ஓவியம்: ஹரன்
##~## |
பக்கத்து வயலில் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்த செவ்வந்திப்பூவைப் பார்த்துக் கொண்டிருந்தனர், 'ஏரோட்டி’ ஏகாம்பரமும், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும்!
சற்றுநேரத்தில் வந்து சேர்ந்த 'காய்கறி’ கண்ணம்மா, சட்டென்று பாய்ந்து சில பூக்களைப் பறித்து, தன் கொண்டையில் செருகிக்கொண்டு வரப்பில் அமர... அங்கேயே ஆரம்பமானது அன்றைய மாநாடு!
''இந்த தக்காளி பாருங்க... ரெண்டு மூணு மாசத்துக்கு முந்தி, கிலோ 50 ரூபாய்னு, வெங்காயத்துக்குப் போட்டியா வித்துட்டு இருந்துச்சு. இப்போ திடீர்னு கிலோ ஒரு ரூபாய்க்கும் கீழ போயிடுச்சே'' என்று வருத்தக் குரலில் சொன்னார், காய்கறி.
''வழக்கமா இந்த சீசன்ல ஓரளவுக்கு விலை கிடைக்கும். ஆனா, ஆந்திராவுல இருந்து தக்காளி அதிகமா வர ஆரம்பிச்சுட்டதாலதான் விலை குறைஞ்சு போச்சு. ஆனா... வெளிமார்க்கெட், உழவர் சந்தை எல்லாத்துலயும் கிலோ ஆறு ரூபாய்னுதான் வித்துக்கிட்டிருக்காங்க. அதேசமயம், 'விலை கட்டுப்படியாகல'னு சொல்லி ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி பக்கமெல்லாம் தக்காளியைப் பறிக்காமலே விட்டுட்டாங்களாம்'' என்றார், ஏரோட்டி.
''தக்காளியோட விலை இப்படி திடீர்னு தரையில இறங்கறது சகஜம். நாமதான் சுதாரிச்சு அப்படிப்பட்ட காய்கறியையெல்லாம் தவிர்த்து, விலை கிடைக்குற காய்கறிகளா பார்த்து... சீஸன் பார்த்து விதைக்கணும். இப்போ பாரு, பாவக்காய், கோவைக்காய், அவரைக்காய், கீரைகள் மாதிரியான பயிருக்கெல்லாம், இந்த மாதிரி விலை அதளபாதாளத்துக்குப் போறதில்லை. எல்லா காய்கறிகளையும் கலந்து வெள்ளாமை வெச்சா... இப்படி நஷ்டத்தைத் தவிர்க்கலாம்ல. எப்பவுமே ஆனைமலை பகுதியில தக்காளி சாகுபடி அதிகளவுல நடக்கும். இப்படி விலை அடிக்கடி இறங்கிப் போறதால, இப்போ தக்காளியைக் குறைச்சுக்கிட்டு கீரை, கொத்தமல்லினு மாறிட்டு இருக்காங்க. இப்போதைக்கு கொத்தமல்லிதான் சக்கைப்போடு போடுது. ஒரு ஏக்கர்ல 40 நாள்ல 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் எடுக்கறாங்க. விவசாயத்தையும் ஏனோதானோனு செய்யாம, புத்திசாலித்தனமா செஞ்சா... புலம்ப வேண்டியிருக்காதே'' என்று அறிவுரை சொன்னார், வாத்தியார்.
''வாஸ்தவம் வாத்தியாரய்யா...'' என்று ஆமோதித்த காய்கறி, ''ஒரு சேதி கேள்விப்பட்டீங்களா?'' என்றார்.
''சொன்னாத்தானே தெரியும்!'' என்று காய்கறியைக் கலாய்த்தார், ஏரோட்டி.

