மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி!

ஓவியம்: ஹரன்

##~##

வானம் கொஞ்சம் மப்பும் மந்தாரமுமாக இருக்க, உயிர்வேலிகளைக் கவாத்து செய்து கொண்டிருந்தார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். அருகில் இருந்த கல் திட்டில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்த 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி...

''கம்பத்துல பாருய்யா, போலி உர கம்பெனியைக் கண்டுபிடிச்சு சீல் வெச்சுருக்காங்க''  என்று ஆரம்பிக்கும்போதே... தலைக்கூடையுடன் 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்துவிட, அன்றைய மாநாடு அமர்க்களமாக ஆரம்பமானது.

''அதாவது, சென்னை உரக்கட்டுப்பாடு துணை இயக்குநர் சபாநடேசன் தலைமையில அதிகாரிகள் குழு, தேனி மாவட்டம், கம்பத்துல ஒரு உர கம்பெனியில சோதனை பண்ணிருக்காங்க. அதோட உரிமையாளர் குபேந்திரன், லைசென்ஸ் எடுக்காம மூணு வருஷமா கம்பெனி நடத்திட்டிருந்துருக்கார். கூடவே, வேற ஒரு கம்பெனி பேருல போலியான நுண்ணூட்டச்சத்து உரத்தைத் தயாரிச்சு, தமிழ்நாடு, கேரளானு நிறைய மாநிலங்களுக்கு சப்ளையும் செய்துட்டிருந்துருக்கார். அதைக் கண்டுபிடிச்சு கம்பெனிக்கு சீல் வெச்சுட்டாங்க. அவர்கிட்ட இருந்த பத்து லட்ச ரூபாய் மதிப்பு மூலப்பொருளையும் கைப்பத்தியிருக்காங்க'' என்றார்.

''ம்... ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல... எப்படியெல்லாம் திருட்டுத்தனம் பண்றதுனு'' என்று கைகளில் நெட்டி முறித்தபடியே சாபங்களை அள்ளிவிட்டார் காய்கறி.

''அவசரப்படாத கண்ணம்மா, அடுத்தாப்ல நான் சொல்றத கேட்டா, கையில கட்டையைத் தூக்கிட்டே கிளம்பிடுவே. விவசாயிகளுக்குத் தரவேண்டிய உரத்தைக் கடத்தினதுக்காக வேளாண்மைத்துறை அதிகாரி ஒருத்தரே இப்ப போலீஸ் லாக்-அப்ல இருக்கார்'' என்ற ஏரோட்டி, தொடர்ந்தார்.

மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி!

''கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் வட்டார விவசாய ஆபீஸ்ல விவசாயிகளுக்கு இலவசமா கொடுக்கறதுக்காக நுண்ணூட்ட உர மூட்டைகளை வெச்சுருந்தாங்க. இதை ஒரு லாரியில சிலர் கடத்தியிருக்காங்க. இதைத் தெரிஞ்சுக்கிட்ட விவசாயிகள் லாரியை மறிச்சு, போலீஸ்கிட்ட சொல்லியிருக்காங்க. ஆனா, போலீஸ் கண்டுக்கலை. காரணம்... இப்படி உர மூட்டைகளைக் கடத்தினதே வேளாண்துறை அதிகாரிங்கறதுதான். அரசாங்கத்துக்கு அரசாங்கம் விட்டுக்கொடுக்கக் கூடாது இல்லையா! ஆனா, கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க, விவசாயிங்க எல்லாம் திரண்டு சாலை மறியல் பண்ணிருக்காங்க. அதுக்குப்பிறகுதான் கீரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர்கிட்ட புகார் வாங்கி, வேளாண்மை உதவி இயக்குநர் லட்சுமணன், லாரி டிரைவர்னு கைது பண்ணிருக்கு போலீஸ்'' என்றார், ஏரோட்டி.

''நீ சொன்ன மாதிரி, இப்படிப்பட்ட பாவிகளையெல்லாம் ஜெயில்ல வெச்சு விசாரிக்கக் கூடாது. அரபு நாடு மாதிரி நடுரோட்டுல நிக்க வெச்சு, கட்டையாலதான் அடிக்கணும்'' என்று கோபாவேசம் கொண்டார், காய்கறி.

