புறா பாண்டி படங்கள்: பா.காளிமுத்து, ஆ.முத்துக்குமார், வீ.சக்திஅருணகிரி
##~## |

''எங்கள் பகுதியில் நெய்வேலி காட்டாமணக்குச் செடிகள் நிறைய வளர்ந்து கிடக்கின்றன. இதை எப்படிப் பயன்படுத்துவது?''
- ந. கண்ணுசாமி, உப்பிலியப்பட்டி.
இயற்கை வேளாண் ஆலோசகர், அன்பு சுந்தரானந்த சுவாமிகள் பதில் சொல்கிறார்.
''நெய்வேலி காட்டாமணக்கு, அற்புதமான உரச் செடி. ஆனால், நம் விவசாயிகள் அதை இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், அதைப் பயன்படுத்தும் நுணுக்கம், பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரிவதில்லை. அந்தச் செடியின் பசுமை படர்ந்த இளமையான தண்டு, இலைகள் உடனடியாக மட்கும் தன்மை கொண்டவை. அவற்றை வெட்டியவுடன் நிலத்தில் இடலாம். வெண்மை நிறத்தில் உள்ள முற்றிய தண்டுப்பகுதி, நன்றாகக் காய்ந்த பிறகுதான் மட்கும். மட்காத நிலையில், இந்தத் தண்டுப்பகுதியை வெட்டி, மண்ணில் போட்டால், வேர் இறங்கி துளிர்விட்டு வளர ஆரம்பித்துவிடும். எனவே, காயவைத்துதான் நிலத்துக்கு உரமாகப் பயன்படுத்த வேண்டும்.

நெல் வயலுக்கு இது, அதிக தழைச்சத்தைக் கொடுத்து, நல்ல விளைச்சலைக் கொடுக்கும். நெல் வயலின் வாய்மடைப் பகுதியில் 16 கன அடி அளவுக்கு குழி எடுத்து, அது நிரம்பும் அளவுக்கு நெய்வேலி காட்டாமணக்கு இலைகளைப் போட்டு, மேலே பெரிய கல்லை வைத்துவிட வேண்டும். பாய்ச்சும் தண்ணீர் குழிக்குள் இறங்கி வரும்போது, தண்ணீர் 'காபி’ நிறத்துக்கு மாறிவிடும். இந்த நீர் பாயும் வயலில் உள்ள நெல்லை பூச்சி-நோய்கள் அண்டாது. வேறு உரங்களைப் பயன்படுத்தாமல், இதை மட்டுமே பயன்படுத்தி, அதிக விளைச்சல் எடுத்த விவசாயிகளும் உண்டு.

மானாவாரி நிலங்களில், உயிர்வேலியாகவும் கூட, இதை நடவு செய்யலாம். பருவ மழை தொடங்கும்போது, நடவு செய்துவிட்டால், கிடைக்கும் மழை நீரில் துளிர்த்துவிடும். ஆண்டுதோறும், வேலி ஓரத்தில் வளர்ந்து நிற்கும், இந்தச் செடிகளை வெட்டி, இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம்.
இந்தச் செடி வளர்ந்துள்ள நீர்நிலைகளில் மீன் உற்பத்தியும் அதிகளவில் இருக்கும். இதன் வேர்ப் பகுதிகள், மீன்கள் குஞ்சு பொரிப்பதற்கு பாதுகாப்பான இடமாக இருப்பதால், மீன் பண்ணைகளிலும் கூட இதைப் பயன்படுத்தலாம்'' தொடர்புக்கு, செல்போன்: 99446-91181.

''மாடுகளுக்குச் செயற்கைக் கருவூட்டல் (சினை ஊசி போடுவது) செய்வது போல, ஆடுகளுக்கும் செயற்கையாகக் கருவூட்ட முடியுமா?''
-பி.ஆர்.வி. வரதராஜன், பாகனேரி.
சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடை மரபியல் மற்றும் இனவிருத்தித் துறைத் தலைவர் முனைவர். சிவசெல்வம் பதில் சொல்கிறார்.

''ஆடுகள் பருவத்துக்கு வரும்போது, மற்ற ஆடுகள் மீது தாவும், பிற ஆடுகளை தன் மீது தாண்ட அனுமதிக்கும். வாலை அதிகமாக ஆட்டிக்கொண்டே வித்தியாசமாகக் கத்தும். இவைதான், பருவத்துக்கு வந்துவிட்டதற்கான அறிகுறிகள். இதை வைத்தே ஆடுகளுக்கும் செயற்கைக் கரூவூட்டல் செய்ய முடியும். வேப்பேரி மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் ஆடுகளுக்குக் கலப்பினக் கருவூட்டல் செய்யப்படுகிறது. தலைச்சேரி, போயர்... போன்ற ஆடுகளின் உறைவிந்துகளை, நாட்டு ஆடுகளுக்கு செலுத்தும்போது, தரமான, குறுகிய காலத்தில் அதிக எடை வரக்கூடிய குட்டிகள் கிடைக்கின்றன. அதனால், விவசாயிகள் நல்ல வருமானம் ஈட்ட முடியும். ஒரு உறை விந்துக்குச்சியின் விலை பத்து ரூபாய். ஆடுகளுக்கு கருவூட்டல் செய்ய விரும்பும் விவசாயிகள், அருகில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பயிற்சி மையத்தை அணுகினால், ஆலோசனை கொடுப்பார்கள்.''

''மருத்துவத் தன்மை கொண்ட உணவுக் காளான் ரகம் எது?''
-எம். மகேஸ்வரி, திண்டிவனம்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகில் சித்தர் காளான் பண்ணையை நடத்தி வரும் இன்பநாதன் பதில் சொல்கிறார்.

