மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!

ஓவியம்: ஹரன்

##~##

வெயிலும் தூறலுமாக மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருக்க... 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், 'ஏரோட்டி’ ஏகாம்பரமும் குடையோடு தோட்டத்துக்கு வந்து சேர... ''ஒரு மணி நேரத்துல முடியுற வியாபாரத்தை... மூணு மணி நேரமா இழுத்து விட்டுடுச்சு இந்த மழை'' என்ற புலம்பலோடு தானும் வந்து சேர்ந்தார் 'காய்கறி' கண்ணம்மா.

எடுத்ததுமே உஷ்ணமாகிவிட்ட ஏரோட்டி, ''ஏய், வாயைக் கழுவு... அவனவன் மழை வராதானு மாசக் கணக்கா ஏங்கிட்டிருக்கான். மழையைப் பழிக்கிறியா?'' என்று கோபம் காட்டினார்.

''யோவ், விடுய்யா... அவங்கவங்க பிழைப்பு பத்தி அவங்க அவங்களுக்கு கவலை'' என்று சமாதானப்படுத்தினார், வாத்தியார்.

''இந்தாய்யா, உங்களுக்காகத்தான் அவிச்சுக் கொண்டு வந்தேன்'' என்றபடி வாளியிலிருந்த வேர்க்கடலையை ஆளுக்குக் கொஞ்சமாக எடுத்துக் கொடுத்தார், காய்கறி.

''மழை நேரத்துக்கு சரியான நொறுக்குத் தீனி...'' என்ற வாத்தியார்,

'வடகிழக்குப் பருவமழை நல்லா பெய்யும்னு சம்பா நெல் சாகுபடியை ஆரம்பிச்சுட்டாங்க விவசாயிங்க. ஆனா, அங்க கொஞ்சம்... இங்க கொஞ்சம்னு மழை பெய்றதால, 'போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் ஆயிடுமோ’னு பயந்துக்கிட்டிருக்காங்க. 'போன வருஷம் மழை கிடைக்காது’னு வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியிருந்ததால, அரசாங்கமும் பயிர் காப்பீடு திட்டத்துக்கு வேகம் காட்டி... வேளாண் துறை, வருவாய் துறை மூலமா, விவசாயிகளோட பங்களிப்பையும் அரசாங்கமே கட்டி காப்பீடு செஞ்சாங்க. இந்த வருஷம், 'நல்லா மழை பெய்யும்’னு வானிலை ஆராய்ச்சி நிலையம் சொல்லியிருக்கறதால... அரசாங்கமும் சரி, விவசாயிகளும் சரி... அதை நம்பி காப்பீடு விஷயத்துல கோட்டை விட்டுட்டாங்க. இப்போ, மழை சரியா கிடைக்காததால, 'முதலமைச்சர் ஏதாவது செய்ய மாட்டா ரா?’னு காத்துக்கிட்டிருக்காங்க விவசாயிங்க'' என்றார்.

மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!

''அப்படியே காப்பீடு செஞ்சாலும், இழப்பீட்டுத் தொகையை ஒழுங்கா கொடுக்கறதில்லைங்கறது ரொம்ப கால குற்றச்சாட்டு... இதுக்கு என்ன பண்ண போறாங்களாம்?'' என்று கேட்டார், காய்கறி.

''பொத்தாம்பொதுவா சொல்லக் கூடாது. முழுசா கிடைக்காட்டியும் பத்துக்கு, ரெண்டு பழுதில்லாம கிடைக்கும்'' என்று பதில் தந்த வாத்தியார்,

''மழை வருமோ, வராதோனெல்லாம் ஆரூடம் பாக்காம பயிர் செய்தாலே... கண்டிப்பா காப்பீடும் பண்ணனும். இப்பவும் பாரு, பயிர்க்கடன் வாங்குனவங்களுக்குப் பிரச்னையே இல்லை. கடன் கொடுக்கும்போதே காப்பீடையும் பண்ணிட்டாங்க வங்கி அதிகாரிங்க. அதேமாதிரிதான் ஆடு, மாடுகளுக்கும்... நம்ம கைக்கு வந்ததுமே காப்பீடு பண்ணிடணும். அப்போதான் என்ன பிரச்னையால இழப்பு வந்தாலும், ஓரளவு சரிக்கட்டிக்க முடியும். இப்போ பாரு, திடீர்னு கோமாரி நோய் வந்து கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்ல ஆடு, மாடுக இறந்துட்டுருக்காம். அதுல நிறைய பேர் காப்பீடு பண்ணாததால நஷ்டத்தை சந்திச்சுட்டிருக்காங்க. காப்பீடு பண்ணவங்க... பெருசா கவலைப்படாம அடுத்த வேலையைப் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க'' என்றார்.

''கோமாரி வந்துடுச்சா...!'' என்று காய்கறி பதற...

''ஆமா கண்ணம்மா... சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகள்ல கிட்டத்தட்ட அம்பது, அறுபது மாடுகளுக்கு மேல இறந்து போச்சாம். 'நாகப்பட்டினம் மாவட்டத்துலதான் முதல்ல ஆரம்பிச்சுது. உடனடியாக அதிகாரிகள் களத்துல குதிச்சு, தடுப்பூசிகளைப் போட்டிருந்தா, இந்தளவுக்கு பாதிப்பு வந்திருக்காது’னு விவசாயிகள் சொல்றாங்க. வெயிலுக்குப் பிறகு பெய்ற மழை காரணமா பரவுற ஒரு வைரஸ் கிருமிதான் கோமாரி நோயை பரப்புது. அதனால எப்பவும் பருவம் மாறுறப்போ கவனமா டாக்டர்களை வரவழைச்சு ஆடு, மாடுகளுக்கு தடுப்பூசிகளைப் போட்டு விட்டுடணும். இந்த நோய் தண்ணி, காத்து மூலமாவே பரவிடுமாம். நோய் தாக்கின பத்து நாளைக்குப் பிறகுதான் வெளியிலயே தெரியுமாம்'' என்றார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..!

