ஓவியம்: ஹரன்
##~## |
'ஏரோட்டி’ ஏகாம்பரத்துடன் காலையில் தோட்டத்துக்குக் கிளம்பி வந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, வரப்பில் அமர்ந்து நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருக்க... வயல் வேலைகளில் தீவிரமாக இருந்தார்... ஏரோட்டி.
''அப்பப்பா... ஒரு மழை பெஞ்சாலே ரோடெல்லாம் பல் இளிச்சுடுது. நடக்கவே முடியல. இப்படி கொள்ளையடிக்கற கான்ட்ராக்ட்காரனுங்கள்லாம் உருப்படவே மாட்டாய்ங்க''
- 'காய்கறி’ கண்ணம்மாவின் சாப சத்தம் கேட்டு, நிமிர்ந்தார், வாத்தியார். ஏரோட்டியும் கரையேறி வந்தமர... அன்றைய மாநாடு, ஆரம்ப மானது.
''கான்ட்ராக்ட்காரங்கள மட்டும் குத்தம் சொல்லக்கூடாதும்மா... நம்ம அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் எல்லாரும் சேர்ந்துதானே கூட்டுக்கொள்ளை அடிக்கறாய்ங்க'' என்று வாத்தியார் சொல்ல...
''அரசியல்வாதிகளோட பினாமிகள்தானய்யா கான்ட்ராக்டருங்க... அவங்க வேற, இவங்க வேறனு எப்படி பிரிச்சு பாக்கச் சொல்றீங்க?'' என சூடாகக் கேட்டார், ஏரோட்டி.
தலையாட்டி ஆமோதித்த வாத்தியார், ''அதுவும் வாஸ்தவம்தான். ஆயிரமாயிரம் அன்னா ஹஜாரே வந்தாலும், அத்தனைப் பேருக்கும் அல்வா கொடுக்கறதுல கில்லாடிங்களாச்சே... நம்ம அரசியல் வியாதிங்க'' என்றபடியே ஒரு செய்திக்குத் தாவினார்.
''போன வருஷம், மழை இல்லாம தமிழ்நாட்டுல பயங்கர வறட்சி வந்து... குறுவை, சம்பா சாகுபடியெல்லாம் சுத்தமா இல்லாம போனது நினைவிருக்குதானே! 'நிவாரணம் கொடுக்கறதுக்காக 19 ஆயிரத்து 665 கோடியே 13 லட்ச ரூபாய் வேணும்’னு மத்திய அரசாங்கத்துக்கிட்ட முதலமைச்சரம்மா கேட்டிருந்தாங்க. டெல்லியில இருந்து, ஒரு குழு வந்து சுத்திப் பாத்துட்டு போச்சு. கிட்டத்தட்ட ஆறு மாசம் கழிச்சு, இப்போதான், மத்திய அரசு தரப்புல இருந்து பணம் கொடுக்கறதுக்கு அனுமதியே கொடுத்திருக்காங்களாம். முதல்வரம்மா கேட்டது... 19,665 கோடி. ஆனா, இப்ப அனுமதிச்சுருக்கறதோ... வெறும் 645 கோடிதான். பேருக்காக பணத்தை ஒதுக்கி, கணக்கு காட்டறாங்கனு தமிழக அரசுத் தரப்புல புலம்பல் கேட்குது'' என்றார்.

''நம்ம ஆளுங்க, 'யானைப் பசிக்கு சோளப்பொரியா?'னு சொல்லுவாங்க. இது, 'தினைப்பொரி'ங்கற கதையால்ல இருக்கு'' என்று சீறிய காய்கறி, அதேவேகத்தில் கூடையிலிருந்து இரண்டு நெல்லிக்காய் மற்றும் உப்பை எடுத்து இருவருக்கும் கொடுத்துவிட்டு,
''இது, காட்டு நெல்லிக்காய். நீலகிரி மாவட்டம், கூடலூர் மலைக்காட்டுப் பகுதியிலதான் இந்த மரம் நிறைய இருக்குது. தேயிலைத் தோட்டம், வீட்டுத் தோட்டம்னு பரவலாவும் இருக்கும். ரொம்ப வருஷமா இந்த மரங்கள்ல சொல்லிக்கிற மாதிரி விளைச்சல் இல்லாம இருந்துச்சாம். இந்த வருஷம், நல்லா விளைஞ்சு... கொத்துக்கொத்தா காய் தொங்குதாம். இதுக்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கறதால... விற்பனையும் நல்லா இருக்குதாம்'' என்று நெல்லித் தகவல்களையும் சொல்லி, ஆச்சர்யப்படுத்திய காய்கறி, தானும் சுவைக்க ஆரம்பித்தார்.