சூடாகிவிட்ட காய்கறி, ''ம்க்கும்... உனக்கெல்லாம் சொன்னாலும் தெரியாதே. இருந்தாலும் கேட்டுக்கோ... திருக்கோவிலூர் பக்கத்துல சிறுபனையூர்னு ஒரு ஊரு இருக்கு. இந்த ஊர் விவசாயி ஆறுமுகம், கொஞ்சம் கொஞ்சமா ஒண்ணரை லட்ச ரூபாய் பணம் சேத்து வெச்சுருக்கார். மனைவியோட நகை 7 சவரன் வீட்டுல இருந்துருக்கு. நகை, பணம் எல்லாத்தையும் திருடனுங்ககிட்ட இருந்து காப்பாத்துறதுக் காக, அறுவடை செஞ்சு வீட்டுல வெச்சுருந்த கம்பு மூட்டைக்குள்ள பத்திரமா ஒளிச்சு வெச்சுருந்துருக்கார். இதை மறந்துட்டு... போன வாரத்துல கம்பு மூட்டையைக் கொண்டு போய் மார்க்கெட் கமிட்டியில வித்துட்டார். வீட்டுக்கு வந்தப்பறம் மனைவி கேட்டப்பதான் நகை விஷயமே ஞாபகத்துக்கு வந்துருக்கு. பதறியடிச்சுட்டு போலீஸுக்கு போயிருக்கார். அதுக்குள்ள மொத்தமா கம்பைக் கொட்டி கலக்கும்போது நகையைப் பாத்த தொழிலாளிங்க... பத்திரமா எடுத்து போலீஸ்கிட்ட ஒப்படைச் சுட்டாங்களாம். பணமும், நகையும் பழுதில்லாம ஆறுமுகத்துக்கு கிடைச் சுடுச்சாம். மார்க்கெட்ல ஒரு வியாபாரி இந்தக் கதையைச் சொல்லிட்டிருந்தார்'' என்றார்.
''அட இப்படியும் கூட நல்லவங்க இருக்கத்தான் செய்றாங்க. அவருக்கும் நேரம் நல்லா இருந்துருக்கு. அந்த நகையை சம்பாதிக்க என்ன கஷ்டப்பட்டிருப்பார்'' என்று இரக்கம் காட்டினார், ஏரோட்டி.
கூடையிலிருந்து நாட்டுக் கொய்யாப் பழங்களை எடுத்து நறுக்கி... உப்பு, மிளகாய்த்தூள் தூவி ஆளுக்கு இரண்டாகக் கொடுத்தார், காய்கறி.
அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார், வாத்தியார். ''ஒற்றை நாற்று நெல் நடவு முறைக்கு புதுசு புதுசா பேர் வெச்சு கடைசியா... 'திருந்திய நெல் சாகுபடி’னு பேர் வெச்சாங்க. இந்த முறையில சாகுபடி செஞ்சா, விதைநெல் கம்மியாத்தான் தேவைப்படும். மகசூல் அதிகம் கிடைக்கும்னு இடுபொருள், ஊக்கத்தொகை எல்லாம் கொடுத்து பிரபலப்படுத்திக்கிட்டு, இருக்குது அரசாங் கம். அதனால, நிறைய பேர் இப்போ இந்த முறைக்கு மாறியிருக்காங்க. ஆனா, மானியத்தைதான் ஒழுங்கா கொடுக்கற தில்லையாம். நெல்லிக்குப்பம் சுத்து வட்டாரப் பகுதியில போன சம்பா பருவத் துல 5 ஆயிரத்து 800 ஹெக்டேர் நிலத்தை ஒற்றை நெல் சாகுபடிக்கு மாத்தி மானியம் கொடுக்கறதுக்குத் தேர்வு செஞ்சுருக்காங்க. அறுவடை முடிஞ்சும் இடுபொருள்கூட கொடுக்கலையாம். ஊக்கத்தொகையும் கைக்கு வராததால, செம மண்டைக் காய்ச்சல்ல இருக்காங்களாம், விவசாயிகள்'' என்றார்.

''ஆசை காட்டி மோசம் செஞ்ச கதைம்பாங்களே... அது இதுதானா?'' என்று சீறலாகக் கேட்டார், காய்கறி.
