''உங்கள் ஓட்டு, 'நோட்டு'க்கா... 'நோட்டா'வுக்கா? சீறிப்பாயும் ஏரோட்டி!
ஓவியம்: ஹரன்
கையில் செய்தித் தாள்களை சுருட்டிக் கொண்டு 'வாத்தியார்' வெள்ளைச்சாமி, தலையில் சுமையுடன் 'காய்கறி' கண்ணம்மா மற்றும் 'ஏரோட்டி' ஏகாம்பரம் மூவரும் தோட்டத்து வாசலில் வந்து நிற்க...
'போடுங்கம்மா ஓட்டு... ரெட்ட இலைய பார்த்து... போடுங்கய்யா ஓட்டு உதயசூரியன பார்த்து... போடுங்கக்கா ஓட்டு, முரசு சின்னத்த பார்த்து..' என்று மூளைக்கு மூளை அலறிக் கொண்டிருந்தன ஸ்பீக்கர்கள். சற்று நேரத்தில் வேட்பாளர் ஒருவர் ஓட்டு வேட்டை நடத்திக் கொண்டே வர, அதை வேடிக்கை பார்த்துவிட்டு, மூவரும் தோட்டத்துக்குள் நடக்க ஆரம்பித்தனர் பேசிக் கொண்டே...
''என்னய்யா... அம்மா, அய்யானு ஆளாளுக்கு பிரசாரத்துல பட்டையக் கிளப்பறாங்க போல. போதாக்குறைக்கு கேப்டன் வேற, மோடி பிரதமராயிட்டா... தமிழ்நாடே சொர்க்கலோகம் ஆயிடும்னு கலக்குறாரே... நீ யாருக்கு ஓட்டுப் போடப் போறே...?!'' என்று கேட்டு, அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார் வாத்தியார்.
''ம்க்கும்... தேர்தல் நேரத்துல இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் கலர்கலரா ஆளாளுக்கு ரீல் விடறாங்க. போன தேர்தல்ல இன்னொருப் பக்கம் சேர்ந்துகிட்டு இப்படி ரீல் விட்டவங்க... இந்தத் தேர்தல்ல வேற பக்கம் சேர்ந்துகிட்டு ரீல் விடறாங்க. போன தேர்தல்ல சேர்த்துக்கிட்டவங்கள, இந்தத் தடவை கழட்டிவிட்டுட்டு, ரீல் விடறாங்க. ஆகக்கூடி, தேர்தலுக்குத் தேர்தல் எல்லா கட்சிகளுக்கும்தான் லாபம் கிடைக்குதே தவிர, நமக்கு என்னத்த கிடைக்குது'' என்று எரிச்சலாகப் பேசினார் ஏரோட்டி.
''என்னய்யா... இப்படி அலுத்துக்கறே. ஏன், ஓட்டுப் போடறதுக்கு யாரும் பிரியாணி, குவார்ட்டர், 1000 ரூபாய் இதையெல்லாம் கொடுக்காம விட்டுட்டாங்களா?'' என்று நக்கலடித்தார் காய்கறி.
எரிச்சலாகிவிட்ட ஏரோட்டி... ''அட நீவேற வயித்தெரிச்சல கிளப்பாதே.

100 சதவிகித மானியத்துல சொட்டு நீர்ப்பாசனம் தரப்படும்கிறான். போய்க் கேட்டா... அவருக்கு 5 ஆயிரம்... இவருக்கு 10 ஆயிரம்னு ஆளாளுக்கு கமிஷன் வெட்ட வேண்டியிருக்கு. இதுக்கு சொந்தக் காசுலயே போட்டுட்டு போயிடலாம் போலிருக்கு. வறட்சி நிவாரணம் 10 ஆயிரம் ரூபாய் தரப்படும்னு முதலமைச்சர் அறிவிக்கிறாங்க. கடைசியில உள்ளூர் வி.ஏ.ஓ. கொடுக்கறது என்னவோ... 4 ஆயிரம், 5 ஆயிரம்தான். மீதியெல்லாம் மேல்மட்டம் வரைக்கும் பங்குபோட்டுத் தின்னுடறாங்க. இப்படி கொள்ளையடிக்கற காசைத்தான், தேர்தல் நேரத்துல நமக்கும் கொஞ்சம் போல தட்டிவிட்டு, வளைக்கிறாங்க. அநியாயக்காரனுங்களோட காசு நமக் கெதுக்கு?'' என்று சூடாகச் சொன்னார்.
