மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!

மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!

ஓவியம்: ஹரன்

'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, தோட்டத்துக்கு நடந்து வந்து கொண்டிருக்க... பாதி வழியில் அவரோடு இணைந்து கொண்டார், 'காய்கறி’ கண்ணம்மா.

''வெய்யக்காலம் ஆரம்பிக் குறப்பவே இந்தப் போடு போடுது. இன்னும் சித்திரை மாசம் அக்னி வெயிலை எல்லாம் எப்படித் தாங்கப் போறோமோ...'  என்று புலம்பினார், காய்கறி.

''ஒவ்வொரு வருஷமும் நாமதான் இப்படி புலம்பிக்கிட்டே இருக்கோமா... இல்ல, நிசமாவே வெயில் ஏறிட்டே இருக்கானு தெரியலையே. எதுக்கும், இந்த ரமணன் ஐயாகிட்ட இதைப் பத்தி அப்புறமா ஒரு வார்த்தை கேட்டுச் சொல்றேன்'' என்றார் வாத்தியார்.

''உங்களுக்கு என்னய்யா... வீட்டுக்குள்ளேயே உக்காந்துக்கலாம், நான் அப்படி இருக்க முடியுமா? கூடையைத் தூக்கிட்டு நடந்தாத் தான் நாலு காசு சம்பாதிக்க முடியும்'' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தோட்டத்துக்கு வந்து சேர்ந்து விட்டனர்.

ஒரு திட்டில் அமர்ந்து கொம்பு சீவிக் கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம், இவர்களைப் பார்த்தவுடன் அரிவாளை ஓரமாக வைத்துவிட்டு, இவர்களோடு வந்தமர்ந்தார்.

மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!

''நம்ம ஊருல வெயில் இப்படி படுத்துது. ஆனா, மகாராஷ்டிராவுல திடுதிப்னு கொட்டித் தீர்க்குது. ஆலங்கட்டி மழையெல்லாம் பெஞ்சுருக்கு. ஆனா, அதுவும்கூட விவசாயிகளுக்கு எமனா வந்ததுதான் சோகம். கொஞ்ச நாளைக்கு முன்ன பெய்ஞ்ச ஆலங்கட்டி மழையால பயிரெல்லாம் நாசமாகிடுச்சாம். கடனை, உடனை வாங்கி விவசாயம் பண்ணவங்களுக்கு கடனைக் கட்ட முடியாம போக... இந்த மூணு வாரத்துல மட்டும், 22 விவசாயிகள் தற்கொலை செஞ்சு உயிரை மாய்ச்சுக்கிட்டாங்களாம். பாவம்யா...'' என்று ஒரு செய்தியைச் சொல்லி, அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், வாத்தியார்.

'உச்' கொட்டிய காய்கறி, ''பேய்ஞ்சும் கெடுக்கும்... காய்ஞ்சும் கெடுக்கும்னு சும்மாவா சொல்லி வெச்சாங்க...'' என்றார் வருத்தக் குரலில்.

''ஆண்டவன் சரியா இருந்தா.... எல்லாம் நல்லாயிருக்கும். இனி, ஆள வர்றவங்களாவது நல்லவங்களா இருக்கணும்...'' என்று இழுத்தார் ஏரோட்டி.

''ம்... அதுக்கான வாய்ப்பு, கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் தெரியலையே. இந்தத் தேர்தலுக்காக பணத்தை அள்ளி அள்ளி இறைக்கறாங்க... ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி எல்லாமே. டி.வி., பேப்பர், இன்டர்நெட்னு எதைத் திறந்தாலும் இந்தத் தலைவருங்களோட தலையாத்தான் இருக்கு. இதுக்காக செலவழிச்ச காசையெல்லாம், ஜெயிச்சு வந்த பிறகு நம்மகிட்ட இருந்துதானே கறந்தாகணும். பிறகு, எப்படி இவங்கள்லாம் நமக்கு நல்லது செய்வாங்கனு நம்ப முடியும்?'' என்று விரக்தியான குரலில் சொன்னார் வாத்தியார்.

மரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி!

