மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

66 லட்சம் மரக்கன்னுகளும்... அவதிப்படும் வனத்துறையும்!ஓவியம்: ஹரன்

மாசி மாதம் மாரியம்மன் திருவிழா, கோலாகலமாகத் தொடங்கி விட்டதை அடுத்து... கணக்கு-வழக்குகளைப் பார்ப்பதற்காக வாத்தியார் வெள்ளைச்சாமி தினமும் கோயிலுக்கு வந்துவிட, 'ஏரோட்டி’ ஏகாம்பரமும் காய்கறி கண்ணம்மாவும் அங்கேயே வந்து விட்டனர். தரிசனம் முடித்து, மூவரும் கோயில் குளக்கரையில் அமர, அங்கேயே ஆரம்பமானது அன்றைய மாநாடு.

''ஒரு வழியாக தேர்தல் தேதியை அறிவிச்சுட்டாங்க. இனி, ஏப்ரல் வரைக்கும் ஊரே ஜேஜேனு இருக்கும்ல...'' என்றார், காய்கறி.

''ஆனா, பரீட்சை நேரமா இருக்குது.. இந்தக் கட்சிக்காரங்க போடுற மீட்டிங் சத்தத்துல பிள்ளைங்கள்லாம் எப்படி படிக்கப் போகுதுங்களோ தெரியல'' என்று கவலையை வெளிப்படுத்திய வாத்தியார்,

''நாம சொல்லியா இவங்க திருந்தப் போறாய்ங்க.... அவங்கவங்களுக்கா தெரியணும். அந்தக் காலத்துலதான் வசதி, வாய்ப்புகள் இல்ல, மைக்கை கட்டிக்கிட்டு அழுதாங்க. இப்பதான், நூத்துக்கணக்குல பேப்பருங்க, வாரப் புத்தகம், மாசப்புத்தகம், டி.வி. சேனல்கள், இன்டர்நெட், செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர்னு ஏகப்பட்ட சங்கதிங்க வந்தாச்சு. இதுங்க மூலமாவே பிரசாரம் பண்ணித் தொலைக் கலாம். இப்படி ஊரு ஊரா வந்து நொம்பலம் கொடுக்காம இருக்கலாம். சரிசரி... நம்ம கதைக்கு வருவோம்' என்று மாநாட்டைத் தொடங்க...

மரத்தடி மாநாடு

''நான் ஒரு விஷயத்தைச் சொல்லணும்யா, அப்பறம் மறந்துடுவேன்'' என்று பரபரத்த காய்கறி,

''திருப்பூர் மாவட்டம், களத்துக்காடு கிராமத்துல, சிங்கராஜ்னு ஒரு விவசாயி இருக்கார். இவர், குஜராத்ல இருந்து 'பாலி ஹைபிரீட்-1’ங்கிற வீரிய ரக கத்திரி விதையை வரவழைச்சு, 30 விதைகளை விதைச்சுருக்கார். முப்பதும் நல்லா முளைச்சு, காய்ச்சுட்டு இருக்கு. ஒவ்வொரு காயும் தேங்காய் கணக்கா கால் கிலோல இருந்து அரை கிலோ அளவுக்கு இருக்கு. மொத்தமும் விதை இல்லாம, சதையாத்தான் இருக்கு. ஒரு பறிப்புக்கு 20 கிலோ வரைக்கும் மொத்தமா காய் கிடைக்குது. செடியில் முள் இருக்குறதால ஆடு, மாடுகளும் மேயுறதில்லை. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா இதுக்கு எந்த ரசாயன உரமும் போடலை. அடியுரமா தொழுவுரம் மட்டும்தான் போட்டிருக்கார். இதைப் பத்தி மார்க்கெட்ல பரபரப்பா பேசிக்கிட்டாங்க'' என்றவர், ஆளுக்கு இரண்டு நெல்லிக்காய்களையும், கொஞ்சம் தூள் உப்பையும் எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக் கொண்டே பேசிய வாத்தியார், ''கோயம்புத்தூர் பக்கத்துல இருக்கற சூலூர்ல 40 பேர் சேர்ந்து 'வாய்ஸ் ஆஃப் வாட்டர் அசோசியேஷன்’னு புது அமைப்பைத் துவக்கியிருக்காங்க. இந்தப் பகுதி அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ந்து போராடறவங்கதான் இவங்கள்லாம். இப்போ, கோயம்புத்தூர் மாநகராட்சி, நொய்யல் ஆறுல மாசுபட்ட தண்ணீரை சுத்திகரிச்சு, குடிநீரா மாத்துறதுக்கு திட்டம் போட்டிருக்கு. 'எங்க பாசனத்துக்கான தண்ணியைக் கெடுத்த நீங்களே... சுத்திகரிக்கிற தண்ணியை எங்க பகுதியில இருக்குற குளம், குட்டைகள்ல நிரப்பி விவசாயத்துக்கு உதவணும்’னு கோரிக்கை வெச்சு போராட்டத்தை நடத்திட்டு இருக்காங்க'' என்றார்.