''ம்... நம்ம நாட்டுல அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. இன்னிக்கு அரெஸ்ட் ஆகிட்டு, நாளைக்கே டாடா காட்டிட்டு ஜாமீன்ல வெளியில வந்துருவாங்க. சஸ்பெண்ட் பண்ணினாலும், பாதி சம்பளத்தை அரசாங்கம் கொடுத்துடும். கொஞ்ச நாள்லயே எப்படியாவது கேஸை முடிச்சு... நிரபராதினு வெளியில வந்து, அதே பதவில உக்காந்து திரும்பவும் கொள்ளையடிக்க ஆரம்பிச்சுடுவாங்க. இதுதானே இங்க காலகாலமா வாடிக்கை'' என்று ஆதங்கப்பட்டார், வாத்தியார்.

''அதுவும் வாஸ்தவம்தான். இந்த ஈனப்பிறவிங்கள பத்தி, பேசிப் பேசி, நமக்குத்தான் தொண்டைத் தண்ணி வத்திப் போகுது'' என்ற காய்கறி, கூடையில் இருந்து அவித்த குச்சிக்கிழங்குத் துண்டுகளை எடுத்து இருவருக்கும் கொடுத்துவிட்டு, தானும் ஒரு துண்டை கடித்தபடியே...  

''கிருஷ்ணகிரி மாவட்டத்துல நிறைய இடங்கள்ல மல்லிகை சாகுபடி நடக்குது. இந்த மல்லிகைக்கு பெங்களூரு சந்தையில் நல்ல கிராக்கி இருக்குதாம். தினமும் 10 ஆயிரம் கிலோவுக்கு மேல பெங்களூரு பூ மார்க்கெட்டுக்குப் போகுதாம். வழக்கமா, டிசம்பர் மாசத்துல இருந்து, பிப்ரவரி மாசம் வரைக்கும் பனி பெய்யுறதால சரியா பூக்காதாம். ஒரு ஏக்கர்ல தினமும் பத்து கிலோ பூ கிடைக்கறதே பெருசாம். இந்த வருஷம் பனி இல்லாததால நல்ல விளைச்சலாம். தினமும் 50 கிலோ வரை கிடைக்குறதோட... விலையும் நிறைவா இருக்கறதால சம்சாரிகளுக்கு ஏகச ந்தோஷமாம்'' என்றார்.

''பரவாயில்லையே, 'கூடுதலா விளையுதே'னு சாக்கு சொல்லி விலையைக் குறைக்காம இருக்காங்களே...'' என்று சந்தோஷக் குரலில் சொன்ன வாத்தியார், ஒரு செய்திக்குத் தாவினார்.

''இந்த கோமாரி, இன்னும் ஒரு முடிவுக்கு வரல. 'கோமாரி கட்டுக்குள்ள வந்துடுச்சு’னு அமைச்சர் சொல்றார். ஆனா... ஊருக்கு ஊரு விவசாயிகள் மாடு செத்துப் போச்சுனு கதறுறது தொடருது. 'இருக்கு... ஆனா, இல்லை’ங்கற மாதிரியே சொல்லிட்டுருக்காங்க. இதுக்கிடையில எனக்குத் தெரிஞ்ச கால்நடைத்துறை அதிகாரி ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, கோமாரி வராம தடுக்கறதுக்கான சில விஷயங்களைச் சொன்னார். அதைச் சொல்றேன், கேட்டுக்கோ...'' என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டவர், தொடர்ந்தார்.

''அதாவது, கன்னு பிறந்த மூணாம் மாசம் கோமாரிக்கான முதல் தடுப்பூசி போடணும். அதுக்கு அடுத்த மாசம் ரெண்டாவது தடுப்பூசி போட்டுட்டு... அதுல இருந்து ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை தடுப்பூசி போட்டுக்கிட்டுருந்தா கோமாரி நோய் வரவே வராதாம். அதேமாதிரி, பொது குளங்கள்ல தண்ணி குடிக்க விடாம... நம்ம தொழுவத்துல சுத்தமான தண்ணியைக் கொடுத்தாலே நிறைய நோய்கள் பரவாதாம்'' என்றார், வாத்தியார்.

