மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா?

நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா?

புறா பாண்டி

நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000  உண்மையா?

''அதிக காரத்தன்மை கொண்ட மிளகாய் ரகங்கள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளதாகவும், ஒரு கிலோ மிளகாயின் விலை பல ஆயிரங்கள் விற்பதாகவும் செய்தித்தாள் ஒன்றில் படித்தேன். இது உண்மையா?''

- கீ. வாசன், திருக்கழுக்குன்றம்.

நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலரும், பாரம்பரிய மிளகாய் ரகங்கள் சேகரிப்பவருமான சார்லஸ் கேஸி பதில் சொல்கிறார்.

''கேரள மாநிலம், ஏலக்காய்க்குப் புகழ்பெற்றது போல... மணிப்பூர், நாகாலாந்து... உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு மிளகாய் ரகங்கள் உள்ளன. இந்த மிளகாய் ரகங்களில், மற்ற மிளகாயைக் காட்டிலும் கூடுதலான காரத்தன்மை இருக்கும். நாகாலாந்து மாநிலத்துக்கு சொந்தமான 'பூத் ஜலக்கியா’ மிளகாய் ரகத்தை, 'மிளகாயின் அரசன்’ என்கிறோம். இந்த மிளகாய் ரகம் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் விளைகிறது. இதன் விலை, சில நேரங்களில் கிலோ 3,000 ரூபாய் வரையிலும் விற்பனையாகும். சிலசமயம் கிலோ 300 ரூபாய்க்குக் கீழேயும்கூட போய்விடும்.

'யூ-மொரோக்’ என்கிற மிளகாய் ரகம் மணிப்பூர் மாநிலத்தில் விளைவிக்கப்படுவதாகவும், ஒரு கிலோ 3 ஆயிரம், 10 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் விற்பனையாவதாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. உண்மையில், இந்த மிளகாயை இங்கே அதிகமாக விளைவிப்பதில்லை. யாரோ ஒருவர் சிறிய அளவில் விளைவித்திருப்பதாகக் கேள்விப் பட்டேன். அதுதான் பத்திரிகை வாயிலாக பரவி, இந்தியாவின் பலபாகங்களில் இருக்கும் விவசாயிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியே விளைந்தாலும்... இப்படி பல ஆயிரங்களில் விலைபோவது என்பது சாத்தியமில்லை. எதுவாக இருந்தாலும், தீர அலசி ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொண்டே களத்தில் இறங்க வேண்டும்.

நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000  உண்மையா?

பூத் ஜலக்கியாவாக இருந்தாலும், 'யூ-மொரோக்’ என்றாலும், வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் சீதோஷ்ண நிலையில் விளையும்போதுதான், முழுமையான விளைச்சல் கிடைக்கும். தென்னிந்தியாவில் கேரளா, தமிழ்நாடு... போன்ற பகுதிகளில் விளைவிக்கும்போது, தரத்தில் மாறுபாடு இருக்கவே செய்யும். இதனால், விலையும் குறைவாகத்தான் கிடைக்கும்.

இந்த வகை மிளகாயைச் சாப்பிடுவதால் ரத்தக்கொதிப்பு நீங்கும், இதயக் கோளாறு வராது... என்பது உண்மைதான். காலகாலமாக மக்கள் இந்த மிளகாயைச் சாப்பிட்டு அதன் மருத்துவத் தன்மையை உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால், அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால்... வயிற்றுப் புண் (அல்சர்), நரம்புத் தளர்ச்சி போன்ற பாதிப்புகள் வரலாம். எச்சரிக்கை தேவை.''

தொடர்புக்கு :  Naga Indigenous Foods, Kohima Science College Road, Post Box 278, Kohima – 797001, Nagaland, India. Email : nagafoods7@gmail.com Phone : 0370-&2290455 Mobile : 094360&16574.

''எங்கள் தென்னந்தோப்பில் உள்ள 60 சதவிகித தென்னங்கன்றுகள்... குருத்து அழுகல் நோயாலும், வண்டுத் தாக்குதலாலும் பாதிக்கப்பட்டு விட்டன. கட்டுப்படுத்த ஒரு வழி சொல்லுங்கள்?''

- ம. பூங்குழலி, கோயம்புத்தூர்.

திருப்பூர் மாவட்ட முன் னோடி தென்னை விவசாயி 'ஓஷோ’ பழனிச்சாமி பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000  உண்மையா?