''போராட்ட பொழப்புதானே விவசாயிங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கு... யாரை நோக'' என்று அங்கலாய்த்துக் கொண்டார் காய்கறி.

மரத்தடி மாநாடு

''மாட்டுக்கு சினை ஊசி போடுறதுக்காக ஆஸ்பத்திரிக்கு ஓட்டிட்டு போயிருந்தேன். அங்க இருந்த டாக்டர், முக்கியமான ஒரு சேதியைச் சொன்னார்'' என்று பீடிகை போட்ட ஏரோட்டி,

''கோயம்புத்தூர் மாவட்டத்துல கால்நடைகள் பத்தி ஒரு ஆய்வு செஞ்சுருக்காங்க. அதுல 70 சதவிகித கால்நடைகளுக்கு, குடற்புழு பாதிப்பு இருக்கறதைக் கண்டுபிடிச்சுருக்காங்க. குறிப்பா, மேய்ச்சலுக்கு போற ஆடு, மாடுகளுக்குத்தான் பாதிப்பு அதிகம் இருக்குதாம். மேய்ச்சலுக்குப் போறப்போ, கலங்கிப்போன குளம், குட்டைகள்ல தண்ணியைக் குடிக்கறப்போ, புழுக்களோட முட்டைகள் வயித்துக்குள்ள போய், குடற்புழுக்கள் பெருகிடுமாம். அதனால, செரிமானம் பாதிச்சு... தீவனம் ஒழுங்கா எடுக்காம ஆடு, மாடுக மெலிஞ்சுடுமாம். சத்துக்குறைபாடு, ரத்தசோகை நோய்களும் வர வாய்ப்பு இருக்குதாம். இப்படி இருக்குற ஆடு, மாடுகளோட சாணத்தைப் பரிசோதனை செஞ்சு, தேவையான மருந்தைக் கொடுத்து சீக்கிரமா குணப்படுத்திட முடியுமாம். மூணு மாசத்துக்கு ஒரு தடவை கட்டாயம் குடற்புழு நீக்கம் செய்யணுமாம்'' என்றார்.

அவரைத் தொடர்ந்த வாத்தியார், ''முதலமைச்சர் அம்மா பிறந்த நாளுக்காக இந்த வருஷம் 'மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டம்’னு 66 லட்சம் மரக்கன்னு நட உத்தரவு போட்டிருந்தாங்கள்ல. அது வனத்துறைக்குள்ள பெரிய சலசலப்பை உண்டாக்கிட்டுருக்கு. 'ஊருக்குள்ள மரம் நடுறதுக்கு இடமே இல்லை. அப்படியே இருந்தாலும், நடறதுக்கு ஆள் இல்லை. மீறி நட்டாலும், மழை இல்லாதப்ப நடறது வீண் வேலை'னு வனத்துறை ஊழியருங்க, தங்களோட உயரதிகாரிகள்கிட்ட சொல்லியிருக்காங்க. கூடவே, '6.60 லட்சம் மரக்கன்றுகள்தான் நடமுடியும். அதை மட்டும் செய்யலாம்'னு யோசனையும் சொல்லியிருக்காங்க. ஆனா, உயர்அதிகாரி களும், அமைச்சர்களும் இதை ஏத்துக்கலையாம். 66 லட்சம் கன்னுல பாதியை காட்டுக்குள்ள நடுங்கனு சொல்லிட் டாங்களாம். 'நாற்றங்கால் அமைக்க, தண்ணி வசதியோட இடம், போதுமான பணம், ஆயிரம்  கன்னுகளுக்கு ஒரு காவலர்னு வசதிகளைச் செஞ்சு கொடுத்தாத்தான் நடமுடியும்னு வனத்துறை ஊழியர்கள் சொல்லிட்டிருக்காங்களாம். இன்னும் இந்த பிரச்னை முடிவுக்கு வரலை'' என்று கவலையோடு சொன்னார்.

