புறா பாண்டி படங்கள்: என்.ஜி. மணிகண்டன், க. தனசேகரன்
''பட்டுப்புழுக்களுக்கு எந்த வகையான மல்பெரி ரக இலைகளைக் கொடுக்கலாம். பட்டு வளர்ப்புக்கு மானியம் உண்டா?''
- ஆர். மாதவராமன், கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரியில் செயல்பட்டுவரும் பட்டு வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் கே. வடிவேல் பதில் சொல்கிறார்.

''பட்டுப்புழுவுக்கு உணவாகப் பயன்படும் மல்பெரியில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில் இளம்பட்டுப் புழுக்களுக்கு எஸ்-36 என்ற ரக மல்பெரி மிகவும் சிறந்ததாகும். இந்த ரக இலைகளில் நீர், சர்க்கரை மற்றும் புரதச்சத்து அதிகமாக இருக்கும். ஆண்டொன்றுக்கு ஒரு ஏக்கரிலிருந்து 16 முதல் 18 ஆயிரம் கிலோ மல்பெரி இலைகளை மகசூலாக தரக்கூடிய உயர் விளச்சல் ரகமாகும்.
பட்டுப்புழுவின் மூன்றாம் பருவத்திலிருந்து நீர்ச்சத்து குறைவாகவும் புரதம், கார்போ-ஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள மல்பெரி இலைகள் தேவைப்படுகின்றன. இத்தகைய சத்துக்கள் வி-1 மற்றும் எம்.ஆர்-2 மல்பெரி ரகங்களில் உள்ளன. எனவே, பட்டுப்புழு வளர்ப்புக்கென்று மல்பெரி சாகுபடி செய்யும் விவசாயிகள், பருவத்துக்குத் தக்கபடி மல்பெரி ரகங்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்யவேண்டும்.
ஒரு ஏக்கர் அளவில் உயர்விளைச்சல் ரக மல்பெரியை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியமாக 10,500 ரூபாய் வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை மல்பெரி சாகுபடிக்கு மானியம் வழங்கப்படுகிறது. மல்பெரி தோட்டத்துக்கு சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் அமைக்க, ஒரு ஏக்கருக்கு 22,500 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரையிலும், அதிகபட்சம் 5 ஏக்கருக்கும் மானியம் வழங்கப்படுகின்றது. பட்டுப்புழு வளர்ப்பு மனை கட்டும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 63,000 முதல் 87,500 ரூபாய் வரை புழுவளர்ப்பு மனையின் அளவுக்கேற்றவாறு மானியம் வழங்கப்படுகின்றது.
பட்டு மகளிர் சுகாதார காப்பீடு மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி... போன்றவற்றையும் அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த உதவிகளைப் பெற, அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டுவரும் பட்டு விரிவாக்கத் தொழில்நுட்ப சேவை மையங்கள் அல்லது விரிவாக்க உதவி இயக்குநர் அலுவலர்களை அணுகலாம்.''
தொடர்புக்கு, தொலைபேசி: 04343-235070.
''வாத்து வளர்ப்பு லாபகரமானதா? இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?''
- பி.ஆர். பிரவீன், காக்காப்பாளையம்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும், மத்திய கோழியின மேம்பாட்டு நிறுவனத்தின், விஞ்ஞானி அபிஜித்குமார் பதில் சொல்கிறார்.
''நம் நாட்டில் கோழி வளர்ப்புக்கு அடுத்தபடியாக வாத்து வளர்ப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வாத்து வளர்ப்பு பரவலாக நடைபெற்றாலும், அதன் முட்டை மற்றும் இறைச்சிக்கான விற்பனை வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது. வாத்து முட்டை மற்றும் இறைச்சியைச் சாப்பிடுவது தரக்குறைவானது என்கிற எண்ணம் இருப்பதுதான் காரணம். ஆனால், கேரளாவில் வாத்து முட்டைக்கும், இறைச்சிக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. இப்போது ஒரு முட்டை 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வாத்து இறைச்சி, கோழி இறைச்சியைவிட சற்று கடினத்தன்மை கொண்டது. ஆனால், மிகவும் ருசியாகவும், சத்துக்கள் நிறைந்தும் இருக்கும். வழக்கமாக, வாத்து முட்டையிட தொடங்கிய முதல் ஆண்டு மட்டும்தான், முட்டை உற்பத்தி நன்றாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக முட்டை உற்பத்தித் திறன் குறையும். ஆனால், காக்கி கேம்பெல் ரகம், இரண்டாவது வருடத்தில்கூட முட்டை உற்பத்தியை அதிகமாகத் தரக்கூடியவை. இந்த காக்கி கேம்பெல் எனும் வாத்து ரகம் முட்டை உற்பத்திக்கும், பெக்கின் எனும் ரகம் இறைச்சிக்கும் ஏற்றது. காக்கி கேம்பெல் ஒரு முட்டை சுழற்சியில், 300 முட்டைகள் வரை தரக்கூடிய தன்மை கொண்டது. முட்டை உற்பத்தியில் மிகச்சிறந்த இனம் இது. இறைச்சி ரகமான பெக்கின், நமது சூழ்நிலைக்கு மிகவும் சிறப்பாக வளர்கிறது. குறைந்தளவே தீவனத்தை உண்டு, தரமான இறைச்சியை உற்பத்தி செய்யக்கூடியது.