''அதுக்காக, ஓட்டுப்போடாம இருக்கறது நல்லதில்லையா... யாருக்குமே போடப் பிடிக்கலைனா... ஓட்டு இயந்திரத்துல கடைசி பொத்தானா... 'நோட்டா' வெச்சுருக்காங்க. இதை அமுக்கிட்டு வந்துடு. உன்னோட வாக்குரிமையைப் பயன்படுத்தின மாதிரியும் இருக்கும்... யாருமே சரியில்லைங்கறத அடிச்சு சொன்ன மாதிரியும் இருக்கும்ல...' என்று வாத்தியார் எடுத்துக் கொடுக்க...
''ஓ இப்படி ஒரு வசதியும் வந்தாச்சா. நோட்டுக்குப் போடறதைவிட, நோட்டா வுக்கு போட்டுட வேண்டியதுதான்! அப்பதான் இந்த ஜென்மங்களுக்கு புத்தி வரும்'' என்று சூடாகச் சொன்னார் ஏரோட்டி. தானொரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.
''தர்மபுரி மாவட்டத்துக்கு, ஆந்திராவுல இருந்து ஏராளமான வியாபாரிங்க வந்து, வாத்துகளை விற்பனை செஞ்சுட்டு இருக்காங்களாம். தர்மபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் பகுதிகள்ல சாலை ஓரங்கள்லயே வாத்து விற்பனை படுசூடா நடக்குது. விவசாயிகள், பொதுமக்கள்னு ஏகப்பட்ட பேர் இறைச்சிக்காகவும், வளர்க் கறதுக்காகவும் வாங்கிட்டுப் போறாங் களாம். ஒரு ஜோடி வாத்து, 300 ரூபாய்ல இருந்து 350 ரூபாய் வரை விற்பனை ஆகுதாம். ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி எல்லாத்தையும்விட, வாத்து விலை குறைவா இருக்கறதால நிறையபேர் வாத்துக்கறி சாப்பிட ஆரம் பிச்சுருக்காங் களாம்'' என்றார், ஏரோட்டி.
''நான்கூட ஒரு முறை வாங்கி சாப் பிட்டேன். என்ன இருந்தாலும்... நம்ம நாட்டுக்கோழி அளவுக்கு இல்ல'' என்ற காய்கறி, கூடையிலிருந்து தர்பூசணியை எடுத்து ஆளுக்கு கொஞ்சம் வெட்டிக் கொடுத்தபடியே...
''தண்ணீர் சத்து நிறைஞ்சது... வெயிலுக்கு நல்லதுனுதான் இந்தப் பழத்தை எல்லாரும் சொல்லிட்டிருக்கோம். ஆனா, உடம்புல இருக்குற கொழுப்பைக் கரைக்குற சக்தியும் இந்த தர்பூசணிக்கு இருக்குதாம்'' என்று 'இன்று ஒரு தகவலை’யும் தந்தார்.

