ஓவியம்: ஹரன்
காலையிலேயே வேர்க்கடலை விதைப்பை விறுவிறுப்பாக முடித்துவிட்ட 'ஏரோட்டி’ ஏகாம்பரம், வீடு நோக்கி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடைபோட, வழியில் எதிர்ப்பட்ட 'வாத்தியார்' வெள்ளைச்சாமியும், 'காய்கறி' கண்ணம்மாவும் இணைந்து கொண்டனர்
அந்த நிமிடமே, ஒரு செய்தியுடன் மாநாட்டை ஆரம்பித்தார், ஏரோட்டி. ''தமிழ்நாட்டுல பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சிகள்ல பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்தியிருக்காங்க. இதனால நகரத்துல வெளியாகுற மொத்தக் கழிவு நீரையும் சுத்திகரிச்சு திரும்பவும் பயன்படுத்துற ஏற்பாட்டை நகராட்சி நிர்வாக ஆணையரகம் செய்யப்போகுது. இதன் மூலமா சுற்றுச்சூழல் மாசு குறையுமாம். சுத்திகரிச்ச கழிவு நீரை, ஆயிரம் லிட்டர் 11 ரூபாய் 30 காசுனு தொழிற்சாலை பயன்பாட்டுக்கு விற்பனை செய்யப் போறாங்களாம். இதை குடிக்கறதுக்கோ.. உணவுப் பொருள் தயாரிப்புக்கோ பயன்படுத்தக் கூடாதாம்'' என்றார்.
''நல்ல விஷயமா இருக்கே...'' என்ற காய்கறியை இடைமறித்த வாத்தியார்,
''இந்தத் திட்டம் பல நாடுகள்ல கைவிடப்பட்ட திட்டமாம். அதில்லாம கழிவு நீர் சுத்திகரிப்புங்கிறதும் கண்துடைப்பு வேலைதான். தோல் தொழிற்சாலைகளுக்கு அமைச்ச கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எல்லாம் நம்ம ஊருல இப்படித்தானே இருக்கு. இன்னமும் தோல் கழிவு நீரை குளங்கள், ஆறுகள்ல கலந்துட்டுதானே இருக்காங்க. பாதாளச் சாக்கடையில கொள்ளை அடிச்சாச்சு. அடுத்த கொள்ளைக்கு திட்டம் போட்டுட்டாங்க போல...'' என்று வெடித்தார் வாத்தியார்.

''அதானே... 'எலி ஏன் அம்மணமா ஓடுது’னு இப்போதானே புரியுது'' என்று 'குத்தி'னார் காய்கறி.
அடுத்த செய்திக்குத் தாவிய ஏரோட்டி, ''தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட 26 ஆயிரம் கோழிப் பண்ணைகள் இருக்குதாம். இங்க உற்பத்தியாகுற கோழிகளுக்கு முக்கியமான மார்க்கெட் கேரளா. தமிழ்நாட்டுல இருந்து கறிக்கோழிகளை வாங்கக்கூடாதுனு முடிவு செஞ்சு, அந்த மாநிலத்துலேயே நிறைய மானியங்களைக் கொடுத்து, கறிக்கோழிப் பண்ணைகளை உருவாக்கிட்டு இருக்குது, கேரள அரசாங்கம்.
இதுக்கு நடுவுல, 'தமிழ்நாட்டுல இருந்து வர்ற ஒரு கிலோ உயிர்க் கோழிக்கு 95 ரூபாய்ன்ற விலையை வெச்சு, அந்த விலைக்கு 14.5 சதவிகிதம் வரி கொடுக்கணும்’னு சொல்லிடுச்சாம், கேரளா அரசு. உண்மையிலேயே கொள்முதல் விலை 70 ரூபாய்தானாம். இந்த வரிக்கு பயந்து நிறைய பேர் கேரளாவுக்கு கோழி அனுப்புறதைக் குறைச்சுட்டாங்களாம். ஒரு நாளைக்கு சராசரியா 1 லட்சம் கிலோ கோழி போயிட்டிருந்த நிலையில, இப்போ 10 ஆயிரம் கிலோ அளவுக்குதான் போகுதாம். பெரிய கோழிப்பண்ணைகளுக்கு கோழி வளர்த்துக் கொடுத்துட்டு இருந்த விவசாயிகளுக்கு, இதனால பெரிய பாதிப்பாம். கடன் வாங்கி ஷெட் போட்டு வளர்க்க ஆரம்பிச்சவங்கள்லாம், கடனைக் கட்ட முடியாம திண்டாடுறாங்களாம்'' என்றார்.
''பாவம், வெள்ளாமை சரியா வரலைனு கோழி வளர்க்க ஆரம்பிச்சா... அதுக்கும் ஆப்பு ஆகிப்போச்சே' என்று 'உச்' கொட்டினார் காய்கறி.
