மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு

மழையால் மாறிய மாம்பழம்!

 ஓவியம்: ஹரன்

கொளுத்தும் கோடை யின் உக்கிரத்தைத் தாங்க முடியாததால், தோட்டத் துக்குக் கிளம்பாமல், வீட்டருகே உள்ள மரத்தடியிலேயே அமர்ந்து, நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தார், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி. தானும் அங்கேயே வந்து சேர்ந்திருந்த 'காய்கறி’ கண்ணம்மா, அருகில் அமர்ந்திருந்தார். தோட்டத்துக்குச் சென்று வேலைகளை முடித்துத் திரும்பிய 'ஏரோட்டி’ ஏகாம்பரம், இவர்களோடு சேர்ந்துகொள்ள... அன்றைய மாநாடு ஆரம்பமானது.

''அப்பப்பா... ஒரு வழியா தேர்தல் முடிஞ்சி போச்சு. இந்த ஒட்டு எண்ணிக்கை முடியுறவரைக்கும் கரை வேட்டிங்க நடமாட்டம் இல்லாம ஊர் அமைதியா இருக்கும்'' என்றார், காய்கறி.

''ஆமாமா... அவனவன் வெயில்ல சுருண்டு போயிட்டாங்கள்ல'' என்ற ஏரோட்டி,

''ரொம்பக் கொடுமையான வெயிலப்பா... தாங்க முடியல'' என்று ஆமோதித்த வாத்தியார், ''பேரப் புள்ளைகளுக்கெல்லாம் வெக்கை தாங்காம கண்ணு வீங்கிப் போகுது. நெத்தியிலெல்லாம் வெக்கைக் கொப்புளமா வருது'' என்றார்.

மரத்தடி மாநாடு

''ஆமாய்யா... என் மகனுக்கு கூட இப்படித்தான் கொப்புளம் வந்துச்சு. தினமும் நுங்குத் தோலை நெத்தியில தேய்ச்சுவிட்டேன். மூணு நாள்ல சரியாகிடுச்சுய்யா. கண்ணு வீங்குனா, நாமக்கட்டியை உரசிப்போடுங்க. சரியாகிடும்'' என்ற காய்கறி,

''நுங்கு விலை கூடித்தான் கிடக்கு. சின்ன வயசுல சீந்துவாரில்லாம கிடக்கும். வயிறு முட்ட நோண்டி நோண்டி திம்போம். இப்போ, என்னடானா, ஒரு நுங்கு

5 ரூபாய்க்கும் மேல விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. ம், எல்லாமே விலை ஏறிக்கிடக்கறப்ப... அது மட்டும் ஏறாம இருக்குமா..?!'' என்று சொல்லிக்கொண்டே, கூடையிலிருந்து ஆளுக்கு ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொடுத்தார்.

''பருவமழை இல்லாம போனதால இந்த வருஷம் மாம்பழ சீஸன் தாமதமா துவங்கியிருக்கு. தமிழகத்துல அதிகளவு மா விளையுறது தர்மபுரி மாவட்டத்துலதான். தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப் பட்டி பகுதிகள்ல கிட்டத்தட்ட 16 ஆயிரம் ஹெக்டேர்ல மா சாகுபடி நடக்குது. பிப்ரவரி மாசம் வரை பருவ நிலை நல்லா இருந்ததால மாமரங்கள்ல பூக்கள் அதிகமா பிடிச்சிருந்தது. ஆனா, பிப்ரவரி மாசக் கடைசியில் இருந்தே வெயில் கொளுத்த ஆரம்பிக்கவும், பிஞ்சு, காயெல்லாம் உதிர ஆரம்பிச்சுடுச்சி. அதனால, சீசன் தாமதமாகிடுச்சி. வழக்கமா, மார்ச் மாசத்துல ஆரம்பிக்க வேண்டிய சீசன் இப்போதான் ஆரம்பிச்சிருக்கு. இப்போதைக்கு செந்தூரா ரகம் மட்டும்தான் அதிகளவுல விற்பனைக்கு வந்திருக்கு. வரத்துக் குறைவா இருக்கறதால, கிலோ 45 ரூபாய்ல இருந்து 50 ரூபாய் வரை விற்பனையாகுது. மல்கோவா, பீத்தர், ருமானியா மாதிரியான ரகங்கள் மே மாசத்துலதான் அதிக அளவுல விற்பனைக்கு வருமாம்'' என்று கூடுதல் தகவல்களையும் எடுத்து விட்டார், காய்கறி.

