மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா?

நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா?

 புறா பாண்டி

''தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பு கானம் என்கிற பெயரில் ஒரு பயறு வகையை விற்பனை செய்கிறார்கள். இதன் பயன்பாடு என்ன? எப்படி சாகுபடி செய்வது?''

-ஏ. பாலச்சந்திரன், உடன்குடி.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சென்னகேசவன் பதில் சொல்கிறார்.

''கருப்பு கானம் என்பது, கருப்பு நிறம் கொண்ட கொள்ளு வகைப் பயறு.  கையில் அள்ளினால், வழுக்கிக் கொண்டு செல்லும்.

இந்த 'கருப்பு கானம்’ மானாவாரியில் நல்ல விளைச்சல் கொடுக்கக் கூடியது. புரட்டாசி மாதம் சாகுபடி செய்தால், தை மாதம் அறுவடைக்கு வந்துவிடும். இந்தக் கால கட்டத்தில் கிடைக்கும் பருவமழையே இதன் வளர்ச்சிக்குப் போதும். தனிப்பயிராக மட்டுமல்ல, ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். பயறு வகைப் பயிர் என்பதால், காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து, மண்ணுக்கு வளம் சேர்க்கக் கூடியது. இதனால், இதை சாகுபடி செய்யும் நிலம் வளமாகும். பாரம்பரிய உணவுப் பயிரான இதற்கு, இன்றளவும், எங்கள் வீட்டு உணவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ஆகையால், தொடர்ந்து இதை சாகுபடியும் செய்து வருகிறோம்.

நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா?

விவசாய வேலை செய்பவர்கள், வெயில் நேரத்தில் கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி உழைப்பதற்கு ஏற்ற சக்தியை, இந்தக் 'கருப்பு கானம்’ கொடுக்கும். சாப்பிடுவது, நீராகாரமாக இருந்தாலும், கருப்பு கானம் துவையல் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் போதும். ஒரு முறை கருப்பு கானம் துவையல் சாப்பிட்டால், அதன் ருசி நாக்கில் இருந்து அகலாது. இதில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால், எங்கள் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் இந்த கருப்பு கானத்தைச் சாப்பிட கொடுப்பார்கள்.

அண்மைக் காலமாக இதன் மருத்துவக் குணம் வெளியில் பரவத் தொடங்கியது. இதனால், இந்த கருப்பு கானத்தின் விலை, கிலோ 60 முதல் 90 ரூபாய் வரையிலும்கூட விற்பனையாகிறது. தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களிலும் இதைச் சாகுபடி செய்கிறார்கள். இதன் விதையும் இந்தப் பகுதிகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.''

தொடர்புக்கு, செல்போன்: 98423-48915.

''புறா வளர்க்க விரும்புகிறேன். என்ன வகையான புறாக்களை வளர்க்கலாம்?''

 -ஆர். செந்தாமரை, காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். பிரேமலதா பதில் சொல்கிறார்.

''மனிதனுடன் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் செல்லப் பிராணிகளில், புறாவும் ஒன்று. பறவை இனங்களில் தொடர்ந்து 16 மணி நேரம் பறக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் நம் முன்னோர்கள் கடிதத் தொடர்புக்கு புறாவை அனுப்பினார்கள். தற்சமயம், இறைச்சி, பொழுதுபோக்கு மற்றும் அழகு என இரண்டு காரணங்களுக்காக வளர்க்கப்படுகிறது. புறா இறைச்சி மருத்துவத் தன்மை கொண்டது என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், புறா இறைச்சிக்கு எப்போதும் கிராக்கி இருந்துகொண்டே இருக்கிறது. வெள்ளை ராஜா, வெள்ளி ராஜா, டெக் ஸோனா கோலா... போன்ற ரகங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. பொழுதுபோக்கு மற்றும் அழகுக்காக மாயுர் பொங்கி, ஷிராசி, லஹோர், பாண்டேல், ஜகோபின், ப்ரிஸ்பாக், மொன்டேனா, லோடல்... போன்ற இனங்கள் வளர்க்கப்படு கின்றன.

நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா?

