மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா?

புறா பாண்டி படம்: சொ.பாலசுப்ரமணியன்

##~##

 ''காபி தோட்டத்தில், இயற்கை முறையில் மிளகு சாகுபடி செய்ய முடியுமா?''

-எஸ். பிரியா, கொடைக்கானல்.

சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா?

கொடைக்கானல், தாண்டிக்குடியில் உள்ள மண்டல காபி ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி ச. சௌந்தரராஜன் பதில் சொல்கிறார்.

''காபி தோட்டங்களில் மிளகு மட்டுமல்ல, ஆரஞ்சு மற்றும் வாழையைக்கூட பயிரிட முடியும். மிளகு, நீண்ட காலம் பயன்தரக் கூடிய கொடி வகை. மலைப் பிரதேசத்தில் விளையும் மானாவாரிப்பயிர் என்றுகூட சொல்லலாம். ஆண்டுக்கு 1,000 மில்லி மீட்டர் முதல் 2 ஆயிரம் மில்லி மீட்டர் வரை மழை பொழியக்கூடிய தட்ப வெப்பநிலை இதற்கு தேவை. அதிகமான ஈரப்பதமும், நல்ல வடிகால் வசதியும் இருக்க வேண்டும்.

மிளகு ரகங்களைப் பொறுத்தவரை, கொடைக்கானல் மண்டலத்துக்கு பன்னியூர்-1, கரிமுண்டா மற்றும் கல்லுவள்ளி ஒட்டுக் கன்றுகள் ஏற்றவை. நன்றாக வளர்ந்த, நோய் தாக்காத கன்றுகளை, தென்மேற்குப் பருவமழை தொடங்கும் காலத்திலோ... அல்லது வடகிழக்குப் பருவமழை தொடங்கும் காலத்திலோ நடவு செய்யலாம். காபி தோட்டங்களில் வளர்க்கப்படும் மரங்களில் மிளகுக்கொடியை ஏற்றி விடலாம். மரத்துக்கு மரம் 5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கொன்றை மற்றும் முள்முருங்கை மரங்கள் கொடியை ஏற்றிவிடுவதற்கு ஏற்றவை.

300 கிலோ மட்கிய உரத்துடன்... தாய் மண்-10 கிலோ, சுண்ணாம்பு-2 கிலோ, பாஸ்போ-பாக்டீரியா-5 கிலோ, ப்ரண்சூரியா அருண்சியா (சாம்பல் சத்து மிகுந்த பாக்டீரியா)-5 கிலோ, கடலைப் பிண்ணாக்கு-5 கிலோ ஆகியவற்றைக் கலந்து, மழைக்கு முன்பாக ஒரு முறையும் மழைக்குப் பிறகு ஒரு முறையும் இடவேண்டும். இது, 100 மிளகுக் கொடிகளுக்கு சரியான அளவு.

மழை அதிகம் கிடைக்கும் பகுதியாக இருந்தாலும், கோடையில் நீர்ப்பாசனம் செய்தால், கூடுதல் மகசூல் எடுக்கலாம். டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை பாசனம் செய்யும்போது, 15-நாட்கள் இடைவெளியில் 5 முறை அமுதக்கரைசலையும் சேர்த்துக் கொடுத்தால்... மகசூல் அதிகரிக்கும். களை எடுக்கும்போது, நுனி வேர்களைக் காயப்படுத்தாமல் எடுக்க வேண்டும். ஒவ்வொரு மிளகின் வேர்ப் பகுதியிலும் 5 உளுந்து விதைகள், 10 சாமந்தி (மேரிகோல்டு) விதைகளை விதைத்தால், களைகள் கட்டுப்படும். மிளகுக்குத் தேவையான தழைச்சத்தை உளுந்து கொடுத்துவிடும். சாமந்திச் செடி வேர்ப்புழுவைத் தடுத்துவிடும்.

