மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன?''

நீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன?''

''விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் எங்களுக்கு நிலம் உள்ளது. அதில் மரப்பயிர்களை சாகுபடி செய்ய விரும்புகிறோம். வனத்துறை மூலம் உதவி கிடைக்குமா?''

 - எஸ். சுந்தரம், தியாகதுருகம்.  உளுந்தூர்பேட்டை வனவியல் விரிவாக்கக் கோட்டத்தின்,
வன விரிவாக்க அலுவலர், கே. ஏழுமலை பதில் சொல்கிறார்.

''தமிழக வனத்துறை, ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 'தமிழ்நாடு தீவிர காடு வளர்ப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம்’ என்கிற பெயரில், 2011-12-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2018-19-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 25 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து... அந்த கிராமங்களில், மரம் வளர்ப்பில் ஈடுபாடு உள்ள சிறு, குறு விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் போன்றோருக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். மா, பலா, பாதாம், புங்கன், வேம்பு, பூவரசு, தேக்கு, குமிழ், மலைவேம்பு மற்றும் பெருமரம் ஆகிய மரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குகிறோம்.

நீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன?''

ஏக்கருக்கு 200 மரங்கள் வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக பன்னிரண்டரை ஏக்கர் நிலத்துக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும். நடவு செய்து, மூன்று ஆண்டுகள் கழித்து, ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஊக்கத்தொகையும் ஒரு முறை கொடுக்கப் படும். இத்திட்டத்தில் பயன்பெற, நிலத்துக்கான சிட்டா, அடங்கலுடன் விண்ணப்பித்தால், பரிசீலனை செய்து மரக்கன்றுகளை வழங்குவோம். இத்திட்டம் செயல்படுத்தப்படாத கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மரம் வளர்ப்பு சம்பந்தமான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். மரப்பயிர்கள் பலன் கொடுக்க, ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பலன் பார்க்கும் வகையில் ஊடுபயிராக, பசுந்தீவனங்கள், மூலிகைகள் போன்றவற்றை சாகுபடி செய்யவும் ஆலோசனை வழங்குகிறோம்.''

தொடர்புக்கு, செல்போன்: 94432-82335.

''நாட்டுக்கோழி வகைளில் ஒன்றான கருங்கோழி இறைச்சி, மூலிகைத் தன்மை கொண்டது. இதைச் சாப்பிட்டால், ஆஸ்துமா குணமாகும், சிறுநீரகப் பிரச்னை தீரும், பெண்களுக்கு ஏற்படும் கடுமையான வயிற்று வலி நீங்கும்... என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். இது உண்மையா?''

-செங்கோட்டுவேல், ஈரோடு. சித்த மருத்துவர் கு. சிவராமன் பதில் சொல்கிறார்.

''கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஹார்மோன் ஊசி போட்டு வளர்த்த கோழியாக இருக்கக் கூடாது. 'கோழிக்கறி, பொதுவாக உடல் சூட்டை அதிகரித்து நோயைப் போக்கும் தன்மை கொண்டது. சாதாரண சளி, இருமல், மந்தம் ஆகியவற்றை போக்குவதுடன், உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது’ என்கிறது, சித்த மருத்துவம். கோழியில் நார்ச்சத்து, வைட்டமின் பி-12 ஆகியவை அதிகம். உடல் எடை அதிகரிக்காமல், வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க... கோழி இறைச்சிக்கு இணை எதுவும் இல்லை என்கிறது, நவீன உணவியல்.

நீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன?''

நம் ஊரில் கருங்கோழி (கடக்நாத்) எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ்நாட்டில் காங்கேயம் பகுதியிலும், வடமாநிலங்கள் சிலவற்றிலும் இக்கோழி இனம் உள்ளது.

