மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை!

ஓவியம்: ஹரன்

##~##

''என்னய்யா வறட்சியைப் பார்வையிட வந்த அதிகாரிங்க மாதிரி வயலைப் பாத்துட்டு நிக்கிறீங்க?''

 - 'காய்கறி’ கண்ணம்மாவின் குரல் கேட்டுத் திரும்பினர், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், 'ஏரோட்டி’ ஏகாம்பரமும்.

''திடீர்னு மோடம் போடுது. திடீர்னு வெயில் அடிக்குது... சாயங்காலம் ஆனாலே பனி வாட்டிக்கிட்டு இருக்குதுல்ல... அதைப்பத்திப் பேசிட்டு இருந்தோம்'' என்ற வாத்தியார், அங்கேயே அமர்ந்து கொள்ள, அருகிலேயே இருவரும் அமர்ந்தனர்.

ஒரு செய்தியைச் சொல்லி மாநாட்டைத் துவக்கி வைத்தார், ஏரோட்டி. ''வாழப்பாடி பகுதியில தோட்டத்துல மோட்டார் திருடுற கும்பல் கைவரிசையைக் காட்டிட்டு இருக்குதாம். மோட்டாரைத் திருடி, அதுல இருக்குற காயிலை எடுத்து வித்துடறாங்களாம். அதனால, மோட்டாரைக் கழட்ட முடியலைனாலும், கல்லைப் போட்டு உடைச்சாவது காயிலைத் திருடிட்டு போயிடறாங்களாம். போலீஸ்ல புகார் கொடுத்தும் யாரையும் கண்டுபிடிக்க முடியலையாம். ரொம்ப பீதியில இருக்குறாங்க, அந்தப் பகுதி விவசாயிகள்'' என்றார்.

மரத்தடி மாநாடு :  மொட்டையடிக்கப்பட்ட மேகமலை!

''இதேமாதிரி இன்னொரு சேதியும் கேள்விப்பட்டேன்யா. நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பக்கத்துல... வீட்டுல கட்டி வெச்சுருக்குற ஆடு, மாடுங்கள ராத்திரி நேரத்துல அவுத்துக்கிட்டு போய், ரெண்டு கிலோ மீட்டர் தூரம் தள்ளி மாம்பாளையம் கிராமத்து மரத்துல கட்டி வெச்சுட்டு போயிடறாங்களாம். அதோட விடாம, அந்த மாடுகளை அடிச்சு துன்புறுத்தி, கடிச்செல்லாம் வெச்சுடறாங்களாம். இதுபத்தி போலீஸ்ல புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். மனநிலை பாதிக்கப்பட்ட யாரோ ஒரு ஆள்தான் இப்படியெல்லாம் செய்யணும்னு முடிவு பண்ணி, தாங்களாவே அந்த ஆளை தேடிட்டு இருக்காங்களாம், விவசாயிகள்'' என்றார், வாத்தியார்.

''அடப்பாவிகளா... இப்படி கூடவா மனுஷங்க இருப்பாய்ங்க?'' என்று திகீர் குரலில் சொன்னார், காய்கறி.

''இதுக்கும் கேவலமான மனுஷ ஜென்மங்கள்லாம் இருக்குது. மோட்டார் திருடுனவனாவது வயித்துப்பாட்டுக்குத் திருடியிருப்பான். மடிப்புக் கலையாம வெள்ளையுஞ்சொள்ளையுமா அலையுற அரசியல்வாதிங்க திருடுறதையும், அதிகாரிங்க திருடுறதையும் எங்க போய் சொல்றது... இந்தா பாரு, தேனி மாவட்டம், மேகமலை பகுதியில வனத்துறை அதிகாரிங்க ரொம்ப காலமா அடிச்சுட்டிருந்தக் கொள்ளை... இப்போதான் வெளிச்சத்துக்கு வந்துருக்கு.

அங்க, 61 ஆயிரம் ஹெக்டேர் பரப்புல ஹைவேவிஸ் மலை இருக்கு. இது, இப்போ மேகமலை வன உயிரினச் சரணாலயப் பகுதிக்குள்ளாற இருக்கு. மலையில 600 ஏக்கர் அளவுக்கு பட்டா காடுகளும் இருக்குது. மலையில இருக்கற காபி எஸ்டேட்டுகளுக்குப் போய் வர்றதுக்கும், பட்டாக் காடுகள்ல வெட்டுற மரங்களை கொண்டு போறதுக்கும் அனுமதி இல்லாம காட்டை அழிச்சு பாதை போட்டுருக்காங்களாம். கிட்டத்தட்ட 8 கிலோ மீட்டருக்கு அந்தப் பாதை இருக்குதாம். அதில்லாம, இந்த பட்டாக் காட்டுகாரங்க, பக்கத்துல இருக்கற நிறைய காப்புக்காடு பகுதிகளையும் ஆக்கிரமிச்சு வெச்சுருக்காங்களாம். காப்புக்காட்டுக்குள்ள இருக்கற ஏகப்பட்ட மரங்களை நிறைய பேர் வெட்டிக் கடத்திட்டாங்களாம். கிட்டதட்ட பதினஞ்சு வருஷமா இப்படி நடந்துக்கிட்டு இருக்கற விஷயங்களுக்கு உடந்தையா இருந்திருக்காங்க அதிகாரிக. இப்போதான் உயர் அதிகாரிங்க சோதனை நடத்தி... பத்து, பதினஞ்சு வருஷமா 700 கோடி ரூபாய் மதிப்புக்கு மரங்களை கொஞ்சம் கொஞ்சமா வெட்டிக் கடத்தினதைக் கண்டுபிடிச்சுருக்காங்க. சுரேஷ்குமார்ங்கிற அதிகாரியை தற்காலிகப் பணி நீக்கம் செஞ்சுருக்காங்க. மத்த பணியாளர்கள் பத்தியும் விசாரணை நடந்துட்டு இருக்குதாம். தனியார் காடுகளை எல்லாம் உடனே சர்வே பண்ணி, ஆக்கிரமிப்புகளை மீட்கறதுக்கும் நடவடிக்கை எடுத்துருக்காங்களாம். இத்தனை வருஷ பிரச்னை... இப்பவாவது முடிவுக்கு வந்துருக்கேனு சூழல் ஆர்வலர்கள் சந்தோஷத்துல இருக்கறாங்களாம்'' என்று சொன்னவர்,

'சரி, போன தடவை நான் போட்ட கணக்குக்கு விடை தெரிஞ்சுதா...?'' என்றும் கேட்டார், வாத்தியார்.

''அதாவது, 'காய்ஞ்சு போன ஒரு குளத்துல ஊத்து உடைச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா தண்ணி பெருகுது. இன்னிக்கு ஊறுன தண்ணி மாதிரி, ரெண்டு மடங்கு தண்ணி அடுத்த நாள் ஊறுது. அதே மாதிரி ரெண்டு மடங்கு தண்ணி அடுத்த நாள் ஊறுது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஊறி... முப்பது நாள்ல குளம் நிறைஞ்சுடுது. அப்போ, பாதிக்குளம் நிறைய எத்தனை நாள் ஆகியிருக்கும்?'கிறதுதானேய்யா உன் கேள்வி. முப்பது நாள்ல முழுக்குளம் நிறைஞ்சுருக்குனா 29 நாள்ல பாதிக்குளம் நிறைஞ்சுருக்கும்... சரிதானே'' என்று தானே கணக்கை முடித்த ஏரோட்டி,

''இந்தத் தடவை நான் ஒரு கணக்கு போடுறேன். ஒரு வியாபாரி, ஒரு கூடை புளியை விலை கொடுத்து வாங்குறார். புளிக்கு நல்ல கிராக்கி இருந்ததால, விலை ஏறும்போது விக்கலாம்னு அப்படியே வெச்சுடுறார். கொஞ்சம் கொஞ்சமா விலை அதிகரிச்சு, 20 சதவிகிதம் வரைக்கும் விலை ஏறிடுச்சு. இன்னும் விலை ஏறும்னு இவர் நினைச்சிட்டுருந்தப்போ... சடார்னு

20 சதவிகிதம் விலை இறங்கிடுச்சு. இனிமே வெச்சுருந்தா, முதலுக்கே மோசமாகிடும்னு உடனே வித்துட்டார். அப்போ, அவர் லாபத்துக்கு வித்துருப்பாரா, நஷ்டத்துக்கு வித்துருப்பாரா?''என்றார்.

மனதுக்குள் கணக்கைப் போட்டபடியே காய்கறி கிளம்ப, முடிவுக்கு முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.

நிலக்கடலைக்கு விலை கிடைக்கும்...

கோயம்புத்தூர், வேளாண் பல்லைக்கழகத்தில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மைத்தில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண் புதுமைத் திட்டத்தின் உள்நாடு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம்... இந்த ஆண்டு தைப்பட்டத்தில் விதைக்கும் நிலக்கடலைக்கு கிடைக்கவிருக்கும் விலை பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளி யிட்டுள்ளது. அதில், 'திண்டிவனம் மற்றும் சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், கடந்த 13 ஆண்டுகளாக நிலவிய விலை விவரங்களை ஆய்வு செய்ததில், ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் விதைத்து மே மாதத்தில் அறுவடை செய்யும்போது... திண்டிவனம் பகுதியில் ஒரு கிலோ நிலக்கடலைப் பருப்புக்கு

45 ரூபாய் முதல் 48 ரூபாய் வரையும், சேவூர் பகுதியில் ஒரு கிலோ நிலக்கடலைக் காய்க்கு 35 ரூபாய் முதல் 37 ரூபாய் வரையும் விலை கிடைக்கும் என கணக் கிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.