அழகுப் புறாக்களின் விலை, அதன் கவர்ச்சியைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. புறாக்கள் எப்போதும் ஜோடி அளவில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு ஜோடிப் புறா, குறைந்தபட்சம் 1,500 தொடங்கி, 15,000 ரூபாய் வரையில்கூட விற்பனை செய்யப்படுகிறது. புறா வளர்ப்பு ஆத்மார்த்தமான உணர்வை ஏற்படுத்தும். புறாக் கூண்டுகள் அமைப்பதில் முக்கிய கவனம் தேவை. உயரமான இடத்தில் கூண்டுகள் இருக்க வேண்டும். கூண்டுக்கு வெளியே, கொஞ்சம் வைக்கோல் வைத்துவிட்டால் போதும். புறாக்கள் தங்களுக்குத் தேவையான மெத்தை போன்ற இருக்கையை உருவாக்கிக் கொள்ளும். புறா வளர்ப்பில் ஈடுபடும் முன்பு, அருகில் உள்ள புறா வளர்ப்புப் பண்ணைகளைப் பார்வையிடவும். காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேல்மருவத்தூரைச் சுற்றி உள்ள ஊர்களில் நிறைய புறா பண்ணைகள் உள்ளன.

விவசாயத்துடன் பகுதி நேரத் தொழிலாக புறா வளர்ப்பைச் செய்பவர்கள் அதிகம். புறாக்களின் எச்சம் மிகச்சிறந்த இயற்கை உரம். இறைச்சி மற்றும் அழகுப் புறா வளர்ப்பு இரண்டுக்கும் தேவை அதிகமாக உள்ளது. ஆகையால், உங்களுக்கு எது ஏற்றது என்பதை பண்ணைகளைப் பார்வையிட்ட பிறகு தேர்வு செய்யவும்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 044-27529548.

''விவசாய நிலம் வாங்க, வங்கிக் கடன் கிடைக்குமா?''

-ஆர். சிவானந்தம், திருச்சி.

நபார்டு வங்கியின் திருச்சி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ்குமார் பதில் சொல்கிறார்.

நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா?

''விவசாய வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி. இதைக் கருத்தில் கொண்டுதான், விவசாய நிலம் வாங்குவதற்கு, வங்கிகள் கடனுதவி வழங்கி வருகின்றன. ஏற்கெனவே, விவசாயம் செய்துகொண்டு இருப்பவர்கள், மேலும் தங்களுடைய நிலத்தின் பரப்பளவைக் கூட்டிக்கொள்ள இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு கட்டுப்பாடுகள் உண்டு. சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் நிலம் இல்லாத, குத்தகை நிலத்தில் சாகுபடி செய்து வருபவர்களுக்கு, நிலம் வாங்க கடன் கொடுக்கப்படுகிறது. நீர்ப்பாசனம் உள்ள நிலமாக இருந்தால், 2.5 ஏக்கர் நிலமும், மானாவாரி நிலமாக இருந்தால், 5 ஏக்கர் நிலமும், இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கலாம். ஏற்கெனவே, சாகுபடி செய்யும் நிலத்தின் அளவு 1 ஏக்கர் என்றால், இந்தத் திட்டத்தின் கீழ் 1.5 ஏக்கர் மட்டுமே வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடன் தொகை என்பது, நிலத்தின் அரசாங்க மதிப்புக்கு உட்பட்டு வழங்கப்படும். கடன் பெறும் பயனாளியின் பங்குத் தொகை மற்றும் அடமானம் ஆகியவை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி நிர்ணயம் செய்யப்படும். கடன் பெறும் விவசாயி இருப்பிடத்துக்கும், நிலத்துக்கும் அதிக தொலைவு இருக்கக் கூடாது.

நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா?

அதாவது, கடன் பெறும் விவசாயி, தன்னுடைய இருப்பிடத்தில் இருந்து, 3 முதல் 5 கி.மீ சுற்றளவுக்குள் நிலத்தை வாங்குவது நல்லது இதற்குக் காரணம், குடியிருக்கும் பகுதியும், தோட்டமும் அருகே இருந்தால்தான் விவசாய வேலைகளில் பயனாளி முழுமையாக ஈடுபடுவார். தகுதி வாய்ந்தவர்களுக்கு கடன் கொடுக்கும் அதிகாரம், வங்கியின் மேலாளர் கையில்தான் உள்ளது. ஆகையால், அருகில் உள்ள வங்கியை அணுகி கடன் பெற்று, விவசாயம் செய்ய வாழ்த்துக்கள்.''

தொடர்புக்கு, தொலைபேசி: 0431-2740103.

நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா?