ஓவியம்: ஹரன்
கோடை உழவு வேலைகளை 'ஏரோட்டி’ ஏகாம்பரம் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்க... கல்திட்டில் அமர்ந்து வானொலியில் பாட்டுகளை ரசித்துக் கொண்டிருந்தார், 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி. சிறிது நேரத்தில் 'காய்கறி’ கண்ணம்மா வந்து சேர, ஏரோட்டியும் கல்திட்டுக்கு வர, அன்றைய மாநாடு அசத்தலாகத் துவங்கியது.
''இன்னொரு உழவு மழை கிடைச்சுட்டா, மீதிக்காட்டையும் உழுது வெச்சுடலாம். ஆனா, வர்ற மாதிரி வந்து ஏமாத்திட்டே இருக்கே இந்த வானம்'' என்று கவலைக் குரலில் சொன்னார், ஏரோட்டி.
''தென்மேற்குப் பருவமழை ஆரம்பிச்சுருச்சுனு அதிகாரப்பூர்வமா வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கு. இனிமேதான் நமக்கு மழை கிடைக்கும்'' என்று நம்பிக்கையூட்டினார் வாத்தியார்.
''மழை கிடைக்கிறது இருக்கட்டும். இனி, 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும்னு அம்மா சொன்னாங்களே... அது கிடைக்குதா?'' என்று கேட்டார் காய்கறி!
''என்ன நக்கலா... நீயும்தானே பல மணி நேர மின்வெட்டுல அவதிப்பட்டுக்கிட்டு இருக்கே. போன் போட்டு ஓட்டுக்கேட்ட அம்மாவுக்கு, நீயே ஒரு போன் போட்டு இதையெல்லாம் சொல்ல வேண்டியதுதானே. என்னை எதுக்காக இழுத்து விடறே. நான் வாங்குற பென்ஷன்ல கை வைக்கறதுக்கா..'' என்றார், நொந்து போனவராக வாத்தியார்.
''மின்வெட்டு கிடக்கட்டும். இப்ப புதுசா பல திட்டங்கள விவசாயிகளுக்காக அள்ளிவிட்டிருக்காங்களே... இதுபோதாதா?'' என்று இடையில் புகுந்தார் ஏரோட்டி.

''வழக்கம்போல ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாததால.. டெல்டா விவசாயத்துக்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம்; மானிய விலையில் உயிர் உரங்கள்; நெல் நடவு இயந்திரங்களுக்கு மானியம்; நெல் விதைகளுக்கு மானியம்னு வரிசையா அம்மா சொல்லியிருக்காங்களே அதைச் சொல்றியா? ஆனா, போன வருஷமும் இதையேதான் சொன்னாங்க. ஆனா, அதுல பாதிகூட நிறைவேறல. பல பேருக்கு மானியமே கிடைக்கலைனு டெல்டா விவசாயிகள் புலம்பிட்டிருக்காங்களாம். இந்த வருஷமாச்சும் ஒழுங்கா அத்தனையும் விவசாயிகளுக்குப் போய்ச் சேர்ந்தா... சந்தோஷம்தான்'' என்ற வாத்தியார், அடுத்த செய்தியையும் தந்தார்.
''காஞ்சிபுரத்துல விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்துச்சு. அதுல பேசின விவசாயிகள் பலரும், 'காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கிற ஏரி, குளம், குட்டைகள்ல வேலிக்காத்தான் (சீமைக் கருவேல்) மரங்கள் மண்டிக் கிடக்கு. ஆற்றுப்படுகைகள்ல இருக்குற மண்ணையும் அள்ளிட்டதால, படுகைகள்லயும் முளைச்சுடுச்சு. இந்த மரங்கள் அதிக கரியமில வாயுவை வெளிவிட்டு, காத்துல இருக்குற ஈரப்பதத்தை உறிஞ்சிடறதால, வெப்பம் அதிகரிக்குது. இந்த மரங்கள் முளைச்ச நிலங்கள் வீணாகிடுது. அதனால, இந்த மரங்களை சுத்தமா ஒழிக்கிறதுக்கு நடவடிக்கை எடுக்கணும்’னு கலெக்டர் பாஸ்கரன்கிட்ட கேட்டிருக்காங்க. மாவட்டத்துல இருக்குற
633 ஊராட்சி மன்றங்கள்லயும் ஜூன்
1-ம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டங்கள்ல, வேலிக்காத்தான் மரங்களை ஒழிக்க தீர்மானம் நிறைவேத்தியிருக்காங்க'' என்றார் வாத்தியார்.
''பரவாயில்லயே... நல்ல விஷயமா இருக்கே'' என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார் காய்கறி.
''மே மாசம் 29, 30 தேதிகள்ல கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல 'அறிவியலர் அலுவலர் கருத்தரங்கு’ நடந்துச்சு. நானும் இதுல கலந்துகிட்டேன். நாடு முழுக்க இருந்து முந்நூறு வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகள் கலந்துகிட்டாங்க. இவங்களுக்கு மத்தியில பேசின தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 'திட்டங்களுக்காக விவசாயிகள் இல்லை. விவசாயிகளுக்காகத்தான் திட்டங்கள் செயல்படுத்தப்படணும். வேளாண் கல்வியில் செய்யப்படுற ஆராய்ச்சிகள் பட்டங்களுக்காக மட்டும் இருக்கக்கூடாது. விவசாயத்தை மேம்படுத்துறதுக்கு உதவணும்’னு சொன்னார்'' என்றார் ஏரோட்டி.
