மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!

மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!

 ஓவியம்: ஹரன்

கோடை மழை பெய்தவுடன் உழவு செய்வதற்காக காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்டார், 'ஏரோட்டி’ ஏகாம்பரம். ஒரு சுற்று வியாபாரத்தை முடித்துவிட்டு, 'காய்கறி’ கண்ணம்மாவும் வந்து சேர... இருவரும் அங்கிருந்த மாமரங்களில் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி தோட்டத்துக்குள் நுழைய...

''என்னங்கய்யா இவ்ளோ லேட்?'' என குரல் கொடுத்தார், காய்கறி.

''வழக்கம்போல பென்ஷன் விஷயம்தான். கவர்ன்மென்ட் ஆபீஸ்னாலே, தொட்டதுக்கெல்லாம் லஞ்சம்னு ஆகிப்போச்சு. பென்ஷன் வாங்குறவங்க எல்லாம், வருஷா வருஷம் கருவூலத்துக்குப் போய்... இன்னமும் உயிரோடதான் இருக்கோம்கிறதுக்காக அங்க இருக்குற பதிவேட்டுல கையெழுத்துப் போடணும். பத்து நிமிஷத்துல முடிக்க வேண்டிய வேலை. இருந்தாலும், காசு வாங்கணுங்கிறதுக்காகவே என்னைக் காத்திருக்க வெச்சி, பேருக்கு ரெண்டு கேள்வியைக் கேட்டுட்டு, காசைப் பிடுங்கறாய்ங்க. 'இந்தியன்' படத்துல, 'மத்த நாடுகள்ல கடமையை மீறுறதுக்கு லஞ்சம் வாங்குவாங்க. ஆனா, இந்தியாவுல, கடமையைச் செய்றதுக்கே லஞ்சம் வாங்கறாங்க’னு கமல்ஹாசன் ஒரு வசனம் பேசுவார். அது நூத்துக்கு நூறு சரியா இருக்கு'' என்ற வாத்தியார்,

''அது கிடக்கட்டும்... நம்ம விஷயத்துக்கு வருவோம்' என்றபடியே மரத்தடியில் துண்டை விரித்து அமர்ந்தார். ஏரோட்டியும், காய்கறியும் கூடவே அமர்ந்துகொள்ள, ஆரம்பமானது அன்றைய மாநாடு.

''ஏதோ அப்பப்ப மழை பெய்ஞ்சு வெப்பம் தணியுது. இந்த மழை, விவசாயிகளுக்கும் நல்லதுதானே'' என்றார், காய்கறி.

''உண்மைதான்'' என்று ஆமோதித்த வாத்தியார்,

மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!

''மழை பெய்றது நல்லதுன்னாலும்... வாழை விவசாயிகள் சில தொழில்நுட்பங்களைக் கடைபிடிச்சாதான் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும்னு திருச்சியில இருக்குற தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் சொல்லியிருக்காங்க. அதாவது, 'வாழைத் தோப்புக்குள்ள தண்ணி தேங்கினா... அதை வெளியேத்துற மாதிரி வடிகால் அமைக்கணும். மழை அடிச்சி ஊத்தி, தொடர்ந்து தண்ணி ஓடிக்கிட்டே இருந்தா... அதிகபட்சமா 72 மணி நேரம் வரைக்கும் மரங்கள் தாங்கும். தேங்கியிருக்குற தண்ணியா இருந்தா... அதிகபட்சம் 48 மணி நேரம்தான் மரங்கள் தாங்கும். அதுக்கு மேல தண்ணி இருந்தா, வாழை மரங்களோட வேர்கள் பாதிப்படையும். அதனால, காற்றோட்டம் குறைஞ்சி... வேர்ல சுவாசம் பாதிக்கப்பட்டு, மண்ணுல இருக்கற ஊட்டச்சத்தை உறிஞ்ச முடியாம போயிடும். அப்படிப்பட்ட சூழல்ல மரங்களோட வளர்ச்சியும் மகசூலும் பாதிச்சி, தரமில்லாத பழம்தான் விளையும்.

நீர் தேங்குற தோப்புல, வாழை இலைகள் மஞ்சள் நிறத்துக்கு மாறி பழுத்துடும். அதோட, நூற்புழுக்கள் தாக்கி வாடல் நோய் வர்றதுக்குமான வாய்ப்புகளும் அதிகரிக்கும். மரத்தோட உறுதித்தன்மை பாதிச்சி... சின்ன காத்துக்கே மரம் சாஞ்சிடும். அதனால, வடிகால் ரொம்ப அவசியம். மழைநீர் ஓடுறதால மண்ணுல இருக்குற ஊட்டச்சத்துகளும் கரைஞ்சி வெளியேறுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால மழை நின்னதும், தேவையான உரங்களைக் கொடுத்து... மரத்தோட வேர்கள் பாதிக்காத அளவுக்கு மண்ணைக் கிளறி காற்றோட்டத்தை அதிகப்படுத்தணும்’னு விஞ்ஞானிகள் சொல்லியிருக்காங்க. ஆக... மழை பெய்யறப்போ கவனமா இருந்துக்கோங்க'' என்றார்.

''ஆமா, இங்க உழவுக்கே மழையைக் காணோம். இதுல தேங்குற அளவு மழைக்கு எங்க போறது?'' என்று ஏரோட்டி நக்கலடிக்க.

''இது ஒரு முன்னெச்சரிக்கைதானய்யா. இப்போதான் எப்போ... என்ன நடக்கும்னே தெரியமாட்டேங்குதே. நல்ல விஷயத்தைச் சொன்னா அதை ஏத்துக்கணும். இது கோடை மழைக்கு மட்டுமில்லை. எப்போ மழை பெய்ஞ்சாலும் பொருந்தும்'' என்றார், வாத்தியார்.

''பெரியவங்க சொன்னா... சரினு கேளுய்யா'' என்று ஏரோட்டியின் தலையில் குட்டு வைத்த காய்கறி, கூடையில் இருந்து, அன்னாசிப் பழத்தை எடுத்து, துண்டுபோட்டு இருவருக்கும் கொடுத்தார்.

''அய்யோ... இது சூடு. நமக்கு வேணாம்'' என ஏரோட்டி ஒதுங்க...

''அப்படியெல்லாம் கிடையாதுய்யா... எந்த சீசன்ல எந்தப் பழம் விளையுதோ... அந்த சீசன்ல அதையெல்லாம் கட்டாயம் சாப்பிடணும். கோடை காலத்துலதான் மா விளையும். மாம்பழம்கூட சூடுதான். அதுக்காக சாப்பிடாம இருக்குறோமா? ஒவ்வொரு பருவத்துலயும் விளையுற பழங்கள்ல அந்தந்த காலகட்டத்துல மனிதர்களுக்கும், மத்த உயிரினங்களுக்கும் தேவையான முக்கியமான சத்துக்களோடதான் இருக்கும். இதுதான் இயற்கையோட ஏற்பாடு. அதனால அதை ஒதுக்காம சாப்பிடணும். எதையும் அளவா சாப்பிட்டா... எந்தக் கெடுதலும் செய்யாது'' என்றார், வாத்தியார்.

உடனே, அன்னாசிப் பழத்தை சாப்பிட ஆரம்பித்த ஏரோட்டி, ''தேனி, ஆண்டிப்பட்டி, மயிலாடும்பாறை, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியங்கள்ல வறட்சியைச் சமாளிக்கறதுக்காக விவசாயிகள் எல்லாம் சொட்டு நீர்ப்பாசனம் போட்டிருக்காங்க. பெரும்பாலான விவசாயிகள், நகை-நட்டுகள அடமானம் வெச்சும்... அண்டா, குண்டாக்களை வித்தும்தான் சொட்டு நீர்க்குழாய்களை வாங்கிப் போட்டிருக்காங்களாம். இந்த நிலைமையில இருக்குறப்போ, இந்தப் பகுதிகள்ல ஒரு கும்பல் புகுந்து சொட்டு நீர்க்குழாய்கள், மோட்டார்கள், வயர்களை குறி வெச்சி, திருடிட்டு இருக்குதாம். ஒரு வாரத்துல மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு திருடு போயிருக்குதாம். இதுபத்தி கண்டமனூர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் செஞ்சும் நடவடிக்கை இல்லை. அதனால விவசாயிகளே குழுவா சேந்து, மாத்தி மாத்தி காவல் இருக்காங்களாம்...'' என்றார்.

''பரவாயில்லையே... இதுக்கு ஏதாச்சும் பலன் உண்டா?'' என்று சுவாரஸ்யம் பொங்கக் கேட்டார் காய்கறி.

தொடர்ந்த ஏரோட்டி, ''விவசாயிகள் ரோந்து போனப்போ, மூணு பேர் கொண்ட கும்பல், ஒரு சரக்கு வேன்ல வந்து, சொட்டு நீர்க் குழாய்களைத் திருடிட்டு போயிருக்காங்க. பின்னாடியே விவசாயிகள் தொடர்ந்து போனப்போ, திருட்டு சாமான்களை ஒரு கடையில இறக்கி வெச்சத பார்த்துட்டு, சின்னமனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விவசாயிகள் தகவல் கொடுத்திருக்காங்க. அந்த மூணு பேரையும் பிடிச்சி கேஸ் போட்டிருக்கு போலீஸ். ஆனா, அந்தக் கும்பல்ல இருக்கற மத்த ஆட்களைப் பிடிக்கறதுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம். திருட்டுக்குப் பயன்படுத்தின வண்டியையும் பறிமுதல் செய்யாம விட்டுட்டாங்களாம். 'போலீஸ்காரங்க திருடர்களுக்கு சாதகமா செயல்படுறாங்க’னு வருத்தத்துல இருக்காங்க, விவசாயிங்க'' என்று சொன்னார்.

''எந்தக் காலத்துல அரசாங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்டவங்களுக்கு சாதகமா இருந்திருக்காங்க?'' என்று நொந்துகொண்ட காய்கறி,

''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பக்கத்துல 'ஊத்துக்காடு’னு ஒரு ஊர் இருக்கு. இங்க ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு, இலவச வீட்டுமனை கொடுக்கறதுக்காக எட்டு விவசாயிகள்கிட்ட நாலரை ஏக்கர் நிலத்தை, 79-ம் வருஷம் கையகப்படுத்தினாங்க. இதுக்காக விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு கொடுக்கலையாம். கிட்டத்தட்ட 35 வருஷமா, கலெக்டர் ஆபீஸுக்கு அலைஞ்சிட்டு இருக்காங்களாம். இப்படித்தான் இருக்கு... அதிகாரிங்க லட்சணம்'' என்று சீறினார்.

''அடப்பாவமே'' என்ற வாத்தியார்,

''முக்கியமான விஷயம்யா...'' என்கிற பீடிகையுடன் ஒரு செய்தியைச் சொன்னார்.

''சமீபத்துல வேளாண்மை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்புல... தமிழகத்தில் விவசாயம் செய்யற நிலப்பரப்பு படிப்படியாக குறைஞ்சிட்டே இருக்குறது, தெரிஞ்சி அதிர்ந்துட்டாங்களாம். முந்தின வருஷங்கள்ல 55 லட்சம் ஹெக்டேர்ல நடந்த சாகுபடி, 2012-13-ம் வருஷத்துல 43.33 லட்சம் ஹெக்டேர்னு குறைஞ்சிருக்கு. இதுவும், 2013-14-ம் வருஷத்துல, பாதியளவுக்குக் குறைஞ்சிடுச்சாம். அதாவது, மொத்தம் தமிழ்நாட்டுல இருக்குற 57.53 லட்சம் ஹெக்டேர்ல, 33.48 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலம். மழையே இல்லாம போனதால, மலைப்பிரதேசத்துல இருக்குற மானாவாரி நிலங்கள்லயும், கொஞ்சமா மழை கிடைச்ச நிலங்கள்லயும் மட்டும்தான் போன வருஷம் சாகுபடி நடந்திருக்கு. கிணறு, போர்வெல் எல்லாம் வறண்டு போனதால இறவைப் பாசன நிலங்கள்லயும் சாகுபடி குறைஞ்சி போயிடுச்சி. ஒவ்வொரு மாவட்டத்துலயும், கிட்டத்தட்ட 30 சதவிகிதத்துல இருந்து, 50 சதவிகிதம் வரை சாகுபடி குறைஞ்சிடுச்சாம். இந்த வருஷம் இதுவரைக்கும் மழைக்கான அறிகுறி இல்லாததால, பல விவசாயிகள் சாகுபடி முயற்சியில இறங்கவே இல்லை. பக்கத்து மாநிலங்கள்ல இருந்து அரிசி, பருப்பு எல்லாம் வந்துட்டு இருக்குறதால பெரிய அளவுல பாதிப்பு தெரியலையாம். ஆனா, இதே நிலைமை நீடிச்சா... அடுத்த வருஷமே உணவுப் பொருள் தட்டுப்பாடாகி, விபரீதமாகிடுமாம். அதனால, எல்லா பகுதிகள்லயும் இருக்குற தண்ணீரை வெச்சி சாகுபடியை ஆரம்பிக்க வைக்கறதுக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கப் போகுதாம். வானிலை அறிக்கைகளை வெச்சி, மழையைக் கணக்குப் பண்ணி மானாவாரி சாகுபடியையும் ஊக்கப்படுத்தப் போறாங்களாம்'' என்றார், வாத்தியார்.

அதிர்ச்சி விலகாமல் கேட்டுக் கொண்டிருந்த காய்கறி, ''என்னத்த நடவடிக்கை எடுத்து என்ன பண்ண? உருப்படியா எதுவும் நடக்கப்போறது கிடையாது'' என்று அங்கலாய்த்துக் கொண்டே கூடையைத் தூக்க, அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.

நீர் மேலாண்மையில் முன்னோடி...

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில்... மதுரை 'நாணல் நண்பர்கள் குழு’ சார்பில் 'உழவர்களைத் தேடி..’ என்ற விழா நடைபெற்றது. அதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 இயற்கை விவசாயிகளைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பேசிய இயற்கை வேளாண் முன்னோடி விவசாயி பாமயன், ''இந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட தொழில் விவசாயம்தான். கடந்த 20 ஆண்டுகளாக உலகம் முழுவதுமே மரபு, சூழ்நிலை மற்றும் பன்மயத்தன்மையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டு பாரம்பரியக் கலாசாரங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் செத்துப் போய் ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் அதிகமாகப் பரவியுள்ளது.

மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை!

'உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம்’ என்று அழைக்கப்படும் கியூபா, 90% படிப்பாளிகள் நிறைந்த நாடு. அங்கே, இயற்கை விவசாயத்தைப் பற்றிய ஆலோசனைக் கூட்டங்களில் விவசாயிகளை முதல் வரிசையிலும், விஞ்ஞானிகளை இரண்டாவது வரிசையிலும்தான் உட்கார வைத்து ஆலோசனை நடத்துகிறார்கள். அந்த அளவுக்கு விவசாயிகள் மதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலங்களில் பண்டையத் தமிழர்கள் சிறப்பான வகையில் விவசாயம் செய்தார்கள். கல்லணை கட்டிய தொழில்நுட்பத்தைப் பார்த்து, ஆங்கிலேயர்கள் ஆச்சர்யப்பட்டனர். நீர் மேலாண்மை நுட்பத்தில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்துள்ளது'' என்றார்.

- இ. கார்த்திகேயன்,
படம்: ஆர்.எம். முத்துராஜ்