மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி!

ஓவியம்: ஹரன்

##~##

'ஏரோட்டி’ ஏகாம்பரம், மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிட்டு, தொழுவத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அருகில் உள்ள திட்டில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி.

சற்றுநேரத்தில் வந்து சேர்ந்த 'காய்கறி’ கண்ணம்மா... ''என்னய்யா நாட்டுல முக்கியமான சங்கதி?'' என்ற கேள்வியுடன் மாநாட்டைத் துவக்கி வைத்தார்!

''எல்லாம், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரோட மறைவு பத்தின சங்கதிதான் முக்கியமா இருக்கு. பொங்கல் சிறப்பிதழ்ல பசுமை விகடன் அட்டைப் படத்துல வந்த நம்மாழ்வாரோட ஓவியத்துக்கு ஏக மரியாதை. பலரும் ஃபிரேம்போட்டு மாட்டி வெச்சுருக்காங்க. தமிழகத்துல மட்டுமில்லாம, தமிழர்கள் வாழற பல நாடுகள்லயும் அவரோட மறைவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. தமிழ்நாட்டுல மூலை முடுக்குல எல்லாம் நினைவேந்தல் கூட்டங்கள் தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கு. அவரைப் பத்தின பேச்சு தினம் தினம் கேட்டுட்டே இருக்கு. சென்னையில நடந்த புத்தகக் கண்காட்சியில கூட, அவரோட புத்தகங்கள் பரபரப்பா விற்பனை ஆகியிருக்கு...'' என்று சொன்னார் வாத்தியார்!

''கடவூர், வானகம் பண்ணையிலகூட கூட்டம் நடந்துச்சாமே...'' என்று ஏரோட்டி கேட்க...

''ஆமாம்... 16-ம் தேதி நடந்த கூட்டத்துக்கு நானும் ஒரு எட்டு போயிட்டு வந்தேன். நம்மாழ்வாரை விதைச்ச இடத்துல, படையல் போட்டு கும்பிட்டாங்க. நம்மாழ்வார் ஐயாவோட மனைவி, மகள்னு உறவுக்காரங்களும் வந்திருந்தாங்க. படையல் முடிஞ்சதும் ஆரம்பமான நினைவேந்தல் கூட்டத்துலயும் தலைகாட்டினவங்க, பிறகு கிளம்பிப் போயிட்டாங்க. அதுக்குப் பிறகு, வானகத்தோட அடுத்தக்கட்டப் பணிகள் உள்பட பல விஷயங்கள, அங்க இருந்தவங்க பேசினாங்க. இந்த வானமும் பூமியும் இருக்கற வரைக்கும் நம்மாழ்வார் பேச்சு ஓயாது'' என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி!

''மறக்கக்கூடியவரா நம்மாழ்வார் ஐயா...'' என்று தானும் நெகிழ்ந்த ஏரோட்டி, அப்படியே ஒரு செய்திக்குள் புகுந்தார்.  

''வறட்சியால பசுந்தீவனத்துக்கு கடுமையான தட்டுப்பாடாகிப் போச்சு. அதனால, எல்லாரும் வைக்கோலைத்தான் மாடுகளுக்குக் கொடுத்துட்டு இருக்காங்க. இப்போ அதுக்கும் பயங்கரத் தட்டுப்பாடா இருக்குதாம். அறுவடைக்கு முன்னயே விவசாயிகள்கிட்ட வைக்கோலுக்காக அட்வான்ஸ் கொடுத்து வெச்சுடறாங்களாம். அதனால, விலை எகிறிக் கிடக்குதாம். ஒரு ஏக்கர்ல கிடைக்கிற வைக்கோல், பன்னிரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் விக்குதாம். ஒரு ஏக்கர் நெல்லுல கிடைக்கிற லாபம், வைக்கோல்லயும் கிடைக்குதாம்'' என்று சொன்னார்.

''ஆனா, இந்த காய்கறி விலைதான் இப்ப சடார்னு இறங்கு முகத்துல இருக்கு. குறிப்பா, தக்காளி அடிமாட்டு விலைக்கு வந்துடுச்சு...' என்று வருத்தம் பொங்கச் சொன்ன காய்கறி, தான் அவித்துக் கொண்டு வந்திருந்த பனங்கிழங்குகளை ஆளுக்கு இரண்டு எடுத்துக் கொடுத்தார்.