அதைச் சாப்பிட்டுக் கொண்டே, ''கோடை காலத்தில் அதிகமான வெப்பம் இருந்தா, ஆடுகளை 'உதட்டுப்புண்’ங்கிற நோய் தாக்கும்னு கால்நடை டாக்டருங்க சொல்லிருக்காங்க. குறிப்பா, செம்மறி ஆடுகளுக்கு இந்த நோய் அதிகமா வருமாம். இந்த நோய், 'பேராபக்ஸ்’ங்கிற வைரஸ் கிருமியால வருமாம். அடுத்த ஆடுகளுக்கும் சுலபமா தொத்திக்கிடுமாம். உடல்ல இருக்குற புண்கள் வழியாவும் பரவுமாம். இந்த நோய் தாக்குனா, உதடு சிவப்பாகி புண் வருமாம். கொஞ்ச நாள்ல பழுப்பு நிறத்துல புண் பெருசாகி, நீர் வடிஞ்சுட்டே இருக்குமாம். அப்படி புண் வந்தா, டாக்டருங்ககிட்ட காட்டி... அதுக்கான களிம்பைத் தடவினா, குணமாகிடுமாம்.
நோய் தாக்குன ஆடுகளை அப்படியே இரை எடுக்க விடாம... இளம்புல்லை சின்னச் சின்ன துண்டா நறுக்கிக் கொடுத்தா, வாய் அழுந்தாம சாப்பிட்டுக்குமாம். நோய் தாக்குன ஆடுகளை தனியா அடைச்சு வைக்கணும். கொட்ட கையை, கிருமிநாசினி மூலம் சுத்தமா கழுவணுமாம். இதெல்லாம் டாக்டருங்க கொடுத்த யோசனைங்கதான்... தெரிஞ்சு வெச்சுக்கோய்யா...'' என்றார் வாத்தியார்.
''நான்லாம் அந்த விஷயத்துல ரொம்ப கெட்டி... எப்பவுமே நம்ம கொட்டகை சுத்தம்தான். அதில்லாம, போன வாரமே அத்தனை ஆடுகளுக்கும் தடுப்பூசி வேற போட்டுட்டு வந்துட்டேன்ல!'' என்று பெருமையாகச் சொன்ன ஏரோட்டி,
''கோபிச்செட்டிபாளையம், அதைச் சுத்தியிருக்குற சிறுவலூர், காட்டுச்சாலை, மீன்கிணறு, காக்கிப்பாளையம், குருமந்தூர், குன்னத்தூர்னு நிறைய ஊர்கள்ல பனைமரங்கள் அதிகளவுல இருக்குதாம். இந்தப் பகுதி முழுக்க வானம் பார்த்த பூமிங்கிறதால, பனைத் தொழிலை மட்டும் நம்பி, 20 ஆயிரம் குடும்பங்கள்கிட்ட இருக்குதாம். குறிப்பா, இந்தப் பகுதியில கருப்பட்டி உற்பத்தி அதிகளவுல நடக்கும். ரெண்டு வருஷமா, மழை இல்லாததால், பனைமரங்கள்ல பதநீர் உற்பத்தி குறைவா இருக்குதாம். வழக்கமா ஒரு பனை மரத்துல ஒரு நாளைக்கு ஆறு லிட்டர் பதநீர் கிடைக்குமாம். இப்போ ரெண்டு லிட்டர்கூட கிடைக்கறதில்லையாம். அதனால, கருப்பட்டி உற்பத்தி பாதிச்சுருக்குதாம். அதேசமயம் தேவை அதிகமா இருக்கறதால, கிலோ 65 ரூபாய்னு விற்பனை ஆகிட்டுருந்த கருப்பட்டி, இப்போ, 100 ரூபாய்க்கு மேல விற்பனை யாகுதாம். இந்தப் பகுதி கருப்பட்டியை புகையிலைப் பதப்படுத்துறதுக்காக அதிகமா வாங்கிட்டுப் போவாங்களாம். அதனாலதான், இதுக்கு இவ்வளவு மவுசாம்'' என்றார்.
''மார்க்கெட்ல, வியாபாரிகளுக்கு காசு கொடுக்க வேண்டியிருக்கு. வெயில் கொஞ்சம் இறங்கின மாதிரியும் தெரியுது. நான் கிளம்பறேன்'' என்று காய்கறி கூடையைத் தூக்க, முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.