''தென்னையில் குருத்து அழுகல், கூன்வண்டுத் தாக்குதல் ஏற்படாத மரங் களைப் பார்ப்பது அரிது. அதுவும் வீரிய தென்னங்கன்றுகளை கூன்வண்டு விரை வாகத் தாக்கும். வீரிய ரகங்களின் குருத்துப் பகுதி மெல்லியதாக இருக்கும். இதனால், குருத்து அழுகலும், கூன்வண்டுத் தாக்குதலும் எளிதாக வரும். பாரம்பரிய ரக தென்னையில் குருத்துகள் சொர, சொரப்பாக இருப்பதால், இந்தத் தாக்குதல் சற்று குறைவாக இருக்கும். குருத்து அழுகலைக் கட்டுப்படுத்த, ஐந்திலைப் பூச்சிவிரட்டியைத் தயாரித்து, ஒரு லிட்டர் பூச்சிவிரட்டிக்கு, பத்து லிட்டர் தண்ணீர் கலந்து, தென்னை மரத்துக்கு ஒரு லிட்டர் வீதம் குருத்துப் பகுதியில் ஊற்றி விடலாம். அடுத்து, கூன்வண்டுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த, அரை கிலோ ஆமணக்கு விதைகளை அரைத்து, ஐந்து லிட்டர் கொள்ளவு கொண்ட பானையில் இட்டு, தண்ணீர் ஊற்றி வைக்கவும். ஆமணக்கு விதைகளின் வாசனையால், கூன் வண்டுகள் பானையில் வந்து விழும். ஏக்கருக்கு ஐந்து இடங்களில் இப்படி ஆமணக்கு இனக் கவர்ச்சிப் பானையை வைக்க வேண்டும். இதைச் செய்தால், கூன்வண்டு மற்றும் குருத்து அழுகல் இரண்டு பிரச்னைகளும் கட்டுப்படும்.''

தொடர்புக்கு, செல்போன்: 98657-07172.

 ''எங்கள் பண்ணையில் உள்ள ஆடுகளுக்கு நீலநாக்கு நோய் வருகிறது. ஆங்கில மருந்துகள் கொடுத்தால், கட்டுப்படுவதில்லை. மூலிகை மருந்து இருந்தால், சொல்லுங்கள்?''

- எஸ். சுகந்தி, திருச்சி.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய கால்நடை மூலிகை வைத்தியர் பொன்னு சாமி பதில் சொல்கிறார்.  

நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000  உண்மையா?
நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000  உண்மையா?

''பெரும்பாலும், பருவமழை தொடங்கும் போது, நீலநாக்கு நோய் தாக்குதலும் ஆரம்பமாகும். காரணம், குளம், குட்டைகளில் சேரும் புதிய நீரில் நீலநாக்கு நோயைப் பரப்பும் உயிரிகள் வளரும். இந்த உயிரிகள் உள்ள நீர் நிலைகளில் ஆடுகள் தண்ணீர் குடிக்கும்போது, நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். ஆடுகளுக்குத்தான் நீலநாக்கு நோய் வரும் என்றாலும், செம்மறி ஆடுகளை அதிகமாகத் தாக்கும். நோய் தாக்கி, 15 நாட்கள் கழித்துத்தான், அறிகுறிகள் தெரியும். நாக்கு, நீலநிறத்துக்கு மாறி, புண் வந்துவிடும். ஆடுகள் மேய்ச்சலில் ஆர்வம் காட்டாமல், படுத்துக்கொண்டே இருக்கும். நோய் முற்றி விட்டால், முடிகளெல்லாம் உதிர்ந்து தோல் சிவந்து காணப்படும். அதன் பிறகு, ஆடுகள் இறந்துவிடும்.

இதை, பாரம்பரிய மூலிகை மருத்துவத்தின் மூலமாக எளிதில் கட்டுப்படுத்தலாம். அதாவது, சோற்றுக் கற்றாழையை ஒரு மடல் எடுத்துக் கொள்ளவும். இரண்டு பக்கமும் உள்ள முள் பகுதியை சீவி எடுத்துவிட வேண்டும். தோலுடன் உள்ள சோற்றுக் கற்றாழையை, ஆட்டுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். சில ஆடுகள், அவற்றை சாப்பிடாமல் திமிறிக்கொண்டு ஓடும். ஒருவர் ஆட்டைப் பிடித்துக்கொள்ள, மற்றவர் சோற்றுக் கற்றாழையைத் தின்னக் கொடுக்க வேண்டும். ஒரு வார காலத்துக்கு இதனைக் கொடுத்து வந்தால்... நோய் தாக்குதல் கட்டுப்படும். குடற்புழுக்கள் நீங்கி, ஆடு களுக்கு சதைப்பிடிப்பும் அதிகரிக்கும். பருவமழை தொடங்கும் முன்பே, இப்படிச் செய்துவிட்டால், நீலநாக்கு நோய் உங்கள் பண்ணைக்குள் வராது. ஆரோக்கியமற்ற நீர் நிலைகளில் ஆடுகளுக்கு குடிநீர் கொடுக்க வேண்டாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 74025-58668

நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000  உண்மையா?