செதில் பூச்சி, மாவுப் பூச்சி மற்றும் புழுக்கள் போன்றவைத் தாக்கினால்... சீத்தாப்பழ இலை, நொச்சி இலை, பப்பாளி இலை மற்றும் ஆடாதொடா இலை ஆகியவற்றை தலா 5 கிலோ அளவுக்கு எடுத்து, மாட்டுச் சிறுநீரில் 5 நாட்கள் ஊறவைத்து, தெளிக்கலாம். இந்தக் கரைசல் 500 மில்லி எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நடவு செய்த மூன்றாம் ஆண்டு முதல் மகசூல் ஆரம்பிக்கும். ஐந்தாம் ஆண்டில் இருந்து நல்ல மகசூல் கிடைக்கும்.''

தொடர்புக்கு: காபி மண்டல ஆராய்ச்சி நிலையம்,தாண்டிக்குடி, கொடைக்கானல் வட்டம், திண்டுக்கல்-624216

செல்போன்: 91599-25320.

''சுறா மீன் வளர்க்க விரும்புகிறேன். எவ்வளவு இடவசதி தேவை. இந்த மீன்களின் சிறப்புத் தன்மை என்ன?''

- ஏ. ராஜசேகர், சென்னை.

சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா?

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மீன் வளத் தொழில்நுட்ப நிலையத்தின் இயக்குநர் முனைவர். மணிகண்டவேலு பதில் சொல்கிறார்.

''சுறா மீன் என்பது கடலில் வாழும் பெரிய மீன் இனத்தில் ஒன்று. மிகவும் வேகமாக நீந்தக்கூடியத் தன்மை கொண்டவை என்பதால், இவற்றை பண்ணைகளில் வளர்க்க முடியாது. மீன்கள் பொதுவில் அனைத்து உண்ணிகளாக இருந்தாலும், சுறா மாமிச உண்ணி. இறைச்சிதான் சுறா மீன்களின் பிரதான உணவு. எனவே, இந்த மீன்களுக்கு தீனிபோட்டு கட்டுப் படியாகாது. தற் போது, சுறா மீன், ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. ஒரு கிலோ அளவுக்கு சுறா மீனை வளர்க்க, 2 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். தவிர, சுறா மீன் கடல் நீரில் மட்டுமே வளரும். சில வெளிநாடுகளில் சுறா மீனை வளர்ப்பதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அதிலும் கூட, கடலில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வலை அமைத்து, அதில்தான் வளர்க்கிறார்கள். ஆனால், லாபகரமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், பண்ணைகளில் இவற்றை வளர்க்க முடியாது.

சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா?

சுறா பற்றிய கூடுதல் தகவல்... இவ்வகை மீன்களில் நைட்ரஜன் சத்து அதிகம். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், சுறா மீன் உணவை சாப்பிடக் கூடாது. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, பால் அதிகம் சுரக்க சுறா புட்டு சமைத்துக் கொடுக்கலாம். அதையும் அளவுக்கு மீறி கொடுக்கக் கூடாது.''

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27991566.

''வீட்டுத் தோட்டத்தில் தேனீ வளர்க்க விரும்புகிறேன். எந்த வகையான பூக்களில் அதிகளவு தேன் கிடைக்கும்?''

 -எஸ். குணசீலன், மதுரை.

வீட்டுத் தோட்டத்தில் தேனீ வளர்த்து வரும், சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார் பதில் சொல்கிறார்.

சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா?

''தேனீக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தேனை சேகரித்து வரும் என்ப தால், நகரங்களில் உள்ளவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல், தாராளமாக வளர்க்கலாம். தேனீக்களுக்கு மகரந்தம் அவசியமான ஒன்று. மகரந்தங்கள்தான் அவற்றுக்கான புரதச் சத்தைக் கொடுக்கின்றன. தேனீக்கள் தங்களுக்கு வேண்டிய புரதச் சத்தை எடுத்துக் கொள்ளும்போது, அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. இதனால், தாவரங்களில் மகசூல் அதிகரிக்கும்.

சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா?

தென்னை மரத்தில் மகரந்தம் அதிகம். எனவே, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில், தென்னை மரங்கள் முற்றிலும் இல்லை என்றால், தேனீக்களின் வளர்ச்சி சிறிதளவு பாதிக்கப்படும். அதேபோல, முருங்கையிலும் அதிக தேன் கிடைக்கும். குறிப்பாக... ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முருங்கை மரங்களில் பூக்கள் அதிகமாக பூக்கும். இந்தக் காலகட்டத்தில் தேன் நிறைய கிடைக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மாமரங்கள் பூத்துக் குலுங்கும். மே மாதம் கொன்றைப் பூக்கள் பூக்கும். தொடர்ந்து, ஐந்து மாதங்கள் இயற்கையாக பூக்கள் பூத்துக் குலுங்குவதால், தேனீக்களுக்கு தேன் சேகரிப்பதில், சிரமம் இருக்காது. அடுத்த, ஏழு மாதங்களுக்கும்கூட தேனீக்கள் ஏதாவது, ஒரு பூவில் இருந்து தேனை சேகரித்து வந்து விடும்.

சிலசமயம் தேன் கிடைக்கவில்லை என்றால், தேனீக்களுக்கு சர்க்கரையை தண்ணீரில் கலந்து உணவாகக் கொடுக்கலாம். வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெட்டி வைத்து வளர்த்தாலே... அதிலிருந்து ஆண்டுக்கு 5 கிலோ வரை தேன் கிடைக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 99418-68926

''இலுப்பை எண்ணெய், புங்கன் எண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் ஆகியவற்றை கலந்து எப்படி பூச்சிவிரட்டி தயாரிப்பது?''

- ஆர். கண்ணன், திருவண்ணாமலை.

சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா?

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சுப்பு பதில் சொல்கிறார்.

சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா?

''மூன்று எண்ணெய்களையும் சமஅளவு (லிட்டர் கணக்கில்) எடுத்து கலந்து கொள்ள வேண்டும். இதில், 50 மில்லியை 10 லிட்டர் நீரில் கலந்து பயிர்கள் மீது தெளித்தால் பலன் கிடைக்கும். என்னுடைய அனுபவத்தில், மூன்று எண்ணெய்களுடன், சம அளவு புளித்த மோரையும் கலந்து தெளித்தால், கூடுதல் பலன் கிடைக்கிறது. மோர், ஒட்டும் திரவமாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. இக்கரைசலை பூச்சித் தாக்குதல் இருக்கும்போது தெளித்தால், பூச்சிகள் கட்டுப்படும். பூச்சித் தாக்குதல் வருவதற்கு முன்பு தெளித்தால், பூச்சிகள் வராது. தயாரித்த பிறகு, ஆறு மாதங்களுக்குள் இதைப் பயன்படுத்திவிட வேண்டும். இந்தக் கரைசல் நன்றாகவே பலன் கொடுக்கும். இதை, விவசாயிகள் பலரிடமும் பிரபலப் படுத்தியவர்... இயற்கை வேளாண் நிபுணர். அரு. சோலையப்பன்!''

தொடர்புக்கு, செல்போன்: 96006-12649.

''மாட்டுப் பண்ணை வைக்க விரும்புகிறேன். கடன் எங்கு கிடைக்கும்?''

- ஜி. கருப்பசாமி, குத்தாலப்பேரி.

''இரண்டு மாடுகள் முதல் நூற்றுக்கணக்கான மாடுகள் வரையில் வைத்து வளர்க்கக் கூடிய பால் பண்ணை அமைக்க... ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடன் உதவி கிடைக்கிறது. வங்கிக் கடன் பெறுவதற்கான தகுதி இருந்தால், உரிய ஆவணங்களுடன் அருகில், உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையை அணுகவும்.''

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space) உங்கள் கேள்வி (space)  உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.