''சரி, நாம விஷயத்துக்கு வருவோம். விழுப்புரம், சேலம், திருவண்ணாமலைனு கிட்டத்தட்ட இருபது மாவட்டங்கள்ல பரவலா கூர்கன் கிழங்கு (கோலியஸ்) சாகுபடி பண்றாங்க. இதை விதைச்சா ஆறு மாசத்துல அறுவடை பண்ணிடலாம். தண்ணியும் குறைவாத்தான் தேவைப்படும். அதனாலதான நிறைய விவசாயிகள் இதை சாகுபடி பண்றாங்க. இந்தப் பயிர்ல கிழங்கு, இலை, வேர், தண்டுனு எல்லாத்துல இருந்தும் நிறைய மருந்துப் பொருட்கள் தயாரிக்கறாங்களாம். குறிப்பா, உடல் பருமன், கொழுப்பு இதையெல்லாம் குறைக்கறதுக்கும், கணையம், கிட்னி மாதிரியான உறுப்புகள்ல வர்ற பிரச்னைகளுக்கும் இந்த கிழங்குல இருந்து மருந்து தயாரிக்கறாங்களாம். அதனால, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்துனு நிறைய நாடுகள்ல இதுக்குத் தேவை இருக்குதாம். கிட்டத்தட்ட தமிழ்நாட்டுல இருந்து மட்டும் வருஷத்துக்கு ஆயிரம் டன்னுக்கு மேல ஏற்றுமதியாகுதாம்.

ஒரு ஏக்கர்ல 4 டன்ல இருந்து 5 டன் வரை மகசூல் கிடைக்கும். போன வருஷம் வரை ஒரு டன் கிழங்குக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல விலை கிடைச்சுட்டு இருந்துச்சு. இப்போ, அதிக தேவை இருந்தும்... வியாபாரிகளும் ஏற்றுமதி கம்பெனிகளும் கூட்டு சேந்துக்கிட்டு, ஒரு டன் 8 ஆயிரம் ரூபாய்ங்கற அளவுக்குக் கொண்டு வந்துட் டாங்களாம். அதனால, விவசாயிகள் எல்லாம் புலம்பிட்டுருக்காங்க. அரசாங்கமே இதை கொள்முதல் பண்ணணும்னு கோரிக்கைக் குரல் கேக்குது'' என்ற ஏரோட்டி,

''இந்தியாவுல இவ்வளவு கரும்பு விளையறப்பவே, ஜீனியை (சர்க்கரை) இறக்குமதி பண்ணி விற்பனை செய்யுது அரசாங்கம். ஏன் இங்க உற்பத்தியாகற பொருளை அரசாங்கமே கொள்முதல் பண்ணி ஏற்றுமதி பண்ணக் கூடாது?'' என்று ஒரு கேள்வியையும் எடுத்து வைத்தார்.

''அது ஒண்ணும் பெரிய வேலை கிடை யாது. ரொம்ப சுலபமா அரசாங்கம் செய்ய முடியும். ஆலைகள் தயாரிக்கற சர்க்கரை மொத்தத்தையும் கொள்முதல் பண்ணி வெச்சுக்கிட்டு... 'ஒரு விலை நிர்ணயிச்சு அந்த விலைக்குத்தான் வெளிச் சந்தைக்குக் கொடுப்போம்’னு அரசாங்கம் சொல்லிட் டாலே போதுமே. ஆனா, அதை செய்ய மாட்டாங்க. அப்படி செய்துட்டா... ஆலைங்ககிட்ட இருந்து கமிஷன் வராம போயிடுமே!''என்ற, வாத்தியார்... இடையில் போனை எடுத்து பேசி, 'நன்றி' சொல்லி வைத்துவிட்டு, காய்கறி கண்ணம்மா நறுக்கிக் கொடுத்த தர்பூசணிப் பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டே அடுத்த செய்தியைச் சொன்னார்.  

''கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக் கடவு பக்கத்துல குரும்பப்பாளையம்னு குட்டி கிராமம் இருக்கு. முன்ன இங்க 70 குடும்பம் இருந்திருக்கு. ஆடு, மாடு மேய்க்கிறதும் கம்பளி நெய்றதும்தான் இந்த ஊர் மக்களுக்கு தொழிலா இருந்துருக்கு. ஆனா, அடுத்தடுத்து வந்த வறட்சியால கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வேலை தேடி வெளியூர்களுக்குப் போக ஆரம்பிச்சுருக்காங்க. அவ்வளவு பேரும் வெளியேற... ரெண்டே ரெண்டு குடும்பம் மட்டும் ஊர்லயே தங்கிடுச்சு. அவங்களுக்கும் கரன்ட் கூட கிடையாதாம். ஒரு தெரு விளக்கு, ஒரு விநாயகர் கோயில், பாழடைஞ்சு போன ஒரு பொதுக்கிணறுதான் கிராமம் இருந்ததுக்கு அடையாளமா இருக்கு. இந்த ஊர்ல ஆட்களே இல்லாததால... திரும்பவும் மக்களை குடியேற வைக்கணும்னு அதிகாரிகள் முயற்சி செஞ்சு... இந்த ஊர்ல இருக்குற புறம்போக்கு இடத்தை வடசித்தூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த 88 பேருக்கு வீட்டு மனையா பிரிச்சுக் கொடுத்து, தொகுப்பு வீடு கட்ட ஏற்பாடு பண்ணிட்டு இருக்குறாங்களாம். அதுக்காக ஒரு போர்வெல் போட்டிருக் காங்களாம். இதுவரை ரோடு வசதியே இல்லாத, இந்த கிராமத்துக்கு 'நபார்டு' மூலமா ரோடும் போட்டுட்டு இருக்காங்களாம். இன்னும் கொஞ்சநாள்ல அந்த கிராமம் திரும்பவும் பழையபடி ஆயிடும்னு பேசிக்கறாங்க'' என்றார்.

''நல்லவேளை, அரசியல்வாதிகள் கண்ணுல அந்த கிராமம் சிக்கல. இந்நேரம் பிளாட் போட்டுல்ல வித்துருந்துருப்பாய்ங்க'' என்று சொல்லி சிரித்த ஏரோட்டி, ஒரு செய்திக்குத் தாவினார்.

''நீலகிரி மாவட்டம், பந்தலூர் பக்கத்துல சேரங்கோடு பகுதியில 'டேன் டீ' நிறுவனம் இருக்கு. இதுல 'பேரின்பநாதன்’னு ஒருத்தர் வேலை பார்க்கறார். வாய்பேச முடியாத இவர், ஓய்வு நேரங்கள்ல... பீன்ஸ், வெண்டி, கத்திரினு காய்கறி விவசாயம் செஞ்சுட்டு இருக்கார். இவரோட தோட்டத்துல அடிக்கடி, முயல், குரைக்கும் மான், கட மான்னு புகுந்து பயிரைக் காலி பண்ணிடுமாம். 'இதுக்கு என்ன பண்ணலாம்?'னு யோசிச்சவர், சத்தம் எழுப்புற மாதிரி ஒரு கருவியை உருவாக்கி விலங்குகளை வராம பண்ணிட்டார். கால்வாய்ல இருந்து தண்ணி கொட்டுற இடத்துல, ஒரு காற்றாடி மாதிரி செஞ்சு வெச்சுருக்கார். அதுல இருந்து ஒரு கம்பி கட்டி, அதோட பாட்டில், அலுமினியப் பாத்திரங்களைச் சேர்த்து வெச்சுருக்கார். தண்ணி கொட்டும்போது... காத்தாடி சுத்தி, கம்பி நகர்ந்து இந்த பாட்டில்கள், பாத்திரத்துல இருந்து ஒரு மாதிரியான சத்தம் எழும்புது. வித்தியாசமான இந்த சத்தத்தால, பறவைகள், விலங்குகள்னு எதுவும் இந்தப் பக்கம் வர்றதேயில்லையாம்'' என்றார்.

இதைக் கேட்டதும் பரபரப்பான காய்கறி, ''அச்சச்சோ.... வாடிக்கை வீடுகளுக்கு காய் கொடுக்கலைனா, சத்தம் போட ஆரம்பிச் சுடுவாங்க. அப்புறம் நானும் அந்தப் பக்கம் போக முடியாது. நான் கிளம்புறேன்'' என்றபடி கூடையைத் தூக்க, ''இரும்மா... சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் ஐயாகிட்ட போன்ல பேசிட்டேன். அவர் சொன்ன சங்கதியையும் கேட்டுட்டுப் போ'' என்று நிறுத்திய வாத்தியார்,

''ஐயா என்ன சொல்றார்னா... 'ஒவ்வொரு ஆண்டும் வெயில் அதிகரித்துக் கொண்டே போவது போலவும், மழை அளவு குறைந்துகொண்டே வருவது போலவும், மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுவது வழக்கம். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2003-ம் ஆண்டுதான், கடுமையான வெயில் பதிவானது. வானிலை நிலவரங்களை அலசியதில்... இந்த ஆண்டு வழக்கமான அளவுக்குத்தான் வெயிலின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்' அப்படினு சொல்றார். அதனால, மனச தேத்திக்கிட்டு, வழக்கம்போல வேலைகளைப் பாருங்க...'' என்று சொல்ல அன்றைய மாநாடும் முடிவுக்கு வந்தது.