''வறட்சிதான் கோரத் தாண்டவமாடுதே... அப்பறம் எப்படி சீஸன் சீக்கிரமா வரும்?'' என்ற வாத்தியார்,

''வாழப்பாடி பக்கத்துல இருக்குற பேளூர், தும்பல், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் ஊர்கள்ல கிட்டத்தட்ட

5 ஆயிரம் ஏக்கர்ல வெத்திலைக் கொடிக்கால் இருக்குதாம். இங்க உற்பத்தியாகுற கருப்பு வெத்திலை, தாம்பூல வெத்திலை எல்லாம் ரொம்ப பிரசித்தியானது. சேலம், சென்னை, கடலூர், கோயம்புத்தூர், பெங்களூருனு பல ஊர்களுக்கும் போகுது. 2 வருஷமா மழை இல்லாததால, வெத்திலை விவசாயம் கடுமையா பாதிச்சிருக்குதாம். பல இடங்கள்ல கொடியெல்லாம் கருகிப் போயிடுச்சாம். அதனால விலை எகிறிப்போச்சாம்.

6 ஆயிரம் வெத்திலை கொண்ட ஒரு கட்டு, 2 ஆயிரம் ருபாய்ல இருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகுதாம்'' என்றார்.

''இதே கதைதான்யா கோயம்புத்தூர்லயும்...'' என்ற ஏரோட்டி,

''விவசாயத்தோட, கறவை மாடு வளர்ப்பும் இங்க அதிகமா இருக்கும். ஆனா, கடுமையான வறட்சியால பால் உற்பத்தி ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்குதாம். பல விவசாயிகள் காசு கொடுத்து தண்ணி வாங்கி தீவன சாகுபடி பண்ணவும், மாடுகளுக்குக் குடிக்கவும் பயன்படுத்துறாங்களாம். தீவன விலையும் அதிகமா ஏறியிருக்கதால, கறவை மாடு வளர்ப்பையே பலர் கை விடறாங்களாம். இந்த ரெண்டு வருஷத்துல மட்டும் 50 ஆயிரம் பசுக்கள், 40 ஆயிரம் எருமைகள் குறைஞ்சுடுச்சாம். அதனால, ஆவின் நிறுவனத்துக்கு வர்றதுல 25 ஆயிரம் லிட்டர் பாலும், தனியார் பண்ணைகளுக்கு வர்ற 45 ஆயிரம் லிட்டர் பாலும் குறைஞ்சு போச்சாம்'' என்றார்.

மரத்தடி மாநாடு

''இதே நிலைமையில போச்சுனா... நாடு என்ன கதியாகும்னு தெரியலையே'' என்று வருத்தப்பட்டார், காய்கறி.

''நாசமாப் போகும்...'' என்ற ஏரோட்டி, ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார்.

''சதுரகிரி மலையில இருக்கற பெரிய ஊத்துல இருந்து வர்ற தண்ணியைத் தேக்கி பயன்படுத்துறதுக்காக... மதுரை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்துல இருக்கற டி. கிருஷ்ணாபுரம்ங்கிற இடத்துல அணை கட்டுறதுக்காக, 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 82-ம் வருஷம் அடிக்கல் நாட்டினாங்க. இதுக்காக தனியா அலுவலகத்தையும் திறந்து, 91-ம் வருஷம் வரைக்கும் நிலம் கையகப்படுத்துறது, மத்திய அரசு அனுமதி வாங்குறதுனு வேலைகளைச் செஞ்சாங்க. பிறகு, அப்படியே விட்டுட்டாங்க. 93-ம் வருஷம் திரும்பவும் தூசி தட்டி எடுத்தப்போ... 'திட்ட மதிப்பீடு 24 கோடியாயிடுச்சு. இவ்வளவு செலவழிச்சு அணை கட்டுனா, அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்காது'னு அதிகாரிங்க சொல்லவும், மறுபடியும் கிடப்புல போட்டுட்டாங்க. இந்த அணை வந்திருந்தா... கிட்டத்தட்ட 30 கிராமங்களுக்கு தண்ணி கிடைச்சிருக்குமாம். மக்கள் ஏகப்பட்ட போராட்டங்கள் நடத்தியும், யாரும் கண்டுக்கல. ஆனா, வழக்கம்போல இந்த தேர்தல்லயும் 'டேராப்பாறை அணைத் திட்டம் நிறைவேற்றப்படும்’னு எல்லா வேட்பாளருமே சொன்னதை கேட்டு, காரித் துப்புனாங்களாம்... பகுதி மக்கள்'' என்றார்.