''அரசாங்கத் திட்டங்கள் பெரும்பாலும் இப்படி விவசாயிகளுக்கு பலன் இல்லாம... 'வெல்லம் திங்கறவன் ஒருத்தன்... விரல் சூப்பறவன்' ஒருத்தன்கிற கதையாத்தான் போயிட்டிருக்கு. ஸ்ரீபெரும்புதூர் பக்கத்துல பட்டுமுடையார்குப்பம்னு ஒரு ஊர் இருக்கு. இந்த ஊர்ல இருக்குற விவசாயி பாலு, தன்னோட நிலத்துல பண்ணைக்குட்டை அமைக்கலாம்னு வேளாண்மை ஆபீஸ்ல விண்ணப்பிச்சுருக்கார். ஒண்ணரை லட்ச ரூபாய் ஒதுக்கி, நூறு நாள் வேலைத் திட்டம் மூலமா பண்ணைக்குட்டை வெட்டிக்க சொல்லிருக்காங்க. போன வருஷம் ஜூலை மாசம் 40 பேர் வந்து வேலையை ஆரம்பிச்சுருக்காங்க. ஆறு மாசம் ஆகியும்... அதாவது இந்த ஜனவரி மாசம் வரைக்கும் வேலையை முடிக்கவே இல்லையாம். ஒண்ணரை அடி ஆழத்துக்கு மட்டும் குழிபறிச்சதோட சரி. ஆபீஸ்ல போய் கேட்டா... 'அங்க போ, இங்க போ’னு அலைக்கழிச்சுருக்காங்க. நொந்து போன பாலு, சொந்தப் பணத்துல குட்டையை வெட்டி முடிச்சுருக்கார்.இவருக்காக அரசாங்கம் ஒதுக்குன தொகை, வேலையே செய்யாத ஆட்களுக்குக் கூலியா போயிடுச்சாம். அந்தக் காசை என்கிட்ட கொடுத் திருந்தா லாவது பரவாயில்லைனு புலம்பறார், பாலு. இந்தக் கதைதான், நிறைய இடங்கள்ல நடந்துக்கிட்டு இருக்கு. அதிகாரிகளும், அரசியல்வாதிங்களும் கூட்டுப்போட்டு 'வேலை' பார்க்கறதால... அப்பாவி விவசாயிங் களால ஒண்ணும் செய்ய முடியறதில்லை'' என்றார் கலங்கிப் போனவராக!
''நாடு பூரா இந்தக் கதைதானே... நீ கலங்கி என்ன ஆகப்போகுது?'' என்று ஆறுதல் படுத்திய வாத்தியார்,
''இன்னொரு முக்கியமான விஷயம்யா.... ஆடு, மாடுகள் மேல ஒட்டியிருக்கற ஒட்டுண்ணிகளைப் பத்தி ஆராய்ச்சி பண்ணிருக்காங்க. அதுல, ஒட்டுண்ணிகளால கால்நடைகள் இறந்துபோறதுக்கு கூட வாய்ப்பிருக்குனு கண்டுபிடிச்சுருக்காங்க. ஆடு, மாடுகளைக் கொட்டகையில கட்டி வெக்கிறப்போ, தீவனம், சாணி, குப்பை எல்லாம் அங்கேயே கிடக்கறதால, பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் பரவி... ஒட்டுண்ணிகள் பெருகுதாம். இந்த ஒட்டுண்ணிகள் தோல்ல பசை மாதிரி ஒட்டிக்கிட்டு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும். ஒரு ஒட்டுண்ணி ஒரு நாளைக்கு அரை மில்லி ரத்தத்தை உறிஞ்சும். கூடவே, உயிரையே பறிக்குற நோய் கிருமி களையும் ரத்தத்துல பரப்பிடுமாம். அதனால, எப்பவும் மாடுகளையும், கொட்டகையையும் சுத்தமா வெச்சுக்கணும். புதுசா வேற பண்ணைகள்ல இருந்தோ, சந்தையில இருந்தோ ஆடு, மாடுகளை வாங்கிட்டு வர்றப்போ ஒட்டுண்ணி நீக்கம், குடற்புழு நீக்கம் எல்லாத்தையும் முறையா பண்ணனும்னு கால்நடை மருத்துவருங்க சொல்றாங்க.. அதனால கவனமா இருந்துக் கப்பா'' என்று அக்கறையுடன் சொன்னார்.
''அடடா, பேச்சு ஜோர்ல மாட்டை மறந்துட்டேனே... போய், தீவனம் வெக்கணும்'' என்று ஏரோட்டி எழுந்தோட, அத்துடன் முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.