புறா பாண்டி.
##~## |
''இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களைச் சொல்ல முடியுமா?''
- தி.சிபி. சர்மா, பெருவளப்பூர்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், வெள்ளித்திருப்பூர் பகுதியைச் சேர்ந்த, முன்னோடி இயற்கை விவசாயி கலைவாணி பதில் சொல்கிறார்.
''இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்ய... தேர்வு செய்த நிலத்தில் 2 டன் தொழுவுரம், 500 கிலோ மண்புழு உரம் ஆகிய வற்றைக் கொட்டி சமன்படுத்தி, இரண்டு உழவு ஓட்ட வேண்டும். பிறகு, கம்பு, சோளம், கேழ்வரகு, எள், தக்கைப்பூண்டு, சணப்பு ஆகிய விதைகளை மொத்தமாக 20 கிலோ அளவுக்கு எடுத்து விதைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 45-ம் நாள் இவை நன்கு வளர்ந்திருக்கும். அவற்றை ரோட்டோவேட்டர் மூலம், மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, மண்கட்டிகள் உடையும்படி கலப்பையால் உழுது, பார் பாத்தி அமைத்து, ஒன்றரை அடி இடைவெளியில், இரண்டிரண்டு பருத்தி விதைகளாக ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு மூன்று கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படும். விதைத்த 10-ம் நாள் துளிர்க்கத் தொடங்கும். மண்ணின் தன்மையைப் பொருத்து தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 20-ம் நாளில் களை எடுத்து, இரண்டு லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் நீரில் கலந்து தெளித்து... அன்றே 50 கிலோ கடலைப் பிண்ணாக்கைத் தூளாக்கி, செடிகளின் தூர்களில் நிரந்து வைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 40-ம் நாளில் களை எடுத்து, 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கைத் தூளாக்கி, செடிகளின் தூரில் நிரந்து வைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வேர்களைத் தாக்கி சேதப்படுத்தும் வேர்ப்புழுக்கள், தண்டுத் துளைப்பான், காய்களைத் தின்னும் எலி, அணில் போன்றவற்றை இது கட்டுப்படுத்தி விடும். 60-ம் நாளில் களை எடுக்க வேண்டும். பிறகு, களை எடுக்கத் தேவையில்லை.

இந்த சமயத்தில், செடி முழுவதும் காய்கள் காய்த்து விடும் என்பதால், காய்ப்புழுக்கள் தாக்க வாய்ப்பிருக்கிறது. ஆமணக்குக் கரைசல் கவர்ச்சிப் பொறி, ஆமணக்கு நடவு, கற்றாழை நார்க்கரைசல் போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம். ஒட்டுண்ணிகள், இனக்கவர்ச்சிப் பொறிகள் பயன்படுத்துவதன் மூலமும் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். பருத்தி விதைக்கும்போதே 20 அடி இடைவெளியில், ஆமணக்கு விதையை வயல் முழுவதும் விதைத்து விட்டால், பருத்தி, காய் பருவத்தில் இருக்கும்போது ஆமணக்குச் செடிகளும் 10 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்து விடும். காய்களைத் தாக்க வரும் பெரும்பகுதிப் புழுக்களை, ஆமணக்குச் செடிகள் ஈர்த்துக் கொள்வதால், பருத்தியில் சேதாரம் ஏற்படாது. ஏக்கருக்கு சராசரியாக 15 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். ரசாயன விவசாயத்திலும் இதே அளவு மகசூல் கிடைக்கும். ஆனால்... என்னுடைய அனுபவத்தில் பருத்தி சாகுபடியில் ரசாயனத்தைக் காட்டிலும், இயற்கை முறையில் கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது.''
தொடர்புக்கு, செல்போன்: 98654-85221.
''வாழையிலிருந்து நார் பிரித்தெடுப்பது எப்படி? அதன் பயன்பாடு என்ன?''
- எம். குமரன், திருவண்ணாமலை.
வாழை நார் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வரும் சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன் பதில் சொல்கிறார்.
''வாழை மரங்களில் தார்களை வெட்டிய பிறகு, மட்டைகளைத் தூக்கி எறிந்து விடுகிறார்கள். குப்பையாக்கப்படும் அந்த மட்டைகளை மூலப்பொருளாகக் கொண்டு, சிறந்த வருவாய் ஈட்டும் சிறுதொழிற்சாலையையே நடத்தலாம். அனைத்து ரக வாழையில் இருந்தும், நார் பிரித்தெடுக்க முடியும். வாழை நார், சணலைவிட பன்மடங்கு உறுதியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. வாழை நாரில் இருந்து துணிகளும் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர, சாக்குப் பைகள், மிதியடிகள், தரை விரிப்புகள், வீட்டு அலங்கார விரிப்புகள், அலங்காரப் பைகள், டிஷ்யூ பேப்பர், ஃபில்டர் பேப்பர், அலங்கார பேப்பர் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.