இந்த இரண்டு இன வாத்துகளின் குஞ்சுகளும் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும். வாத்து வளர்ப்பில் உள்ள நுட்பங்களை, அவ்வப்போது பயிற்சிப் பட்டறைகள் நடத்தியும் கற்றுக்கொடுத்து வருகிறோம். ஆர்வம் உள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.''
தொடர்புக்கு,
THE DIRECTOR,
CENTRAL POULTRY DEVELOPMENT ORGANISATION, (SOUTHERN REGION),
Ministry of Agriculture, Department of Animal Husbandry & Dairying,
Government of India,
HESARAGHATTA, BANGALORE-560088,
Telephone Nos:- 080-28466226
080-28466236.
''கரும்புப் பயிருக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாமா? மண்ணுக்கு மேல் அமைப்பது நல்லதா, கீழ் அமைப்பது நல்லதா?''
- பா. சிவக்குமார், உளுந்தூர்பேட்டை.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த பி. ரமேஷ் சந்த் பதில் சொல்கிறார்.

''ஆரம்பத்தில் சொட்டுநீர்க் குழாய்களை கரும்புப் பயிருக்கு, பூமிக்கு மேல்தான் அமைத்திருந்தோம். அதில் நடைமுறைச் சிரமங்கள் நிறைய இருந்தன. குறிப்பாக, கரும்பு வெட்டும்போது, சொட்டுநீர்க் குழாய்கள் சேதமாகும். இதனால், திரும்பத் திரும்ப புதிய குழாய்களை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக மண்ணுக்கு அடியில்தான் சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துப் பாசனம் செய்துவருகிறோம். மண் உள்ளே செல்லாத வகையிலான ஏற்பாட்டுடன் கூடிய குழாய்களைத்தான் இப்படி மண்ணுக்குள் புதைத்துள்ளோம்.
75% அரசு மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளை வழங்கினார்கள். முழு விலை கொடுத்து வாங்கினால், ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அரசு மானியத்தில் குறைந்த விலையில் கிடைத்த சொட்டுநீர்ப் பாசனத்தால், இந்த வறட்சியான காலத்திலும், ஏக்கருக்கு 45 டன் மகசூல் கிடைத்து வருகிறது.
மண்ணுக்குள் புதைப்பதால், கரும்பு வெட்டும்போது சொட்டுநீர்க் குழாய்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், எலிகள் கடிப்பதால் குழாய்கள் சேதமாகும். இதை உடனடியாக சரிசெய்து பொருத்திவிடுவோம். கரும்புத் தோகைகளுக்கு நெருப்பு வைத்தாலும், மண்ணுக்குள் இருக்கும் சொட்டுநீர்க் குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.
சொட்டுநீர்ப் பாசனத்தில் முக்கிய பிரச்னை, குழாய்களில் உப்பு அடைத்துக் கொள்வதுதான். இதற்கு ஆண்டுதோறும், ரசாயன ஆசிட்டை நீரில் கலந்துவிட்டால், உப்பு கரைந்துவிடும். இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், ஹியூமிக் ஆசிட் என்ற இயற்கை உரத்தைக் கலந்துவிடுகிறார்கள். இந்த ஹியூமிக் ஆசிட் சொட்டுநீர்க் குழாய்களில் உள்ள உப்புக் களைக் கரைத்துவிடுகிறது. மேலும், பயிரின் விளைச்சலும் நன்றாக உள்ளது என்கிறார்கள்.
15 நாட்களுக்கு ஒரு முறை சொட்டுநீர்ப் பாசன ஃபில்டரை கழுவி மாட்டிவிட வேண்டும். மற்றபடி எந்தப் பிரச்னையும் இருக்காது. பொதுவாக, சரியான முறையில் சொட்டுநீர்ப் பாசனக் குழாய்களைப் பயன்படுத்தினால், 10 ஆண்டுகள்கூட உழைக்கும் என்பார்கள். என்னுடைய அனுபவத்தில்,
10 ஆண்டுகளைக் கடந்தும் கூட உழைக்கும் என்று நம்புகிறேன்.''
தொடர்புக்கு, செல்போன்: 94432-56041.