''மைக்கை பிடிச்சா எல்லாரும் நல்லாத்தான் பேசுறாங்க. கேக்குறதுக்கும் நல்லாத்தான் இருக்கும். ஆனா, செயல்ல...'' என்று உதட்டைப் பிதுக்கிய காய்கறி,
''ஆமா, விஞ்ஞானிகள் கூட்டத்துல... உனக்கென்ன வேலை? நீ பெரிய வில்லேஜ் விஞ்ஞானியோ...'' என்று ஏரோட்டியைக் கலாய்க்க, ஏகத்துக்கும் முறைத்தார், ஏரோட்டி.
அடுத்த செய்தியை ஆரம்பித்த வாத்தியார், ''கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்துக்குப் பக்கத்துல இருக்குற சோமையம்பாளையம் ஊராட்சி யோட கிராம சபைக்கூட்டத்துல, 'கழுகுகளைப் பாதுகாக்கணும்'னு ஒரு தீர்மானத்தை நிறைவேத்தி, எல்லாரையும் திரும்பிப் பார்க்க வெச்சுருக்காங்க. சுற்றுச்சூழலைக் காப்பாத்துறதுல மரங்களுக்கும், பறவைகளுக்கும்தான் முக்கியப் பங்கு இருக்கு. ஆடு, மாடு, நாய் இதெல்லாம் செத்துக்கிடந்தா... கழுகுகள் கூட்டமா வந்து சாப்பிடறது வழக்கம். ஆடு, மாடுகளுக்கு 'டைக்ளோஃபெனாக்’ (ஞிவீநீறீஷீயீமீஸீணீநீ) அப்படிங்கற மருந்தை வலிநிவாரணியா கொடுக்கற வழக்கம் நம்மகிட்ட இருக்கு. ஒருவேளை, இறந்து போன ஆடு, மாடுங்க, ஏற்கெனவே இந்த மருந்தை சாப்பிட்டிருந்தா... இதுங்களோட மாமிசத்தை சாப்பிடற கழுகுகளும் இறந்துடுமாம். அந்த அளவுக்கு வீரியம் நிறைஞ்சதாம் இந்த மருந்து. அதனாலதான் 2006-ம் வருஷமே கால்நடைகளுக்கு மருந்தாகவோ, ஊசியாகவோ இதைக் கொடுக்கக் கூடாதுனு மத்திய அரசு தடை விதிச்சிருக்காம். ஆனாலும், பல இடங்கள்ல இன்னும் இந்த மருந்தை பயன்படுத்திட்டுதான் இருக்குறாங்க. இதனால கழுகுகளோட எண்ணிக்கை குறைஞ்சுட்டே இருக்குதாம். அதுக்காகத்தான் 'கழுகுகளைக் காப்பாத்தணும்’னு கிராம சபையில சிறப்புத் தீர்மானம் நிறைவேத்தியிருக்காங்க'' என்றார்.
அந்த நேரத்தில் சில தூறல்கள் எட்டிப்பார்க்க, ''ஐயோ, இன்னும் வாடிக்கை வீடு பாக்கியிருக்கு. காத்திட்டிருப்பாங்க'' என்றபடியே கூடையைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு, விருட்டென காய்கறி நடக்க ஆரம்பிக்க... அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஆபத்து!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் 'கிரியேட்- நமது நெல்லைக் காப்போம்' இயக்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் நெல் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா, மே 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயற்கை விவசாய ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர், வேளாண்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பன்னாட்டு உணவுக் கொள்கைப் பகுப்பாய்வாளர் தேவேந்திர சர்மா எடுத்து வைத்த கருத்துக்கள்... திடுக்கிடச் செய்வதாக இருந்தது.
''இந்தியாவில் விளைபொருட்களுக்கு மாநில அரசுகளால் வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை, இனி அனுமதிக்க முடியாது என அமெரிக்கா சொல்கிறது. இதுகுறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டதோடு மட்டுமல்லாமல், 'விலையை சந்தை தீர்மானித்தால், விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும்’ எனவும் வலியுறுத்துகிறது. ஆனால், யதார்த்தம் இதுவல்ல. குறைந்தபட்ச ஆதரவு விலை நீக்கப்பட்டால், விவசாயிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாவார்கள். இதற்கு இப்போதே உதாரணமாக இருக்கிறது, பீகார். அங்கே சந்தைதான் விளைபொருட்களின் விலையைத் தீர்மானிக்கிறது. இதன் காரணமாகவே அங்குள்ள விவசாயிகளுக்குக் குறைவான விலை கிடைக்கிறது'' என்று உண்மையை உடைத்தார் தேவேந்திர சர்மா.
-கு. ராமகிருஷ்ணன் படம்: க. சதீஷ்குமார்