வாழை நார் உற்பத்திக்கு தார் போட்ட மரத்தை மட்டுமே, பயன்படுத்த வேண்டும். இதில் இருந்துதான் தரமான நார்கள் கிடைக்கும். அறுவடை செய்த 48 மணி நேரத்தில் நாரைப் பிரித்து விட வேண்டும். ஒரு மரத்தில் இருந்து 300 கிராம் அளவுக்கு நார் கிடைக்கும். இயந்திரம் மூலமாக, 10 மணி நேரத்தில் 100 வாழை மரங்களில் இருந்து, 15 கிலோ முதல் 20 கிலோ அளவுக்கு நாரைப் பிரித்து எடுக்கலாம். இதை, பெண்களும் எளிதில் இயக்கலாம். கையினால் பிரித்தெடுப்பதைவிட 40 சதவிகிதம் அளவுக்கு இயந்திரத்தின் மூலம் அதிகமாக நார்களைப் பிரிக்கலாம்.
பிரித்தெடுத்த நார்களை சூரிய வெளிச்சம் அல்லது நிழலில் காய வைக்க வேண்டும். நார் பிரிக்கும் இயந்திரத்தின் விலை 52 ஆயிரம் ரூபாய். முதல் தர வாழை நார், டன் 70 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரையிலும்; இரண்டாம் தரம் 60 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. நார் எடுத்த பிறகு கிடைக்கும் கழிவுகள் மூலம், இயற்கை உரம் தயாரிக்க முடியும்.'
''ஆடு வளர்ப்பு பரண் அமைக்க, மூங்கில் தக்கையைப் பயன்படுத்தலாமா?''
-ரெ. முத்தையா, திருவெறும்பூர்.
மதுரை, கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர். டாக்டர். முருகானந்தம் பதில் சொல்கிறார்.
''தற்போது, பரண் மேல் ஆடு வளர்க்கும் முறை பிரபலமாகி வருகிறது. பரண் மேல் ஆடு வளர்ப்பதின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, ஆடுகளின் கழிவுப் பொருளான, புழுக்கையை முறையாக சேகரிப்பது. மூங்கில் தக்கையை மேல்புறமாக வைத்து பரண் அமைத்தால், வழுக்கும். திருப்பி வைத்தால், குழி போல உள்ள பகுதியில் சிறுநீர், புழுக்கைகள் தேங்கி நின்றுவிடும். இதனால், சுகாதாரக் கேடு ஏற்படும். சிறந்த இயற்கை உரமான புழுக்கைகளையும், முழுமையாக சேகரிக்க முடியாது. ஆகையால், மூங்கில் தக்கையைப் பரண் அமைக்க பயன்படுத்த வேண்டாம். தென்னை, பனை மரங்களை ரீப்பர் போல் செய்து, பரண் அமைப்பதுதான் ஏற்றது. பரண் மேல் ஆடு வளர்க்கும் போது, கூடவே நாட்டுக் கோழிகளையும் வளர்க்கலாம். கோழிகள், ஆட்டுப் புழுக்கைகளில் உருவாகும் புழுக்களைத் தின்றே வளர்ந்து விடும். அதன் மூலம் சுகாதாரமும் காக்கப்படும். வருமான மும் கிடைக்கும்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 0452-2483903.
''வெனிலா பீன்ஸ் சாகுபடி செய்துள்ளோம். இதை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய முடியுமா?''
-சபாபதி, வடக்கநந்தல்.
கேரள மாநிலம், கொச்சின் நகரில் உள்ள ஸ்பைசஸ் போர்டு அமைப்பு வெளியிடும் ஸ்பைசஸ் இந்தியா இதழின் ஆசிரியர் எச். பழனிச்சாமி பதில் சொல்கிறார்.
''தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியிலுள்ள 'ஈரோவனிலே இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் வெனிலா பீன்ஸ் ஏற்றுமதி செய்து வருகிறது. ஸ்பைசஸ் போர்டு, வாசனைப்பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கும், ஏற்றுமதி செய்பவர்களுக்கும் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2011-12-ம் வருடத்துக்கான சிறந்த வெனிலா ஏற்றுமதிக்கான விருதை, ஸ்பைசஸ் போர்டு இந்த நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வெனிலா விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த பச்சை வெனிலாவை விற்க, இந்த நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். தற்போது ஒரு கிலோ வெனிலா 350 ரூபாய் என கொள் முதல் செய்யப்படுகிறது. தரத்தின் அடிப் படையில் விலை மாறுபாடு இருக்கும்''

தொடர்பு முகவரி: டாக்டர்.ஆர். மகேந்திரன், நிர்வாக இயக்குநர்,
43/3, வடக்கிப்பாளையம் ரோடு,
ஆர். பொன்னகரம், பொள்ளாச்சி-642002.
தொலைபேசி: 04259- 261693/694 செல்போன்: 97866-33633.
''தேனீ வளர்க்க விரும்புகிறோம். எங்கு பயிற்சி கொடுக்கிறார்கள்?''
-எஸ். சுந்தரம், ஈரோடு.
''கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், பூச்சியியல் துறை மாதம் தோறும் தேனீ வளர்ப்புப் பயிற்சியை நடத்தி வருகிறது. பயிற்சிக்குக் கட்டணம் உண்டு. முன்பதிவு செய்து கொள்ளவும்.''
தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003
தொலைபேசி : 0422-6611214.