மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது?'

படங்கள்: கா.முரளி

புறா பாண்டி

'' 'ஸ்டார் ஃபுரூட்’ பழ மரம் சமவெளியில் வளருமா? கன்றுகள் எங்கு கிடைக்கும்?''

-எம்.ஆர். உஷா, பெருங்களத்தூர்.

##~##

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் வேளாண் வளர்ச்சி அலுவலர் வி. வீரப்பன் பதில் சொல்கிறார்.

''இப்பழத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம் நட்சத்திர வடிவில் இருப்பதால், 'ஸ்டார் ஃபுரூட்’ என்று பெயர் பெற்றுள்ளது. தமிழில், 'தமாரத்தம் பழம்’ என்றும் மலாய் மொழியில் 'பெலிம்பிங் மானிஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ஜாவா, போர்னியோ தீவுகள். அங்கிருந்து பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை வரை பரவியிருக்கிறது. பொதுவாக, இந்த மரம் சமவெளியில் வளராது என்றுதான் நினைப்போம். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலூகாவைச் சேர்ந்த தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் தல விருட்சம், ஸ்டார் ஃபுரூட் மரம்தான் என்பது ஆச்சர்யமான உண்மை. இம்மரம், பெரும்பாலும்

30 அடி உயரம் மட்டுமே வளரும். அதிக கிளைகளுடன் பசுமையுடன் இருக்கும். இம்மரத்தில் கருநீல நிறத்தில் கொத்துக்கொத்தாகப் பூக்கள் பூக்கும். காய் பசுமை நிறத்துடன் இருக்கும். பழம், மெழுகு பூசியது போன்று வழவழப்புடன் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஒரு பழம், 2 அங்குலம் முதல் 3 அங்குலம் நீளம் வரை இருக்கும். தமிழகத்தில் குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகளில் மலைத்தோட்ட பழ மரமாக சாகுபடி செய்யப்படுகிறது.

நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது?'

கேரளாவில், மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரல்களில் பயிரிடப்படுகிறது. நோய் நொடியின்றி வளர்ந்து, பூச்சித் தாக்குதல் இல்லாமல், வருடம் முழுவதும் பூத்து, காய்க்கக்கூடியது, இம்மரம். இதை, வரப்புப்பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். இதற்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. பழத்தை நேரடியாகவும், சாறாகவும் உண்ணலாம். இதன் சாறு, இனிப்பு கலந்த புளிப்பாக இருப்பதால், சிறந்த தாகமடக்கியாகச் செயல்படுகிறது. 'வைட்டமின்-சி’ பற்றாக்குறையால் ஏற்படும் 'ஸ்கர்வி’ என்ற நோய்க்கும், ஈறு வீக்கத்துக்கும் நல்ல மருந்து. தவிர, 'ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள்’ நிறைந்துள்ளதால், புற்றுநோய்க்கான எதிர்ப்புச் சக்தியையும் கொண்டுள்ளது. இம்மரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. கன்றுகள், கொடைக்கானல், கல்லார், பர்லியார் ஆகிய தோட்டக்கலைத்துறைப் பண்ணைகளில் கிடைக்கும்.''

தொடர்புக்கு, செல்போன்: 80128-92818.

''பண்ணை வீட்டில் வசித்து வருகிறோம். வயல்வெளியில் உள்ள பாம்புகள் அடிக்கடி வீட்டுக்குள் வந்து விடுகின்றன. இதை எப்படி தவிர்ப்பது?''

-எஸ். கணேசன், திருவாரூர். நாகப்பட்டினம் மாவட்டம், தேவூர் சித்த மருத்துவர் க.கோ.மணிவாசகம் பதில் சொல் கிறார்.

''உயிர்ச்சூழலில் ஒவ்வொரு உயிரும், ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்பதை மறந்து விட வேண்டாம். வயலில் உள்ள பாம்புகளை முற்றாக அழித்து விட்டால், எலிகள் பெருகி விடும். அதே நேரத்தில், பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த சித்தர்கள் பல வழிமுறைகளைச் சொல்லி யுள்ளனர். அவற்றைப் பார்ப்போம்.

'அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை
கரையாத கட்டியிவை கானார் வரையிற்
றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு

கருடன் கிழங்கதனைக் கண்டு’ என்று சித்தர் பாடல் சொல்கிறது. அதாவது, கடும் விஷத்தையுடைய பாம்புகளே கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும் என்பதுதான் பொருள். பாம்புகளை விரட்டி அடிப்பதில் ஆகாச கருடன் கிழங்குக்கு தனி இடம் உண்டு. கருடன் வருமிடத்தில் விஷ ஜந்துக்கள் அணுகாது. இக்கிழங்கு இருக்கும் இடத்துக்கும் விஷ ஜந்துக்கள் வருவதில்லை என்பதால்தான் இப்பெயர் வந்துள்ளது.

நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது?'

இக்கிழங்கை, 'கட்டிப் போட்டால் குட்டி போடும்’ என்பார்கள். ஆகாச கருடன் கிழங்கை வீட்டில் கட்டி தொங்கவிட்டால், ஈரக் காற்றை உறிஞ்சியே வளர்ந்து விடும். தோட்டத்திலும் இக்கிழங்கை வளர்க்கலாம். மலைவேம்பு மரத்தின் வாசனை, பாம்பு களை விரட்டுவதால், பாம்பு கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், இம்மரங்களை வளர்த்தும் கட்டுப்படுத்தலாம். வீட்டுக்குள், நவச்சாரத்தை நசுக்கி, நான்கு திசைகளிலும் வைத்தால், வீட்டுக்குள் பாம்புகள் வராது. வீட்டுத் தோட்டத்தில் சித்தரத்தைச் செடிகளை வளர்க்கலாம். வசம்பைப் பொடியாக்கி தூவி விட்டாலும் பாம்புகள் வருவதில்லை. இந்த நுட்பங் கள் அனைத்தும், பாம்பு களைக் கொல்வதில்லை. விரட்டும் தன்மையை மட்டுமே கொண்டவை.''

தொடர்புக்கு, செல்போன்: 98435-92039

''பால் பண்ணை வைத்துள்ளோம். பாக்கெட்டில் பாலை அடைத்து விற்பனை செய்ய விரும்புகிறோம். பாக்கெட் பால் எவ்வளவு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்?''

-எம். கண்ணன், ஓமலூர்.

நாமக்கல் கால்நடை அறிவியல் மருத்துவக் கல்லூரி, பால் வளத்துறை பேராசிரியர் டாக்டர். இளங்கோ பதில் சொல்கிறார்.

''பாலில் உள்ள சில வகையான பாக்டீரியாக்கள் குளிர் நிலையில் மட்டுமே இறக்கும். சில பாக்டீரியாக்கள் அதிக வெப்பநிலையில்தான் இறக்கும். அதனால்தான், பால் பதப்படுத்தும் பண்ணைகளில் கொள்முதல் செய்யப்பட்ட பாலை, முதலில் வெப்பமூட்டி பிறகு குளிரூட்டு கிறார்கள். வெப்பமூட்டி, குளிரூட்டுவதுதான் 'பதப் படுத்துதல்’ எனப்படுகிறது. கறந்த பாலை இரண்டரை மணி நேரத்துக்குள் பண்ணைக்குக் கொண்டு வந்து 4 டிகிரி வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். தொடர்ந்து 71.5 டிகிரி வெப்பநிலையில் 15 விநாடிகள் சூடுபடுத்தி, பிறகு 4 டிகிரி வெப்பநிலையில் குளிர்விக்க வேண்டும்.

நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது?'

இப்படிச் செய்யும்போது பாலில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப் படும். இப்படி பதப்படுத்தப்பட்ட பாலை, குளிர்சாதனப் பெட்டியில் மூன்று நாட்கள் வரை மட்டுமே பாதுகாக்க முடியும். கறந்த பாலை பதப்படுத்தாமல், ஒரு நாள் மட்டுமேதான் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பராமரிக்க முடியும். தற்போது, ஏசெப்டிக் பேக்கேஜிங் (Aseptic packaging) என்ற முறையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாக்கெட்களில் அடைத்து, அறை வெப்ப நிலையிலேயே பராமரிக்கும் முறையும் உண்டு. இந்த முறையில், அதிகபட்சம் 90 நாட்கள் வரை மட்டும்தான் கெட்டுப் போகாமல் வைக்க முடியும். பாக்கெட்டை பிரித்து விட்டால், முழுவதையும் உடனே உபயோகப்படுத்தி விட வேண்டும்.''

நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது?'
நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது?'