அதை ஆமோதிக்கும் வகையில் தலையசைத்த வாத்தியார், ''நெதர்லாந்து நாட்டுல 'க்ரீன் பீஸ்’னு ஒரு அமைப்பு இருக்கு. இதோட கிளைகள் நாற்பது நாடுகள்ல செயல்படுது. இந்த அமைப்பு, சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செஞ்சுட்டு இருக்கு. சமீபத்துல, 'இந்த அமைப்பால் தேச பாதுகாப்புக்கும், பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தல் இருக்கு. நிலக்கரி, அணுசக்தி நிறுவனங்களுக்கு எதிராக போராடுறவங்களுக்கு இந்த அமைப்பு நிதிஉதவி செய்யுது’னு நம்ம பிரதமர் அலுவலகத்துக்கு உளவுத்துறை சார்பா அறிக்கை அனுப்பியிருக்காங்க. அதனால, இந்த அமைப்புக்கு வர்ற வெளிநாட்டு நன்கொடைப் பணத்தை எடுக்குறதுக்கு உள்துறை அமைச்சகத்துக்கிட்ட அனுமதி வாங்கணும்னு அரசாங்கம் சொல்லியிருக்குதாம்'' என்றார்.
''இவங்க, அணு உலை, மீத்தேன் வாயுனு பன்னாட்டு பண முதலைங்களுக்கு வால் பிடிப்பாங்க... நாட்டையே சுடுகாடா மாத்தப் பாப்பாங்க. அதை எதுக்குறவங்களுக்கு இந்த மாதிரி நெருக்கடி கொடுப்பாங்களா?'' என்று ஏரோட்டி ஆவேசம் பொங்க...

''பதறாதய்யா... நம்ம நாட்டை குறிவெச்சு ஆபத்தை விளைவிக்கறதுக்காக வெளிநாடுகள்ல இருந்து நிதிஉதவி வர்றத தடுக்கறதுல என்ன தப்பிருக்குங்கிறேன்?'' என்று கேட்டு, ஏரோட்டியை அடக்கிய வாத்தியார்,
''ஆனா, சும்மாச்சுக்கும் இப்படியெல்லாம் கிளப்பிவிடறது, நம்ம நாட்டோட எதிர்காலத்துக்கு நல்லதில்ல. ஏன்னா, இங்க விவசாயம், சுற்றுச்சூழல் இதுகளோட அழிவுக்கு எதிரா நடக்க ஒண்ணு ரெண்டு போராட்டங்களே... க்ரீன்பீஸ் மாதிரியான சில அமைப்புகளாலதான் நடக்குது. அந்த அமைப்பு இந்தியாவுல மட்டுமில்லாம, உலகம் பூராவுமே இப்படி செயல்பட்டுக்கிட்டுதான் இருக்கு. அப்படினா, உலகத்துக்கு அந்த அமைப்பு ஆபத்தை ஏற்படுத்தப் போகுதுனு அர்த்தமா?'' என்று ஒரு கேள்வியைப் போட்டார்.
''அதானே!'' என்ற ஏரோட்டி, ''இப்படித்தான், கூடங்குளம் அணு உலைக்கு எதிரா போராடுற உதயகுமார் மேல ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் அரசு ஏகப்பட்ட புகார்களை அள்ளி வீசுச்சு. ஆனா, ஆட்சியில இருந்த கடைசி நாள் வரைக்கும்கூட அது தொடர்பா உதயகுமார் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல. இப்ப பி.ஜே.பி. அரசாங்கம் இந்த வேலையை ஆரம்பிச்சிருக்கு. புகார்ல உண்மை இருந்தா... உடனடியா நடவடிக்கை எடுத்து உள்ள தூக்கி போடவேண்டியதுதானே. அதைவிட்டு, அப்பப்ப இப்படி கிளப்பிவிட்டுட்டே இருக்கிறது எதுக்காக?'' என்று கேட்டார்.
''எல்லாம் கார்ப்ரேட் முதலாளிங்களோட நன்மைக் காகத்தான். இயற்கை வளங்களை எல்லாம் கொள்ளையடிச்சு கொழிக்கறதுக்காக பழங்குடி மக்கள், விவசாயிகள் பாதுகாப்புல இருக்கற இயற்கை வளங்களைக் கொள்ளையடிச்சு பணம் சேர்க்கறதுக்காக, 'தொழில் வளர்ச்சி'னு சொல்லிக்கிட்டு பலரும் திரிய றாங்க. இந்த முதலைகளுக்கு ஆதரவாத்தான் பெரும்பாலும் செயல்பட்டுச்சு காங்கிரஸ் கெவருமென்ட். இப்ப அதே வேலையை பி.ஜே.பி கெவருமென்ட்டும் ஆரம்பிச்சுடுச்சு போல!'' என்று வாத்தியார் சொல்ல... வீடு வந்து சேர்ந்திருந்தது.
ஆளுக்கொரு பக்கமாக மூவரும் பிரிய... அன்றைய மாநாடு அத்தோடு முடிந்தது.