மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...!

ஓவியம்: ஹரன் படம்: க. ரமேஷ்

வானத்தில் மேகங்கள் திரண்டு நின்றதால், தோட்டத்துக்குச் செல்லாமல் ஊர் எல்லையில் உள்ள கல் திட்டில் அமர்ந்து 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், 'ஏரோட்டி’ ஏகாம்பரமும் நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர, மாநாடு களைகட்ட ஆரம்பித்தது.

'அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிடுச்சினு பயந்துகிட்டே இருந்தேன். ஆனா, ஓரளவுக்கு மழை பேய்ஞ்சி வெப்பம் குறைஞ்சி போயிடுச்சி' என்றார், காய்கறி.

''ஆமா, கண்ணம்மா... தமிழ்நாடு முழுக்கவே நிறைய இடங்கள்ல மழை பெய்ஞ்சிருக்கு. இப்பவும் ரெண்டு தூறல் போடவும்தான் நாங்களும் இங்கேயே உக்காந்துட்டோம். நாளைக்குத்தான் டிராக்டர் வரச் சொல்லியிருக்கேன். உழவு ஓட்டி வைக்கணும்'' என்ற ஏரோட்டி,

''இந்த மழையெல்லாம் காணாது. மூணு, நாலு வருஷமா மழை இல்லாத துக்கு... வெள்ள நிவாரணம் கொடுக்கற அளவுக்குக் கொட்டித் தீர்த்தாதான் சரிப்படும்'' என்றார் சிரித்தபடியே!

அதை ஆமோதித்து தானும் சிரித்த வாத்தியார், ''நீ நிவாரணம்னு சொன்னதும்... போன வருஷ வறட்சி நிவாரண ஊழல் செய்தி ஞாபகத்துக்கு வந்துடுச்சி. 'பாசன வசதியே இல்லாத பெருந்துறை பகுதியிலதான், ஈரோடு மாவட்டத்துலேயே அதிக அளவு நிவாரணம் கொடுத்திருக்காங்களாம். அப்போ, வருவாய்துறை அமைச்சரா இருந்த (தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர்) தோப்பு வெங்கடாசலத்தோட தொகுதி இது. இங்க விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்காம, விவசாயமே செய்யாத கட்சிக்காரங்களுக்குதான் நிவாரணம் கொடுத்திருக்காரு’னு காஞ்சிகோவிலைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, ஈரோடு கலெக்டர்கிட்ட புகார் கொடுத்திருக்கார். அதை விசாரிச்சிட்டு 'தவறுதலா 71 லட்ச ரூபாயை நிவாரணமா கொடுத்துட்டோம். அதை திரும்ப வாங்கிட்டோம்’னு மாவட்ட நிர்வாகம் பதில் சொல்லியிருக்கு. அதோட ரெண்டு கிராம நிர்வாக அலுவலர்களையும் தற்காலிகப் பணி நீக்கம் செஞ்சிருக்காங்க.

மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்...  முதல்வருக்கு மனு...!

அப்பவும் விஷயத்தை கைவிடாத கிருஷ்ணசாமி, 'இந்த விசாரணை முறையா நடக்கலை’னு சென்னை, உயர் நீதிமன்றத்துல பொதுநல வழக்கு போட்டிருக்கார். அமைச்சர் உட்பட அத்தனை பேருக்கும் கோர்ட் நோட்டீஸ் போயிருக்கு. ஆனா, 'என்னோட வளர்ச்சி பிடிக்காம என் மேல இப்படி குற்றம் சுமத்துறாங்க’னு மறுத்திருக்கார் அமைச்சர்'' என்றார், வாத்தியார்.

''என்ன கண்டுபிடிச்சு என்ன செய்ய... நிஜமா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நியாயம் கிடைச்சிடவா போகுது? ஆனாலும், இதை அம்பலத்துக்குக் கொண்டு வந்தவரைப் பாராட்டியே தீரணும்'' என்று சொன்ன ஏரோட்டி, தான் ஒரு செய்தியைச் சொன்னார்.

''கடந்த மூணு வருஷமா உணவு தானிய உற்பத்தி இலக்கு நிறைவு அடையாததால,  அரிசி, பருப்புனு எல்லாம் விலை ஏறிப்போச்சுதாம். அதனால, இந்த வருஷம், உணவு தானிய உற்பத்தி இலக்கை

மரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்...  முதல்வருக்கு மனு...!

