மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...?’

நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...?’

##~##

''நல்ல விளைச்சல் தரும் நிலக்கடலை ரகம் எது?. அந்த ரக விதை எங்கு கிடைக்கும்?''

- செல்வராசு, நாமக்கல்.

திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர், வைத்தியநாதன் பதில் சொல்கிறார்.

''நிலக்கடலை சாகுபடியில், நல்ல விளைச்சல் எடுக்க வேண்டுமானால், அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற ரகங்களைத் தேர்வு செய்து விதைக்க வேண்டும். நாமக்கல் பகுதியைப் பொறுத்தவரை திண்டிவனம்-13, திண்டிவனம்-7 விருத்தாசலம்-2, விருத்தாசலம்-3 ஆகிய ரகங்கள் ஏற்றவை. திண்டிவனம்-13 ரகத்தில் சிகப்பு வண்ணப் பருப்பு இருக்கும். இது அதிக எண்ணெய் சத்து கொண்டது. திண்டிவனம்-7 ரகம், விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இது, மானாவாரி, இறவை என இரண்டு சாகுபடிக்கும் ஏற்றது. விருத்தாசலம்-2 ரகம், பெரிய பருப்பு கொண்டது. ஏற்றுமதிக்கு ஏற்ற ரகமிது. விருத்தாசலம்-6 ரகம், சிறிய பருப்பாக இருந்தாலும், எண்ணெய் சத்து அதிகம் கொண்டது. சாப்பிடவும் ஏற்றது. எங்கள் ஆராய்ச்சி நிலையத்திலும், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்திலும் இந்த ரக விதைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறலாம்.''

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம், விழுப்புரம்-604025.  தொலைபேசி: 04147-250293.

பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், விருத்தாசலம், கடலூர்-606001. தொலைபேசி: 04143-238231.

நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...?’

''எங்கள் வீட்டில் இருக்கும் பலா மரம், 20 வயதாகியும் சரியாகக் காய்ப்பதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிமரம் முழுவதையும் கொத்தி விட்டபோது, அந்த ஆண்டு காய்த்தது. அதன் பிறகு காய்க்கவில்லை. என்ன காரணம்?''

-கே.வி. ரங்கராஜன், ராஜபாளையம்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித்துறை விஞ்ஞானி ஜி. ராஜலிங்கம் பதில் சொல்கிறார்.

''நீண்டகாலமாக காய்ப்புத்தன்மை இல்லாமல் உள்ள மா, பலா, முருங்கை... போன்ற மரங்களில், ஆணி அடிப்பது, கிளைகளை வெட்டி விடுவது, மரத்தைக் குலுக்கி விடுவது... போன்ற செயல்களைச் செய்வதுண்டு. இப்படி மரத்துக்குச் செயற்கையாக ஓர் அழுத்தம் கொடுக்கப்படும்போது, சில மரங்கள் காய்த்துக் குலுங்குவதும் உண்டு. ஆனால், இந்தச் செயல்முறைக்கு விஞ்ஞான ரீதியான பின்புலம் கிடையாது. ஆகையால், காய்ப்புத் தன்மை இல்லாத மரத்தை நேரில் பார்த்த பிறகுதான் முழுமையான ஆலோசனை வழங்க முடியும். காரணம், சில மரங்கள் சத்துப்பற்றாக்குறை, போதிய சூரிய ஒளி கிடைக்காமை... போன்ற காரணங்களால்கூட பலன் கொடுக்காமல் இருக்கலாம். எனவே, உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர், வேளாண் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். அங்குள்ள தோட்டக்கலைத்துறை விஞ்ஞானி, உங்கள் மரத்தைப் பார்த்து விட்டு உரிய தொழில்நுட்ப ஆலோசனையை வழங்குவார்.''

நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...?’

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர்- 626125. தொலைபேசி: 04563-260736.

''இயற்கை விளைபொருள் அங்காடி நடத்தி வருகிறோம். எங்கள் அங்காடியில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, 'நான் ஓவன்’ பைகளைப் பயன்படுத்துமாறு நண்பர்கள் சொல்கிறார்கள். இது சரியா? 'நான் ஓவன்' பைகள் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்படுகின்றனவா?''

- எஸ். சுகுணா, வேலூர்.

சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், 'ரீ ஸ்டோர்’ இயற்கை அங்காடி நடத்தி வருபவருமான அனந்து பதில் சொல்கிறார்.

