மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது?

படங்கள்: ஆ. முத்துக்குமார்

 புறா பாண்டி

 ''சேலம் பகுதிகளில், 'மயிர்க் கிழங்கு’ என்ற ஒரு வகை கிழங்கு உள்ளதாகக் கேள்விப்பட்டேன். இந்தக் கிழங்கின் சிறப்புத் தன்மை என்ன?''

- எம். சுதாகரன், ஆரணி.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சீனிவாசன் பதில் சொல்கிறார்.

''மயிர்க் கிழங்கு, சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மஞ்சள் பயிருடன் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது. கிழங்கின் மேல், மெல்லிய வேர்கள் இருக்கும். இதனால், மயிர்க் கிழங்கு, முடிக்கிழங்கு, மசிரன் கிழங்கு... என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்தக் கிழங்கு, நமது பாரம்பரியக் கிழங்கு வகைகளில் ஒன்று. தற்போது நாம் சமையலில் பயன்படுத்தும் உருளைக் கிழங்கு வெளிநாட்டில் இருந்து வந்தது. அதற்கு முன்பு நம் முன்னோர்கள் அந்தந்தப் பகுதிகளில் விளையும் கிழங்கு வகைகளைத்தான் பயன்படுத்தினர். உருளைக் கிழங்கின் வருகையால், பாரம்பரியக் கிழங்கு வகைகளின் பயன்பாடு குறைந்துபோனது. ஆனாலும், சேலம் மாவட்டத்தில் மயிர்க் கிழங்கு சாகுபடி தொடர்ந்து நடக்கிறது.

நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது?

உருளைக் கிழங்கு போலவே, இந்தக் கிழங்கிலும் வருவல், மசியல்.... என்று விதவிதமான உணவுகளைச் சமைக்கலாம். மஞ்சள் நடவு செய்யும்போதே, அதாவது வைகாசி மாதமே இதையும் நடவு செய்ய வேண்டும். மஞ்சள் வயலில் வாய்க்கால், பார் ஓரங்களில் இந்த கிழங்கை நடவு செய்யலாம். இது ஒரு கொடி வகைப் பயிர், மஞ்சள் செடியில் படர்ந்து வளரும். வேலியோரம் நடவு செய்தால், மரங்களில் படர்ந்து வளரும். இந்தக் கிழங்கை எந்தப் பூச்சி நோயும் தாக்காது. ஒரு செடியில் இருந்து, குறைந்தபட்சம் 3 கிலோ கிழங்கு கிடைக்கும். கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மஞ்சள் அறுவடை செய்யும் மாதங்களான தை, மாசியில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த கிழங்குகளை வைகாசி மாதத்துக்குள் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தவில்லை என்றால், மூட்டையில் கட்டி வைத்திருந்தாலும், வைகாசி மாதம் கிழங்குகளில் இலைகள் துளிர்த்துவிடும். அதன்பிறகு, கிழங்கில் கசப்பு வந்துவிடும்.

வீட்டுத் தோட்டத்திலும் இந்தக் கிழங்கு அருமையாக விளைகிறது. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மயிர்க் கிழங்கை நடவு செய்தோம்.  வழக்கமாக அறுவடை செய்யும் மாதமான தை, மாசியில் கிழங்கைத் தோண்டி எடுக்கவில்லை. ஆனாலும், கிழங்கு வளர்ந்து கொண்டே இருந்தது. மண் வளமும், நீர் வளமும் உள்ள இடத்தில், ஆண்டுக் கணக்கில்கூட வளர்ந்து கொண்டே இருக்கும். அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரைகூட வளர விடலாம். கிழங்கின் எடையும் கூடிக் கொண்டே போகும். ஆத்தூர் சந்தைகளில் சீசன் நேரத்தில் கிழங்குகள் விற்பனைக்கு வரும். அந்தக் கிழங்குகளையே, விதையாகப் பயன்படுத்தலாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 90802-07097.

''தேனீ வளர்ப்புக்கு தோட்டக்கலைத்துறை மானியம் வழங்குவதாகக் கேள்விப்பட்டோம். யாரைத் தொடர்பு கொள்வது?''

- எஸ். கணேசன், பல்லடம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர்.பி. இளங்கோவன் பதில் சொல்கிறார்.

''பயிர்களில், விளைச்சலைப் பெருக்குவதில் தேனீக்களின் பங்கு அதிகமானது. குறிப்பாக, தேனீக்கள் வளர்க்கும்போது 20% கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவேதான், தேனீ வளர்க்கும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மானியம் வழங்கி வருகிறது.  தேனீக்கள் காலனி ஒன்றுடன் ஒரு பெட்டியின் விலை 4,400 ரூபாய். இதை 50% மானிய விலையில் 2,200 ரூபாய்க்குக் கொடுத்து வருகிறோம். விவசாயிகளின் தோட்டத்துக்கே சென்று எங்கள் அலுவலர்கள் பெட்டிகளைப் பொருத்தித் தருகிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் 20 பெட்டிகள் வரை வைக்கலாம். நிலத்தில் எந்த வகையான பயிர் இருந்தாலும், தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். குறிப்பாக, இந்தப் பயிர்தான் சாகுபடி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை உங்கள் தோட்டத்தில் உள்ள பயிர்களில் தேன் இல்லாவிட்டாலும், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தேனீக்கள் பறந்து சென்று, தேனைச் சேகரிக்கும்.

நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது?

ஒரு பெட்டியில் இருந்து, 45 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் 500 மில்லி தேன் கிடைக்கும். பூக்கள் அதிகமாக பூக்கும் நேரத்தில், தேன் கூடுதலாகக் கிடைக்கும். எப்படி பார்த்தாலும், ஆண்டுக்கு 5 லிட்டர் வரை தேனைச் சேகரிக்கலாம். தற்சமயம் ஒரு லிட்டர், 450 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு பெட்டி மூலம் 2,250 ரூபாய் வருமானமென, 20 பெட்டிகள் மூலம் 45,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். வருமானத்தை, மிகவும் குறைத்துத்தான் சொல்லியிருக்கிறேன். ஒரு பெட்டியில், 10 லிட்டர் தேன் எடுக்கும் விவசாயிகள்கூட உள்ளனர். இந்த அளவுக்கு வருமானம் எடுக்க முறையான திட்டமிடலும், பயிற்சியும் தேவை.

எங்கள் துறை மூலம் தேனீ வளர்ப்புப் பற்றி பயிற்சியும் கொடுத்து வருகிறோம். மானிய விலையில் தேனீப் பெட்டிகள் வழங்கும் திட்டம், தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப் படுகிறது. ஆர்வம் உள்ள விவசாயிகள், அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை அலு வலகத்தைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.''

தொடர்புக்கு, செல்போன்: 98420-07125.

''பட்டி நாய் என்று ஒருவகை நாய் இனம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்த இன நாய்கள் எங்கு கிடைக்கும்?''

- ஆர். குணசீலன், நாகப்பட்டினம்.

நாட்டு இன நாய்கள் பற்றி ஆய்வு செய்து வருபவரான ஈரோடு பகுதியைச் சேர்ந்த பொன். தீபங்கர் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது?

''ஆட்டுப் பட்டி, மாட்டுப் பட்டிகளுக்கு காவல் இருந்த நாய்களைத்தான், 'பட்டி நாய்’ என்று சொல்கிறோம். ஒவ்வொரு பட்டியிலும் நூற்றுக்கணக்கான, ஆடு, மாடுகள் இருக்கும். கால்நடைகளுக்குத் தீங்கு ஏற்படாமல் பாதுகாக்கும் வேலையைப் பட்டி நாய்கள் செய்யும். அதாவது, பட்டிக்குள் பாம்பு, பூரான்... போன்ற விஷ ஜந்துக்கள் இருந்தால், உடனே குரைக்கும். இதனால், ஆடு, மாடுகள் உஷராகிவிடும். பட்டிக்குள் திருடன் நுழைந்துவிட்டால், அதிகமாகக் குரைத்து சப்தம் எழுப்பும். இரவு நேரத்தில், மாடு கன்று போட்டால், உடனே பட்டி நாய் அங்கு காவலுக்கு நிற்கும். காரணம், ஆள் இல்லாத நேரத்தில், இளம் கன்றுகளை நரிகள் தூக்கிச் சென்றுவிடும். இதைத் தடுக்கவே நாய் காவலுக்கு நிற்கும். எக்காரணம் கொண்டும், பட்டியில் உள்ள கால்நடைகளைக் கடிக்காது. தன் உயிரைக் கொடுத்து, பட்டியில் உள்ள கால்நடைகளையும், மனிதர்களையும் காக்கும். இதனால், மாட்டுப் பொங்கல் அன்று பட்டி நாய்களையும், குளிப்பாட்டி, மாலை போட்டு ஒரு படையல் வைப்பது வழக்கம்.

இப்போது, பட்டிகள் குறைந்துவிட்டன. இதனால், பட்டி நாய்கள் தெருவுக்கு வந்துவிட்டன. உங்கள் பகுதியில் உள்ள தெரு நாய் குட்டிப் போடும்போது, அதை எடுத்து வளர்க்கலாம். வெளிநாட்டு இன நாய்களைவிட, இந்த நாய்கள்தான் வளர்ப்பவர்கள் மீது அதிக விசுவாசம் கொண்டவை. உடலில் ஏதாவது, கோளாறு என்றால், மூலிகையை உண்டு தானே குணப்படுத்திக் கொள்ளும். உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் கொண்டவை, இந்த நாய்கள்தான். இறக்கப் போகிறோம் என்று உணர்ந்தால், வெளி இடங்களுக்கு சென்று உயிரை விடும். இதற்கு காரணம், தன்னை வளர்த்தவர்கள் துன்பப்படக்கூடாது என்ற எண்ணம்தான். இவ்வளவு சிறப்புகள் கொண்ட நாய் இனத்தை, நாம் 'தெரு நாய்'களாக்கித் துரத்திக் கொண்டிருக்கிறோம்.''

தொடர்புக்கு,
தொலைபேசி: 0424-2274700.

நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது?