படங்கள்: கே.குணசீலன், எஸ்.சாய்தர்மராஜ்
புறா பாண்டி
''எங்கள் வீட்டில் 8 ஆண்டுகள் வயது கொண்ட பலா மரம் உள்ளது. அதில் 100 காய்கள் வரை காய்க்கின்றது. முதிர்ந்த பிறகு பழத்தைப் பார்த்தால், கொழகொழவென இருக்கிறது. என்ன காரணம்?''
- கணேசன், திருவையாறு.
பலா சாகுபடியில் அனுபவம் கொண்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆபிரகாம் பதில் சொல்கிறார்.

''எங்கள் தோட்டத்திலும் இப்படி ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தில், நிறைய காய்கள் இருக்கும். ஆனால், அனைத்தும் உதிர்ந்துவிடும். சில காய்கள் பழுத்தாலும் சாப்பிட முடியாது. ஓங்கி வளர்ந்து நிற்கும் மரத்தை வெட்டவும் மனம் வரவில்லை. நிறைய பேரிடம் ஆலோசனை கேட்டேன். அப்போதுதான், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் சரியான தீர்வைச் சொன்னார். அதாவது, காய்கள் உதிர்வதற்கும், பழங்களில் சுவையில்லாமல் போவதற்கும்

நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகள்தான் காரணம். பெரும்பாலும், காப்பர் சத்துக் குறைபாடுதான் இதற்கு முக்கிய காரணம். இதைப் போக்க, காப்பர்-சல்பேட் என்ற நுண்ணூட்டக் கலவையை மரங்களுக்குக் கொடுத்தால் போதும் என்றார்.
காப்பர் கலவை 10 கிராம் அளவுக்கு எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வேர் அருகில் ஊற்றினேன். என்ன ஆச்சர்யம், அடுத்த பருவத்தில், பலா மரம் காய்த்து குலுங்கியது. சுவையான பலா பழங்களை அந்த மரத்தில் இருந்து, அறுவடை செய்து வருகிறோம். காப்பர் கலவை ரசாயனம் என்பதால், அதைத் தொடர்ந்து பயன்படுத்த விருப்பம் இல்லை. ஆகையால், இயற்கையில் என்ன தீர்வு என்று விசாரிக்கும்போது, துத்திச் செடியில் காப்பர் சத்துக்கள் உள்ளதாகத் தெரிந்தது. இப்போது, துத்தி இலைகளை மட்க வைத்து, மரங்களுக்கு உரமாகக் கொடுக்கிறேன். நீங்களும், இந்த நுட்பங்களைப் பயன்படுத்திப் பாருங்கள்.''
தொடர்புக்கு, செல்போன்: 98431-85444.
''பால் பண்ணையுடன், விரால் மீன் வளர்க்க விரும்புகிறேன். இதற்கான பயிற்சிகள் எங்கு கிடைக்கும்?''
- இ. சிலம்பரசன், மேல்நேத்தப்பாக்கம்.
''பொன்னேரி, மீன் வளத் தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானி முனைவர். ராவணேஸ்வரன் பதில் சொல்கிறார்.

''விரால் மீன் வளர்ப்பில் ஈடுபட விரும்புபவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். விரால் வகை மீன்களுக்கு நீரில் நீந்திச் செல்ல அதிக இடவசதி தேவை. அதனால், பண்ணையில் வெட்டப்படும் செயற்கைக் குளங்களில் விரால் மீன்களின் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ஏரி, குளங்களில் வளர்க்கும்போது கூடுதல் எடை கிடைக்கும்.
விரால் மீன்கள், தீவனமாக புழுக்கள் மற்றும் உயிருள்ள மீன்களையே சாப்பிடும் குணம் கொண்டவை. இயற்கை நீர் நிலைகளில், சிறிய ரக மீன்கள், தலைப்பிரட்டை, பூச்சி, புழுக்கள் அதிகமாக இருக்கும். அதனால், வாய்ப்புக் கிடைத்தால், இயற்கை நீர் நிலைகளில் விரால் மீன்களை வளர்த்து, நல்ல லாபம் எடுக்க முடியும்.
செயற்கைக் குளத்தில்தான் வளர்க்க முடியும் என்றால், சில தொழில்நுட்பங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். குளத்தில் ஜிலேப்பியா இன மீன் குஞ்சுகளை விட்டு, இரண்டு மாதங்கள் வளர்த்த பிறகு விரால் மீன் குஞ்சுகளைவிட வேண்டும்.

தன்னைவிட, சிறிய அளவில் உள்ள மீன்களைத்தான் விரால் உண்ணும். ஜிலேப்பியா மீன்கள் குஞ்சு பொரிக்க பொரிக்க, அது விரால்களுக்கு நல்ல தீவனமாக அமையும். தவிர, குளத்தில் நான்கு பக்கங்களிலும் தண்ணீர் மட்டத்திலிருந்து ஓர் அடி உயரத்துக்கு மேல், 100 வாட்ஸ் மின்சார பல்புகளை இரவில் எரியவிட வேண்டும். தோட்டத்தில் சுற்றித்திரியும் பூச்சிகள், மின்சார விளக்கு மூலம் கவர்ந்து இழுக்கப்பட்டு பல்பு மீது மோதி, தண்ணீரில் விழும். இவற்றையும் விரால் மீன்கள் உண்டு வாழும். மாடுகள் மூலம் கிடைக்கும் சாணத்தில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம். உரத்தைப் பயிர்களுக்கும், மண்புழுக்களை விரால் மீன்களுக்கும் தீவனமாகக் கொடுக்கலாம்.
எங்கள் ஆராய்ச்சி மையத்தில் விரால் மீன் வளர்ப்பு மட்டுமல்லாமல், பலவிதமான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. மே 27-29-ம் தேதி வரை வெள்ளை விரால் வளர்ப்பு, ஜூன் 10-12 தேதி வரை அலங்கார மீன் வளர்ப்பு, ஜூன் 24-26-ம் தேதி வரை ஜிலேப்பியா மீன் வளர்ப்புத் தொழில் நுட்பங்கள்... பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. பண்ணைப் பார்வையிடல், பயிற்சிக் கையேடு, சான்றிதழ், தங்குமிட வசதி ஆகியவை வழங்கப்படும். கட்டணம்

500 மட்டும்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 044-27991566.
செல்போன்: 94446-94845.
''தாய்லாந்து நாட்டில் வளரும் 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா? இதன் கன்றுகள் எங்கு கிடைக்கும்?''
- ஆ.கே. சுதா, கோயம்புத்தூர்.
கோயம்புத்தூர், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், இனிப்புப் புளி சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானி முனைவர். அ. மாயவேல் பதில் சொல்கிறார்.
''தாய்லாந்து நாட்டில் வளரும் இனிப்புப் புளி மரம், தமிழ்நாட்டிலும் வளரும். ஆனால், தாய்லாந்து நாட்டு அரசு, அதன் கன்றுகளை வெளிநாடுகளுக்குக் கொடுப்பதில்லை. காரணம், மற்ற நாடுகளில் இனிப்புப் புளி சாகுபடி பரவினால், விலை வீழ்ச்சி அடையும் என்று பயப்படுகிறார்கள். இதனால், நம் நாட்டில் இனிப்புப் புளி ரகங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.
அழியும் நிலையில் இருந்த இனிப்புப் புளி மரங்களைக் கண்டறிந்தோம். நமது இனிப்புப் புளியில் 49% இனிப்புப் தன்மை (சாதாரண புளி 19% இனிப்புத் தன்மை கொண்டது) உள்ளது. இதை வெறுமே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். சமையலுக்குப் பயன்படுத்தினாலும் நன்றாக இருக்கும். ஆனால், தாய்லாந்து புளியில் 64% இனிப்புத் தன்மை உள்ளது. இதை சாப்பிட மட்டுமே பயன்படுத்தலாம். சமையலுக்கு சரிவராது. நமது இனிப்புப் புளி மரக்கன்றுகளை கடந்த ஆண்டு வரை, நாங்கள் உற்பத்தி செய்து இலவசமாகவே, விவசாயிகளுக்குக் கொடுத்து வந்தோம். தற்போது, கையிருப்பில் கன்றுகள் இல்லை. தேவைப்படுபவர்கள் பதிவு செய்து வைத்தால், எதிர்காலத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது''
தொடர்புக்கு, தொலைபேசி: 0422-2484162.