''நம் முன்னோர், 'உணவே மருந்து, மருந்தே உணவு’ என்றுதான் வாழ்ந்தார்கள். தமிழ்ச் சித்தர்களின் முக்கிய உணவுகளில் காளானும் ஒன்றாக இருந்திருக்கிறது. பொதுவாக மழைக் காலங்களில் காளான்கள் முளைக்கும். இவற்றில், பளீர் வெண்மை நிறம் கொண்ட காளான்கள் மட்டுமே உண்ண ஏற்றவை. மஞ்சள், சிகப்பு... என்று வண்ணங்களில் உள்ளவை, விஷத்தன்மை கொண்டவை. இவற்றைச் சாப்பிட்டால், உயிர் இழக்கும் அபாயம்கூட உண்டு. இந்தக் காரணத்தால்தான், தற்போதும்கூட, காளானை சாப்பிட பலரும் அஞ்சுகிறார்கள். என்றாலும், சமீபகாலங்களில் ஆராய்ச்சிகள் மூலம் காளான்களை வகைப்படுத்தி, உணவுக்காகப் பயன்படுத்தக் கூடியவை பற்றிய விழிப்பு உணர்வு அதிகம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், காளான்களை உண்ணும் பழக்கம் வெகுவாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
உணவுக் காளான்களில் சிப்பிக் காளான், அதிக மருத்துவ குணங்கள் கொண்டது. குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை இதை உணவாகப் பயன்படுத்தினாலே மருத்துவச் செலவை கணிசமாகக் குறைக்கலாம். மலேசியா நாட்டில் காளான் டீ, காளான் பிஸ்கட், காளான் முறுக்கு... என காளானைப் பலவிதமாகப் பயன்படுத்துகிறார்கள். நம்மிடம் இருந்து, காளான்களை வாங்கி, மதிப்புக்கூட்டி மருந்துப் பொருட்களாக மாற்றி, திரும்பவும் நம் நாட்டுக்கே ஏற்றுமதி செய்கிறார்கள். நான் உற்பத்தி செய்யும் காளானும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்புக்கு என்று ஒரு துறையையே உருவாக்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இத்துறை மூலமாக, ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி காளான் வளர்க்க பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு கட்டணம் ரூ.250. நான் அங்குதான் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஆர்வமும், திறமையும் இருந்தால், 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை கூட வருமானம் எடுக்க முடியும். முறையாகப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். காளான் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் என் பண்ணைக்கு வருகை தந்தாலும், வழிகாட்ட காத்திருக்கிறேன்.''
தொடர்புக்கு : தமிழ்நாடு, வேளாண்மைப் பல்கலைக்கழகம், காளான் துறை, தொலைபேசி: 0422-6611426. இன்பநாதன், செல்போன்: 94446-65458.

''வாழையை, ஏற்றுமதிக்கு ஏற்றவாறு தரம் பிரிப்பது எப்படி?''
- ஏ. செல்வகுமார், முசிறி.
திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி கே.என். சிவா பதில் சொல்கிறார்.
''வாழை ஏற்றுமதியில், அதிகபட்ச தரம், முதல் தரம், இரண்டாம் தரம் என மூன்று வகையான தர முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதிகபட்ச தரம் (extra class) என்றால்... காய்களில் எவ்வித சிராய்ப்புகள், குறைபாடுகள் இல்லாமல், அதிகப் பொலிவுடன் இருக்க வேண்டும். வாழைக்காய்கள், 19 சென்டி மீட்டர் அளவுக்கு மேல் நீளமாகவும், 3.5 சென்டி மீட்டருக்குக் குறையாமல் சுற்றளவையும் கொண்டிருக்க வேண்டும்.
முதல் தரம் (class I) என்ற பிரிவில், காய்களில் மிகச்சிறிய குறைபாடுகள் அனுமதிக்கப்படும். இருந்தாலும், வாழையின் பொதுவான தோற்றப்பொலிவு, தரம், ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். மொத்த குறைபாடுகள், 2 சதுர சென்டி மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது. காய்கள், 17 சென்டி மீட்டருக்கு மேல் நீளமாகவும், 3.2 சென்டி மீட்டருக்கு மேல் சுற்றளவையும் கொண்டிருக்க வேண்டும்.

அதிகபட்ச தரம் இல்லாத சிறு சிறு குறைபாடுகள் உள்ளவை, இரண்டாம் தரம் (class II) என்ற பிரிவில், ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுகின்றன. இப்பிரிவில், காய்கள், 15 சென்டி மீட்டருக்கு மேல் நீளமாகவும்,
2.9 சென்டி மீட்டருக்கு மேல் சுற்றளவையும் கொண்டிருக்க வேண்டும். மூன்று பிரிவுகளிலுமே காய்கள், அந்தந்த குறிப்பிட்ட ரகத்தின் குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டும். எளிதில் கெட்டுப்போகாத அளவில் நேர்த்தியான முறையில் பேக்கிங் செய்யப்பட்டிருக்க வேண்டும்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 0431-2618106.

'நாட்டுக் கோழி முட்டைகள் பொரிக்கும் இயந்திரம் சிறிய அளவில் எங்கு கிடைக்கும்?''
- எஸ். மெஜிலா, ஆலங்கோடு.
''நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில், சிறிய அளவில் குஞ்சு பொரிக்கும் இயந்திரம் பற்றிய விவரங்கள் கிடைக்கும்.''
தொடர்புக்கு,
தொலைபேசி: 04286-266345.