தொண்டையைக் கனைத்துக் கொண்ட ஏரோட்டி, ''வெண்பட்டு நூல் உற்பத்தியை அதிகரிச்சு, தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமா மாத்துறதுக்காகத்தான் பட்டுவளர்ச்சித் துறையை இங்க உருவாக்கினாங்க. இப்ப, பல பிரச்னைகளால நிறைய களப்பணியாளர்கள், வேலையை விட்டே போயிட்டாங்களாம். நிறைய அதிகாரிங்களும் ஓய்வுபெற்று போயிட்டாங்களாம். புதுசா வேலைக்கு ஆளுங்கள எடுக்காததால... ஒரு காலத்துல துள்ளிக்கிட்டிருந்த பட்டுவளர்ச்சித் துறை, இப்ப தள்ளாடிட்டு இருக்குதாம். 'இந்தத் துறையை நம்பி தமிழ்நாட்டுல ஆயிரக்கணக்கான விவசாயிகள் மல்பெரி சாகுபடிக்கு மாறி, பட்டுப்புழு வளர்ப்புல இருக்காங்க. அவங்க நிலைமை எல்லாம் என்னாகுமோ?'னு கவலைப்படுற அதிகாரிங்க சிலர், 'இன்னும் கொஞ்ச நாள்ல பட்டுப்புழு வளர்ப்புங்கறது... தமிழ்நாட்டுல மோசமான நிலைக்குப் போயிடும் போலிருக்கு'னு புலம்பிட்டிருக்காங்களாம்'' என்றார்.
''நம்ம நாட்டுல விவசாயிகள் மேல யாருக்குத்தான் அக்கறை இருக்குது... வெளிநாட்டுல பாரு, விவசாயிகளுக்காக என்னென்ன செய்றாங்கனு?'' என்று ஆரம்பித்த வாத்தியார்,
''ஆஸ்திரேலியால இருக்குற சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மாடு மேய்க்கறதுக்காக 'ரோபோ’ தயாரிச்சுருக்காங்களாம். இதுக்கு 'ரோவர்’னு பேர் வெச்சுருக்காங்களாம். இதுக்கு நாலு கால் இருக்குமாம். காலையில் மாடுகள மேய்ச்சலுக்கு ஓட்டிட்டு போறதுல இருந்து, சாயங்காலம் திரும்ப ஓட்டிட்டு வந்து பால் கறக்குற வரைக்கும் அத்தனை வேலையையும் இதுவே செஞ்சுடுமாம்'' என்றார்.
''இந்த 'எந்திரன்' சினிமா படத்துல வருமே... அதுதானே ரோபோ!'' என்று காய்கறி சொல்ல...
''அதேதான் கண்ணம்மா... சினிமா, எந்த அளவுக்கு நம்ம ஆளுங்களோட அறிவு வளர்ச்சிக்கும் உதவியா இருக்கு!'' என்று சிரித்துக் கொண்ட வாத்தியார்,
''நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரையில பறவைகள் சரணாலயம் இருக்கு. இங்க, ஒவ்வொரு வருஷமும் அக்டோபர் தொடங்கி, மார்ச் மாசம் வரைக்கும் பூநாரை, சிரவி, கூழைக்கிடானு வகைவகையான பறவைங்க... கூட்டம்கூட்டமா வர்றது வழக்கம். ரஷ்யா மற்றும் இமயமலைப் பகுதிகள்ல இருந்து, இப்படி அதிக அளவுல வர்ற பறவைங்க, இனப்பெருக்கம் பண்ணிட்டு திரும்பும். கடந்த ரெண்டு, மூணு வருஷமா பறவைகள் வர்றது கொஞ்சம் குறைஞ்சுருந்துச்சாம். இந்த வருஷம் நல்ல சீதோஷ்ண நிலை இருக்கறதால... பறவைகள் படையெடுத்து வந்துட்டுருக்குதாம். பறவைகளை கண்ணி வெச்சு பிடிச்சு, இறைச்சிக்காக விற்பனை செய்ற கும்பலும்... சுறுசுறுப்பாயிட்டாங்களாம். வேளாங்கண்ணி மாதா கோயில் பக்கத்துல இருக்குற பரவை, ஆழியூர், நாகூர் பகுதிகள்ல இந்தப் பறவைகளோட விற்பனை கன ஜோரா நடக்குதாம். இத்தனைக்கும் கோடியக்கரை பகுதியில பறவைகள பாதுகாக்கறதுக்குனே வனத்துறை அலுவலகம் இருக்கு'' என்று வருத்தம் பொங்கினார்!
''காவல்துறை, வனத்துறைனு ஏகப்பட்ட துறைகள் இருக்கத்தான் செய்யுது. அதுல இருக்கற எல்லாருமே, தங்களோட பொறுப்பை உணர்ந்து வேலை பார்த்துட்டா... அப்புறம் திருடனுங்க பொழப்பு என்னாகறது?'' என்று சொல்லி பெரிதாகச் சிரித்த ஏரோட்டி,
''ஐயா, போன தடவை, 'என் வீட்டுக்கு முன்ன நீளவாக்குல காலி இடம் இருக்கு. அதோட முகப்புல 120 சதுரடி பரப் பளவுக்கு அரைக்கீரை விதைச்சுருக்கேன். அதுக்கடுத்ததா தண்டங்கீரை விதைச்சுருக்கேன். இதோட பரப்பளவு... மொத்த இடத்துல சரிபாதி. அடுத்ததா... வெந்தயக்கீரையையும் விதைச்சுருக்கேன். இதோட பரப்பளவு... தண்டங்கீரை விதைச்ச இட அளவுல பாதி அளவோட, அரைக்கீரை விதைச்சுருக்கற இடத்தோட பரப்பளவையும் கூட்டினா எவ்வளவு வருமோ... அந்த அளவுதான். அப்போ, ஒவ்வொரு கீரையையும் எவ்வளவு பரப்பளவுல விதைச்சுருப்பேன்?'னு கேட்டீங்க... அதுக்கு விடையைக் கண்டுபிடிக்கவே முடியல. நீங்களே உடைச்சுடுங்க...'' என்று கோரிக்கை வைத்தார், காய்கறி.