''இதைச் செய்றதுக்கு என்ன? வந்த பின்னாடி புலம்புறதைவிட... வரும் முன் காக்கறது நல்லதுதானே'' என்ற காய்கறி,

''அம்பதடி ஆழத்துல ஒரு கிணறு. அதுல இருபதடிக்கு தண்ணி இருக்கு. கிணத்துல இருக்கற ஒரு தவளை, மேல ஏறி வர நினைச்சு, ஏற ஆரம்பிக்குது. ஒரு மணி நேரத்துல மூணு அடி ஏறினா... ரெண்டடி வழுக்கிடுது. இப்படியே கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா முப்பதடி ஏறி மேல வந்துடுச்சு. இதுக்கு மொத்தம் எத்தனை மணி நேரம் ஆகியிருக்கும்?னு போன தடவை ஒரு கணக்கு போட்டியே... அதுக்கு விடை கண்டுபிடிச்சுட்டேன். 28 மணி நேரம்... சரிதானே'' என்றார், ஏரோட்டியிடம்.

''அது எப்படினு சொன்னாத்தானே... முழுக்க கண்டுபிடிச்ச மாதிரியாகும்'' என்று ஏரோட்டி கேள்வியைப் போட....

''அட நம்ப மாட்டியே... மூணடி ஏறி, ரெண்டு அடி வழுக்கினு... 27 மணி நேரத்துல 27 அடி ஏறிடுது. மிச்சமிருக்கிற மூணு அடியை அடுத்த ஒரு மணி நேரத்துல ஏறிடுது. அடுத்த மூணு அடிங்கறது தரைதானே. அதனால அதுக்குப் பிறகு வழுக்கறதுக்கு வழியில்ல... சரிதானே!'' என்று காய்கறி பெரிதாகச் சிரிக்க...

மூக்கில் விரல் வைத்தார் ஏரோட்டி. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ''இந்த முறை நான் ஒரு கணக்கு போடுறேன். 'ஆஜானபாகுவான ஒரு ஆள், கடைக்குப் போய் ஒரு வாழைப்பழம் ஒரு ரூபாய்னு பதினஞ்சு ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கறார். 'சாப்பிட்டு விட்டு தோலைக் கொண்டு வந்து கொடுத்தா... மூணு தோலுக்கு ஒரு பழம் தர்றேன்’னு கடைக்காரர், சொல்றார். அந்த ஆள், கடையிலேயே நின்னு பழத்தையெல்லாம் சாப்பிட்டு, தோலை கொடுத்துக் கொடுத்து பழம் வாங்குறார். அப்போ மொத்தம் எத்தனை பழம் அவர் சாப்பிட்டுருப்பார்?'' என்றார்.

''கணக்குல எனக்கு போட்டியா... விடமாட்டேன்'' என்று ஏரோட்டி சவால்விட, ''பாப்போம்...'' என்று சொல்லிக்கொண்டே காய்கறி, கூடையைத் தூக்க... முடிவுக்கு வந்தது, மாநாடு.

''ஒருங்கிணைந்தால் லாபம் உண்டு..!''

மதுரை, விவசாயக் கல்லூரி மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, டிசம்பர் 5-ம் தேதி கல்லூரி வளாகத்தில் விவசாயிகளுக்கான பெருவிழா மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியை நடத்தின. தமிழக விவசாயத்துறை முதன்மைச் செயலர் சந்தீப் சக்ஷேனா, தோட்டக்கலைத்துறை ஆணையர் சத்யபிரதா சாகு, கல்லூரி டீன் சின்னுசாமி, மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா, தொழில் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் தியாகராஜன் மற்றும் மதுரை மண்டலத் தலைவர் கதிர்காமநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.  

துவக்க விழாவில், பேசிய சந்தீப் சக்ஷேனா, ''தமிழகத்தில் விவசாயத்துக்காக ஏகப்பட்ட திட்டங்கள் உள்ளன. நடப்பாண்டில் 70 ஆயிரம் பண்ணைக்குட்டைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்ணைக்குட்டைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரைப் பீய்ச்சும் கருவி மூலம் எடுத்து விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியும். விளைபொருட்களை விற்பனைக்குக் கொண்டு செல்வதற்கான வாகனங்கள் வாங்கவும் மானியம் உண்டு. இதுபோன்ற திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விதை துவங்கி, அறுவடைக்குப் பிறகு, விற்பனை வரையுள்ள தொழில்நுட்பங்களை, விவசாயிகள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தந்தப் பகுதியில் உள்ள காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், இடைத்தரகர்களின் அடாவடிகளைக் கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள், தனியார் நிறுவன பங்களிப்புடன் இணைந்து செயல்பட்டால், விவசாயிகளுக்குக் கண்டிப்பாக லாபம் கிடைக்கும்' என்று சொன்னார்.