இந்தக் கோழியின் கறியை... தசை சூம்பி வலுவிழந்திருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிறழ்தசை நோயினருக்கும் உணவாக, மருந்தாக வழங்கச் சொல்கிறது, தமிழ் மருத்துவம். முற்காலத்தில், தசைக்கு வலுகூட்டவும், மூட்டுவலி போக்கவும், நரம்புகளுக்கு பலம் கொடுக்கவும், இக்கோழியிலிருந்து டானிக் தயாரித்துக் கொடுத்துள்ளார்கள். குறிப்பாக, போலியோ நோய் தாக்கியவர்களுக்கு, கை, கால்கள் சூம்பியிருக்கும். அந்தத் தசைப் பகுதியை வலுப்படுத்த, கருங்கோழி இறைச்சியைப் பயன்படுத்தினார்கள்.

மற்றபடி, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு, பெண்கள் சம்பந்தமான பிரச்னைகளுக்கு இக்கோழியின் இறைச்சியைச் சாப்பிட்டால் தீர்வு கிடைக்காது. அரிய கோழியினம் என்று சொல்லி, அதனால், பல வகையான நோய்களும் குணமாகும் என்று சொல்வது போலியான தகவல்.''

''எங்கள் தோட்டத்தில் உள்ள இரண்டு வயதான மாஞ்செடி இலைகளில் வெள்ளை மற்றும் கருப்பு நிறப் புள்ளிகள் உள்ளன. சில செடிகள் முழுவதும் கருப்பு நிறமாக உள்ளன. என்ன காரணம்... எப்படி சரி செய்வது?''

-எஸ். சுப்பு, திண்டுக்கல். பூச்சியல் வல்லுநர் நீ. செல்வம் பதில் சொல்கிறார்.

''வழக்கமாக மா மரத்தில் பூ வைக்கும் காலத்தில் பச்சை தத்துப்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும். இப்பூச்சிகளின் உணவு மாம்பூதான். என்றாலும், இலைகளின் அடியில் இருந்துகொண்டு சுரண்டி, சாறையும் குடிக்கும். பெரும்பாலும், பூக்கள் இல்லாத செடிகளில் இலைகளில் இவை தங்குவதுண்டு. இப்பூச்சிகளின் உடலில் சுரக்கும் இனிப்பு நீர் இலைகள் மீது படர்வதால், ஒரு வித பூஞ்சணம் உருவாவதுதான், புள்ளிகளுக்கும், கருமை நிறத்துக்கும் காரணம். இப்படி கருமையாவதால், ஒளிச்சேர்க்கை பாதிக் கப்பட்டு மகசூல் குறைகிறது. தவிர, பூக்கள் கொட்டுவதாலும் மகசூல் இழப்பு ஏற்படும். காலை நேரத்தில், மா இலையின் அடியில் பார்த்தால், பச்சை தத்துப்பூச்சிகள் நடமாட்டம் தெரியும். இப்பூச்சிகள் நேராக ஓடாமல், பக்கவாட்டில் தாவும் பழக்கமுடையவை. இதை வைத்தே இவற்றை அடையாளம் காணலாம்.

நீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன?''

இதைக் கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டைச் சாறு தெளிப்பதுதான் சரியான தீர்வு. தூளாக அரைத்த 5 கிலோ வேப்பங்கொட்டை, நசுக்கிய அரை கிலோ வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் இரவு முழுவதும் ஊற வைத்து... காலையில் கலக்கினால், பால் போன்று வெண்மை நிறத்துக்கு வரும். இதை வடிகட்டி அதில், 100 கிராம் காதி சோப்பைக் கலந்து, இக்கரைசல் 100 லிட்டர் ஆகும் வரை தண்ணீர் சேர்த்துக் கலக்கி... மாலை 4 மணிக்குப் பிறகு தெளித்தால், பூச்சிகள் கட்டுப்படும். இப்படி பத்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். இக்கரைசலைச் சேமித்து வைக்கக்கூடாது. எனவே, மரங்களின் அளவு, வயது மற்றும் தேவையைப் பொறுத்து தயாரித்துக் கொள்ளலாம்.

வேப்பங்கொட்டைச் சாறு தெளித்தால், பூக்கள் கொட்டி விடும் என்று விவசாயிகள் அச்சப்படுவதுண்டு. ஆனால், இந்தச் சாறானது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்பட்டு அதிகப்பூக்களை உருவாக்கி மகசூலை அதிகரிக்கும் என்பதே உண்மை.''

தொடர்புக்கு, செல்போன்: 94435-38356.

நீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன?''