''ஆமாமா... கால் குளம்புல புண் வந்து அப்படியே வாய், நாக்குப் பகுதியிலயும் புண் வந்துடும். கவனிக்காட்டி புண்ணுல புழு வெச்சு மாடுக செத்துப் போயிடும். குளம்புல புண் வரும்போதே அதை கவனிச்சு சரியா மருந்து கொடுத்தா... காப்பாத்தறதுக்கு வாய்ப்பிருக்கு. நானெல்லாம் என்கிட்ட இருக்குற ஆடு, மாடுகளுக்கு தடுப்பூசி போட்டாச்சு தெரியும்ல'' என்ற ஏரோட்டி, அடுத்த செய்திக்குத் தாவினார்.

''கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம்பாளையம், நடையனூர், கவுண்டம்பாளையம், சேமங்கலம், நொய்யல், குளத்துப்பாளையம் ஏரியாவுல கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏக்கர்ல முள்ளுவாடி, ரோஸ் கிழங்கு, வெள்ளைக் கிழங்குனு மரவள்ளிக் கிழங்கு ரகங்கள் பலதையும் சாகுபடி பண்றாங்க. போன வருஷம் கார்த்திகை மாசம் விதைச்ச முள்ளுவாடி ரக மரவள்ளிக் கிழங்கு, இப்போ அறுவடையாகிட்டிருக்கு. இதை நாமக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்கள்ல இருக்கற கம்பெனிக்காரங்க வாங்கி ஜவ்வரிசி, கிழங்கு மாவுனு தயாரிச்சு ஏற்றுமதி பண்றாங்க. விவசாயிகள்கிட்ட கிழங்கை கொள்முதல் பண்றப்போ, கருவி மூலமா மாவுச்சத்தை அளந்து, அதனடிப்படையில விலையை நிர்ணயம் பண்ணுவாங்க. 'இதுல வெளிப்படைத் தன்மை இல்லை... நிறைய முறைகேடுகள் நடக்குது... அதனால, எங்களுக்கு குறைச்சலான தொகைதான் விலையா கிடைக்குது'னு விவசாயிகள் புலம்பறாங்க. ஆனாலும், வேற வழி இல்லாததால வியாபாரிகள் சொல்ற பணத்துக்குத்தான் விக்க வேண்டியிருக்குதாம். 'அரசாங்கம் இதுக்கு ஏதாவது வழி செஞ்சு கொடுக்கணும்’னு கோரிக்கை வைக்கறாங்க விவசாயிகள்'' என்ற ஏரோட்டி, மாட்டுக்கு தண்ணி வெச்சுட்டு வந்துடறேன்'' என்று எழுந்தார்.

''இருய்யா... பேசிட்டுருக்கும்போதே எங்க போறே?'' என்ற காய்கறி,

''போன தடவை, 'ஒரு வியாபாரி 20 கிலோ அளவுக்கு எடைக்கல் வெச்சுருந்தார். அதுக்கு கம்மியா அதுல எடை போட முடியாது. அதனால, பக்கத்துக் கடைக்காரங்ககிட்டதான் இரவல் வாங்குவார். ஒரு சமயம், இவர் வெச்சிருந்த 20 கிலோ எடைக்கல் கீழே விழுந்து நாலு துண்டா போயிடுச்சு. ஒவ்வொரு துண்டோட எடையையும் குறிச்சு வெச்சுக்கிட்டவர், இந்த நாலு துண்டை மட்டுமே வெச்சுக்கிட்டு... அரை கிலோவுல இருந்து 20 கிலோ எடை வரைக்குமான எடைகளைப் போட ஆரம்பிச்சுட்டார். பக்கத்துல இரவல் வாங்குறதில்லை. அப்படினா... ஒவ்வொரு துண்டும் எவ்வளவு எடை இருக்கும்?’னு வாத்தியார் கணக்கு போட்டார்ல. அரை கிலோ, ஒண்ணரை கிலோ, நாலரை கிலோ, பதிமூணரை கிலோ... விடை சரியா?'' என்று கேட்டார், காய்கறி.

''எப்படி கண்டுபிடிச்சே?'' என்று ஆச்சர்யம் காட்டிய வாத்தியார்,

''இந்த முறையும் நானே கணக்கு போடுறேன்'' என்று சொல்லிவிட்டு,

''என் வீட்டுக்கு முன்ன நீளவாக்குல காலி இடம் இருக்கு. அதோட முகப்புல 120 சதுரடி பரப்பளவுக்கு அரைக்கீரை விதைச்சுருக்கேன். அதுக்கடுத்ததா தண்டங்கீரை விதைச்சுருக்கேன். இதோட பரப்பளவு... மொத்த இடத்துல சரிபாதி. அடுத்ததா... வெந்தயக்கீரையையும் விதைச்சுருக்கேன். இதோட பரப்பளவு... தண்டங்கீரை விதைச்ச இட அளவுல பாதி அளவோட, அரைக்கீரை விதைச்சுருக்கற இடத்தோட பரப்பளவையும் கூட்டினா எவ்வளவு வருமோ... அந்த அளவுதான். அப்போ, ஒவ்வொரு கீரையையும் எவ்வளவு பரப்பளவுல விதைச்சுருப்பேன்?'' என்று சொல்ல... ஏரோட்டியும், காய்கறியும் மண்டையைச் சொறிய... முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு.