முருங்கைக் கீரையை பவுடராக தயாரிக்க முடியுமா ?
புறா பாண்டி
''அஸ்வகந்தா மூலிகையை சாகுபடி செய்ய விரும்புகிறேன். அதன் விற்பனை வாய்ப்பு, சாகுபடிப் பருவம்... போன்ற விளக்கங்கள் கிடைக்குமா?''
எஸ். சிவா, புதுக்கோட்டை.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர்.ஆர். ராஜாமணி பதில் சொல்கிறார்.

##~## |
'அஸ்வகந்தா’ மூலிகையை 'அமுக்கிரா கிழங்கு’ என்றும் சொல்வார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை மத்தியப் பிரதேச மாநிலத்தில்தான் இது அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு ஏறத்தாழ 4,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக 'ஜவஹர்’ என்கிற ரகத்தைத்தான் பயிரிடுகிறார்கள். தென்னிந்தியாவில் மைசூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பயிரிடப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இது, ஒன்றரை அடி உயரம் வரை மட்டுமே வளரக்கூடிய குறுஞ்செடி. விதைத்த 150 முதல் 170 நாட்களுக்குள் அறுவடைக்குத் தயாராகி விடும். அறுவடை செய்து வேரைத் தனியாகப் பிரிக்க வேண்டும். பிரித்த வேர்களை உலர வைத்தபிறகு நான்கு ரகங்களாகப் பிரித்து விலை கொடுப்பார்கள். முதிர்ந்தக் காய்களிலிருந்து விதைகளையும் பிரித்தெடுத்து விற்பனை செய்யலாம்.

இந்த வேர் மற்றும் விதைகள் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் போன்ற நோய்களுக்கான மருந்துகளில் பயன்படுத்தப்பட்டாலும், ஆண்மைச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், இதை 'இந்திய வயாக்ரா’ என்றும் சொல்வார்கள்.
இப்பயிருக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் இருந்தாலும், சந்தையில் நிலையான விலை இல்லாததால் ஒப்பந்த முறையில் சாகுபடி செய்வதுதான் நல்லது. சராசரியாக ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் விலை கிடைத்தால்கூட லாபகரமாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டில் கார்த்திகைப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம்.''
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3. தொலைபேசி: 0422-6611365.
''புளிச்சக்காய் மரம் என்று ஒரு மரம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இது எதற்கு பயன்படுகிறது? கன்றுகள் எங்கு கிடைக்கும்?''
ஆர். குணசுந்தரி, திண்டிவனம்.
'மரம்’ கருணாநிதி பதில் சொல்கிறார்.
''கேரளாவில் வீடுகள்தோறும் இந்தப் புளிச்சக்காய் (Star fruit) மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் பரவலாக வீடுகளில் இந்த மரத்தை வளர்க்கிறார்கள். இதைப் 'புளி மாங்காய்’ என்றும் சொல்வார்கள். புளிக்குழம்புக்கு சுவை கூட்ட இதைப் பயன்படுத்துகிறார்கள். ஊறுகாய் போடவும், இந்தக் காயை உபயோகிக்கிறார்கள். காய்கறி சாலட்டில் இந்த புளிச்சக்காயைக் கலந்து சாப்பிடுகிறார்கள். கேரளாவில் புளிக்கு மாற்றாகவும் பயன்படுத்துகிறார்கள்.

ரத்த சோகையைப் போக்கவும், மூல நோயை விரட்டவும் மருந்தாக இது பயன்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் பி... போன்றவை ஏராளமாக இதில் உள்ளன. வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க, ஏற்ற மரப்பயிர் இது. களி மண் தவிர, அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. நடவு செய்த 2-ம் ஆண்டு முதல் காய்ப்புக்கு வரும்.
தனிப்பயிராக இதைச் சாகுபடி செய்வதில்லை. வீட்டுத் தோட்டங்களில் வளர்த்துத்தான் காய்களை விற்கிறார்கள். ஒரு கிலோ காய் 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. மூன்று வயதான மரத்தில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 கிலோ வரை காய்கள் கிடைக்கும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தனியார் நர்சரிகளில் ஒரு கன்று 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.''
தொடர்புக்கு, அலைபேசி: 93661-09510.
''மாடுகளுக்குச் செயற்கை முறைக் கருவூட்டல் பயிற்சி பெற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி? யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?''
ஆர். கணபதி, பரமக்குடி.
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். பழனிச்சாமி பதில் சொல்கிறார்.

''அந்தக் காலத்தில் கிராமங்கள்தோறும் பொலிக் காளைகள் இருந்ததால், மாடுகளுக்கு இனப்பெருக்கம் செய்வது எளிதாக இருந்தது. தற்போது பொலிக் காளைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருப்பதால், செயற்கை முறைக் கருவூட்டல் அவசியமாக இருக்கிறது. ஆவின் நிறுவனம், கால்நடைப் பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இதற்கானப் பயிற்சியை வழங்குகின்றன. இதற்கு, குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது நாற்பதுக்குள் இருக்க வேண்டும். மூன்று மாதங்கள் நடக்கும் இந்தப் பயிற்சியில், மாட்டின் உடற்கூறு, சினைப்பருவம், சினை வளர்ச்சி போன்ற விஷயங்களை அறிவியல் ரீதியாகச் சொல்லிக் கொடுப்பார்கள். செய்முறை பயிற்சியும் அளிப்பார்கள். பயிற்சியின் முடிவில் கருவூட்டல் கருவிகள், திரவ நைட்ரஜன் குடுவை போன்றவை வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியை முடித்தவர்கள் மாடுகளுக்கு கருவூட்டல் மட்டும் செய்யலாமே ஒழிய, எக்காரணத்தைக் கொண்டும் மருத்துவம் பார்க்கக் கூடாது. இதை உறுதிமொழியாகவே எழுதி வாங்கிக் கொள்வார்கள்.''
தொடர்புக்கு: விரிவாக்கக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை-600051. தொலைபேசி: 044\25554555.
வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை மாவட்டம். தொலைபேசி: 04577-264288.
''முருங்கைக் கீரையை பவுடராக தயாரிக்க முடியுமா... இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?''
எஸ். சோமசுந்தரம், திண்டுக்கல்.
சென்னை, நகர்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பெ. சாந்தி பதில் சொல்கிறார்.

''கீரைகளின் ராணி என்று சொல்லும் அளவுக்கு முருங்கைக் கீரைக்கு மவுசு உண்டு. அதுவும் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் முருங்கைக் கீரையை விரும்பி உண்கிறார்கள். இதற்குக் காரணம் மற்ற கீரைகளைப் போல் இதற்கு ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதில்லை. தவிர, இது மருத்துவ குணமும், சுவையும் கொண்டது. மக்களின் தேவைக்கு முருங்கைக் கீரை கிடைப்பதில்லை. அந்தக் குறையை போக்க முருங்கை பவுடரை பயன்படுத்துகிறார்கள். இதைத் தயார் செய்யத் தனியாகப் பயிற்சி தேவையில்லை. எளிதாகவே, செய்து விட முடியும். முருங்கைக் கீரையைப் பறித்து தண்ணீரில் கழுவி நிழலில் நன்றாக உலர்த்த வேண்டும். பிறகு, அரவை இயந்திரம் மூலம் பொடியாக அரைத்து, பாதுகாப்பாக சேமித்து வைக்கலாம். இதை ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். விற்பனைகூட செய்யலாம். பருப்புப் பொடி, சாம்பார் பொடி போன்றவற்றுடன் இதைக் கலந்து உபயோகிக்கலாம்.''
தொடர்புக்கு: அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். தொலைபேசி: 0422-6611268.
நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையம், சென்னை.40 தொலைபேசி: 044-26263484.
''வேளாண்மைத் துறையால் செயல்படுத்தப்படும் 'ஆத்மா’ திட்டம் பற்றிய விவரங்களுக்கு யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?''
வெ. துரைராஜ், ஈரோடு.
''சென்னை, சேப்பாக்கத்தில் வேளாண்மை இயக்ககம் உள்ளது. இந்த இயக்ககம் மூலம் 'ஆத்மா’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.''
தொடர்புக்கு: இயக்குநர், வேளாண்மை இயக்ககம், சேப்பாக்கம், சென்னை-600005. தொலைபேசி: 044-28583423.
படங்கள்: கே. குணசீலன், செ. சிவபாலன்
விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை
'நீங்கள் கேட்டவை'
பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும் PVQA (space)- உங்கள் கேள்வி (space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.