''ஆமாமா... அதுதான வாடிக்கை. ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும் 'நன்றி அறிவிப்பு’னு ரெண்டு, மூணு நாள் வருவாய்ங்க. அப்பறம் டாட்டா காட்டிட்டு கிளம்புனா... அடுத்தத் தேர்தலுக்குத்தான் அவங்களைப் பாக்க முடியும். பல இடங்கள்ல இப்படிப்பட்ட ஆளுங்கள வெளக்கமாத்தை எடுத்துக்கிட்டு, பொம்பளைங்க விரட்டின சம்பவங்கள்... இப்பகூட நடந்திருக்கு. ஆனாலும், அவங்க அசர மாட்டேங்குறாய்ங்க'' என்று காய்கறி சொல்ல...

''சொரணை கெட்ட ஜென்மங்கள்'' என்று நறநறத்த வாத்தியார், ஒரு செய்தியை சொல்ல ஆரம்பித்தார்.

''ஆனைமலைப் புலிகள் காப்பகத்துல வறட்சி காரணமா சுத்தமா தண்ணியே இல்லை. வன விலங்குகள், காட்டை ஒட்டி இருக்குற தோட்டங்களுக்குள்ள வந்து, கிணறுகள்ல தண்ணி குடிக்குதுங்களாம். அப்படி வர்றப்போ தவறி விழுந்து இறந்தும் போயிடுதாம். இது அடிக்கடி நடக்குறதால... சேத்துமடை வனப்பகுதிக்குள்ள 460 அடி ஆழத்துக்கு போர்வெல் போட்டு, சோலார் மோட்டார் பொருத்தியிருக்காங்களாம். தினமும் 12 ஆயிரம் லிட்டர் தண்ணி எடுத்து, தடுப்பணையில நிரப்பிடறாங்களாம். ஏகப்பட்ட மிருகங்கள் அந்தத் தடுப்பணையில தண்ணி குடிச்சு தாகம் தீத்துக்குதுங்களாம். மிருகங்கள், போர்வெல்லை சேதப்படுத்திடக் கூடாதுனு சுத்தி அகழி எடுத்திருக்காங்களாம்''

''நல்ல விஷயம்தான்...'' என்று ஏரோட்டி சொல்ல...

''என்னாத்த நல்ல விஷயம்?'' என்று சிடுசிடுத்த வாத்தியார்,

''தும்பைவிட்டு வாலைப் புடிக்கற கதைதான் இது காடுகள்ல இருக்கற மரங்களை வெட்டாம, காட்டை ஆக்கிரமிப்பு செய்யாம இருந்தா... அங்க இருக்கற நீர் நிலைகள்ல தன்னால தண்ணி தேங்கி நிக்கும். ஆனா, அந்தத் திட்டம் இந்தத் திட்டம்னு காட்டை ஆக்கிரமிச்சி அநியாயம் பண்ணிட்டு, இப்ப ஆழ்துளைக் கிணறு போட ஆரம்பிச்சுட்டாங்க. ஏற்கெனவே ஊருக்குள்ளயெல்லாம் இப்படி ஆழ்துளைக் கிணறுங்கள வரிசையா தோண்டித் தோண்டித்தான்... நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்குப் போயிட்டிருக்கு. இப்ப மலைக்காடுகள்லயும் போட ஆரம்பிச்சா... என்னவாகும். இதைவிட, இயற்கையாவே தண்ணி தேங்கறதுக்கு உண்டான வழிகளைப் பார்க்கறதுதான் புத்திசாலித்தனம்'' என்றார்.

''சரியா சொன்னீங்க வாத்தியாரய்யா... இப்பிடி செஞ்சிட்டா, விவசாயிகளுக்கும், மிருகங்களுக்கும் மோதலே இருக்காதே'' என்ற காய்கறி...

'வெயில் கொஞ்சம் இறங்குனாப்புல இருக்கு... நான் கிளம்புறேன்' என்றபடியே கூடையைத் தூக்க, முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.