''கொஞ்சம் கஷ்டமான கணக்குத்தான்'' என்ற வாத்தியார், ''அரைக்கீரை... 120 சதுரடி; தண்டங்கீரை... 480 சதுரடி; வெந்தயக்கீரை... 360 சதுரடி'' என்று சொன்னார்.
''இந்தத் தடவை நான் கணக்கு போடுறேன்'' என்று முந்திக்கொண்ட ஏரோட்டி,
''அம்பதடி ஆழத்துல ஒரு கிணறு. அதுல இருபதடிக்கு தண்ணி இருக்கு. கிணத்துல இருக்கற ஒரு தவளை, மேல ஏறி வர நினைச்சு, ஏற ஆரம்பிக்குது. ஒரு மணி நேரத்துல மூணு அடி ஏறினா... ரெண்டடி வழுக்கிடுது. இப்படியே கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா முப்பதடி ஏறி மேல வந்துடுச்சு. இதுக்கு மொத்தம் எத்தனை மணி நேரம் ஆகியிருக்கும்?'' என்றார்.
''ஆத்தாடி... இது வாத்தியார் கணக்கைவிட மோசமா இருக்கும் போலயே...'' என்ற காய்கறி, கூடையைத் தூக்க... முடிவுக்கு வந்தது, மாநாடு.
வெங்காயத்தை மறக்கும் பெரம்பலூர்!
பெரம்பலூர்... சின்ன வெங்காயத்துக்கு புகழ் பெற்ற ஊர். இங்கிருந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என்று சர்வசாதாரணமாக வெங்காயம் ஏற்றுமதியானது ஒரு காலம். ஆனால், தற்போது வெங்காயம் என்பதையே கிட்டத்தட்ட மறந்து கொண்டிருக்கிறது பெரம்பலூர்.
இரூர் நடேசன் ''2010-11 வருஷங்கள்ல எங்க பகுதி முழுக்கவே, வெங்காயம் சாகுபடி பெருசா நடந்துச்சு. ரெண்டு லட்ச ரூபாய் வரை செலவு செய்து பயிர் பண்ணியிருந்தேன். சுத்தமாவே மழையில்லாம, நிலத்தடி நீர்மட்டம் கீழே போயிடுச்சு. ஆறு ஏக்கர் வெங்காயத்தை அப்படியே கருகவிட்டு, ஒரு ஏக்கரையாவது காப்பாத்துவோம்னு முடிவெடுத்தேன். ஒரு டேங்க் 2,000 ரூபாய் வீதம், ஏக்கருக்கு 8 டேங்க் தண்ணியைக் கொண்டு வந்து பாய்ச்சினேன். இதபோல மூணு முறை பாய்ச்சினதுக்கே... 48 ஆயிரம் ரூபாய் செலவாயிடுச்சு. வெறும் 35 மூட்டை வெங்காயம்தான் கிடைச்சுது. 85 ஆயிரம் ரூபாய்க்குதான் விற்க முடிஞ்சுது. 1 லட்சத்தி 15 ஆயிரம் ரூபாய் நஷ்டம். பக்கத்து ஊர் சுப்பையா, இப்படி நஷ்டப்பட்டு, கடன் கொடுத்தவங்களுக்கு பயந்து தற்கொலையே செய்துகிட்டார்'' என்று கண்கள் கசிந்தார் நடேசன்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், ''நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள பகுதிகளை, கருப்புப் பட்டியலில் வைத்திருப்பார்கள். பெரம்பலூர் மாவட்டம் 25 வருடமாக இந்தப் பட்டியலில் இருக்கிறது. இந்தக் காரணத்தால்... போர்வெல் போட, கிணறுகள் வெட்ட வங்கிகள் மூலமாக எந்தவிதக் கடனும் தரப்படுவதில்லை. இதனால், விவசாயிகள் பலரும் பயிர் செய்வதை தவிர்க்கின்றனர்'' என்று சொன்னார்.
மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமதுவிடம் இதைப்பற்றிக் கேட்டபோது... ''விவசாயிகளின் துயரத்தைப் போக்க, இந்த கோரிக்கையை முதல்வருக்கு அனுப்பியிருக்கிறேன். நல்ல முடிவு வரும் என்று நம்புவோம்'' என்று சொன்னார்.
- எம்.திலீபன்