மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா?''

புறா பாண்டி படங்கள்: கே.குணசீலன், பா.காளிமுத்து

நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா?''
##~##

''இளம் பசுங்கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது சரியா?''

-எஸ். சுஜாதா, வேலூர்.

மூத்த கால்நடை மருத்துவர் காசி. பிச்சை பதில் சொல்கிறார்.

''மாட்டுக்குக் கொம்பும், மனிதனுக்குத் தலைமுடியும் கட்டாயம் என்று சொலவடை சொல்வார்கள். உடலில் ஓர் உறுப்பு உருவாகக் காரணம், அந்த உறுப்பு நமக்குத் தேவை என்பதால்தான். ஆனால், மேலை நாடுகளைப் பார்த்து நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொள்ளும் நாம், மாடு வளர்ப்பிலும் அவர்களைப் பின்பற்றத் தொடங்கி விட்டோம். அதுதான் பிரச்னையே!

குளிர்பிரதேசங்களில் உள்ள மாடுகளுக்குக் கொம்பு வளராது. ஆனால், வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள மாடுகளுக்குக் கட்டாயம் கொம்புகள் இருக்கும். கொம்பு மூலம்தான் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின்-டி சத்தை மாடுகள் சேகரிக்கின்றன. மாடுகளின் வளர்ச்சிக்கு, கொம்பு அவசியம். கொம்பு என்பது மாட்டின் உடலில் உள்ள 'ஆன்டெனா’ என்றுகூட சொல்லாம். கொம்பு உள்ள மாட்டின் பாலையும், கொம்பு இல்லாத மாட்டுப் பாலையும் சுவைத்துப் பார்த்தாலே வித்தியாசம் தெரியும். கொம்பு உள்ள மாட்டின் பாலில் உள்ள கால்சியம் சத்தை விட, கொம்பு இல்லாத மாட்டின் பாலில் கால்சியம் குறைவாகத்தான் இருக்கும். இது பல ஆய்வுகள் மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா?''

பெரியக் கொம்புகளுடன் உள்ள நமது நாட்டு மாட்டுப் பால்தான் தரமானது. கொம்பு இல்லாத, வெளிநாட்டு மாடுகளின் பாலில் சத்துக்கள் குறைவு. இந்தப் பாலை தொடர்ந்து குடிப்பதால், சர்க்கரை நோய் தாக்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்த மாட்டின் கொம்புகளை வைத்து தயாரிக்கப்படும் கொம்பு சாண உரத்தில் பயனுள்ள பல சத்துக்கள் உள்ளன. ஆகையால், இளம் கன்றுகளுக்குக் கொம்பு சுடக் கூடாது. மேலும் பால்பண்ணையில் உள்ள மாடுகளை தினமும் சிறிது நேரமாவது, சூரியஒளி படும்படி உலா வர விடுங்கள். கறவை மாடுகள் காலார நடந்து, வாயார மேய்ந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும்''  

தொடர்புக்கு, செல்போன்: 93450-09288.

''அசோலாவைத் தொட்டியில் வளர்க்க முடியுமா? நெல் வயலில் வளர்த்தால் எந்த சமயத்தில் மிதித்து விட வேண்டும்?''

-அமரேசன், குருவிமலை.

அசோலா வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 'அசோலா’ பாலகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

''அசோலா, அமுதசுரபி போல. ஒரு முறை வளர்க்கத் தொடங்கி விட்டால், பன்மடங்கு வளர்ந்து பலன் கொடுத்துக் கொண்டே இருக்கும். நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கட்டாயம் அசோலாவை வளர்க்க வேண்டும். உலகில் தோன்றிய தொன்மையான உயிரினங்களில் பெரணி வகையைச் சார்ந்த அசோலாவும் ஒன்று என்கிறார்கள், விஞ்ஞானிகள். பார்ப்பதற்கு கம்மல் போல இருப்பதால் 'கம்மல் பாசி’ என்று கிராமங்களில் சொல்கிறார்கள். இதில், வாழும் 'அனபீனா அசோலா’ என்ற பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகிக்கின்றன. இதில் சுமார் 26% தழைச்சத்து உள்ளது. ஒரு பாத்திரம் அல்லது தொட்டியில் 7 சென்டி மீட்டர் முதல் 10 சென்டி மீட்டர் உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கிக் கொள்ளவும். பாலிதீன் ஷீட் மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தியும் தரையிலேயே தொட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். சூரிய ஒளிபடும் இடத்தில் இந்தத் தொட்டி இருக்க வேண்டும். தொட்டியில் இருக்கும் தண்ணீரில் சாணம் ஒரு கிலோ, பாறைத்தூள் ஒரு கைப்பிடி, அசோலா ஒரு கைப்பிடி போட்டுக் கலக்கி விடவும். அடுத்த ஒரே வாரத்தில் பத்து மடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். மீண்டும் அசோலா வேண்டும் என்றால், சாணம் மற்றும் பாறைத்தூளைத் தொட்டியில் போட்டால் போதும். பெருக ஆரம்பித்து விடும்.

நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா?''

இந்த அசோலாவை நெல் வயலுக்கு இட்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும். வயலில் இரண்டாம் களை எடுக்கும்போது, அசோலாவை மிதித்து விட வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரம்  அசோலா. இதை பால்மாடுகளுக்குக் கொடுத்தால், அதிகபட்சம் 2 லிட்டர் வரை கூடுதல் பால் கிடைக்கும். 25% தீவனச் செலவு குறையும். கோழிகளுக்குக் கொடுத்தால் அதிக முட்டையிடும். மீன்களுக்குப் போட்டால் விரைவாக வளரும். புரதச்சத்து மிகுந்த இந்த பாசியில் வடை, போண்டா செய்து மனிதர்களும் சாப்பிடலாம்.''  

தொடர்புக்கு, செல்போன்: 97903-69233.

நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா?''

''சின்ன வெங்காய விதை உற்பத்திச் செய்வது எப்படி? விதை வெங்காயத்தை நடவு செய்வதால், என்ன நன்மை? விதை எங்கு கிடைக்கும்?''

-ரா. தர்மராஜ், நூ. சின்னையாபுரம்.

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித்துறையின் தலைவர் முனைவர். சரஸ்வதி பதில் சொல்கிறார்.

''சின்ன வெங்காயம் அண்மையில் நல்ல விலைக்கு விற்பனையானது. அதனை முன்னிட்டு, விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சின்ன வெங்காயத்தைப் பொருத்தவரை எங்கள் பல்கலைக்கழகத்தில் பல ரகங்களை வெளியிட்டுள்ளோம். தற்சமயம் கோ.ஆன்-5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த ரகத்தில் விதை உற்பத்தி செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு. எங்கள் ஆராய்ச்சியின்படி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் விதைக்கப்படும் சின்ன வெங்காயத்தில் இருந்து மட்டுமே பூக்கள் வந்து விதை உருவாகின்றன.

நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா?''

குறிப்பாக, கோயம்புத்தூர் சுற்று வட்டாரங்களில் நிலவும், தட்ப வெப்பநிலையில் மட்டுமே பூக்கள் பூத்து விதை உருவாகின்றன. விதை வெங்காயத்தை நாற்றங்கால் விட்டு, அதில் 40 நாட்கள் வளர்த்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது, 80 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். இந்த முறைக்கு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை இருந்தால் போதும். ஆனால், நேரடியாக காய் வெங்காயத்தை விதைக்கும் போது, ஏக்கருக்கு அதிகபட்சம் ஒரு டன் அளவுக்கு விதை தேவைப்படும். தற்போதைய நிலவரப்படி கிலோ 40 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் விதைப்புக் காய்க்காகவே செலவு பிடிக்கும். அதேசமயம், விதை வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 4 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே! எங்கள் துறையின் மூலம் வெங்காய விதை விற்பனை செய்கிறோம். தற்போது, இருப்பு தீர்ந்து விட்டது. முன்பதிவு செய்து வைத்தால், விதை உற்பத்தி செய்து வழங்குவோம்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 0422-6611283.

''நிலக்கடலை சாகுபடி செய்து வருகிறோம். செடிகளை அறுவடை செய்யும் இயந்திரம் உள்ளதா?''

- ஜி. செல்வராஜ், மதுராந்தகம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மை இயந்திரங்கள் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.பா. ஸ்ரீதர் பதில் சொல்கிறார்.

''மானாவாரி மற்றும் நீர்ப் பற்றாக்குறையாக உள்ள இடங்களில், ஈரம் கிடைக்கும்போதே நிலக்கடலையை அறுவடை செய்துவிட வேண்டும். தாமதம் ஏற்பட்டால், நஷ்டம் உண்டாகும். இதைக் கருத்தில் கொண்டு டிராக்டர் மூலம் இயங்கும் நிலக்கடலை அறுவடை இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம். இதன் விலை சுமார் 75 ஆயிரம் ரூபாய். நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ஐந்து ஏக்கர் வரை அறுவடை செய்யும். அறுவடை செய்த செடிகளில் உள்ள காய்களைக் கைகளால் பிரித்து எடுக்கலாம் அல்லது காய் பிரித்தெடுக் கும் கருவியைப் பயன்படுத்தலாம். இதன் விலை சுமார் 40 ஆயிரம் ரூபாய். இந்த இரண்டு இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள், எங்கள் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொண்டால் தேவையான ஆலோசனை வழங்குவோம்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 0422-2457576.

''நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகிறேன். அடிப்படைத் தகவல்கள் எங்கு கிடைக்கும்?''

- எம். மதன்குமார், தேனி.

''தேனியில் உழவர் பயிற்சி மையம் உள்ளது. இங்கு தொடர்பு கொண்டால், நாட்டுக் கோழி வளர்ப்புப் பற்றிய தகவல்களைச் சொல்வார்கள்.

தொலைபேசி: 04546-260047

மேலும், திண்டுக்கல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திலும் விவரங்கள் கிடைக்கும்''

தொலைபேசி: 0451-2460141.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை 'நீங்கள் கேட்டவை', பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் அனுப்பலாம்.