அதை ருசித்துக் கொண்டே.... ''கவலையை விடு கண்ணம்மா, விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்றதுக்காக... தோட்டக்கலைத்துறை மூலமா, விவசாயிகளை உறுப்பினர்களாக வெச்சு 'விவசாய உற்பத்தியாளர் கம்பெனி’னு எல்லா மாவட்டத்துலயும் ஆரம்பிக்கப் போறாங்களாம். விவசாயிகளே நேரடியா ஏற்றுமதி செய்றப்போ கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குதாம். தேனி மாவட்டத்துல வாழை ஏற்றுமதிக்காகவும், விழுப்புரத்துல மஞ்சள் ஏற்றுமதிக்காகவும், தூத்துக்குடியில சென்னா ஏற்றுமதிக்காகவும், ஈரோட்டுல மரவள்ளிக்கிழங்கு ஏற்றுமதிக்காவும்...னு ஒவ்வொரு மாவட்டத்துலயும் அதிகமா விளையுற விளைபொருட்களுக்காக கம்பெனி அமைப்பாங்களாம். ஒவ்வொரு கம்பெனிக்கும் 10 கோடி ரூபாய் வரை மத்திய அரசு மானியம் உண்டாம். விவசாயிகளை இணைச்சு குழு அமைச்சு, தேவையான பயிற்சிகளைக் கொடுத்து, கம்பெனி ஆரம்பிச்சு முறைப்படி பதிவு செய்யப் போறாங்களாம்'' என்று குஷி பொங்கச் சொன்னார் ஏரோட்டி!

''பரவாயில்லையே நல்லாயிருக்குதே இந்த சங்கதி'' என்று முகம் மலர்ந்தார் காய்கறி.

அவரைத் தொடர்ந்த வாத்தியார், ''சம்பா அறுவடை நடந்துக்கிட்டிருக்கு. அதனால, தஞ்சாவூர் கலெக்டர் ஆபீஸ்ல உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில நெல் கொள்முதல் பத்தின ஆய்வுக் கூட்டம் நடத்தினாங்க. அதுல கலந்துக்கிட்ட நிறைய விவசாயிகள், கொள்முதல் நிலையங்கள்ல உள்ள பிரச்னைகளை அமைச்சர்கிட்ட சொல்லியிருக்காங்க. அதில்லாம கொள்முதல் மையங்கள்ல லஞ்சம் தலைவிரிச்சாடுறதைப் பத்தியும் சொல்லிருக்காங்க. உடனே, தலைமைச் செயலகத்துல இருக்குற தன்னோட அலுவலக போன் நம்பர் (044-25671129), சென்னையில இருக்குற உணவுத்துறை நிர்வாக இயக்குநர் அலுவலகப் புகார் பிரிவு செல்போன் நம்பர் (94451-90660, 94451-90661, 94451-90662) எல்லாத்தையும் கூட்டத்துலேயே மைக்ல சொல்லி... விவசாயிகளுக்கு ஏதாவது பிரச்னைன்னா உடனே பேச சொல்லிருக்கார். அதுல வர்ற புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு போட்டிருக்காராம்'' என்றார்.

''நான் ஒரு சேதி சொல்லணும்'' என்ற கண்ணம்மா,

''ஆனைமலை பக்கத்துல சமத்தூர்னு ஒரு ஊர் இருக்கு. இங்க, கொஞ்ச பேர் ஒண்ணா சேர்ந்து கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வெத்திலைக் கொடிக்கால் போட்டிருக்காங்க. அதுக்கு விடிகாலையில தண்ணி பாய்ச்சுறதுக்காக ஆறுமுகம், மயில்சாமினு ரெண்டு பேர் போயிருக்காங்க. அப்போ, மோட்டார் ரூம்ல ஃபியூஸ் போயிருந்துருக்கு போல. ஆறுமுகம் ஃபியூஸ் போடலாம்னு கேரியரை கழட்டும்போது கரன்ட் பாய்ஞ்சுருக்கு. அவரைக் காப்பாத்தப் போன மயில்சாமிக்கும் ஷாக் அடிக்க... ரெண்டு பேருமே இறந்து போயிட்டாங்களாம்'' என்று வருத்தம் பொங்கச் சொன்னார்.

சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது.

பிறகு, தொண்டையைக் கனைத்த ஏரோட்டி, ''போன முறை போட்ட புதிருக்கு விடை கிடைச்சுதா இல்லையா?'' என்று கேட்டார்.

''ஒரு வியாபாரி, ஒரு கூடை புளியை விலை கொடுத்து வாங்குறார். புளிக்கு நல்ல கிராக்கி இருந்ததால, விலை ஏறும்போது விக்கலாம்னு அப்படியே வெச்சுடறார். கொஞ்சம் கொஞ்சமா விலை அதிகரிச்சு,

20 சதவிகிதம் வரைக்கும் விலை ஏறிடுச்சு. இன்னும் விலை ஏறும்னு இவர் நினைச்சிட்டுருந்தப்போ... சடார்னு 20 சதவிகிதம் விலை இறங்கிடுச்சு. இனிமே வெச்சுருந்தா, முதலுக்கே மோசமாகிடும்னு உடனே வித்துட்டார். அப்போ, அவர் லாபத்துக்கு வித்துருப்பாரா, நஷ்டத்துக்கு வித்துருப்பாராங்கறதுதானே கேள்வி'' என்ற காய்கறி,

''நஷ்டத்துக்குதான் வித்துருப்பார்'' என்றார்.

''எப்படினு சொல்லு?'' என்று கேட்டார் ஏரோட்டி.

''பதிலை எனக்குப் பதிலா வாத்தியார் சொல்வார்'' என்று சொல்லிவிட்டு கபகபவென சிரித்தார்.

''அதானே பார்த்தேன்... கூட்டுக்களவானி வேலையா...?'' என்று செல்லக் கோபம் கொண்டார் ஏரோட்டி.

''அட, நான்தான்யா அந்தப் புள்ளைக்கு சொன்னேன்'' என்ற வாத்தியார்,

''100 ரூபாய்க்கு புளி வாங்குறார்னு வெச்சுக்கோ. 20% விலை ஏறுனா 120 ரூபாய். அதுல 20% விலை இறங்கினா... இறங்கின விலை 24 ரூபாய். அதை 120 ரூபாய்ல கழிச்சா 96 ரூபாய். அதனால கண்டிப்பா நஷ்டத்துக்குதான் வித்துருப்பார்'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே... கூடையைத் தூக்கி தலையில் வைத்தார் காய்கறி. முடிவுக்கு வந்தது அன்றைய மாநாடு!

ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில்... இந்தியாவில் முதல் முறையாக, விவசாயிகளே மஞ்சளை விற்பனை செய்யும் வகையில், 'விவசாயிகள் ஒருங்கிணைந்த மஞ்சள் வர்த்தக மேலாண்மை’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பொறுப்பில், இந்த வர்த்தகம் செயல்பட உள்ளது.

இப்புதிய வர்த்தக முறை ஜனவரி 26-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இங்கு தேசிய அளவில் அல்லது உலகளவில் விற்பனை செய்ய வசதியாக 'இ- டிரேடிங்’ முறையில் வர்த்தகம் நடக்க இருக்கிறது. இதற்காக தனி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. கல், மண் நீக்கி, சுத்தம் செய்து கொண்டு வரும் மஞ்சளுக்கு, கூடுதல் விலை கிடைக்கும் வகையில், தர நிர்ணயம் செய்து விற்பனை செய்வதற்கான ஏற்படு களும் உண்டு. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 2,000 டன் அளவு மஞ்சளை இருப்பு வைக்க குடோன் வசதியும் உண்டு.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் இங்கு ஏலம் நடக்கும். விவசாயிகள் எஸ்.எம்.எஸ் மூலம் விலையைத் தெரிந்து கொண்டு ஒப்புதல் கொடுத்தால், உடனே விற்பனை செய்து பணத்தை வழங்கி விடுவார்கள்.