''பெருமைக்கு மாவு இடிச்ச கதையால்ல இருக்கு. இத்தனை லட்சம் கன்னுகள நடணும்கிறவங்க, அதுக்கான காலத்துல நடும்போதுதானே அதெல்லாம் பொழைச்சு வரும். அதோட தேவைப்பட்ட வசதிகளையும் செய்யணுமா வேணாமா...?'' என்று கேள்விகளாக எழுப்பிய காய்கறி,

''வாடிக்கை வீட்டுக்கு காய் கொடுக்கணும். நான் கிளம்புறேன்'' என்று எழுந்து கூடை யுடன் நடக்க ஆரம்பிக்க... அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

எல்லாமே மனிதனுக்கு மட்டும்தானா?

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், பிப்ரவரி 26-ம் தேதி, புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் மற்றும் 'இனி இந்தியா எந்தக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ.கே. குமரகுரு தலைமையேற்க... திரைப்பட இயக்குனர் மற்றும் வானகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ம. செந்தமிழன், பாரம்பரிய உணவியல் நிபுணர் மாறன். ஜி, மருந்தில்லா மருத்துவ தொடுசிகிச்சை நிபுணர் அருள்ஒளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மரத்தடி மாநாடு

இயற்கை உணவுகள், தற்போது நாம் உண்ணும் உணவில் கலந்துள்ள நச்சுக்கள், மனித வாழ்வில் அன்றாடம் பயன்படும் பொருட்களில் கலந்துள்ள நச்சுக்கள் பற்றியெல்லாம் ஆராயப்பட்ட இக்ருத்தரங்கில், ''பூமியில் படைக்கப்பட்ட அனைத்தும் மனிதனுக்கே சொந்தம் என்கிற ஆதிக்க உணர்வோடு இருப்பதால்தான், இந்த பூமியின் அழிவுக்கு மனிதனே காரணமாக இருக்கிறான். சக உயிர்களையும் தனக்கு இணையாக நினைக்கும்போதுதான் இந்த பேரழிவைத் தடுக்க முடியும்'' என்று அழுத்தமாகப் பதிவு செய்தார் செந்தமிழன்.

அருள்ஒலி தன் பேச்சில், ''உணவு உட்கொள்ளும் முறைகளில் அதிகளவில் மாற்றம் தேவைப் படுகிறது. பசிக்கும்போது மட்டுமே உண்ண வேண்டும். இப்போதுள்ள ஆங்கில மருத்துவ முறைகள், மக்களிடம் உயிர் பயத்தை ஏற்படுத்தி, அதன் வாயிலாக மருத்துவ வியாபாரத்தை நடத்துகின்றன. தற்காலத்தில் மருந்துதான் முதல் நஞ்சாக இருக்கிறது. நஞ்சு இல்லாத, பாரம்பரிய மருத்துவ முறைகள் இங்கு நிறையவே இருக்கின்றன. இப்போதைய மனித வாழ்க்கை, இயற்கைக்கு எதிரானதாக செயல்படுகிறது. இதையெல்லாம் இளைய தலைமுறைதான் மாற்ற வேண்டும்'' என்றார்.

- ஜி.பிரபு