நீங்கள் கேட்டவை : காடைக்கன்னி சிறுதானியத்தின் சிறப்புத் தன்மை என்ன?
புறா பாண்டி
''காடைக்கன்னி என்ற சிறுதானிய வகை இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதன் சிறப்புத் தன்மை என்ன?''
டி. பிரகாஷ், திருவல்லிக்கேணி. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சிறுதானியத் துறைப் பேராசிரியர் முனைவர். நிர்மலாகுமாரி பதில் சொல்கிறார்.

''பனிவரகு என்கிற சிறுதானியத்தைத்தான், சில பகுதிகளில் 'காடைக்கன்னி’ என்று அழைக்கிறார்கள். இந்தப் பனிவரகு மற்ற சிறுதானியங்களைக் காட்டிலும் வித்தியாசமானது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், இதன் வயது 70 நாட்கள்தான். மிகக்குறைந்த வயது கொண்ட சிறுதானியம் இது. புரட்டாசிப் பட்டத்தில் விதைக்கலாம். அப்போது கிடைக்கும் வடகிழக்குப் பருவ மழையிலேயே வளர்ந்துவிடும். அதிகபட்சம் நான்கு முறை மழை பெய்தால்கூட போதும். பாசன வசதி இருந்தால், இரண்டு முறை நீர்ப்பாய்ச்சினால் போதும். ஏக்கருக்கு 800 முதல் 1000 கிலோ வரை மகசூல் கொடுக்கக் கூடியது. இதன் வைக்கோலில் புரதச்சத்துகள் அதிகம் உள்ளது. கால்நடைகளுக்குக் கொடுத்து வந்தால், அவை ஆரோக்கியமாக இருக்கும்.
வரகு அரிசியில் செய்யப்படும் உணவு வகைளைப் போலவே, பனிவரகிலும் பொங்கல், கிச்சடி, சோறு, முறுக்கு, அதிரசம்... போன்றவை சமைக்க முடியும். பனிவரகுப் பயிரின் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். எனவே, பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. இதன் பெயரே பனிவரகு என்பதால், பனிக்காலத்தில் மட்டுமே நன்றாக விளைச்சல் கொடுக்கக் கூடியது. நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில், கோடையிலும்கூட விதைக்கிறார்கள். அந்தசமயத்தில் இளம்பயிர்களை குருத்துப்பூச்சிகள் தாக்குகின்றன. இதை பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். சிறுதானியங்கள் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து உள்ளதால், பனிவரகு கிலோ

20 வரையிலும் விற்பனையாகிறது.

பனிவரகு சாகுபடியை ஊக்கப்படுத்த, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய ரகங்களை வெளியிட்டுள்ளோம். இதில் கோ-5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விதையை விவசாயிகள் ஒருமுறை வாங்கினால் போதும். அந்தப் பனிவரகு விளைந்து கொடுக்கும் விதையை, திரும்பத் திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம். எத்தனைமுறை பயன்படுத்தினாலும் வீரியம் குறையாது. தற்போது, எங்கள் துறையில் பனிவரகு விதை கிலோ

30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.''
தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானியத்துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3
செல்போன்: 99949-16832 (காலை 10 மணி முதல் மாலை 5 வரை)
''எங்கள் கரும்புத் தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்துவது எப்படி?''
முருகன், தியாகதுருகம். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி
கரும்பு விவசாயி தனபால் பதில் சொல்கிறார்.

''கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. என்னுடைய அனுபவத்தில் பன்றி, குள்ளநரி... போன்ற விலங்குகளை விரட்ட எளிய நுட்பங்களைக் கடைபிடித்து வருகிறேன். கரும்பு வயலைச் சுற்றிலும், மெல்லிய நைலான் கயிறுகளைக் கட்டிவிட வேண்டும். இந்தக் கயிறு தரையில் இருந்து ஒரு ஜான் உயரத்தில் இருக்க வேண்டும். காட்டுப்பன்றிகள், குள்ளநரிகள் வேகமாக தோட்டத்துக்குள் வரும். அப்போது, காலில் கயிறு மாட்டிக் கொண்டால் தடுமாறி விழும். தங்களுக்கு ஏதோ, ஆபத்து உள்ளது என்று பயந்து, திரும்பி ஓடிவிடும்.
கரும்பு வயலில் தோகையை உரித்துவிட்டால், காற்றோட்டம், சூரியஒளி நன்றாகக் கிடைத்து விளைச்சலும் கிடைக்கும் என்பதற்காக, உரித்துவிடுவோம். ஆனால், இப்படி தோகையை உரிக்கும்போது... பன்றி, குள்ளநரிகளுக்கு கூடுதல் கொண்டாட்டமாகிவிடும். அவை, கரும்பு வயலில் எளிதாக உள்ளே வந்து செல்லும். இதைத் தடுக்க வரப்பைச் சுற்றி உள்ள கரும்புகளின் தோகையை உரிக்க வேண்டாம். கரும்புக்கு வழக்கமாக இரண்டு முறை தோகை உரிப்போம். இதுபோன்ற பகுதிகளில் ஒரு முறை உரித்துவிட்டால் போதும்.

அடுத்து, காட்டு விலங்குகள் கரும்பு வயலுக்குள், நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். அந்த காலத்தில், தோல் பகுதி கடுமையாக இருந்த கரும்பு ரகங்களைப் பயிர் செய்தார்கள். அந்த கரும்புகளைக் கடிப்பது சிரமமாக இருக்கும். ஆனால், இப்போது நாம் பயன்படுத்தும் கரும்பு ரகங்களின் தோல் மிகவும் மென்மையாக உள்ளது. லேசாக ஒடித்தாலே, சாறு கசிந்து வழியும். இந்த ரகங்களைத்தான் சர்க்கரை ஆலைகளும் பயிர் செய்யச் சொல்கின்றன.
இந்த மெல்லிய ரக கரும்பை, செவ்வழுகல், குருத்தழுகல்... என்று நோய் தொற்றும் எளிதாகத் தொற்றிக் கொள்கிறது. இதற்கு பதில் கோ.க-22 என்ற கரும்பு ரகத்தை சாகுபடி செய்யலாம்.. இதன் தோல் மற்றும் கணுப் பகுதி கடினமாக இருக்கும். இதனால், விலங்குகள் சேதம் செய்வது குறையும். பூச்சி, நோய் தாக்குதலும் குறைவாக இருக்கும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கரும்பு வயலைச் சுற்றி சோலார் மின்வேலி போடுவது கட்டாயம். இதற்கு சர்க்கரை ஆலைகளும் உதவி செய்கின்றன. சோலார் மின்வேலி அமைப்பது மட்டும்தான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.''
தொடர்புக்கு, செல்போன்: 90032-51050.