''பிளாஸ்டிக் பைகளைவிட, இந்த நான் ஓவன் பைகள் ஆபத்தானவை. இது தெரியாததால்தான், திருமணத் தாம்பூலம்கூட இப்பைகளில் வழங்கப்படுகின்றன. இந்த வகை பைகள், பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் இறக்குமதி ஆகின்றன. பெட்ரோலிய மூலப்பொருட்களில் இருந்துதான், நான் ஓவன் பைகள் தயாரிக்கிறார்கள். இவை, மட்கும் தன்மை கொண்டவை என்று சொல்லப்பட்டாலும், மட்கும் தன்மை அவற்றுக்கு கிடையாது என்பதுதான் உண்மை. இவற்றைத் தயாரிக்க, ஏராளமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், இப்பைகளில் அடைக்கப்படும் உணவுப் பொருட்களில் ரசாயன எச்சங்கள் கலக்க வாய்ப்புகள் உண்டு.

நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...?’

தற்போது, 'மட்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள்' என்ற பெயரில் வரும் பைகளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. உண்மையில் இவை, இலை-தழை போல மட்கி மண்ணோடு மண்ணாக மாறுவதில்லை. கண்ணுக்குத் தெரியாத அளவில் நுண்துகள்களாக உதிர்கின்றன. இத்துகள்களால், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்தியாவில் முழுமையான இயற்கை விவசாயம் நடைபெற்று வரும் சிக்கிம் மாநிலத்தில், இந்த இரண்டு வகை பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. அங்கு கடைகளில் காகிதப் பைகளில்தான் பொருட்களைக் கொடுக்கிறார்கள். எடை அதிகம் கொண்ட பொருட்கள் என்றால், துணிப் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆகையால், எங்கள் இயற்கை அங்காடியிலும் காகிதம் மற்றும் துணிப் பைகளையே பயன்படுத்தி வருகிறோம். எண்ணெய் வகைகளுக்கு வாடிக்கையாளர்களையே பாத்திரங்களை எடுத்து வரச் சொல்கிறோம். நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம். பிளாஸ்டிக் தீமையை எடுத்துச் சொன்னால், நிச்சயம் வாடிக்கையாளர்கள் பாத்திரங்களுடன் வருவார்கள்.''

தொடர்புக்கு, செல்போன்: 94441-66779.

நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...?’

''நாட்டுக் கோழிகளுக்கு கரையான் நல்ல தீவனம் என்று கேள்விப்பட்டேன். கரையானை உற்பத்தி செய்ய, பானை, சாக்கு... போன்றவற்றைப் போட்டு வைத்தேன். ஆனால், கரையான் உற்பத்தியாகவில்லை. என்ன காரணம்? தவிர, மண்புழுக்களை கோழிகளுக்குக் கொடுக்கலாமா?''

-பி.கே.எம். துரை, கரையான்சாவடி, சென்னை.

கால்நடைப் பராமரிப்புத் துறையின் முன்னாள் மருத்துவ மேற்பார்வையாளர், 'தஞ்சை’ ரா. ரத்தினகிரி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...?’

''கரையான் அற்புதமான புரதச்சத்து நிறைந்த உணவு. கோழிகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், நல்ல வளர்ச்சி இருக்கும். காய்ந்த சாணம், பழைய சாக்கு, வைக்கோல் போன்றவற்றை நிலத்தில் போட்டு தண்ணீர் தெளித்து, அதன் மீது ஐந்து லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையைக் கவிழ்க்கவும். காலையும், மாலையும் பானையை எடுத்து தண்ணீர் தெளிக்கவும். இப்படிச் செய்து வந்தால் 4 முதல் 7 நட்களில், கரையான்கள் வந்துவிடும். பூச்சிக்கொல்லி நனைக்கப்பட்ட சாக்கு, பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வைக்கோல்... போன்றவற்றைப் பயன்படுத்தினால் கரையான் உற்பத்தி ஆகாது.

மண்புழுக்கள், கோழிகளுக்குச் சிறந்த உணவு. தாராளமாகக் கோழிகளுக்குக் கொடுக்கலாம்.  நெத்திலிக் கருவாட்டுத் தூளையும் தீவனத்தோடு கலந்து கொடுக்க லாம்.  இதைக் கொடுப்பதால், முட்டை உற்பத்தி அதிகரிக்கும். மீன்இறைச்சிக் கழிவுகளையும்கூட கோழிகளுக்குக் கொடுக்கலாம்''

தொடர்புக்கு, செல்போன்: 94424-01336.

நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...?’