145 லட்சம் டன் அப்படினு நிர்ணயிச்சிருக்காங்களாம். குறிப்பா, ஒவ்வொரு மாவட்டத்திலயும் 30 சதவிகித அளவுக்கு விளைச்சலை அதிகரிக்கணும்னு வேளாண்துறை முடிவு செஞ்சிருக்குதாம். அதிக மழை பெய்ற இடங்கள்ல மட்டும் நெல் விளைவிச்சிட்டு மற்ற மாவட்டங்கள்ல, இருக்கற தண்ணி அளவுக்கு ஏத்த பயிர்களை மட்டும் சாகுபடி செய்யணும்னு விவசாயிங்ககிட்ட வலியுறுத்தப் போறாங்களாம். நேத்து அக்ரி ஆபீசருங்க என்கிட்ட சொல்லிட்டு போனாங்க'' என்றார்.

''பார்றா... அவ்வளவு பெரிய ஆளாயிட்டியா நீ?'' என்று கேட்ட வாத்தியார்,

''தேனி மாவட்டம், பூதிபுரம் கிராமத்துல... நஞ்சுண்ட ஈஸ்வரி, ஆதிபராசக்தி கோயில்கள் இருக்கு. திருப்பணி வேலைக்காக மண்ணை தோண்டினப்போ, 'ஃபிரேம்’ போட்ட ஒரு நோட்டீஸ் கிடைச்சிருக்கு. 1982-ம் வருஷம் மாணிக்கம் பிள்ளைன்றவர் அச்சடிச்சி அப்போதைய மதுரை கலெக்டர், தமிழக அறநிலையத்துறை அமைச்சர்னு மனுவா அனுப்பினதுதான் அந்த நோட்டீஸ். அதுல, 'பூதிபுரத்தில் ராஜபூபால சமுத்திரக் கண்மாய், ஆலமரத்துக் கண்மாய், கல்லூரணி குளம், குப்பாயி குளம், குஞ்சுமூப்பன் குளம், மூர்த்திவீரன் குளம் ஆகிய கண்மாய்களை ஆக்கிரமிச்சுட்டாங்க. இதனால், விவசாய நில கிணறுகள்ல தண்ணி வத்திப்போச்சி. விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு போச்சி. அரசாங்கத்தார் தலையிட்டு, கண்மாய்களை ஆக்கிரமிப்புல இருந்து மீட்கணும்’னு கோரிக்கை வெச்சிருக்கார். முப்பது வருஷமாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த நோட்டீஸ்ல சொல்லப்பட்டிருந்த ஆறு கண்மாய்ல நாலு கண்மாய், காணாமலே போயிடுச்சாம். ரெண்டு மட்டும்தான் இருக்குதாம். புதையலா கிடைச்ச இந்த மனுவை கையில எடுத்துக்கிட்டு, கண்மாய்களை மீட்டுத்தரச் சொல்லி முதலமைச்சருக்கு மறுபடியும் மனு அனுப்பியிருக்காங்களாம் ஊர் விவசாயிகள்'' என்றார்.

இதைக் கேட்டு கபகபவென சிரித்தார் ஏரோட்டி.

''என்னய்யா... இதுக்குப் போய் சிரிக்கறே..?'' என்று காய்கறி சூடாக,

''இப்படி ஊரு முழுக்க இருந்த குளம், ஏரி, குட்டை, கண்மாய் எல்லாத்தையும் பிளாட் போட்டு வித்துப்புட்டாங்க. பல இடங்கள்ல ஸ்கூல், கோர்ட், பஸ்-ஸ்டாண்டுனு கட்டி வெச்சிருக்காங்க. இந்தக் கொடுமையை யெல்லாம் செய்தது அரசியல்வியாதிகளும்... அதிகாரிங்களும்தான். இப்ப என்னடான்னா... 'தமிழகம் கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. இதைத் தடுத்து நிறுத்தி, மக்களைக் காப்பாற்ற என்ன செய்வது என்று அதிகாரிகள் ஆலோசனை'னு பேப்பர்ல சேதி வருது. ஒரு வாரமா... எல்லா கலெக்டருங்களும் மாறி மாறி மெட்ராஸுக்கு போய்... டேபிள்ல மினரல் வாட்டர் பாட்டிலை வெச்சிக்கிட்டு... யோசிச்சி தள்ளிக்கிட்டே இருக்காங்களாம். அதை நினைச்சேன்... சிரிச்சேன்'' என்றார் ஏரோட்டி.

''கிழிச்சாங்க...'' என்று மறுபடியும் சூடான காய்கறி, கூடையைத் தூக்கி தலையில் வைக்க... அன்றைய மாநாடு அத்தோடு முடிந்தது!