம் எத்தனை ஆம்பளை... எத்தனை பொம்பளை... எத்தனைக் குழந்தைங்க?' இதானே உன் கேள்வி.. இந்தா விடையை பிடிச்சுக்கோ...

வண்டி கட்டிட்டுப் போனவங்கள்ல 3 ஆம்பளைங்க, 11 குழந்தைங்க, 8 பொம்பளைங்க இருந்தாங்க. சரிதானே'' என்றார்.

''சரி, இந்த தடவை நான் கணக்கு போடுறேன்'' என்ற வாத்தியார்,

''ஒரு வியாபாரி 20 கிலோ அளவுக்கு எடைக்கல் வெச்சுருந்தார். அதுக்கு கம்மியா அதுல எடை போட போட முடியாது. அதனால, பக்கத்து கடைக்காரங்ககிட்டதான் இரவல் வாங்குவார். ஒரு சமயம், இவர் வெச்சிருந்த 20 கிலோ எடைக்கல் கீழே விழுந்து நாலு துண்டா போயிடுச்சு. ஒவ்வொரு துண்டோட எடையையும் குறிச்சு வெச்சுக்கிட்டவர், இந்த நாலு துண்டை மட்டுமே வெச்சுக்கிட்டு... அரை கிலோவுல இருந்து 20 கிலோ எடை வரைக்குமான எடைகளைப் போட ஆரம்பிச்சுட்டார். பக்கத்துல இரவல் வாங்கறதில்லை. அப்படினா... அந்த நாலு துண்டுல ஒவ்வொண்ணும் எவ்வளவு எடை இருக்கும்?'' என்று கேட்க... மழை வேகம் எடுக்க ஆரம்பித்து, மாநாட்டை முடித்து வைத்தது.

 மலைமலையாக மணல் கொள்ளை!

பாலாறு மற்றும் செய்யாறு நதிப் படுகைகளில் மணல் அள்ளுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள்) ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்தது.  இக்குழு சேகரித்த விவரங்களின் அடிப்படையில் தயாரித்த இடைக்கால அறிக்கை, அக்டோபர் 9-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிடப்பட்டது.

மரத்தடி மாநாடு : போலி விதைகள்...  உஷார்... உஷார்!

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் பேசும்போது, ''பாலாற்றில் பழையசீவரம், பினாயூர், புளியம்பாக்கம், பழவேரி, அங்கம்பாக்கம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொறியாளர்கள் அடங்கிய குழுவாக ஆய்வு மேற்கொண்டோம். இதுவரை 2.35 லட்சம் யூனிட் மணல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 5,575 கோடி. ஆற்றுப் படுகையில் 0.9 மீ ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும். ஆனால், இங்கு களிமண் தெரியும் அளவுக்கு 9 மீ,  12 மீ ஆழத்துக்கெல்லாம் மணல் அள்ளப்பட்டுள்ளது.  இயந்திர வாகனங்களும் விதிகளை மீறி பயன்படுத்தப்படுகின்றன. மணல் அள்ளுவதால், அப்பகுதியில் இருந்த பல கால்வாய்களைக் காணவில்லை'' என்று சொன்னார்.

இந்த விஷயம் தொடர்பாக, ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தை சாடிய உயர் நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிக்கையும் வெளியாக... அக்டோபர் 11 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்தரசேனனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

- க. பாலாஜி